அபிவிருத்தி உளவியல்

அபிவிருத்தி உளவியல் அல்லது வளர்ச்சிசார் உளவியல் (developmental psychology அல்லது life span psychology) என்பது மனித உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்த, உளவியல் ஆய்வுப் பிரிவு ஆகும். இதனை வளர்ச்சி உளவியல் என்றும்[1] தமிழகத்தில் அழைக்கின்றனர். முதலில்[2] குழந்தைகளின் வளர்ச்சி குறித்துக் கருத்திலெடுத்த இத்துறையானது, பின்னர் சிறார்களையும், வாலிபப் பருவத்தையும், வயதுவந்தோர் மேம்பாடு குறித்தும், முதுமையையும் உள்ளடக்கிய, முழு மனித வாழ்நாள் வளர்ச்சி நிலைகளையும் கருத்திலெடுத்து விரிகிறது. மேலும், தசை இயக்க ஆற்றலையும், ஏனைய உளவியல் உடற்கூற்று செயற்முறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்கிறது. அத்தகைய ஆய்வில் அறிதிறன் வளர்ச்சியுடன் தொடர்புபட்ட சிக்கல் தீர்வு, ஒழுக்கநெறி புரிந்துணர்வு, கருத்துருவாக்கப் புரிந்துணர்வு, மொழிப் பழக்கப்படுத்தல், சமூகப் புரிந்துணர்வு, ஆளுமை, உணர்வு வளர்ச்சி, சுய கருத்து, அடையாள உருவாக்கம் போன்ற பிற உளவியல் உட்கூறுகளையும் உள்ளடக்கிப் பரந்த அளவு மாற்றத்தை சோதிக்கின்றது.[3][4]

தோற்றம்

தொகு

1950 ஆம் ஆண்டுகளில், ஆளுமைக் காரணிகளுக்கும், குழந்தை வளர்ப்புக்கும் இடையிலான உறவில், உளவியலாளர்கள் ஆர்வம் காட்டினர், மேலும், பி.எஃப். எசுகின்னரின் (B.F. Skinner) நடத்தை கோட்பாடுகளும், சீன் பியாசெட்டின் (Jean Piaget) அறிவாற்றல் கோட்பாடுகளும், இளம் பருவத்திலிருந்தே, குழந்தைகளின் வளர் இயல்பிலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்தனர். அதே நேரத்தில், செருமன் உளவியலாளர் எரிக் எரிக்சன், குழந்தை வளர்ச்சிக்கு கூடுதலாக, வயதுவந்தோர் உளவியலின் அர்த்தமுள்ள கட்டங்களையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். உளவியலாளர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை மொத்த நபரின் நடத்தை வளர்ச்சியைக் குறிக்கும் செயல்முறைகளையும் கருத்தில் கொள்ளத் தொடங்கினர், அச்செயல் முறைககளில், உடல்-வேதியியல் சூழலின் பல்வேறு கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டனர். [5] 1980 ஆம் ஆண்டுகளில் வட அமெரிக்கா, ஐரோப்பா, யப்பான் ஆகிய நாடுகளின் உளவியிலாளர்கள், இந்த உளவியில் துறையை அதிகம் வளர்த்தனர். இருபதாம் நூற்றாண்டு வளர்ச்சி உளவியலாளர்கள், பரிணாமவியல், மரபியில், உடலியலுளவியல் போன்றவற்றின் கொள்கைகள்படி, மனிதனுடைய உள்ளமும் நடத்தையும் எவ்வாறு விலங்கு, ஆதிமனிதன், குழந்தை ஆகிய பருவங்கள் மூலம் வளர்ந்து வந்துள்ள தொடர்புகளை ஆராயும் பிரிவாகவே, தற்போதுள்ள வளர்ச்சி உளவியலை கருகின்றனர். அண்மைக் காலத்தில், உள்ளத்தில் ஏற்படும் கிளர்ச்சிகளும் சிக்கல்களும் உடலைப் பாதிக்கின்றதை அறிவதும், இந்த உளவியலின் வேலையாக அமைந்திருக்கிறது. [6]

ஆய்தல்

தொகு
 
எரிக்சனின் உளவியல் வளர்ச்சி நிலைகள் (செக்க மொழி)

மிகவும் செல்வாக்கு மிக்க அபிவிருத்தி உளவியலாளர்களில் ஒருவரான எரிக் எரிக்சன் அபிவிருத்தி உளவியல் பற்றி ஆய்வு செய்திருந்தார். எரிக்சன் 1959 இல் சமூக உளவியல்சார் நிலைகள் பற்றி முன்மொழிந்திருந்தார்.[7] மற்றொரு பிரபல அபிவிருத்தி உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட் பாலுணர்வுள முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்திருந்தார்.[8]

ஆய்வுகள்

தொகு
சுடென்டார் உயிரியின் கற்றல்
 
சோதனையில் சிம்பன்சி..

பருவம் வந்த மனிதனுடைய நடத்தை பல சிக்கல்களைக் கொண்டிருக்கின்றன. விலங்குகளும் குழந்தைகளும் இயல்பூக்கங்களை மட்டுமே அனுசரித்து வாழும் வாழ்வைக் குறித்த அராய்ச்சி, பருவம் வந்த மனிதனுடைய நடத்தையின் இயல்பை நன்கு விளக்குகின்றது. விலங்குகளின் நடத்தையே, மனிதனுடைய நடத்தைக்கு அடிநிலை ஆகும் . இது குறித்த ஆராய்ச்சி, சோதித்துத் தவறித் தெரியும் முறை' யைப் (Trial & Error method) பின்பற்றி, உயிரினங்கள் கையாள்வதைக் கண்டறிந்தனர். இந்த முறையும் விலங்குகளிடையே பல படிகளாகக் காணப்படுகிறது. உயர்ந்த படியிலுள்ள விலங்குகள் புலன்களினின்றும் ஏற்படும் உணர்வு நிலையை அடைந்திருப்பதைக் கண்டறிந்தனர்.[9]

ஒரே உயிரணு அமைந்த சுடென்டார் (Stentor) முன், நிறத்தூள்களைத் தூவினால், அதுவும் அவற்றினின்றும் தப்பித்துக்கொள்ள, சோதித்துத் தவறித் தெரியும் முறையைக் கையாள்கிறது. சிக்கலறையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஆமை பயன்படுத்தும் முறையும் இதுவே ஆகும். இந்த முறைதான், மக்கள் தங்கள் தேவைக்குத் தக்கவாறு பயன்படுத்தும் முறையாகப் பின்பற்றுகின்றனர். ஒ டப்ளியூ. எஸ். கெல்லாக் என்பவரும், எல். ஏ. கெல்லாக் என்பவரும் குவா என்ற பெயருடைய சிம்பன்சிக் குட்டியையும், டொனால்டு என்ற மனிதக் குழந்தையையும் ஒன்றாகச் சேர்த்து வளர்த்தார்கள். இரண்டும் ஒரே சூழலில் வளர்ந்தனர். எடுத்துக்காட்டாக, கயிற்றில் கட்டித் தொங்கிய பழத்தைப் பெறுவதற்கு, இருவரும் நாற்காலியையேப் பயன்படுத்தினர். ஆனால் சதுரம், செவ்வகம், வட்டம் ஆகிய உருவங்களுடைய கட்டைகளை, அவைகளை வைக்கக் கூடிய பள்ளங்களில் வைக்கும் சோதனையில், டொனால்டே அதிகத் திறமை காட்டினான். சிம்பன்சிக்கு மட்டும் கிளிக்குள்ளது போல் பேச்சுத்திறன் இருக்குமானால், அதனிடம் பேச்சுமொழிகூடப் பிறந்துவிடும். இத்தகைய ஆராய்ச்சியை யெர்க்ஸ் செய்த போது, தமது சிம் என்னும் சிம்பன்சிக்குப் பேசுவதற்குக் கற்றுக் கொடுக்க நான்கு முறைகளைக் கையாண்ட போதிலும், வெற்றி பெறவில்லை.[10]

குழந்தை

தொகு

சீன் பியாகத்து என்ற உளவியலாளர் தனது ஆய்வில், ஒரு குழந்தை என்பது ஒன்றோடொன்று இணையாத, பல பழக்கங்களின் ஒரு தொகுதி அல்ல. குழந்தைக்கும் ஆளுமை உண்டு எனவும், இந்த ஆளுமை ஒழுங்கான முறையில், பல படிகள் வளர்ச்சியுறுகிறது எனவும் கண்டறியப்பட்டன. எடுத்துக்காட்டாக, இரண்டு வயதாகி, மூன்று வயது நிரம்பாத குழந்தை தாக்கும் குணம் உடையதாகவும், நான்கு வயது குழந்தை சுய குணமுடையதாகவும், ஏழு வயது நிரம்பாத குழந்தை தனித் தன்மை உடையதாகவும் கண்டறிந்தார்.[11]

பிராய்டு தமது ஆய்வில், குழந்தை உளவியலும், குழந்தை உள மருத்துவமும் வளர்ச்சி உளவியலால் பயனுடையன ஆகும். குழந்தை எப்பொழுதும் பாதுகாவலையும் சொந்தமாயிருப்பதையும்விரும்புகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைக்குண்டாவதைவிட நல்ல பசியும் நல்ல உறக்கமும் உண்டாகின்றன. பொறாமை, அகாரணமான அச்சம், நரம்புக் கோளாறு முதலியன தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் குறைவு. ஒரு குழந்தை ஒரு கயிற்றில் கட்டிய பொம்மை ஒன்றை இடைவிடாமல் வைத்து விளையாடுவதைக் கூறினார். அது முதல் விளையாட்டானது சில சமயம் தோல்வி மனப்பான்மை, போராட்டம், மனத்தில் கலக்கம் முதலியன உண்டாவதைக் காட்டும் அறிகுறி என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

விளையாட்டு: மெலானிக்கிளைன், ஆனா பிராய்டு, சூசன் ஐசக், மார்கரட்லோவன் பெல்டு போன்றவர்கள் குழந்தைகளுடைய மன நோய்களைக் கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் விளையாட்டைப் பயன்படுத்தினர். விளையாட்டு என்பதை அதற்காகப் பயன்படும் பொருள்களையும், விளையாடும் வகைகளையும் வைத்து ஆராய்தனர். நரம்புக் கோளாறுள்ள குழந்தை தன்னுடைய வயதிலும், சிறிய குழந்தை போல் எண்ணிக் கொண்டு அதற்கேற்ப விளையாடுகிறது. குழந்தைகள் பொருள்களை அழித்து விளையாடுவது, தாம் செய்துள்ள குற்றத்தையோ அல்லது உள்ளத்திலுள்ள இறுக்கத்தையோ மறைப்பதற்கான செயலேயாகும். அக்குழந்தைகள், விரைவில் களைப்பைப் பெறுகிறது. குழந்தைகள் தங்கள் மனோபாவத்தைக் காட்டுவதற்காகவும், கூறுவதற்காகவும், வரையும் எழுத்துக்களையும், படங்களையும் குறித்து, போர்தாம் செய்துள்ள ஆராய்ச்சிகள் ஈர்ப்பு மிகுந்த ஆய்வு முடிவுகளைத் தெரிவிக்கின்றன. இத்தகைய விளையாட்டு குறித்த ஆய்வுகள் வளர்ந்து வருகின்றன.[12]

உசாத்துணை

தொகு
  1. *தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டக் கலைக்களஞ்சியம்
  2. https://www.cliffsnotes.com/study-guides/psychology/development-psychology/introduction-to-developmental-psychology/what-is-developmental-psychology
  3. https://www.sciencedirect.com/topics/computer-science/life-span-psychology
  4. தமிழக அழகப்பா பல்கலைக் கழகத்தின் முதுநிலை பாடநூலின் மின்னூல் வடிவம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. https://www.britannica.com/science/developmental-psychology
  6. https://www.simplypsychology.org/developmental-psychology.html
  7. McLeod, Saul. "Erik Erikson". Simply Psychology. பார்க்கப்பட்ட நாள் 10 November 2014.
  8. McLeod, Saul. "Psychosexual Stages". Simply Psychology. பார்க்கப்பட்ட நாள் 10 November 2014.
  9. https://www.simplypsychology.org/developmental-psychology.html
  10. http://www.pigeon.psy.tufts.edu/psych26/kohler.htm
  11. https://www.biography.com/scientist/jean-piaget
  12. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5364837/

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிவிருத்தி_உளவியல்&oldid=3838648" இலிருந்து மீள்விக்கப்பட்டது