இராவண காவியம்

கவிதை நூல்

இராவண காவியம் எனும் நூல், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் - என ஐந்து காண்டங்களையும் 57 (8 + 8 + 11 + 12 + 18) படலங்களையும் 3,100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயண காவியக் கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.

இராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும்படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும்படியும் புலவர் குழந்தை திறம்பட பாடியுள்ளார். இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாகச் சித்திரிக்கிறது. இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் தேதி தடைசெய்யப்பட்டுப் பிறகு 1971-ஆம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.[1]

ஆசிரியர் குறிப்பு
புலவர் குழந்தை ஓலவலசுப் பண்ணைக்காரர்குடியில் 1-7-1906இல் பிறந்தார். முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார் என்பவர்களின் ஒரே மகனாவார். இவர் திண்ணைப் பள்ளியில் கற்ற காலம் மொத்தமாக எட்டு மாதங்களேயாம். இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள். ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார். அதன் அடையாளமாக 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார். ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் புலவர் குழந்தை தம்மை இணைத்துக் கொண்டார். சுயமரியாதைக் கொள்கையில் உறுதியுடையவராய்த் திகழ்ந்தார். இறை நம்பிக்கை இல்லாதவர். 1938, 1948 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார். வேளாண் என்னும் மாத இதழை நடத்தினார். விதவை மணம், கலப்பு மணம், சீர்திருத்தமணம் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார். திருக்குறள் குழந்தை உரை என்ற நூலினை இருபத்தைந்து நாட்களில் எழுதி வெளியிட்டார்.

புலவர் குழந்தை தமிழ்ச் செய்யுள் மரபினைச் சிதையாமல் காக்க வேண்டும் என்னும் கருத்துடையராவார்.

இராவண காவியம் பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

இராவணனின் இல்லறம்

தொகு

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவியின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகன்னன், விபீடணன் என மூன்று ஆண் குழந்தைகளும், சூர்ப்பனகை என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டார்.முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் சேயோன் என்ற மகன் பிறந்தான்.

ஆரியர் வருகை

தொகு

வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேறினார்கள். அங்குக் கோசிகன் (விசுவாமித்திரர்) போன்ற முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனைத் தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை என்பவர் இராவணனுக்குக் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனுடன் தன் சேனையை அனுப்பினார். கோசிக முனிவரின் யாகம் தடைப்பெற்றது.

இராம சகோதரர்களின் கொலைகள்

தொகு

வேள்வி தடைப்பட்டதால் கோசிக முனிவர் (விசுவாமித்திரர்) அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனைத் தடுத்த தாடகை, சுவாகு, மாரீசன் மூவரும் இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். படைத்தலைவன் கொல்லப்பட்டதால் இராவணன் தன்னுடைய தங்கையைப் பாதுகாக்க கரன் எனும் படைத்தலைவனை விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

காமவல்லியைக் கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புறுத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இணங்காததால், இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்துக் கொன்றார். இராவணன் தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றார்.

சீதையை இராவணன் கவர்தல்

தொகு

படைத்தலைவனும்,தங்கையும் கொல்லப்பட்ட செய்தியைத் தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், விந்தகம் வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி இராம சகோதர்களைச் சீதையிடமிருந்து பிரித்தார். பின்பு சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் தன் தங்கையாகப் போற்றினார்.

பீடணன் வெளியேறல்

தொகு

இராவணன் அரசவையில் இராமனை எதிர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பீடணன் எதிர்ப்பு தெரிவித்தார். சீதை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது என்றார். பீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதனால் பீடணன் தன் படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினார்.

கும்பகன்னன், சேயோன், இராவணன் வீர மரணம்

தொகு

இராமனுக்கும் இராவணுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகன்னன் போரில் வீர மரணமடைந்தார். அதனைக் கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணன் அவருடைய மகன் சேயோன் தேற்றினார். அதன் பின் சேயோனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டார்.

இராமனால் இராவணனின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டார், பீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன. மாதலி என்பவர் கொடுத்த அம்பினை இராமன் எய்தார். அதன் மூலம் இராவணனும் வீரமரணம் அடைந்தார்.

காண்க

தொகு

கருவி நூல்

தொகு
  1. இராவண காவியம் - புலவர் குழந்தை
  2. இராவண காவியம் - தமிழாய்வு தலம்
  3. இராவண காவியம் - மூல நூல்

சான்றுகள்

தொகு
  1. M.S.S. Pandian (2 நவம்பர் 1998). "Ravana As Antidote". Outlook India. Archived from the original on 2018. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2019. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவண_காவியம்&oldid=3927826" இலிருந்து மீள்விக்கப்பட்டது