இந்தியன் எக்சுபிரசு

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியன் எக்சுபிரசு அல்லது இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் இச்செய்தித்தாள் 1931 இல் தொடங்கப் பட்டது. இந்தியாவில் அதிகம் படிக்கப்படும் செய்தித்தாள்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இது உள்ளது. வட இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலும், தென்னிந்தியாவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலும் இது விற்பனை செய்யப்படுகிறது.[1][2][3]

தி இந்தியன் எக்சுபிரசு
The Indian Express
வகைநாளிதழ்
வடிவம்பெர்லினர்
உரிமையாளர்(கள்)இந்தியன் எக்சுபிரசு குழுமம்
தலைமை ஆசிரியர்சேகர் குப்தா
நிறுவியது1931
மொழிஆங்கிலம்
தலைமையகம்டெல்லி
OCLC எண்70274541
இணையத்தளம்http://www.indianexpress.com/

வரலாறு

தொகு

இந்தியன் எக்ஸ்பிரஸ் 1931 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பெ. வரதராஜுலு நாயுடு என்பவரால் சென்னையில் தொடங்கப்பட்டது. தொடங்கி ஒரு ஆண்டுக்குள் நிதி நெருக்கடி காரணமாக சதானந்த் என்ற பத்திரிக்கையாளருக்கு விற்கப்பட்டது. 1933 இல் மதுரையில் இரண்டாவது பதிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதே ஆண்டு தினமணி என்ற பெயரில் தமிழ் செய்தித்தாள் ஒன்றையும் இந்நிறுவனம் வெளியிடத் தொடங்கியது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் சதானந்தின் கட்டுப்பாட்டிலிருந்து வட இந்தியத் தொழிலதிபர் ராம்நாத் கோயங்கா என்பவருக்கு கை மாறியது. அன்றிலிருந்து இன்று வரை கோயங்கா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 1930 களில் இதன் தினசரி விற்பனை சுமார் இரண்டாயிரம் பிரதிகள்.

ஆங்கில அரசுக்கு எதிரான போக்கைக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் கோயங்காவின் நிர்வாகத்தில் மேலும் தீவிரமாக இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குஆதரவளிக்க ஆரம்பித்தது. 1939 இல் கோயங்கா ஆந்திர பிரபா என்ற தெலுங்கு செய்தித் தாளையும் வாங்கினார். 1940 களில் எக்ஸ்பிரசின் மும்பைப் பதிப்பைத் தொடங்கினார். எக்ஸ்பிரசின் சென்னை அலுவலகமும் அச்சகமும் ஒரு விபத்தில் தீக்கிரையான போது, த இந்து இதழின் அலுவலகத்திலிருந்து அது அச்சிடப்பட்டு வெளியானது. 1951 இல் டில்லியின் தேஜ் க்ரோனிக்கள் என்ற பத்திரிக்கையை வாங்கிய கோயங்கா இரண்டாண்டுகளில் அதனை எக்ஸ்பிரசின் டெல்லிப் பதிப்பாக மாற்றினார். 1965 இல் பெங்களூர், 1968 இல் அகமதாபாத் ஆகிய நகரங்களில் புதிய பதிப்புகள் தொடங்கப்பட்டன. பொருளியல் நடப்புகளைப் பற்றி செய்தி வெளியிட 1961 இல் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் என்ற வணிக இதழும், 1965 இல் கன்னட மொழியில் கன்னட பிரபா என்ற புதிய இதழும், மராத்தி மொழியில் லோக் சத்தா என்ற இதழும் தொடங்கப்பட்டன.

பொதுவாக இந்திய தேசிய காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த எக்ஸ்பிரஸ், 1975 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலைப் பிரகடனம் செயத போது அதனைக் கடுமையாக எதிர்த்தது. அப்போது அமலில் இருந்த கடுமையான தணிக்கை விதிகளைக் கண்டிக்கும் வகையில் தலையங்கம் இருக்க வேண்டிய பகுதியியை வெற்றிடமாக விட்டு பிரசுரம் செய்தது. 1991 இல் பகவன் தாஸ் கோயங்கா மரணமடைந்த பின் அவரது குடும்பத்தினரிடையே இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இதழ்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டன. டில்லி, மும்பை, புனே, கொல்கத்தா, லூதியானா, சண்டிகர், லக்னௌ, அகமதாபாத் ஆகிய வட இந்திய நகரங்களில் இருந்து வெளியாகும் பதிப்புகள் ஒரு குழுமமாகவும், சென்னை, கோவை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, புவனேஷ்வர் ஆகிய தென்னிந்திய பதிப்புகள் “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் வேறொரு குழுமமாகவும் பிரிந்தன.

விற்பனை

தொகு

தேசிய ரீடர்ஷிப் சர்வே, 2008 இன் படி இந்தியாவில் அதிகம் படிக்கப்படும் ஆங்கில இதழ்களுள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷனின் 2009 கணிப்பின்படி தினம் இந்தியன் எக்ஸ்பிரஸ் சுமார் பதின்மூன்று லட்சம் பிரதிகளும், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சுமார் 3 லட்சம் பிரதிகளும் விற்கின்றன.

குழும இதழ்கள்

தொகு

இரு இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களில் இருந்தும் வெளியாகும் இதழ்கள்:

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்

தொகு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ்
  • சண்டே எக்ஸ்பிரஸ் (வார இதழ்)
  • பைனான்சியல் எக்ஸ்பிரஸ் (பொருளியல், வணிக இதழ்)
  • லோக் சத்தா (மராத்தி தினசரி)
  • லோக் பிரபா (மராத்தி வார இதழ்)
  • ஜன சத்தா (இந்தி தினசரி)
  • ஸ்க்ரீன் (சினிமா வார இதழ்)
  • எக்ஸ்பிரஸ் ஆன்லைன் (இணைய இதழ்)
  • நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
  • தினமணி (தமிழ் தினசரி)
  • கன்னட பிரபா (கன்னட தினசரி)
  • ஆந்திர பிரபா (தெலுங்கு தினசரி)
  • ஏபி வீக்லி (தெலுங்கு வார இதழ்)
  • சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ் சினிமா இதழ்)
  • மலையாள வாரிகா (மலையாள வார இதழ்)
  • தமிழன் எக்ஸ்பிரஸ் (தமிழ் வார இதழ்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Duke University". Archived from the original on 2010-09-01. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.
  2. Shalabh Worldpress
  3. Mondotimes.com: Major media

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியன்_எக்சுபிரசு&oldid=3845020" இலிருந்து மீள்விக்கப்பட்டது