ஆதாமின் பாலம்

(இராமர் பாலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராமர் பாலம் (Rama's Bridge) அல்லது ஆதாமின் பாலம் (Adam's Bridge) என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இது இராம சேது (Ram Setu) என்றும் அழைக்கப்படுகிறது.

ஆதாம் பாலத்தின் விண்வெளி புகைப்படம் - இந்தியா (மேல்), இலங்கை (கிழக்கு)
இராமர் பாலம்

2005 ஆம் ஆண்டு இந்திய அரசு இப்பாலத்தை சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி அருகே ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் இராமகர்மபூமி இயக்கம் ஈடுபட்டுள்ளது.

புராணப் பின்னணி

புராணமான இராமாயணத்தில் இராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக மண், மிதக்கும் வகை கல் மற்றும் மரங்களை கொண்டு வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அகழ்வாராய்ச்சி

இந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது.[1] சில புவியியல் வல்லுனர்கள் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது.[2] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொதியியல் கழகம் (geological survey of India) நடத்திய ஆராய்ச்சியின் பகுதியாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிட்டு கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.[2]

ஆதாம் பாலம்- பெயர்க்காரணம்

அராபிய செவிவழிக் கதைகளின் படி 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால், ஆதாம் மலையுச்சியை அடைய இந்த பாலத்தைப் பயன்படுத்தியதாக உள்ள குறிப்பைக் குறிப்பிட்டு அதன்படி "ஆதாம் பாலம்" எனப் பெயரிடப்பட்டது.[3]

ஆதாரங்கள்

  1. "Rama's bridge is only 3,500 years old: CRS". archive.indianexpress.com.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-09-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Ricci, Ronit (2011). Islam Translated: Literature, Conversion, and the Arabic Cosmopolis of South and Southeast Asia. University of Chicago Press. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-71088-4.

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Adam's Bridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாமின்_பாலம்&oldid=3666180" இலிருந்து மீள்விக்கப்பட்டது