விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


குறுக்கு வழி:
WP:NOT

தமிழ் விக்கிப்பீடியா,

  • ஒரு வலைப்பதிவு அன்று.

விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுக் குறிப்புகள், அறிவுரை போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் தனிப்பட்ட பார்வையைக் கட்டுரையாக எழுத முடியாது. நம்பகத்தன்மை மிக்க புற ஆதாரங்களின் அடிப்படையில் தகவலை மட்டும் தொகுக்கலாம்.

எத்தலைப்பு குறித்தும் வெறும் வரையறை, பொருள் விளக்கம் மட்டும் தருவது இங்கு வரவேற்கப்படுவதில்லை. இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அனைத்து தலைப்புகளிலும் சுருக்கமாகவோ விரிவாகவோ முழுமையான கட்டுரைகளை உருவாக்குவதே விக்கிப்பீடியாவின் நோக்கம். எற்கனவே உள்ள கட்டுரைகள் ஏதேனும் வெறும் அகரமுதலி வரையறைகள் போல் உங்களுக்குத் தோன்றினால், தயவு செய்து அவற்றை மேம்படுத்த உதவுங்கள்; அல்லது, உரையாடல் பக்கங்களில் சுட்டிக்காட்டுங்கள்.

  • ஒரு படக் கோவை அன்று.

கட்டுரைக்கு பொருத்தமான, கட்டுரையை எளிதில் விளங்கிக் கொள்ள உதவும் படங்களை மட்டும் கட்டுரைகளில் இணையுங்கள். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் படங்களை இணைக்க வேண்டாம். உங்கள் புகைப்படங்களை உங்கள் பயனர் பக்கங்களில் பதிக்கலாம் என்றாலும், அவை ஒன்று அல்லது இரண்டு படங்களாக இருக்கட்டும்.

  • ஒரு விளம்பரப் பலகை அன்று.

உள்நோக்கத்துடனோ உள்நோக்கமற்றோ, எந்த விதத்திலும், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப் பலகையாக பயன்படுத்த வேண்டாம். கட்டுரைக்கு நேரடியாகத் தொடர்பில்லாத, அதிகம் அறியப்படாத வணிகப் பொருட்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான இணைப்புகளைத் தவிர்க்கவும். கட்டுரை வடிவில் தனி நபர் தம்பட்டமும் வரவேற்கப்படுவதில்லை.

  • ஓர் அரட்டை அரங்கம் அன்று.

உரையாடல் பக்கங்களிலான விவாதங்கள் கட்டுரைக்கோ விக்கிப்பீடியா வளர்ச்சிக்கோ தொடர்புடையதாய் இருக்கட்டும். பயனர் பேச்சுப் பக்கங்களில் உள்ள விவாதங்கள் அதிகம் பொருட்படுத்தபடுவதில்லை என்றாலும், அவையும் கண்ணியம் தவறாமல், அவசியம் கருதியும், இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், விக்கிப்பீடியாவில், அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

  • ஒரு பாட நூல் அன்று.

அளவுக்கு அதிகமான பாட நூல் வகையிலான விளக்கங்களை இங்கு தவிர்க்கலாம். நேரடியாக கட்டுரைத் தலைப்பின் பொருளை தக்க முறையில் விளக்கிக் கூறுவதே விக்கிப்பீடியாவின் நோக்கம். உங்களுக்கு இலகுவான நடையில், அதிக விளக்கங்களுடன் தனிநூல்போல நீங்கள் கட்டுரை எழுத முற்பட்டால் விக்கி நூல்களில் பங்களிக்கலாம்.

  • ஒரு பாட்டுப் புத்தகம் அன்று.

கட்டுரைப் பொருளுக்கு ஏற்ற ஒருசில பாடல் வரிகளை மேற்கோள் காட்டுவது சரி தான் என்றாலும், முழுமையான பாடல் வரித் தொகுப்புகள் இங்கு வேண்டுவதில்லை.

  • ஒரு பரப்புரைக் கருவி அன்று.

தனி நபர், அரசியல் கட்சி, சமயங்கள் தொடர்பான பரப்புரை நெடியடிக்கும் கட்டுரைகள், உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும்.

  • ஒரு தொடர்பு அட்டை அன்று.

தனி நபர்கள், நிறுவனங்களுக்கான தொலைபேசி எண்கள், தொடர்பு முகவரி ஆகியவற்றை கட்டுரைப்பக்கங்களில் தர வேண்டாம். பயனர் பக்கங்களில் அவரவர் தொடர்புக்கான குறிப்புகளைத் தரலாம்.

  • ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று.

தமிழ் மொழி வழியான அனைத்துத் துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையோ, பிறமொழி கலப்பு நடையோ கட்டுரைகளில் ஆள்வதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும்.

  • ஓர் இலவச மருத்துவர் அன்று.

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுடன் இணைந்து மருத்துவக் குறிப்புகள் இடம் பெறக் கூடும் என்றாலும், தமிழ் விக்கிப்பீடியா ஓர் இலவச மருத்துவர் அன்று. அக்குறிப்புகளை நீங்கள் பின்பற்றுவதால் வரும் பின் விளைவுகளுக்கு விக்கிப்பீடியா பொறுப்பன்று.

  • ஒரு சந்தைக்கடை அன்று.

வணிகப் பொருட்களுக்கான விலை மற்றும் இன்ன பிற குறிப்புகளை இங்கு தர வேண்டாம்.

  • ஒரு இணையக் கோவை அன்று.

கட்டுரைத் தலைப்புகளுக்கு நேரடியாகத் தொடர்புடைய, தரமான வெளி இணைப்புகளை மட்டும் அளவான எண்ணிக்கையில் தாருங்கள். இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களுக்கான இணைப்புக் கோவையாக விக்கிப்பீடியா திகழாது.

  • ஓர் சீர்திருத்தக் களம் அன்று

எழுத்துச் சீர்மை, மொழிச் சீர்மை போன்றவற்றின்பால் தனிப்பட்ட விக்கிப்பீடியர்கள் பலருக்கு ஈடுபாடு இருக்கலாம். ஆனால், விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கையின்படி அதற்கென்று எந்த ஈடுபாடும் கிடையாது. பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழில் தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கருதலாம். இது சரியாயினும், தவறாயினும், யூனிகோடு நிர்வாக அமைப்பு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு முதலிய பிற அமைப்புகளிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் முதலில் அறிமுகப்படுத்தக் கூடாது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் பொது வழக்கில் வந்தபின் இங்கு செயல்படுத்தலாம். சில சிக்கல்கள் மீடியாவிக்கி மென்பொருள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களினாலோ தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மட்டும் ஏற்படலாம். அவற்றிற்கான தீர்வை விக்கிப்பீடியர்கள் கூடி முடிவு செய்யலாம்.

  • ஒரு தரவுத்தளம் அன்று

விக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் அன்று. ஒரு கலைக்களஞ்சியத்தில் தனியாக ஒரு கட்டுரை எழுதும் அளவுக்குக் குறிப்பிடத்தக்கமை இல்லாத தலைப்புகளை இங்கு குவிக்காதீர்கள்.

இவற்றையும் பார்க்கவும்