அ. க. செட்டியார்

செலவ (பயண) எழுத்தாளர்

அ. க. செட்டியார் (A. K. Chettiar, 3 நவம்பர் 1911 – 10 செப்டம்பர் 1983) தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940-இல் தமிழில் எடுத்தவர். உலகம் சுற்றிய தமிழன், பயண இலக்கியங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன்னோடியான இவர் ஏ. கே. செட்டியார் என்ற பெயராலும் அறியப்படுகிறார்.[1]

ஏ. கே. செட்டியார்
பிறப்புஅண்ணாமலை கருப்பன் செட்டியார்
(1911-11-03)3 நவம்பர் 1911
கோட்டையூர், சிவகங்கை மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு10 செப்டம்பர் 1983(1983-09-10) (அகவை 71)
பணிஊடகவியலாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுமகாத்மா காந்தி ஆவணப் படம் தயாரித்தவர், பயண இலக்கிய எழுத்தாளர்
பெற்றோர்அண்ணாமலை செட்டியார்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் கருப்பன் செட்டியார். தந்தையார் பெயர் அண்ணாமலை செட்டியார். இவர் தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், பின்னர் 1935இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு புகைப்பட நிறுவனத்தில் ஓராண்டு பயின்று பட்டயம் பெற்றார்.

காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம்

தொகு

முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி 1940-ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியாரே ஆவார்.[2] இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937-ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான மகாத்மா காந்தி படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை[3]. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் 1948 ஆகத்து 23 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.[4] இத்திரைப்படத்தின் படிகள் எதுவுமே இப்போது இல்லை.

செட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு 2006 சனவரி 19 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது[3].

"Mahatma Gandhi: Twentieth Century Prophet" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன[3].

பயண இலக்கியம்

தொகு

பயண இலக்கியத்தின் முன்னோடி என மதிக்கப்படும் செட்டியார் பல பயண நூல்களைப் படைத்ததுடன் மற்றவர்களது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் உள்ளார். 1850-1925 காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, பயணக் கட்டுரைகள் என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். தாம் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை உலகம் சுற்றும் தமிழன் என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 இல் வெளியிட்டார். இவர் எழுதிய பின்வரும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன:

  • உலகம் சுற்றும் தமிழன்
  • பிரயாண நினைவுகள்
  • மலேயா முதல் கனடா வரை
  • கயானா முதல் காஸ்பியன் கடல் வரை
  • அமெரிக்க நாட்டிலே
  • ஐரோப்பா வழியாக
  • குடகு
  • இட்டபணி
  • திரையும் வாழ்வும்
  • ஜப்பான் கட்டுரைகள் (1936, இரங்கூன்)
  • “ தமிழ்நாடு -நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்

இதழியலில்

தொகு

தமிழில் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளையும் அறிவுக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கென்று குமரிமலர் என்ற மாத இதழைத் தொடங்கினார். இது செப்டம்பர் 1943 முதல் 1983 வரை 40 ஆண்டுகளாக வெளிவந்தது. ஏ. கே. செட்டியார் 20 வயதில் பர்மா சென்று இரங்கூனில் தனவணிகன் என்ற இதழை வெளியிட்டார். 1926 இல் பூதலூர் வைத்தியநாத ஐயர் ஆனந்த விகடன் என்ற பெயரில் நகைச்சுவை மாத இதழைத் தொடங்கியபோது அவரை ஊக்கப்படுத்தியவர் ஏ. கே. செட்டியார் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Madras (2020-09-10), உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார் – பயண இலக்கியங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன்னோடி - Madras Review (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
  2. "ஏ.கே.செட்டியார்: மறக்கப்பட்ட ஒரு சாதனையாளர்", Hindu Tamil Thisai, 2016-09-10, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11
  3. 3.0 3.1 3.2 "Net search throws up documentary on Gandhi (The Hindu)". Archived from the original on 2010-09-07. பார்க்கப்பட்ட நாள் 2006-10-09. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. ரேவதி, மு., ஏ. கே. செட்டியார், தமிழ் வளர்த்த சான்றோர்கள் சென்னை, 1997)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._க._செட்டியார்&oldid=3954176" இலிருந்து மீள்விக்கப்பட்டது