ஜி. ராமநாதன்
ஜி. ராமநாதன் (இறப்பு: 20 நவம்பர் 1963) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். இசைமேதை என்றும், சங்கீதச் சக்கரவர்த்தி என்றும் அறியப்படுகிறார். சுருக்கமாக ஜிஆர் எனவும் வழங்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகின் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதரின் திரைப்படங்கள், சேலத்தைச் சேர்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் கோயம்புத்தூரின் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பெரிதும் அறியப்படுகிறார்.[1] 1950-களில் வெளிவந்த சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன் போன்றோரின் பெரும்பாலான சிறந்த திரைப்படங்களுக்கு இவரே இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி. ராமநாதன் | |
---|---|
இயற்பெயர் | ராமநாதன் |
பிற பெயர்கள் | இசை மேதை, சங்கீத சக்கரவர்த்தி |
பிறப்பு | பிச்சாண்டார்கோவில், திருச்சி மாவட்டம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 20 நவம்பர் 1963 |
இசை வடிவங்கள் | திரைப்பட இசையமைப்பு |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | கிளபம் (Key board)(இசை), ஆர்மோனியம், பியானோ |
இசைத்துறையில் | 1940 லிருந்து 1963 வரை |
பிறப்பு, ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஜி. ராமநாதன் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார்கோவில் எனும் ஊரில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் கோபாலசாமி ஐயர் இந்திய இரயில்வேயில் துணை ஆய்வாளராக பணியாற்றினார். ராமநாதன் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார்[சான்று தேவை]. 1942இல் திருமணம் முடித்த இவருக்கு இரண்டு மகன்கள், சத்ய சாயி பாபாவின் மேலுள்ள பக்தியினால் அவர்களுக்கு சாய், பாபா என்று பெயரிட்டார். தனது 18ஆவது வயதில் பாரத கான சபா என்கிற நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவராக சேர்ந்தார். அதன் பிறகு புகழ்பெற்ற வி. ஏ. செல்லப்பா நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்புடன் பின்ணணிப் பாடகராகவும் சேர்ந்தார். 1932இல் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட காலவரிசி என்கிற தமிழ்ப்படத்தில் முதன்முதலாக இசைக்கருவியை இசைத்தார்.
1938-ல் எம். கே. தியாகராஜ பாகவதர் தயாரித்த சத்தியசீலன் என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்கிற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்தார்.
திரைப்படத் துறைக்கான பங்களிப்புகள்
தொகுஜி. ராமநாதன் முறையாக கர்நாடக இசை பயின்றதில்லை. ஆனாலும் கேட்டறிந்த கேள்வி ஞானத்தாலும், கர்நாடக இசையின் மீதிருந்த ஆர்வத்தாலுமே கற்றுக்கொண்டு இசையமைக்க ஆரம்பித்தார்[சான்று தேவை]. இவர் இசையமைக்கத் தொடங்கிய 1940-களில் தமிழ்நாட்டில் திரைப்படத்தைப் போலவே நாடகங்களும் பிரபலமாயிருந்தன. ஆகையால் இரண்டையும் கையாளவேண்டியிருந்தது.
இவர் இசையமைத்த காலகட்டங்களில் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டே திரையிசையும் இருந்தது. ஆனாலும், திரையிசை, கர்நாடக இசைக்கு சமமாக கருதப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. இதைத் தவறு என நிருபிக்கும் வகையில் இருந்தது எம். கே. தியாகராஜரின் ஹரிதாஸ் திரைப்படத்தில் மன்மதலீலையை வென்றார் உண்டோ என்கிற பாடலுக்கு இவர் அமைத்த இசை[சான்று தேவை]. இவர் கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இசையே நிலைத்திருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவராயிருந்தார்; இதற்கேற்றார்போல இவர் இசையமைத்தப் பாடல்கள் பாதி கர்நாடக (Semi-Classic) இசையிலேயே இருந்தது[2].
ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோரின் குரல்களின் மீதும், இந்தி திரைப்பட இசையமைப்பாளர் நௌஷத்தின் இசை மீதும் ஒரு தனி விருப்பம் கொண்டிருந்தார். இவருடைய இசையில் பாடியதில் எஸ். வரலட்சுமி மற்றம் ஜிக்கி ஆகியோரின் குரல் இவருக்கு மிகவும் விருப்பமானது[3]. எம். கே. தியாகராஜரின் குரலின் மீது மிகப்பெரிய விருப்பம் கொண்டிருந்தார்; மேலும், ஒரு பாடகரிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எம்கேடியால் தான் தரமுடியும் என்பார்[சான்று தேவை]. ஜிஆர், அவரே ஒரு நல்லப் பாடகர், தன்னுடைய இசையில் பொன்முடி திரைப்படத்திலும், கே. வி. மகாதேவன் இசையில் வந்த அல்லி பெற்ற பிள்ளை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். எப்பொழுதும் பாடகரின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பார்[சான்று தேவை]. பாடகர் டி. எம். சௌந்தரராஜன், ஜிஆரின் இசையில் அவருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பாடகரால் பாடமுடியும் என்றால், அந்தப் பாடகர் வேறு எந்த இசையமைப்பாளரின் இசையிலும், உலகின் எந்த மூலையிலும் எளிதாக பாடலாம் என்று சொன்னார்[சான்று தேவை].
தன்னுடைய இசையமைப்பின்போது பாடலை பதிவுசெய்யும் முன் பாடகர்கள் எப்படி பாட வேண்டும் என்பதையும் விளக்கிப் பாடிக் காட்டுவார். புதுயுகம் என்கிற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இவரின் கடைசி படம் தெய்வத்தின் தெய்வம்[சான்று தேவை]. அருணகிரிநாதர் திரைப்படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தார்[சான்று தேவை]. பிறகு இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா அந்தப் படத்திற்கு இசையமைத்தார்[சான்று தேவை].
இசையமைத்த திரைப்படங்கள்
தொகு1940 - 1949
தொகு- ஹரிஹரமாயா (1940)
- பரசுராமர் (1940)
- ஆர்யமாலா (1941)
- சிவகவி (1943)
- ஹரிதாஸ் (1944)
- ஜகதலப் பிரதாபன் (1944)
- ஸ்ரீ வள்ளி (1945)
- ஆரவல்லி சூரவல்லி (1946)
- கடகம் (1947)
- குண்டலகேசி (1947)
- மாயாவதி (1949)
1950 - 1959
தொகு- பொன்முடி (1950)
- சுதர்சன் (1951)
- ஜமீந்தார் (1952)
- அமரகவி (1952)
- ரோஹிணி (1953)
- குமாஸ்தா (1953)
- இன்ஸ்பெக்டர் (1953)
- தூக்குத் தூக்கி (1954)
- புதுயுகம் (1954)
- டாக்டர் சாவித்திரி (1955)
- மகேஸ்வரி (1955)
- நல்ல தங்கை (1955)
- சதாரம் (1956)
- அமரதீபம் (1956)
- கோகிலவாணி (1956)
- நான் பெற்ற செல்வம் (1956)
- புது வாழ்வு (1957)
- புதுமைப்பித்தன் (1957)
- மணமகன் தேவை (1957)
- வணங்காமுடி (1957)
- கற்புக்கரசி (1957)
- சக்கரவர்த்தி திருமகள் (1957)
- சமய சஞ்சீவி (1957)
- காத்தவராயன் (1958)
- வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
- பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959)
1960 - 1969
தொகு- ராஜா தேசிங்கு (1960)
- சவுக்கடி சந்திரகாந்தா (1960)
- கடவுளின் குழந்தை (1960)
- தோழன் (1960)
- நாகநந்தினி (1961)
- கப்பலோட்டிய தமிழன் (1961)
- பட்டினத்தார் (1962)
- அரசிளங்குமரி (1962)
- சித்தூர் ராணி பத்மினி (1963)
- காப்டன் ரஞ்சன் (1969)
பாடகராக
தொகு- பொன்முடி (1950) திரைப்படத்தில் டி. வி. ரத்தினத்துடன் இணைந்து பாடினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ திரை இசையில் ராகநாதனாக திகழ்ந்த ஜி.ராமநாதன்!
- ↑ "ஜி. ராமநாதன் கர்நாடக இசையில் பாடல் இசைத்தார்". bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 19, 2013.
- ↑ "ஜி. ராமநாதனுக்கு விருப்பமான குரல்கள்". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 19, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]