ஆசிம்புரா படுகொலை

ஆசிம்புரா படுகொலை (Hashimpura massacre) என்பது 1987 ஆம் ஆண்டு மீரட் வகுப்புக் கலவரத்தின் போது, இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் அருகே 1987 மே 22 அல்லது அதை ஒட்டிய நாளில் 50 முசுலீம் ஆடவர்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வு ஆகும். மாநில ஆயுதப்படைக் காவலர்கள் 19 பேர், ஆசிம்புரா நகரின் மொகல்லாவைச் சேர்ந்த 42 முசுலீம் இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்று, அவர்களை சுட்டுக் கொன்று, அருகில் உள்ள ஆற்றுக் கால்வாயில் உடல்களை வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, கால்வாயில் சடலங்கள் மிதப்பதைக் கண்டுபிடித்து, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியில், இந்தச் செயலைச் செய்ததாக 19 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். மே 2000 இல், குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் 16 பேர் சரணடைந்தனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதேசமயம், குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவரும் இடைப்பட்ட காலத்தில் இறந்துவிட்டனர். 2002 ஆம் ஆண்டு, இந்திய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தில்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.[1][2]

21 மார்ச் 2015 அன்று, 1987 ஆம் ஆண்டு ஆசிம்புரா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.[3] இந்தத் தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் 31 அக்டோபர் 2018 அன்று, மாநில ஆயுதப் படைக் கவலர்கள் 16 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.[4][5][6]

நிகழ்வு

தொகு

1986 பெப்ரவரியில் உத்தரப் பிரதேசத்தில், அயோத்தியில் இராமர் கோயிலில் வழிபாடு நடத்த மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கினார். நீதிமன்றத்தின் உத்தரவுபடி அயோத்தி இராமர் கோயில் வழிபாட்டுக்குத் திறந்துவடப்பட்டது. இதன் காரணமாக மீரட்டில் வகுப்புக் கலவரங்கள் வெடித்ததால், மாநில ஆயுதப்படை வரவழைக்கப்பட்டது. ஆனால் கலவரம் தணிந்ததால் ஆயுதப் படை திரும்பப் பெறப்பட்டது. ஆனால், மே 19 இல் மீண்டும் வன்முறை வெடித்தது. அப்போது தீவைப்பு நிகழ்வுகளால் 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் கொடி அணிவகுப்பு நடத்த இராணுவம் அழைக்கப்பட்டது. மத்திய சேமக் காவல் படையின் ஏழு கம்பெனி படைகள் பகலில் நகரத்தை அடைந்தன. அதே நேரத்தில் மாநில ஆயுதப்படையின் 30 கம்பெனி படைகள் விரைந்து வந்து காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை இட்டன.[7] அடுத்த நாள், ஒரு கும்பல் குல்மார்க் திரைப்பட அரங்கை எரித்தது. இதனால் கலவரத்தில் இறந்தவர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது, 75 பேர் காயமடைந்தனர். 1987 மே 20 அன்று கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

22, மே, 1987 இரவு, தளபதி சுரிந்தர் பால் சிங் தலைமையிலான, 19 மாநில ஆயுதப்படை வீரர்கள் கொண்ட படைப்பிரிவு மீரட்டில் உள்ள ஆசிம்பூர் மொகல்லாவில் ஊரடங்கை மீறியதாக முஸ்லிம்களை சுற்றி வளைத்தனர். விசாரணைக்குப் பிறகு முதியவர்கள், குழந்தைகள் மட்டும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சியிருந்த 40-45 பேரில், பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் இருந்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முராத் நகரில் உள்ள கங்கை ஆற்றுக் கால்வாய் பாலத்துக்கு ஒரு சரக்குந்தில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு, அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சுட்டுக் கொல்லபட்டு, கால்வாயில் வீசப்பட்டனர். அவர்களைச் சுடும்போது ஒரு தோட்டா பாய்ந்து ஆயுதப்படைக் காவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. சிலர் கொல்லப்பட்ட பிறகு, அவ்வழியே வந்த வாகனங்களின் முகப்பு விளக்குகளைக் கண்டு உயிருடன் இருந்தவர்களுடன் அந்த இடத்தை விட்டு ஆயுதப்படை வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர். சுடப்பட்டவர்களில் நான்கு பேர் இறந்தது போல் நடித்து நீந்தி தப்பினர். அவர்களில் ஒருவர் முராத் நகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தார்.[8][9]

மீதமுள்ள ஆண்கள் காசியாபாத்தில் உள்ள மக்கன்பூர் கிராமத்திற்கு அருகில் உள்ள இண்டன் ஆற்றுக் கால்வாய்க்கு அருகில் சரங்குத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த உடல்கள் கால்வாயில் வீசப்பட்டன. இங்கும், சுடப்பட்டவர்களில் இருவர், உயிர் பிழைத்து, லிங்க் ரோடு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தனர்.[8][9][10]

பின்விளைவு

தொகு

இந்த நிகழ்வு குறித்த செய்தி ஊடகங்களில் பரவியதையடுத்து, சிறுபான்மை உரிமை அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தின.[1] தலைமை அமைச்சர் இராஜீவ் காந்தி, முதலமைச்சர் வீர் பகதூர் சிங்குடன் மே 30 அன்று நகரையும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.[11] மனித உரிமைகள் அமைப்பான, மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( மசிஉக ), அப்போதைய மசிஉக தலைவர், (முன்னாள் நீதியரசர்) இராஜேந்தர் சச்சார், ஐ. கே. குஜரால் (பின்னாளைய இந்தியாவின் தலைமை அமைச்சர் ) மற்றும் பலர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்தது. 23 ஜூன் 1987 அன்று குழு தன் அறிக்கையை வெளியிட்டது.

1988 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசக் காவல்துறையின் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. முன்னாள் தலைமைக் கணக்குத் தலைவர் ஜியான் பிரகாஷ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட உத்தியோகபூர்வ புலனாய்வுக் குழு தனது அறிக்கையை 1994 இல் சமர்ப்பித்தது,[12] 1995 ஆம் ஆண்டு வரை அது வெளியிடப்படவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வை நாடினர்.

சிபி-சிஐடி விசாரணையின் போது, லிங்க் சாலை காவல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த துணை ஆய்வாளர் வீரேந்திர சிங், நிகழ்வு குறித்த தகவலைப் பெற்றவுடன், இண்டன் கால்வாய் நோக்கிச் சென்றதாகவும், அங்கு ஒரு ஆயுதப்படை சரக்குந்து அந்த இடத்திலிருந்து திரும்பிச் செல்வதைக் கண்டதாகவும் கூறினார். அவர் சரக்குந்தைத் துரத்திச் சென்றபோது, அது ஆயுதப் படையின் 41வது வாகினி முகாமுக்குள் நுழைவதைக் கண்டார். காசியாபாத் காவல் கண்காணிப்பாளர் விபூதி நரேன் ராய் மற்றும் காசியாபாத் மாவட்ட மாஜிஸ்ரேட் நசீம் ஜைதி ஆகியோரும் 41வது வாகினியை அடைந்து மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் மூலம் சுமையுந்தைக் கண்டுபிடிக்க முயன்றனர், ஆனால் பலனில்லை.[1] அந்த அறிக்கையில், சிபி-சிஐடி புலனாய்வு அதிகாரி ஆர். எஸ். விஷ்னோய், மாநில ஆயுதப்படையினர் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த 37 ஊழியர்கள் மீது வழக்குத் தொடர பரிந்துரைத்தார். மேலும் அவர்களில் 19 பேர் மீது வழக்குத் தொடர 1, ஜூன், 1995 அன்று அரசாங்கம் அனுமதி வழங்கியது. பின்னர், 20 மே 1997 அன்று, முதல்வர் மாயாவதி, மீதமுள்ள 18 அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கினார்.[13]

நீதிமன்ற வழக்கு

தொகு

விசாரணைக்குப் பிறகு, 1996 ஆம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 197 இன் கீழ் ஒரு குற்றப் பத்திரிக்கை காசியாபாத் தலைமை நீதித்துறை நடுவரிடம் (CJM) தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரை நீதிமன்றத்தில் நேர்நிற்குமாறு அழைப்பாணை பிறப்பிக்கபட்டது. இவர்களுக்கு எதிராக 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை 23 முறை ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர்கள் யாரும் நீதிமன்றத்தில் நேர்நிர்க்கவில்லை. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 1998 முதல் ஏப்ரல் 2000 வரை 17 முறை ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டும் பலனில்லை. இறுதியில், பொது அழுத்தத்தின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பேர் 2000 ஆம் ஆண்டில் காசியாபாத் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.[14][15]

காசியாபாத்தில் விசாரணைக்கு முந்தைய நடவடிக்கைகளில் அதிக தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2001 இல்,[16] பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உறவினர்கள் வழக்கை காசியாபாத்தில் இருந்து புது தில்லிக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 2002 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் வழக்கை தில்லிக்கு மாற்றி தீர்ப்பு வழங்கியது. ஆனால் 2004 நவம்பர் வரை மாநில அரசு சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்காததால், வழக்கைத் தொடங்க முடியவில்லை, பின்னனர் எஸ். அட்லாக்கா நியமிக்கப்பட்டார்.[17] இறுதியாக, 2006 மேயில், குற்றம் சாட்டப்பட்ட மாநில ஆயுதப் படை வீரர்கள் அனைவர் மீதும் கொலை, கொலைக்கு சதி செய்தல், கொலை செய்ய முயற்சி, ஆதாரங்களை சேதப்படுத்துதல் போன்ற குற்றங்கள் பிரிவுகள் 302/ 120B/ 307/ 201/ 149/ 364/ 148/ 147 கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை சூலையில் தொடங்க திட்டமிடப்பட்டது.[14]

விசாரணை தொடங்கும் நாளான, 15 சூலை 2006 அன்று உத்தரபிரதேச அதிகாரிகள் இன்னும் முக்கியமான வழக்கு சம்மந்தப்பட்ட பொருட்களை தில்லிக்கு அனுப்பவில்லை என்று அரசுத் தரப்பு கூறியதை அடுத்து, டெல்லி அமர்வு நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி என். பி. கௌசிக், வழக்கை சூலை 22க்கு ஒத்திவைத்தார்.[14] மேலும், "ஏன் இந்த வழக்கு அவசர அடிப்படையில் உரிய முறையில் கையாளப்படவில்லை" என்று விளக்கம் கேட்டு உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் மற்றும் சட்டச் செயலாளர் ஆகிய இருவருக்கு கேட்பாணை அனுப்பினார்.[16] பின்னர், சூலை 22 அன்று, வழக்கு விசாரணைகள் தொடங்கியது.[15]

மே 2010க்குள், வழக்கை விசாரித்த உத்தரபிரதேச காவல்துறையின் சிபி-சிஐடியால் சாட்சிகளாகப் பட்டியலிடப்பட்ட 161 பேரில் 63 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 19 மே 2010 அன்று, இந்த வழக்கில் 4 சாட்சிகள் தில்லி நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி மனு ராய் சேத்தி முன் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இவர்களில் சிராஜுதீன், அப்துல் கஃபர், அப்துல் அமீத் மற்றும் அப்போதைய சிறப்புப் பணி அதிகாரி (OSD) சட்டம் மற்றும் ஒழுங்கு ஜி. எல். சர்மா ஆகியோர் அடங்குவர்.[9][18] எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட மாநில ஆயுதப்படைப் பணியாளர்களை நேரில் கண்ட சாட்சிகள் என யாரும் அடையாளம் காண முடியவில்லை.

16 அக்டோபர் 2012 அன்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, படுகொலை நடந்த அந்த நேரத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சராக இருந்த (MoS) ப. சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.[19]

1987 ஆம் ஆண்டு ஹாஷிம்புரா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 21 மார்ச் 2015 அன்று தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் விடுதலை செய்தது.[3] குற்றம் சாட்டப்பட்ட மாநில ஆயுதப்படை பணியாளர்கள் எவரையும் தப்பிப்பிழைத்தவர்கள் அடையாளம் காட்டவில்லை என்று நீதிமன்றம் கூறியது.

விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உத்தரபிரதேச அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஷர் ஜஃபர்யாப் ஜிலானி இந்த வழக்கின் பொறுப்பாளராகவும், உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராம் கிஷோர் சிங் யாதவ் அவருக்கு உதவியாகவும் இருந்தனர். திரு. கவுஷல் யாதவ், இந்த விஷயத்தில் அரசு வழக்கறிஞராக இருந்தார்.[20]

மே 2015 இல், உத்தரப் பிரதேச அரசு ரூ. 5 லட்சத்தை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் வழங்கியது.

31 அக்டோபர் 2018 அன்று, 78 வயதான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ரன்வீர் சிங் விஷ்னோய், தில்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பொது நாட்குறிப்பை முக்கிய ஆதாரமாக சமர்ப்பித்தார். இதனால் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டு, மாநில ஆயுதப்படையின் 16 பணியாளர்கள் குற்றவாளிகள் என அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் தீர்ப்பு வெளிவர வழிவகுத்தது.[21]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Justice out of sight". 22. Frontline. 7–20 May 2005 இம் மூலத்தில் இருந்து 10 August 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080810064151/http://www.hinduonnet.com/fline/fl2210/stories/20050520001504300.htm. 
  2. "Hashimpura massacre: Rifles given to PAC". 27 July 2006 இம் மூலத்தில் இருந்து 4 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104213630/http://articles.timesofindia.indiatimes.com/2006-07-27/india/27806339_1_rifles-case-property-hashimpura-massacre. 
  3. 3.0 3.1 "16 acquitted in 1987 Hashimpura massacre case". The Hindu. The Hindu (Delhi). 21 March 2015. http://www.thehindu.com/news/national/other-states/16-acquitted-in-1987-hashimpura-massacre/article7018797.ece?homepage=true. பார்த்த நாள்: 21 March 2015. 
  4. "1987 Hashimpura massacre case: Delhi HC sentences 16 ex-policemen to life imprisonment". The Economic Times. 31 October 2018. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/1987-hashimpura-massacre-case-delhi-hc-sentences-16-cops-to-life-imprisonment/articleshow/66442007.cms?from=mdr. பார்த்த நாள்: 17 March 2020. 
  5. Hashimpura Massacre: A brutal and bone – chilling action of custodial killings (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
  6. "Delhi High Court sentences 16 ex-cops to life imprisonment in Hashimpura massacre case". The Print. 31 October 2018. https://theprint.in/india/governance/delhi-high-court-sentences-16-ex-cops-to-life-imprisonment-in-hashimpura-massacre-case/143166/. பார்த்த நாள்: 17 March 2020. 
  7. "10 Killed in Meerut Clashes: Army Called Out". The Indian Express. 19 May 1987. https://news.google.com/newspapers?id=uIJlAAAAIBAJ&pg=2494,1974200&dq=meerut+1987+riots&hl=en. 
  8. 8.0 8.1 "Hashimpura survivors file 615 RTI applications in 20 years long pursuit of justice". Asian Tribune. 25 May 2007. http://www.asiantribune.com/node/5860. 
  9. 9.0 9.1 9.2 "Hashimpura massacre: Court records statement of 5 witnesses". Zee News. 15 May 2010. http://www.zeenews.com/news626813.html. 
  10. Engineer, Asgharali (1988). Delhi-Meerut riots: analysis, compilation, and documentation. Ajanta Publications (India). p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-202-0198-1.
  11. "Rajiv Visits Meerut". 31 May 1987. https://news.google.com/newspapers?id=w4JlAAAAIBAJ&pg=1844,2854117&dq=meerut+1987+riots&hl=en. 
  12. "The art of not forgetting" பரணிடப்பட்டது 25 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்Indian Express 27 February 1998.
  13. "Mayawati shrugs off resurrected Hashimpura ghost". 19 June 1997. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19970619/17050363.html. 
  14. 14.0 14.1 14.2 . [தொடர்பிழந்த இணைப்பு]
  15. 15.0 15.1 "I feigned death: witness in Hashimpura massacre case". தி இந்து. 23 July 2006 இம் மூலத்தில் இருந்து 26 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110526184049/http://www.hindu.com/2006/07/23/stories/2006072302440700.htm. 
  16. 16.0 16.1 "Meerut massacre: Court notice to UP govt". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 July 2006 இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104213725/http://articles.timesofindia.indiatimes.com/2006-07-15/india/27811384_1_meerut-massacre-court-notice-hashimpura. 
  17. "'87 Meerut massacre: Trial from today". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 July 2006 இம் மூலத்தில் இருந்து 2011-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110809003441/http://articles.timesofindia.indiatimes.com/2006-07-14/india/27809036_1_meerut-massacre-pac-delhi-court. 
  18. "Hashimpura massacre: 4 witnesses record their statements". Hindustan Times. 17 May 2010 இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101231013441/http://www.hindustantimes.com/Hashimpura-massacre-4-witnesses-record-their-statements/Article1-544938.aspx. 
  19. "Hashimpura massacre: Subramanian Swamy seeks probe against P Chidambaram". The Economic Times. 16 October 2012. http://articles.economictimes.indiatimes.com/2012-10-16/news/34499176_1_hashimpura-subramanian-swamy-p-chidambaram. 
  20. "Hashimpura massacre: UP government, kin of victims move High Court". The Indian Express. 23 May 2015. https://indianexpress.com/article/india/india-others/hashimpura-massacre-up-government-kin-of-victims-move-high-court/. 
  21. "Hashimpura case: Delhi HC sentences 16 PAC men to life imprisonment for murder of 42 Muslims". Business Standard. 27 November 2018. https://www.business-standard.com/article/news-ani/hashimpura-massacre-five-more-convicts-surrender-before-tis-hazari-court-118112701084_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிம்புரா_படுகொலை&oldid=3874001" இலிருந்து மீள்விக்கப்பட்டது