விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 05, 2007

பொங்கல் தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.


ஹாசன் (ஆங்கிலம்: Hassan, கன்னடம்: ಹಾಸನ) இந்திய மாநிலமான கர்நாடகாவின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஹாசன் சிட்டி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆட்சி செய்த ஹோய்சாலப் பேரரசின் முக்கிய மாகாணமாக விளங்கியது ஹாசன். ஹாசனிலுள்ள ஹோய்சாலர் கட்டிடக்கலை உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாசன் இன்று நவீன தொழில்நுட்பத்திலும் முன்னேறிவருகிறது. இந்திய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமைக் கட்டுப்பாட்டு மையம் (Master Control Facility) இங்கு அமைந்துள்ளது.


ஹாசன் மாவட்டத்தின் வரலாறு, கர்நாடகத்தை ஆண்ட இரண்டு பேரரசுகளான மேற்குக் கங்கப் பேரரசு (350 - 999 கி.பி) மற்றும் ஹொய்சால பேரரசுடனும் (1000 - 1334 கி.பி) தொடர்புடையது. பின்பு 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசை ஆண்ட விஜயநகர அரசர்கள் பேளூரிலுள்ள சென்னகேசவ பெருமாளைக் குலத்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக அந்நகரம் விஜயநகர அரசர்கள் ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் 17-18ஆம் நூற்றாண்டுகளில் ஹாசன் ஷிமொகாவின் கெலடி நாயகர்கள் மற்றும் மைசூர் பேரரசிற்கும் இடையே ஒரு சிக்கலுக்குரிய ஊராகவே இருந்தது. இவ்வூர் இறுதியில் மைசூர் பேரரசுடன் இணைந்தது.