ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை
(ஆடி பெருக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆடிப்பெருக்கு (ஒலிப்பு) என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும் ஒரு பண்டிகை ஆகும்.

ஆடிப்பெருக்கு
ஆடிப் பருவமழை விழா
அதிகாரப்பூர்வ பெயர்ஆடி நோன்பு, ஆடி 18
பிற பெயர்(கள்)பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி(கொங்கு தமிழ் பேச்சுவழக்கு)
கடைபிடிப்போர்தமிழர்
வகைசமய விழா
முக்கியத்துவம்காவேரி டெல்டா பகுதி, கொங்கு மண்டலம்
கொண்டாட்டங்கள்முளைப்பாரி, நதிக்கரை அம்மன் கோவில் வழிபாடு
அனுசரிப்புகள்வழிபாடுகள், விதைப்பு
நாள்தமிழ் நாட்காட்டிப் படி
நிகழ்வுஆண்டுதோறும்

வேறு பெயர்கள்

தொகு

ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும், கொங்கு தமிழ் பேச்சு வழக்கில் ஆடி நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.[1] பொதுவாகத் தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டும், கிழமைகளையும் கொண்டும் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

விழாக் காரணம்

தொகு

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.[2]

விழா நிகழ்வுகள்

தொகு

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

காவிரிக்கரை

தொகு

காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

பண்டிகை

தொகு

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முக்கொம்பு படித்துறை மற்றும் மேலும் அங்குள்ள 3 படித்துறைகளில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர். வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியன தயார் செய்து, படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ஆடின்னா தூரி நோம்பிதான்". Dinamalar. 2019-08-04. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
  2. ஆடிமாதத்தின் சிறப்புகள் கட்டுரை - குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 34

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடிப்பெருக்கு&oldid=4049686" இலிருந்து மீள்விக்கப்பட்டது