ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)
ஸ்ரீ வள்ளி 1961 ஆம் ஆண்டு வெளியான தமிழ் புராணக்கதை திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, டி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத் திரைப்படம், 1945 ஆம் ஆண்டு இதே தலைப்பில் வெளியான திரைப்படத்தின் மீள் பதிவாகும். கேவா வண்ணத்தில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீ வள்ளி | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
திரைக்கதை | தஞ்சை ராமையாதாஸ் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு |
|
கலையகம் | நரசு ஸ்டூடியோஸ் |
வெளியீடு | 1 ஜூலை 1961[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் - முருகன்
- பத்மினி - வள்ளி
- டி. ஆர். மகாலிங்கம் - நாரதர்
- ஈ. ஆர். சகாதேவன் - அரசன் நம்பிராஜன்
- சி. கே. சரஸ்வதி - நம்பிராஜனின் மனைவி
- ஜே. பி. சந்திரபாபு - வள்ளியின் சகோதரன்
- ஹெலன் - நடனம்
- ராகினி வள்ளியின் தோழி
- விஜயகுமார் - குழந்தை முருகன்
- லட்சுமி குழந்தை வள்ளி
பின்னணி
தொகுஒரு வேடுவப் பெண்ணான வள்ளியை முருகக் கடவுள் காதலித்து மணம் செய்து கொண்டதாக ஒரு ஐதிகம் உண்டு. நாட்டுப்புற பாரம்பரியக் கதையாக வழங்கி வந்த கதையை மேடை நாடகமாக்கினார்கள். பின்னர் 1921 ஆம் ஆண்டு வள்ளி திருமணம் என்ற தலைப்பில் மௌனப்படமாக வெளியிட்டார்கள்[2]
பின்னர் 1930 ஆம் ஆண்டில் ஸ்ரீ சுப்ரமண்யம் என்ற பெயரில் இன்னொரு மௌனப் படம் வெளியானது.[2] என். டி. சற்போதர் அதே ஆண்டில் ஆரியன் பிலிம் கம்பெனி என்ற நிறுவனத்துக்காக இதே திரைப்படத்தை சுப்பிரமணியம் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டார். வள்ளி கல்யாணம் என்ற பெயரில் இதே ஆண்டு இன்னொரு திரைப்படமும் வெளியானது. அதில் சுந்தர் ராவ் நட்கர்னி முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.[2]
இந்தக் கதையின் முதலாவது பேசும் படத்தை 1933 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சன்ட் என்பவர் தயாரித்து வெளியிட்டார். வள்ளி திருமணம் என்ற இத் திரைப்படம் பி. வி. ராவ் இயக்கத்தில் கல்கத்தாவில் படமாக்கப் பட்டது. டி. பி. ராஜலட்சுமி வள்ளியாக நடித்த இத் திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது.[2]
இதன்பின் 1945 ஆம் ஆண்டு ஏ. வி. மெய்யப்ப செட்டியார் ஸ்ரீ வள்ளி என்ற பெயரில் இக்கதையை திரைப்படமாகத் தயாரித்தார். இதில் டி. ஆர். மகாலிங்கம் முருகனாகவும் குமாரி ருக்மிணி வள்ளியாகவும் நடித்தனர்.[2] ஏ. வி. எம். நிறுவனம் ஒரு வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக உருவாகுவதற்கு இத்திரைப்படம் மூல காரணமாயிற்று.
இதற்குப் 16 வருடங்களின் பின்னர் இதே கதையை வண்ணப் படமாக நரசு ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இதில் சிவாஜி கணேசன் முருகனாகவும், பத்மினி வள்ளியாகவும் நடித்தனர். முன்னைய திரைப்படத்தில் முருகனாக நடித்த டி. ஆர். மகாலிங்கம் இதில் நாரதராக நடித்தார்.[2]
திரைக்கதை
தொகுமலைநாட்டு வேடுவப் பெண்ணான வள்ளி முருகக் கடவுள் மீது அபார பக்தி கொண்டு அவரை அடைய வேண்டுமென எந்நேரமும் துதித்து வேண்டிக்கொண்டிருந்தாள். அவளது பக்தியை உணர்ந்த முருகக் கடவுள் அவளது எண்ணத்தை நிறைவேற்ற எண்ணி நேராக அவளிடம் சென்று தன் திருவிளையாடல்களை அரங்கேற்றுகிறார்.
மலையரசனான நம்பிராஜன் ஒரு தினைப்புனத்தை ஏற்படுத்தினான். விளைந்து வரும் தினையை பறவைகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாக்கத் தன் மகளாகிய வள்ளியைத் தினைப் புனத்துக்குக் காவலாக நியமித்தான். வள்ளியைச் சந்திப்பதற்கு இதுதான் நல்ல வாய்ப்பு என நினைத்த முருகக்கடவுள் ஒரு வேடுவனாக உருவெடுத்து, துரத்தி வந்த மானைக் காணாது தேடுவது போல வள்ளி இருக்குமிடம் சென்றார். வள்ளிக்கு வந்திருப்பது யாரென்று தெரியாதாகையால் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுமாறு முருகக் கடவுளிடம் சொன்னாள். அந்தச் சமயத்தில் வள்ளியின் தந்தையான நம்பிராஜன் வள்ளிக்கு உணவாக தேனும் தினைமாவும் கொண்டு வந்தான். நம்பிராஜனிடம் பிடிபடாமல் முருகக் கடவுள் ஒரு வேங்கை மரமாக உருமாறி நின்றார். நம்பிராஜன் சென்றபின் பழைய வேடன் உருவத்தை எடுத்த முருகக் கடவுள் தன்னைத் திருமணம் செய்யுமாறு வள்ளியிடம் கேட்டார்.
முருகனை அடையவேண்டுமெனத் தவமிருந்த வள்ளி இதைக் கேட்டுக் கோபமடைந்தாள். இதற்கிடையில் நம்பிராஜனும் அவனது உதவியாட்களும் வேட்டைக்குச் செல்ல புறப்பட்டு வந்தார்கள். அவர்களைக் கண்ட முருகக் கடவுள், வள்ளிக்குத் தெரியாமல் கிழவனாக உருமாறினார். கிழவரைக் கண்ட நம்பிராஜன், அவரைப் பார்த்து, தாங்கள் வேட்டை முடிந்து திரும்பும் வரை வள்ளிக்குத் துணையாக இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றான்.
கிழவன் வேடத்திலிருந்த முருகக் கடவுள் தனக்கு பசிப்பதாக வள்ளியிடம் சொன்னார். தேனையும் தினைமாவையும் திரட்டி வள்ளி அவருக்கு உண்ணக் கொடுத்தாள். அவருக்கு விக்கல் எடுத்தது. தாகத்தைத் தீர்க்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அவள் பக்கத்திலிருந்த சுனையிலிருந்து நீர் பிடித்துக் கொடுத்தாள். அதைப் பருகிய முருகக் கடவுள் அவளிடம் விளையாட்டாக "தாகத்தைத் தணித்தது போல் என் மோகத்தையும் தணித்துவிடு" என்று கேட்கிறார். வள்ளி கோபித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள். உடனே முருகன் தன் அண்ணனாகிய விநாயகரைத் துதி செய்தார். விநாயகர் ஒரு யானை வடிவெடுத்து வள்ளியை நோக்கி வந்தார். உடனே வள்ளி பயந்து போய் முருகனின் பின்னால் நின்றாள். தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள். முருகன் தன் சொந்த உருவத்தை அவளுக்குக் காட்டவே அவள் இவ்வளவு நேரமும் தன்னோடு இருந்தது தான் விரும்பிய முருகனே என அறிந்து பூரிப்படைடைந்தாள். வள்ளி முருகனுடன் சென்று விடவே வேட்டையிலிருந்து திரும்பி வந்த நம்பிராஜன் அவளைக் காணாது தன் ஆட்களை அனுப்பி எங்கும் தேடுவித்தான். முருகனுடன் வள்ளி இருப்பதை அறிந்து முருகன் மீது நம்பிராஜன் போர் தொடுத்தான். முருகனின் ஆற்றலால் நம்பிராஜனும் அவனது ஆட்களும் உயிரிழந்தனர். வள்ளி சோகமடைந்து அவர்களை உயிர்ப்பிக்க வேண்டினாள். முருகன் கருணையால் மாண்ட எல்லோரும் உயிர் பெற்றெழுந்தனர். வந்தது தங்கள் குன்றின் குமரனான முருகக் கடவுள் எனத் தெளிந்து கொண்ட நம்பிராஜன் வள்ளியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
தயாரிப்பு விபரம்
தொகுதிரைப்படத்தை டி. ஆர். ராமண்ணா இயக்கினார். தஞ்சை ராமையாதாஸ் கதை, வசனம், பாடல்களை எழுதினார். விஜயகுமார் குழந்தை முருகனாக இந்தத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதே போல லட்சுமி குழந்தை வள்ளியாக இத்திரைப்படத்தில் அறிமுகமானார். [3] இத்திரைப்படம் 1962 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி கல்யாணம் என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தில் 20 பாடல்கள் உள்ளன. ஜி. இராமநாதன் இசையமைக்க, தஞ்சை ராமையாதாஸ் பாடல்களை இயற்றினார். பாடிய நடிகர்கள்: டி. ஆர்.மகாலிங்கம், ஜே. பி. சந்திரபாபு. பின்னணி குரல் கொடுத்தோர்: டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, ஜிக்கி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர்.
வரிசை எண் |
பாடல் | பாடியவர்/கள் | கால அளவு (நி:செ) |
1 | விக்ன விநாயகா | சீர்காழி கோவிந்தராஜன் | 01:35 |
2 | உனக்காகவே பிறந்த அழகன் | டி. ஆர்.மகாலிங்கம் | 03:33 |
3 | சின்னஞ்சிறு குருவிகளா | பி. சுசீலா குழுவினர் | 04:17 |
4 | வண்ணத் தாமரையில் மின்னும் நீர்க்குமிழி | சீர்காழி கோவிந்தராஜன் | 01:59 |
5 | சித்தம் இரங்கி வருவாய் | ஏ. பி. கோமளா & ஏ. ஜி. ரத்னமாலா | 02:51 |
6 | வண்ணமிகும் பறவைகளா | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 03:44 |
7 | ஐயோ மச்சான் மன்னாரு | ஜே. பி. சந்திரபாபு | 01:57 |
8 | தந்தைக்கு அண்ணனில்லை | டி. ஆர்.மகாலிங்கம் குழுவினர் | 02:10 |
9 | வந்தாங்க மாப்பிள்ளைங்க | பி. சுசீலா குழுவினர் | 04:00 |
10 | மானைத் தேடி வந்தவரே | ஜிக்கி | 02:53 |
11 | ஆதி அந்தம் இல்லாத | டி. எம். சௌந்தரராஜன் | 02:25 |
12 | ஏச்சுப்பிட்டேன் நான் ஏச்சுப்பிட்டேன் | சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா | 03:58 |
13 | பாயாத கடல் பாயா | டி. எம். சௌந்தரராஜன் | 03:44 |
14 | மோகனப் புன்னகையில் | டி. ஆர்.மகாலிங்கம் | 01:59 |
15 | தாகம் தணிந்தது அன்னமே | சீர்காழி கோவிந்தராஜன் & பி. சுசீலா | 02:39 |
16 | மலை நாட்டு குறவர் நாங்க | ஜிக்கி | 03:49 |
17 | சண்முகா ... இதயக் கோயில் இருக்க | பி. சுசீலா | 04:15 |
18 | கற்பகச் சோலையிலே | டி. ஆர்.மகாலிங்கம் | 02:41 |
வரவேற்பு
தொகுகுமுதம் இதழ் இத்திரைப்படத்துக்கான விமர்சனமாக ஒரு பக்கம் முழுவதும் ஓம் முருகா என அச்சிட்டிருந்தது.[4]
2011 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் ராண்டார் கை இத்திரைப்படம் பற்றி எழுதிய விமர்சனத்தில் பிரபல நட்சத்திரங்கள், இனிமையான இசை, ஹெலனின் நடனம், வண்ணக் காட்சிகள் இருந்தும் இத்திரைப்படம் ஏமாற்றத்தையே அளித்தது என எழுதியுள்ளார்.[2]
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "Sri Valli Release". nadigarthilagam. பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 ராண்டார் கை (26 பெப்ரவரி 2011). "Blast from the past: Srivalli 1961". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-07-27 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130727160514/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-srivalli-1961/article1492678.ece. பார்த்த நாள்: 9 நவம்பர் 2016.
- ↑ "For Vijayakumar, work is always worship". தி இந்து. 8 டிசம்பர் 2005 இம் மூலத்தில் இருந்து 2005-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051210022048/http://www.hindu.com/2005/12/08/stories/2005120815220200.htm. பார்த்த நாள்: 9 நவம்பர் 2016.
- ↑ S. Theodore Baskaran (2008). Sivaji Ganesan: Profile of an Icon. p. 31.