வில்லிசைப்பாடல்களில் சிவனியம்

வில்லிசைப்பாடல்களில் சிவனியம் நெடிய மரபுடையது.

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள சாத்தா ஐயனார் கோவில் ஒன்றில் பங்குனி உத்திரத் திருவிழாவில் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள்
வில்லுக்கொட்டு

தமிழகத்தில் இன்று நிகழ்கின்ற நாட்டார் கலைகளில் வில்லிசைக்கலை தொய்வின்றித் தொடர்ந்து நிகழ்கிறது. தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தோன்றியதாக கருதப்படும் இக்கலை இந்த மாவட்டங்களில் உள்ள நாட்டார் தெய்வக் கோயில்களில் நிகழும் விழாக்களில் கட்டாயம் நிகழும் கலையாகவும், கோயில் வழிபாட்டுக்கூறுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. வில் என்ற இசைக்கருவியை இயக்கி, கதையைப்பாடி விளக்கம் அளிப்பது இதன் நடைமுறை. இதற்குரிய பக்க இசைக்கருவிகள் குடம், உடுக்கு, கட்டை ஆகியன. இன்று பிற இசைக்கருவிகளையும் பயன்படுத்துகின்றனர்.

வில்லிசைக்கலைக்கு என்று கதைப்பாடல்கள் உள்ளன. இந்தக் கதைப்பாடல்கள் குறிப்பிடும் கதைகள் குறிப்பிட்ட கோயில்களில் உறைந்த தெய்வம் தொடர்பானதாக உள்ளன. பொதுவான புராணம், இதிகாசம் தொடர்பாகவும் உள்ளன. வில்லிசைக் கதைப்பாடல்கள் வில்லிசைக் கலைநிகழ்ச்சியில் பாடுவதற்கென்றே இயற்றப்பட்டவை. இவற்றின் காலம் கி.பி.17,18,19 ஆம் நூற்றாண்டுகள் என்று கூறமுடியும்.[சான்று தேவை] வில்லிசைப் பாடல்களில் சிலவற்றிற்கே ஆசிரியர் பெயரை அறிய முடிகிறது. வில்லிசைப் பாடல்களை அம்மானை வரிசையில் சேர்க்கும் வழக்கம் பொதுவனதாக இருந்ததாலும் இடையே உரைநடையும் விருத்தமும் வேறு இசை வடிவங்களும் விரவி வருகின்றன. இத்தகைய வில்லிச்சைப் பாடல்கள் குறைந்த அளவிலேயே உள்ளன.

தெய்வங்களைக் குறித்த காப்பு பாடல்கள் தொகு

 
இந்தியப்பழங்கதைகள் பலவும் கைலை மலையில் களம் கொண்டுள்ளன.

வில்லிசைப் பாடல்களின் பொதுவான தன்மையாக உண்மையும், நேர்மையும் போற்றப்படுவதைக் கூறமுடியும். அதர்மம் அழிந்து அறம் மேலோங்க வேண்டும் என்ற காவியத்தன்மை வில்லிசைப் பாடல்களில் உண்டு. அதர்மத்தை அழிக்க கொடுஞ்செயல்கள் புரியவேண்டும் என்பதை கதைப்பாடல்கள் நியாயப்படுத்தவும் செய்கின்றான. இத்தகுதியைப் பெறுவதற்குரிய வரங்களை நாட்டார் தெய்வங்களுக்குச்சிவனே கொடுக்கிறார் என்பதையும், இச்செயல்கள் எல்லாம் கயிலை மலையிலேயே நிகழ்கின்றன என்பதையும் வில்லிசைப் பாடல்கள் கூறுகின்றன. இதனால் வில்லிசைப் பாடல்களில் பேசப்படும் தெய்வங்களின் தோற்றத்திற்கும், தெய்வத்தகுதிக்கும் கயிலைமலை முக்கிய இடம் வகிக்கிறது என்று வரையறை செய்ய முடியும்.

மரபுவழி இலக்கியங்களின் காப்புப்பாடல், அந்த இலக்கிய ஆசிரியர்களின் சமயச்சார்பைக் காட்டும் என்பதைப் பொதுவிதியாகக் கொள்ளலாம். இதை வில்லிசைப் பாடல்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். வில்லிசைப் பாடல்களில் விநாயகனைக் குறித்த காப்பு பாடல்கள் பரவலாகவே உள்ளன. விநாயகன், சிவனும் சக்தியும் கூடியதால் பிறந்தவன், கயமுகன் அரக்கனைப் புல்லாயுதத்தால் வென்றவன், கன்னியிடம் பயின்ற பாலகன், வல்லபையின் மணாளன், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு வாய்கள் ஐந்து கரங்கள் உடையவன், வேதம் தொடர்பானவன், கந்தனுக்கு மூத்தவன், பாரதக்கதையை தன் வெண்கோட்டால் வரைந்தவன் என வில்லிசைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

சிவனைக் குறித்த காப்புப் பாடல்கள் சிவனின் வடிவத்தை வருணிக்கின்றன. சக்தியைக் காப்பாகக் கூறும் வில்லிசைப் பாடல்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. வில்லிசைப் புலவர்கள் சக்தியை அபிராமி, கல்யாணி, சிவகாமி, திரிசூலி, பத்திரகாளி என்று பல பெயர்களில் வழ்த்துகின்றனர். முருகனைக் குறித்த காப்புப் பாடல்கள் முருகன் வேள்வி மலையில் இருப்பவன், வள்ளியின் மணாளன், மயிலேறும் சேவகன், சேவல் கொடியோன் என்று குறிப்பிடுகின்றன.

சிவன் பற்றிய வில்லிசைப் பாடல்கள் தொகு

வில்லிசைப் பாடல்களின் நான்கு பகுப்புகளில் உள்ள தன்மையின் அடிப்படையில் கயிலைமலைக்கும், சிவனுக்கும், பிற சைவாக் கடவுளர்க்கும் உள்ள தொடர்பை பொதுவாக மூன்று நிலைகளில் பகுக்க முடியும். அவை,

  1. சிவனுடன் அல்லது சிவன் தொடர்பான கதைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. அல்லது சிவன் தொடர்பான கதைகளைச் சில மற்றங்களுடான் அப்படியே கூறுவன.
  2. சிவன் தொடர்பான கதைகளை மேலோட்டமாகக் கூறிச்செல்வன.
  3. தெய்வ அந்தஸ்து பெறுவதற்கும் வரங்கள் பெறுவதற்கும் பூவுலகில் வழிபாடு பெறுவதற்கும் சிவன் அல்லது கயிலை மலையைச் சார்ந்து நிற்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுவன.

முதல்வகை பாடல்கள் தொகு

இவற்றில் முதல்வகையில் அடங்குவன சிவனைப் பற்றியோ சிவன் தொடர்பான கதைகளுடன் நேரடித்தொடர்பு கொண்டவையாகவோ விளங்குகின்றன. இத்தகு தன்மை கொண்ட வில்லிசைப் பாடல்கள் பதினான்கு அளவில் கிடைத்துள்ளன. அவை,

 
வண்டிமலைச்சி கதை போற்றும் வண்டிமலைச்சி அம்மன் வண்டிமலையசாமியுடன். தூத்துக்குடி மாவட்டத்தில் வண்டிமலை என்பது மக்கட்பெயராகவும் வழக்கில் உள்ளது.

சாத்தா வரலாறு, சிறுதொண்டர் கதை, மார்கண்டன் தவசு, காலசாமி கதை, வலைவீசிய காவியம், வள்ளியம்மன் கதை, பார்வதி அம்மன் கதை, வண்டிமலைச்சி கதை, குருசாமி கதை, பலவேசக்காரன் கதை, செண்பக நாச்சியார் கதை, பிரம்மசக்தி அம்மன் கதை, முத்தாரம்மன் கதை, சுடலை மாடசாமி கதை ஆகியன. இக்கதைகளில் அரிகரபுத்திரர் என்னும் சாத்தாவரலாற்றுக் கதை வில்லிசைக் கதைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வில்லிசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இக்கதை பாடப்பட வேண்டும் என்பது கட்டாயம். மரபுவழிக் கலைஞர்களிதை இன்றும் பின்பற்றுகின்றனர். சாத்தா வரலாறு கதை சிவனுக்கும், திருமாலுக்கும் பிறந்த அய்யனின் வரலாற்றைக் கூறுகிறது. இக்கதைக்கு இரண்டு வடிவங்கள உள்ளன. இவற்றில் அச்சில் வராத வடிவம் சிவனை முதன்மைப்படுத்தி பாண்டிநாட்டு அரசுனுடன் தொடர்புபடுத்திக் காட்டுகிறது.

சிறுதொண்டர் கதை, பார்வதி அம்மன் கதை என்ற வலைவீசிய காவியம், வள்ளியம்மன் கதை, மார்க்கண்டன் தபசு ஆகியன பெரிய புராணம், கந்தபுராணம், சிவபுராணம் ஆகிய புராணங்களுடன் தொடர்புடையன. குருசாமி கதையும், செண்பக நாச்சியார் கதையும் புதிய யோகீஸ்வரரையும், புதிய மலையரசியையும் வேள்வியிலிருந்து பிறப்பிக்கவைக்கும் நிகழ்ச்சியின் அடிப்படையில் எழுந்தவை ஆகும். மேலும் சிவனைப் பற்றி நேரடியாகப் பேசும் கதைகளில் காலசாமி கதையும், மார்கண்டன் தபசு கதையும் மார்க்கண்டேயன் வரலாற்றை விவரிக்கின்றன.

சிவனைக் குறித்து நேரடியாகப் பேசும் வில்லிசைப் பாடல்களில் பொதுவான சில தன்மைகள் உள்ளன. இத்தகு பொதுத்தன்மையுள்ள கதைப்பாடல்கள் எல்லா நாட்டார் தெய்வக் கோயில்களிலும் பாடப் படுகின்றன. இவற்றின் நோக்கம் இவை பாடப்படும் கோயில்களில் உள்ள நாட்டார் தெய்வங்களை சிவன் சார்ந்த தெய்வமாகவும், சிவனிடம் அருள்பெற்ற தெய்வமாகவும் காட்டுவதற்குத்தான் என்றும் கூறலாம். இத்தகைய கதைகள் கயிலையில், சிவனும் பிற தேவர்களும் வீற்றிருக்கும் காட்சியிலிருந்தே தொடங்குகின்றன. கயிலையில் பார்வதியும், பிற தேவர்களும் சிவனுக்கு அடங்கியிருக்கும்போது என்றும், சந்திரனும் சூரியனும் கயிலையில் சேவகம் செய்யும்போது என்றும் கயிலைமலையை வருணித்தே கதைகள் தொடங்குகின்றன.

இத்தகு கதைகளில் சிவன் முழுமுதற் கடவுளாகவே காட்டப்படுகின்றான். சிவன் உலகத்தோற்றத்திற்குக் காரணமானவன். பிற தெய்வங்களைத் தோற்றுவிப்பவன், அத்தெய்வங்களைக்கு வரம் கொடுப்பவன் என இக்கதைகள் பாராட்டுகின்றன. சிவனைக் குறித்து சிவன் மன்மதனை எரித்தவன், தக்கனைக் கொன்றவன், மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கியவன், காலனை உதைத்தவன், தேவர்களுக்காக நஞ்சை உண்டவன், வெண்தலை ஓட்டில் இரந்துண்பவன், கரியை உரித்தவன் என்ற பழம் கதைகளைக் குறிப்பிடுகின்றன. சிவன் மழு ஏந்தியவன், கொன்றை மலரைச் சூடியவன், புலித்தோலை அணிந்தவன், கங்கையை அணிந்தவன் என்றெல்லாம் சிவனின் வடிவத்தை வருணிக்கின்றன.

இரண்டாம்வகை பாடல்கள் தொகு

சிவன் தொடர்பான செய்திகளை மேலோட்டமாகக் கூறும் வில்லிசைப் பாடல்களை இரண்டாம் பகுப்பில் அடக்கலாம். இத்தகு கதைகளாக வலங்கைநூல் கதை, இசக்கியம்மன் கதை, சங்கிலிபூதம் கதை, கபாலக்காரன் கதை, கருங்கடாக்காரன் கதை, செங்கடாக்காரன் கதை, சோமாண்டி கதை, மன்னன் கருங்காலி கதை, உச்சிமாகாளி கதை, கட்டிலவதானம் ஆகியவற்றைக் கூறலாம். இத்தகு கதைகளில் வரும் நாட்டார் தெய்வங்கள் இரண்டாம் நிலை தெய்வங்களாகக் கருதப்படுகின்றன. இவை பெரும்பாலும் துணைத்தெய்வங்களாக வழிபாடு பெறுகின்றன. வேள்வியில் தோற்றுவிக்கப்பட்டு கயிலையில் வரம் பெற்று பூவுலகில் நிலைபெறுவதான கதையமைப்பை இக்கதைக்ளின் பொதுத் தன்மையாகக் கொள்ளலாம்.

மூன்றாம்வகை பாடல்கள் தொகு

மூன்றாம் பகுதியில் அமைந்த வில்லிசைப்பாடல்கள் அகால மரணமடைந்தவர் தொடர்பானவை. தற்கொலை அல்லது கொலை அல்லது விபத்து காரணமாக மரணமடையும் இளைஞனோ கன்னியோ அகால மரணமடைந்தவர்களாகக் கருதப்படுவர். இந்நிலையில் மரணமடைந்தவர் தெய்வத்தன்மை பெற கயிலைக்குச் சென்று வரம்பெற வேண்டும்;பூவுலகில் கோயில் கொள்ள உரிமை பெற வேடும் என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.

இத்தகைய வில்லிசைப் பாடல்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. தென்தமிழ்ப் பகுதிகளில் கிடைக்கின்ற அகாலமரணத் தொடர்புக்கதைப்பாடல்களில், புலமாடன் கதை, நீலசாமி கதை, ஒட்டன் கதை, சேர்வைக்காரன் கதை, தோட்டுக்காரி அம்மன் கதை, பூலங்கொண்டாளம்மன் கதை, எட்டு கூட்டத் தம்புரான் கதை, வலியதம்பி குஞ்சுதம்பி கதை, ஆந்திரமுடையார் கதை, முத்துப்பட்டன் கதை, சிதம்பர நாடார் கதை, வன்னியடி மறவன் கதை, வன்னிராசன் கதை, உடையார் கதை, பிச்சைகாலன் கதை, பொன்னிறத்தாளம்மன் கதை, உலகுடையார் கதை, அன்ந்தாயி கதை, புருஷா தேவிப்பாட்டு ஆகியன குறிப்பிடத்தகுந்தன. இத்தகு கதைகளில் சிவன் முக்கிய தெய்வமாகவும், தெய்வத்தை உருவாக்குபவராகவும் காட்டப்படுகிறார். அகால மரணமடைந்தவர், மரணமடைந்த உடனேயே கயிலை சென்று சிவனிடம் வரம் கேட்டு நிற்றல், சிவன் மட்டுமன்றி முருகன், பார்வதி ஆகிய தெய்வங்களிடம் வரம்பெறச் செல்லுதல், பூவுலகில் கோயில் கொள்ள வரம் கேட்டல்;தன்னுடன் நெருங்கியவர்களும் தெய்வநிலை பெற வரம் கேட்டல்;தங்களைக் கொன்றவர்களையும் அவர்களுடன் தொடபுடையவர்களையும் பழிவாங்க வரம் கேட்டல் போன்றவை எல்லாம் கயிலை மலையிலேயே நிகழ்கின்றன. தென்தமிழ் பகுதிகளில் வழக்கில் உள்ள நாட்டார் தெய்வங்களுள் சுடலைமாடன் என்ற தெய்வம் முக்கிமானதாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை தொகு