இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள்

இந்தியாவில் 22 மொழிகள் உள்ளன
(இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை இந்திய விடுதலைக்கு முன்பே எழுந்தது. இந்தியாவை ஆட்சி செய்த பிரித்தானிய அரசு, நிர்வாக வசதிக்காக மொத்த நிலப்பரப்பையும் பம்பாய் மாகாணம், சென்னை மாகாணம், பெங்கால் என மூன்று மாகாணங்களுக்குள் அடக்கிவைத்திருந்தது. மேலும், பல மன்னர் அரசு அல்லது சமஸ்தானங்களும் இருந்தன. இவையே பின் நாளில் பல மொழி வாரி மாநிலங்களாகவும்,நிர்வாக ரீதியான மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டன.

இந்திய விடுதலைக்கு முன்

தொகு

1895 ஆம் ஆண்டு சம்பல்பூரில் மொழிப் போராட்டம் தொடங்கியது. முதலில் வங்க மாகாணத்திலும் பின்னர் பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்திலும் வாழ்ந்த ஓரியா மொழி பேசும் மக்கள் தங்களுக்கென தனி மாநிலம் வேண்டும் என்று கோரினர். இதன் தொடர்ச்சியாக 1902 ஆம் ஆண்டு பாலசோர் மன்னர் மொழிவழி மாநில கோரிக்கையை கர்சன் பிரபுவுக்கு மனுவாக விடுத்தார்.[1][2] இதே கோரிக்கைக்காக ஒரிசாவின் கவுரவம் என்று போற்றப்படுகின்ற மதுசூதன் தாசு (மதுபாபு) 1903 ஆம் ஆண்டு உத்கல் சம்மிலானி ( உத்கல் ஒன்றிய மாநாடு) என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் முதலாவது கூட்டத்திற்கு மயூர்பஞ்ச் மன்னர் ராமச்சந்திர பஞ்ஜ தேவ் தலைமை தாங்கினார். அடுத்த மன்னரும் மொழிவழி மாநிலத்திற்கு ஆதரவானார். நீல காந்ததாஸ் அந்த மொழிவழி மாநிலப் போராளி.1927ல் சைமன் கமிஷனிடம் மனு அளித்தார்.1930 இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பீகார் - ஒரிசா சட்டப்பேரவை சார்பில் பங்கேற்ற பார்லகேமுண்டி மகாராஜா கிருஷ்ண சந்திர கஜபதி மொழிவழி மாநில கோரிக்கையை வலியுறுத்தினார். இப்படி மன்னர்களும் மக்களும் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக 1931ல் ஓடோனல் எல்லை வரையறை ஆணையத்தை(O’Donnell Boundary Commission) பிரித்தானிய அரசு அமைத்தது. ஒரிசாவுக்கான வரைபடம் தயாரிக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இவ்வாராக 1935 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலேயே இந்திய நிர்வாகச் சட்டத்தின் கீழ் ஒரிசா மாநிலம் உருவாக்கப்பட்டது. 1936 ஏப்ரல் 1 அன்று அதிகாரப்பூர்வமாக ஒரியா மொழி பேசும் மக்களுக்கு தனி மாநிலம் பிறந்தது. இந்திய வரலாற்றில் மொழிவழி மாநிலமாக முதலில் உதயமானது ஒரிசா (தற்போதைய ஒடிசா)

தார் ஆணையம்

தொகு

அரசமைப்பு நிர்ணய சபை அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.தார் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது.இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தேவையற்றது. நிர்வாக வசதிக்கேற்ப மாநிலங்கள் உருவாக்கப்படுவதுதான் புவியியல், இயற்கை வளங்கள் சார்ந்த பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் , நாட்டின் ஒற்றுமையும் பாதுகாக்கப்படும் என்று கூறியது .தார் ஆணைய அறிக்கை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாரின் அறிக்கையை மறுபரிசீலனை செய்ய ஜேவிபி கமிட்டி அமைக்கப்பட்டது.

ஜேவிபி(JVP) கமிட்டி

தொகு

ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீதாராமையா என்ற பெயர்களின் சுருக்கம்தான் ஜேவிபி யாகும் . இந்தக் கமிட்டியும் மொழிவாரி மாநில உருவாக்கத்திற்கு ஒப்புதல் தெரி விக்கவில்லை. மொழிவாரி பிரிந்து நிற்பது தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்ற பாடத்தை வரலாறு நமக்குக் கற்றுத் தந்துள்ளது என்பது சர்தார் பட்டேலின் கருத்து . இதன் பிறகு முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலையில் பொட்டி ஸ்ரீராமுலு 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி மொழிவாரி ஆந்திர மாநிலம் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அரசியல் அமைப்புச் சட்டம் ரீதியாக

தொகு

1950 ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மொழிவாரி மாநிலம் என்பதற்கான அறிகுறி கூட இல்லாமல் நாடு நான்கு பிரிவுகளாக பகுக்கப்பட்டது.[3][4] நாடு விடுதலை பெற்ற பின் சுமார் 10 ஆண்டு காலம் - 1956 வரை இப்படித்தான் மாநிலங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வகை விளக்கம் நிர்வாகி மாநிலங்கள்
பகுதி ‘ஏ’ மாநிலங்கள் முன்னாள் பிரித்தானிய மாகாணங்கள் தேர்ந்தெடுக்கப் ஆளுநர் மற்றும் மாநில சட்டசபை 9 மாநிலங்கள் : அசாம், பீகார், மும்பை, கிழக்கு பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சென்னை மாநிலம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மற்றும் மேற்கு வங்காளம்
பகுதி ‘பி’ மாநிலங்கள் முன்னாள் மன்னர் சமஸ்தானங்கள் ராஜப் பிரமுகர்கள் 9 மாநிலங்கள் : ஐதராபாத் இராச்சியம், ஜம்மு & காஷ்மீர், மத்திய பாரதம், மைசூர், பட்டியாலா, கிழக்கு பஞ்சாப் அரசுகளின் ஒன்றியம் , ராஜஸ்தான், சௌராட்டிர நாடு, திருவாங்கூர்-கொச்சி, மற்றும் விந்தியப் பிரதேசம்
பகுதி ‘சி’ மாநிலங்கள் முன்னாள் மன்னர் சமஸ்தானங்கள் முதன்மை ஆணையர்களைக் 10 மாநிலங்கள் : அஜ்மீர், கூர்க் மாநிலம், கூச் பேகார், போபால், பிலாஸ்பூர், தில்லி, இமாச்சலப் பிரதேசம், கட்ச் இராச்சியம், மணிப்பூர், மற்றும் திரிபுரா
பகுதி ‘டி’ யூனியன் பிரதேசம் குடியரசுத் தலைவரால் நியமிக்கபட்ட ஆளுநர் அந்தமான் நிக்கோபார் தீவுகள்

மாநிலங்கள் மறு உருவாக்கச் சட்டம்

தொகு

பின்னணி

தொகு

இச் சூழலில்தான் தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் கோரி பொட்டி சிறீராமுலு சாகும்வரை உண்ணா விரதத்தைத் தொடங்கினார். அவரின் உண்ணாவிரதம் 58 ஆவது நாளை எட்டியபோது 1952 டிசம்பர் 15ஆம் தேதி உயிர் நீத்தார். மொழிவாரி மாநிலத்திற்காக உயிர்த் தியாகம் செய்த முதல் போராளி இவர். இவரது இறப்புக்குப் பின் சென்னையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி ஊர்வலம் நடந்தது. விசாகப் பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு மக்கள் கொதிப்படைந்தனர். அதினப்பள்ளி, விஜயவாடா பகுதிகளில் வெடித்த இந்தப் போராட்டத்தை அடக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 7 பேர் பலியானார்கள்.பொட்டி சிறீராமுலு உயிர்நீத்த 14 நாட்களுக்குப் பின் 1952 டிசம்பர் 29 ஆம் தேதி ஆந்திர மாநிலம் உருவாக்கப் படும் என்ற உறுதிமொழியை அளித்தார் பிரதமர் நேரு. அதன் பிறகுதான் அமைதி திரும்பியது. பொட்டி சிறீராமுலு உயிர்த்தியாகம் செய்த 10 மாதங்களுக்குப் பின் 1953 அக்டோபர் ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம் பிறந்தது. இது ஆந்திரப் பிரதேசம் அல்ல . பகுதி ‘பி’ மாநிலங்களில் ஒன்றான ஹைதராபாத், அதனை அடுத்த தெலுங்கானா ஆகிய பகுதிகள் ஆந்திர மாநிலத்தில் இல்லை.மீண்டும் விசாலாந்திரா போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்தான் 1953 டிசம்பர் 22 இல் மீண்டும் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஃபசல் அலி தலைமையிலான இந்த ஆணையத்தில் மேலும் இரண்டு உறுப்பினர்களும் இருந்தனர். இந்த ஆணையத்தின் பணியை அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப பந்த் மேற்பார்வையிட்டு வந்தார். ஃபசல் அலி ஆணையம் 1955 செப்டம்பர் 30 அன்று அறிக்கை அளித்தது. இந்த ஆணையமும் மொழிவாரி மாநிலத்தை பிரிக்க பரிந்துரை செய்ய வில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வகை மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என்பதை மாற்றி 16 மாநிலங்கள் 3 மத்திய நிர்வாக பகுதிகளாகப் பிரிக்கலாம் என பரிந்துரைத்தது.

சட்டத்தின் சாராம்சம்

தொகு

இந்த ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்ட அரசு அதில் சிறு மாற்றம் செய்து 14 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள் என்று அறிவிப்பு செய்தது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆளுநர் மாநிலங்கள், ராஜப் பிரமுகர் மாநிலங்கள், முதன்மை ஆணையர் மாநிலங்கள் என்பதெல்லாம் நீக்கப்பட்டு ‘மாநிலங்கள்’ என பொதுப் பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காகத்தான் மாநிலங்கள் மறு உருவாக்கச் சட்டம் 1956 ஆகஸ்ட் 31 அன்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் அமலாக்கம் 1956 நவம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினம் நவம்பர் 1 என பொதுவாகக் கூறப்படுகிறது.

சட்டம் அமுலாக்கப்பட்ட பின் நடைபெற்ற போராட்டங்கள்

தொகு

சம்யுக்த மகாராஷ்டிரா என்ற இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அவற்றை அடக்கக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளிலும் 105 பேர் பலியானார்கள். இப்படித்தான் மராத்தி மொழிக்கான மகாராஷ்டிராவும் குஜராத்தி மொழிக்கான குஜராத்தும் உருவாயின. அதுவும் 1956 நவம்பர் 1ல் அல்ல; 1960 மே ஒன்றாம் தேதி அன்றே உதயமாயின .

பஞ்சாப் மாநிலம்

தொகு

மொழிவழி மாநிலங்கள் உருவான பின் ஒன்று சேர்ந்திருந்த பஞ்சாப் - ஹரியானா மாநிலத்தில் பஞ்சாபி மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் என்ற குரல் ஓங்கியது. இந்தக் குரல் 1950களில் பஞ்சாபி சுபா என்ற பெயரில் இயக்கமாகத் தொடங்கி வலுத்தது. என்றாலும் சாந்த் ஃபதேஹ் சிங், பொட்டி ஸ்ரீராமுலு வழியில் 1960 டிசம்பர் 18-ல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 20 நாட்களுக்கு பின் நேருவும் பிற தலைவர்களும் அளித்த வாக்குறுதியை ஏற்று 1960 ஜனவரி 9ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். பஞ்சாப் மொழிவழி மாநில கோரிக்கைக்காக மாஸ்டர் தாரா சிங் 1961ல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு 48 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார்.[5] இவரும் பிரதமர் நேருவின் உறுதிமொழியை ஏற்று உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். 1964ல் நேரு மறைந்தார். லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். புதிய சூழலில் 1965ல் சாகும் வரை உண்ணாவிரதம் என்று ஃபதேஹ் சிங் மீண்டும் அறிவித்தார். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டதால் போராட்டத்தை ஒத்தி வைத்தார்.சாஸ்திரி மறைவுக்குப் பின் பிரதமரான இந்திரா காந்தி அவர்கள் மகாவீர் தியாகி, யஷ்வந்த் சவான் ஆகியோருடன் இணைந்து பஞ்சாப் கோரிக்கையைப் பரிசீலித்தார். பின்னர் மக்களவைத் தலைவர் ஹுக்கம் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று பஞ்சாப் மாநிலம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான மசோதா 1966 செப்டம்பர் 30 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வழக்கம்போல் அதே ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பஞ்சாப் மாநிலம் பிறந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Born of linguistic pride". The Telegraph.
  2. States Politics in India.
  3. "The Constitution of India (1949)" (PDF). Lok Sabha Secretariat. pp. 1141–1143. Archived from the original (PDF) on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.
  4. Showick Thorpe Edgar Thorpe (2009). The Pearson General Studies Manual (1 ed.). Pearson Education India. pp. 3.12–3.13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-2133-9.
  5. "Tara Singh". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.