மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1] இத்தலத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தலத்தில் எண்ணற்ற சித்தர்கள் உறைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°25′54″N 79°49′53″E / 12.4318°N 79.8313°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
அமைவிடம்: | மேல்மருவத்தூர் |
ஏற்றம்: | 89 m (292 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஆதிபராசக்தி |
சிறப்புத் திருவிழாக்கள்: | நவராத்திரி, ஆடிப் பூரம், தைப்பூசம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மூலவர்
தொகுஇத்தலத்தின் மூலவர் ஆதிபராசக்தியாகும். ஆதிபராசத்தி இரு கரம் கொண்டும், தாமரை பீடத்தில் அமர்ந்தவாரும் காட்சியளிக்கிறார். இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார். மேலும் இச்சிலைக்குக் கீழ்பகுதியில் சுயம்பு காணப்படுகிறது.
பெண்களுக்கு சிறப்பு
தொகுஇக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.[2] பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபடுகின்றனர்.
அமைப்புகள்
தொகுஇக்கோயிலுக்கு என ஆதிபராசக்தி சித்தர் பீட அமைப்புகள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மூலம் இக்கோயிலின் வழிமுறைகளும், வழிபாட்டு முறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த அமைப்பினைச் சார்ந்தோர் சக்திமாலை அணிந்து, விரதமிருந்து செந்நிற ஆடையை உடுத்தி ஆதிபராசக்தியை வழிபடுகின்றனர். இந்த அமைப்பினைக் கொண்டு குழு வழிபாடும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன.
தல வலராறு
தொகு1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால், இங்குள்ள வேப்பமரம் வீழ்ந்தது என்றும், அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.
இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். "கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன்" எனக் கூறி அவ்வாறே அமைத்துக் கொண்டாள். பக்தர்களைக் காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் "நான் நாகவடிவில் உறைகிறேன்" எனக்கூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலருக்குக் காட்சி கொடுத்ததும் உண்டு.
"இப்புற்றை வலம் வருவது நவக்கிரக சந்நிதியை வலம் வருவதற்குச் சமம்" என்று கூறிய அன்னை அன்றிலிருந்து இன்று வரை இங்கே தான் அமர்ந்து அருள்வாக்கு நல்கி வருகிறாள். 1974ஆம் ஆண்டில் புற்று மண்டபம் தனியாக நிறுவப்பட்டது.
அதே ஆண்டே சப்தமாதர் சந்நிதி எழுப்பப்பட்டது. அரிசன வகுப்பைச் சேர்ந்த அன்பர் ஒருவரை இக்கன்னியர் கோயிலை கட்டுமாறு அன்னை ஆணையிட்டாள்.[சான்று தேவை] இதன் மூலம் சாதிசமயங்களைக் கடந்த சித்தர்பீடம் இது என்பதற்கும், ஆகம விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கோயில் இது என்பதற்கும் இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அன்னை ஆதிபராசக்தியின் பரிவார தேவதைகளான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியவையே சப்தகன்னியர்களாவர். இக்கோயில்களுக்கு மேற்கூரை அமைப்பது இல்லை.
அன்னையின் அருள் வாக்கு ஆணைப்படி 1974ஆம் ஆண்டு சித்தர் பீடத்தின் முகப்பில் ஓம்சக்தி மேடை நிறுவப்பட்டது. அன்னையின் சூலமும், அதில் ஓம் சக்தி என்னும் மூலமந்திரமும் தனிமேடையில் நிறுவப்பட்டுள்ளதால் இது ஓம் சக்தி மேடை எனப்படும். இதனை மும்முறை வலம் வந்த பிறகே ஆலயத்துக்குள் செல்லவேண்டும் என்பதே அன்னையின் கட்டளையாகும். இங்கு நவக்கிரங்களுக்குத் தனியாக சந்நிதி இல்லை. நவக்கிரகங்கள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் பரம் பொருளாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தி ஆதலால் இங்கு நவக்கிரங்களுக்கென தனியாக சந்நிதி இல்லை. அதற்குப் பதிலாகவே ஓம் சக்தி மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சுயம்புவை வெளிப்படுத்தவே மரம் வீழ்ந்து, அந்தச் சுயம்புவின் பேராற்றலை அறிவுறுத்தவே, அதன் மேலிருந்த வேம்பு இன்சுவை கொண்ட பாலை வழங்கிற்று. அந்த வேப்பமரத்தின் சிறப்புக்கு சுயம்பு காரணமாயிற்று. சுயம்புவின் பெருமையைத் தெரிந்துகொள்ள மரம் காரணமாயிற்று. அருள்திரு அடிகளாரின் தந்தையார் திரு. கோபால நாயகர், வேப்பமரம் வீழ்ந்த இடத்தை சுத்தம் செய்து கீற்றுக் கொட்டகை அமைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தார். அதன் பிறகு நான்கு பக்கங்களும் கற்சுவர் அமைத்து மேலே கீற்றுக் கொட்டகை அமைத்து வழிபட்டு வந்தார். கருவறை கட்டும் பணி 19.01.1977 அன்று ஆரம்பமாயிற்று. அன்று சித்தர் பீடத்தில் கருவறைக்கான கால்கோள் விழா எடுக்கப்பட்டது. பக்தர்கள் அருள்வாக்கு கேட்பதற்கு குவியத் தொடங்கினர். அதன் காணிக்கையைக் கொண்டே கட்டிடப் பணிகள் தொடர்ந்தன.
இந்த சித்தர் பீடத்தின் கருவறை விமானத்தின் பெயர் ‘சர்வ காமிகம்‘ எனப்படும். இது இரண்டு நிலைகளைக் கொண்டது. நான்கு மகாநாசிகளும், எட்டு அல்ப நாசிகளும், எட்டு சிம்மங்களும், அஷ்ட லட்சுமிகளும் கொண்ட மேல்முகப்பு உடையது. அர்த்த மண்டபத்துடன் கர்ணகூடம், பஞ்சரம், முகராலை முதலிய அங்கங்கள் கொண்டது.
கருவறையைச் சுற்றி பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, ஆகிய மூவரும் கருணைப் பெருக்குடன் புன்முறுவல் பூத்தாவாறு அமர்ந்துள்ளனர். அர்த்த மண்டபத்தில் துர்க்கையும், விநாயகரும் வீற்றுள்ளனர். சித்தர் பீடத்தைச் சுற்றி 21 சித்தர்கள் உருவமற்ற சிலை வடிவில் வீற்றிருக்கின்றனர். இவர்களுக்கும் இங்கு பூசை செய்யப்படுகின்றது. கருவறை முன் முகப்பின் மேலே அன்னை ஆதிபராசக்தி வீற்றிருக்க அவளுக்கு இருபுறமும் கலைமளும், திருமகளும் சேவை செய்யும் திருக்கோலம் தாங்கியுள்ளனர். கருவறையின் இடப்புறத்தே வேப்பமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது.
புற்று மண்டபத்தின் பின்புறம் நாகபீடம் அமைந்துள்ளது. கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழிபடுவார்கள். அருள்வாக்கில் அம்மாவிடம் "பாமரமக்களும், எளிய நிலையிலுள்ளவர்களும் நெஞ்சில் நிறுத்தி வழிபடுவதற்கு இலகுவாக உருவ அமைப்பில் சிலை அமைத்துக் தாருங்கள்" எனக் கேட்டதற்கிணங்க அன்னை சிலையாக அமர்ந்துள்ளாள். அந்தச் சிலை எப்படி அமையவேண்டும் என்றும் அவளே வெளியிட்டாள். 36 அங்குல உயரத்தில் அன்னையின் உருவம் வடிவமைக்கபபட்டது. அன்னை தாமரை பீடத்தில் இருக்கிறாள். வலது காலை மடக்கியும் இடது காலை ஊன்றியும் அமர்ந்துள்ளாள்.
அவள் இடக்காலை ஊன்றி இருப்பது அனைத்திலும் முதன்மைத் தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதனைக் காட்டும். அன்னை தனது வலக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியுள்ளாள். இடக்கரத்தை சின்முத்திரை காட்டும் நிலையில் வைத்துள்ளாள். அன்னையின் திருமுடி மேல் நோக்கி கட்டப் பெற்றுள்ளது. இவ்வாறு அன்னை சுயம்புக்குப் பின்புறம் சிலை வடிவில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.
சூனியம் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அதருவண பத்ரகாளி கோயிலை அமைத்துக் கொடுத்துள்ளாள்.
விழாக்கள்
தொகுபோக்குவரத்து
தொகுஇக்கோயிலானது சென்னை-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை-45ல் மேல்மருவத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை 92 கி.மீ. மற்றும் விழுப்புரம் 54 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இங்கிருந்து சென்னைக்குச் செல்லவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்குச் செல்ல நிமிடத்திற்கு ஒரு பேருந்து வீதம் இயக்கப்படுகின்றன. அதேபோல் இதன் மிக அருகிலேயே மருவத்தூர் தொடர் வண்டி நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையத்தில் அனைத்து விரைவு இரயில்களும் நின்று செல்கின்றன.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Mel Maruvathur Adhi Parasakthi Temple : Mel Maruvathur Adhi Parasakthi Mel Maruvathur Adhi Parasakthi Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-01.
- ↑ Raji (2020-01-25). "சிவப்பு துணி அணிந்து இந்த கோவிலுக்கு சென்றால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்". Dheivegam. பார்க்கப்பட்ட நாள் 2023-10-01.