இதயம்

மனிதர், விலங்கு போன்ற்றற்றின் குருதியை உடல் முழுவதும் பாய்ச்சும் உறுப்பு
(இருதயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இதயம் (ஒலிப்பு) அல்லது இருதயம் (ஒலிப்பு) அல்லது உயிர்முதல் (அதாவது உயிர் வாழ்வதற்கான முதலான ஒன்று அல்லது முதன்மையான ஒன்று) (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத் தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும்.[1] இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக் குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன் மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.

இதயம்
மனித இதயம்
விளக்கங்கள்
அமைப்புசுற்றோட்டத் தொகுதி
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்cor
கிரேக்கம்kardía (καρδία)
MeSHD006321
TA98A12.1.00.001
TA23932
உடற்கூற்றியல்
இதயமும் நுரையீரலும்

முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஓர்

66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் பெண்களில் சராசரியாக 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்சு) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்சு) எடை கொண்டுள்ளது.[2]

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப்படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.

அமைப்பு தொகு

 
இதயத்தின் அமைவிடம்

இதயத்தின் அமைப்பு பல்வேறு விலங்குகளுக்கு இடையில் வேறுபடுகின்றது, தலைகாலிகளில் இரண்டு "செவுள் இதயமும்" (gill hearts) ஒரு "தொகுதி இதயமும்" அமைந்துள்ளது. முதுகெலும்பிகளில் உடலின் முன் பகுதியில் சமிபாட்டுத்தொகுதிக்குப் பின்புறத்தில் இருதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும்.

அமைவிடம் மற்றும் வடிவம் தொகு

நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் ஐந்தும் எட்டும் உள்ள மட்டத்தில் நடு மார்பிடையப் பகுதியில் (middle mediastinum) இரட்டை மென்சவ்வாலான ஒரு பாதுகாப்புப்பையினுள் மனித இதயம் அமைந்துள்ளது. இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். வெளியுறைப்பை மார்பிடையத்துடன் ஒட்டிக் காணப்படும்.[3] இரண்டு அடுக்காக இருக்கும் இதய வெளியுறைப்பையுள் நீர்மம் காணப்படும். இந்த நீர்மமானது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும். மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயத்தின் பிற்புறப்பகுதி முள்ளந்தண்டெலும்புகளின் முன்பாக அமைந்துள்ளது. இதயத்தின் முற்பகுதி மார்புப்பட்டை மற்றும் விலாக் கசியிழையங்களின் பின்னே அமைந்துள்ளது.[4] இதயத்தின் மேற்பகுதியில் பெரு நாடிகளும் நாளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது விலா என்புக் கசியிழைய மட்டத்தில் இதய மேற்பகுதி அமைந்துள்ளது.[4] இதயம் கூம்பு வடிவானது. இதயமுனை எனப்படும் இதயத்தின் கீழ் முனைப்பகுதி மார்புப்பட்டையின் இடப்புறத்தே அமைந்துள்ளது.

இதயத்தின் பெரும்பான்மைப் பகுதி இடது மார்பில் அமைந்துள்ளது (உள்ளுறுப்பு இடப்பிறழ்வில் வலது புறம் அமைந்திருக்கும்). நுரையீரல் தவிர்ந்த உடலின் அனைத்துப் பகுதிக்கும் குருதியைச் செலுத்துவதற்காக இதயத்தின் இடது பகுதி வலிமை மிக்கதாக அமைந்துள்ளது.[4] இதயம் இடது, வலது நுரையீரல்களின் இடையே காணப்படுவதால் இடது நுரையீரலில் இதயம் அமையக்கூடியவாறு ஒரு பள்ளம் உள்ளது. இதனால் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது.[4]

இதயமானது இதயத்தசை என்னும் தன்விருப்பில்லாது தானே இயங்கும் வரித்தசையால் ஆனது.

இதயவறை தொகு

இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. குருதியைப் பெற்றுக்கொள்ளும் இரண்டு மேலறைகள், குருதியை வெளியேற்றும் இரண்டு கீழறைகள். இதய மேலறை இதயக் கீழறையுடன் மேற்கீழறை அடைப்பிதழ்கள் மூலம் தொடர்புற்று உள்ளது. இவை மேற்கீழறைப் பிரிசுவரில் அமைந்துள்ளன. இடது புறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கீழறைப் பிரிசுவரால் இதயம் பிரிக்கப்படுவது இதயத்தின் வெளிப்புறத்தில் முடியுரு வரிப்பள்ளம் (Coronary sulcus) எனும் வெட்டாகத் தென்படுகின்றது. [5] இடது மற்றும் வலது இதய மேலறைகளில் காது போன்ற அமைப்புடைய நீட்டம் ஒன்று காணப்படும், இதுவும் ஒரு சிறிய அறை போன்ற அமைப்பிலேயே காணப்படுகின்றது. இது இதய மேலறை நீட்டம் அல்லது இதய மேலறைச் சோணை எனப்படும்.[6] இடது மேல் மற்றும் கீழ் இதயவறைகள் சேர்ந்து இடது இதயம் என்று அழைக்கப்படுகின்றது, இதே போன்று வலது இதயவறைகள் சேர்ந்து வலது இதயம் என்று அழைக்கப்படுகின்றது. இதயக் கீழ் அறைகள் இரண்டும் கீழறைப் பிரிசுவர் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதயத்தின் கீழறைகள் மேலறைகளை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது கீழறையானது குருதியை உடல் முழுவதும் செலுத்துவதற்கு அதிக வேகம் தேவைப்படுவதால் அது வலது கீழறையை விட தடிப்பாக உள்ளது.

இதய அடைப்பிதழ் தொகு

மேலறைகளும் குருதிக் குழாய்களும் நீக்கப்பட்ட நிலையில் தென்படும் அனைத்து நான்கு அடைப்பிதழ்கள் [4]
மனித இதயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. இதய மேலறைகளுக்கும் இதயக் கீழறைகளுக்கும் இடையே குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடைப்பிதழ்கள், இடது புறத்தில் இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மற்றும் வலது புறத்தில் மூன்று இதழ்களைக் கொண்ட முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவாகும். [7] இவற்றின் இதழ்கள் இதயவாயினாண்கள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன[8] , இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசை மூலம் கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழ்களும் ஒவ்வொரு நுண்காம்புத்தசையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் இரண்டு நுண்காம்புத்தசை மூலம் இடது கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன.[7]

இதயக் கீழறைகளுக்கும் வெளியேறும் தமனிகளுக்கும் இடையே உள்ள அடைப்பிதழ்கள் அரைமதி அடைப்பிதழ்கள் ஆகும். பெருநாடி அடைப்பிதழ் இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. நுரையீரல் அடைப்பிதழ் வலது கீழ் இதயவறைக்கும் நுரையீரல் நாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. இவை நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டிருப்பது இல்லை.

இதயச் சுவர் தொகு

இதய வெளியுறைப்பையால் இதயம் சூழப்பட்டுள்ளது. இது இரண்டு படை மென்சவ்வுகளை உடையது. வெளியில் அமைந்துள்ள நார்ச்சவ்வுப்படை, நார்ச்சவ்வு வெளியுறை எனப்படும். உட்புறத்தே அமைந்துள்ள நீர்ச்சவ்வுப் படை மேல் இதயவுறைப் படை எனப்படும்.[4] இவை இரண்டிற்குமிடையே வெளியுறை நீர்மம் உள்ளது.

 
கணினி மூலம் உருவாக்கப்பட்ட இதயத்தின் இயக்கம் பற்றிய படம்)

வெளியில் மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), நடுவில் இதயத்தசைப் படை, உள்ளே இதய அகவுறைப்படை ஆகிய மூன்று படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதய அகவுறைப்படை எளிய செதிண்மேலணிக் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இது இதய அறைகளையும் அடைப்பிதழ்களையும் மூடிக் காணப்படுகின்றது. இது நாடி மற்றும் நாளங்களின் அகவணிக் கலங்களாகத் தொடர்ச்சி பெறுகின்றது. மேலும் மெல்லிய படை தொடுப்பிழையம் மூலம் இதயத்தசைப் படையுடன் இணைகின்றது. என்டோதீலின் அல்லது அகவணியன் எனப்படும் புரதக்கூறு அகவணிக் கலம் மூலம் சுரக்கப்படுகின்றது. இதயத்தின் சுருங்கி விரிதலைக் கட்டுப்படுத்துவதில் இவையும் ஒரு அங்கம் வகிக்கின்றன.[4]

நடு இதயத்தசைப் படையை ஆக்கும் இதயத்தசை இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இதயத்தசை இரண்டுவிதமான கலங்களைக் கொண்டுள்ளது, சுருங்கும் தொழிலைச் செய்யும் தசைக் கலங்கள் மற்றும் இதய மின்கடத்துகை ஒருங்கியத்துக்குரிய துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ( pacemaker cells). இவற்றுள் இதயத்தசை பெரும்பான்மையானது (99%), மீதியுள்ளவை (1%) துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ஆகும்.[4]

முடியுருக் குருதிச்சுற்றோட்டம் தொகு

தசை உட்பட்ட இதயத்தின் பகுதிகள் உயிர்வளியையும் ஊட்டக்கூறுகளையும் பெற்று கழிவுப்பொருட்களை நீக்குவதற்கு முடியுருக் குருதிச்சுற்றோட்டம் உதவுகின்றது. நாடிகள், நாளங்கள், நிணநீர்க் குழல்கள் இதில் அடங்குகின்றது. இதயத்தசைக்கு உயிர்வளி செறிந்த குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து உயிர்வளி அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும். முடியுருத்தமனிகள் இடது, வலது என இரண்டாக உள்ளது, இவை பெருநாடியில் இருந்து தோன்றுகின்றன. இவற்றில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை ஏற்படுத்துகின்றது.

நரம்பு விநியோகம் தொகு

துணைப்பரிவு இயக்கத்தைக் கொண்ட அலையு நரம்பு மூலமும் பரிவு நரம்பியக்கம் மூலமும் இதயம் நரம்பு விநியோகத்தைப் பெற்றுக்கொள்கின்றது. பரிவு, துணைப்பரிவு நரம்புகளை நீள்வளையமையவிழையம் கட்டுப்படுத்துகின்றது. இந்த நரம்புகளின் தொழிற்பாட்டினால் இதயத்துடிப்பு வீதம் மாறுபடுகின்றது. உடற்பயிற்சி, மன அழுத்தம், குருதியிழப்பு, உடல் வறட்சி ஆகியனவற்றின் போது பரிவு நரம்புத்தொகுதி செயற்படுத்தப்படுகின்றது. இது இதயத் துடிப்பை அதிகரிக்கவைக்கின்றது. இதற்கு மாறாக துணைப்பரிவு நரம்பு செயற்படுத்தப்பட்டால் இதயத் துடிப்பு குறைகின்றது. இந்த நரம்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பின்னலை ஏற்படுத்துகின்றது, இது இதய நரம்புப்பின்னல் எனப்படும்.[9] துணைப்பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

இதய உடலியங்கியல் தொகு

 
அடைப்பிதழ் ஊடாக குருதி ஓட்டம்

குருதி ஓட்டம் தொகு

குருதியின் தொடர்ச்சியான சுற்றோட்டத்திற்கு இதயம் ஒரு பாய்வு எக்கி போன்று தொடர்ச்சியாகச் செயற்படுகின்றது. தொகுதிச் சுற்றோட்டம் மற்றும் நுரையீரற் சுற்றோட்டம் என்று இருவகையாக இதயத்தில் இருந்து வெளியேறும் குருதியின் ஓட்டம் வகைப்படுத்தப்படுகின்றது.

இடது இதயக் கீழறையில் இருந்து உடலின் அனைத்துப் பாகங்களில் உள்ள உயிரணுக்களுக்கு நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் உயிர்வளியும் செறிந்த குருதி கொண்டு செல்லப்படுகின்றது. அங்கிருந்து நாளங்கள் வழியாகக் கொண்டுவரப்படும் உயிர்வளி நீங்கிய குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைகின்றது. இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. வலது இதயக் கீழறையில் இருந்து உயிர்வளி நீங்கிய குருதி நுரையீரலை அடைந்து அங்கு சுத்திகரிக்கப்பட்டு உயிர்வளி செறிந்த குருதியாக இடது இதய மேலறையை அடைகின்றது, இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது.

இதய வட்டம் தொகு

ஒவ்வொரு இதயத் துடிப்பின் போது இதயம் சுருங்கி விரிதலும் அதன்போது உண்டாகும் மின்னிய நிகழ்வுகளும் இதய வட்டம் எனப்படும்.[10] இதில் இதயம் சுருங்கும் அவத்தை இதயச்சுருக்கம் (systole) எனவும் இதயம் விரியும் அவத்தை இதயவிரிவு (இதயவிரிவு) எனவும் அழைக்கப்படுகின்றது.

இதய வெளியேற்றக் கொள்ளளவு தொகு

நிமிடமொன்றிற்கு இதய சுருக்கத்தின் போது இடது, வலது கீழ் இதயவறைகளினால் வெளியேற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு இதய வெளியேற்றக் கொள்ளளவு எனப்படுகின்றது. பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டராகக் கருதப்படுகிறது. துடிப்புக்கொள்ளளவு என்பது ஒரு தடவை இதயம் சுருங்கும் போது இடது கீழ் இதயவறையால் வெளியற்றப்படும் குருதியின் கொள்ளளவு. இது ஒரு ஆரோக்கியமான 70 கிலோகிராம் எடையுள்ள மனிதனுக்கு 70 மில்லிலீட்டர் ஆகும்.[11]

இதய வெளியேற்றக் கொள்ளளவு = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம் [4]
எடுத்துக்காட்டாக, இதய வெளியேற்றக் கொள்ளளவு = 70 மில்லிலீட்டர் X 72 = 5040 மில்லிலீட்டர் / நிமிடம்
உடல் மேற்பரப்பு இதய வெளியேற்றக் கொள்ளளவுடன் தொடர்புபடுத்தப்பட்டு பெறப்படும் தரவு இதயச் சுட்டெண் என அழைக்கப்படுகின்றது.

மின்கடத்துகை தொகு

சிரைப்பைச் சீர்த்துடிப்பு (Sinus rhythm) என்பது இதயத்தின் துடிப்புச்சீராக்கியாகிய சிரைப்பைச்சோணைக் கணுவில் தொடங்கும் சீரான பழுதற்ற இதயத்துடிப்பு. இதயத்தின் சுருங்கலையும் விரிவடைதலையும் சீரான நிலையில் பேணுவதற்கு இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு மின்னோட்டம் மூலம் சமிக்ஞை அனுப்பப்படல் அவசியமாகின்றது. சிரைப்பைச்சோணைக் கணு, மேற்கீழறைக் கணு, கிசுவின் கட்டு மற்றும் அதனது கிளைகள், பேர்கிஞ்சி இழைகள் ஆகிய சிறப்பு இதயத்தசை உயிரணுத் தொகுதிகள் ஒன்று சேர்ந்து இதய மின்கடத்துகை ஒருங்கியம் என அழைக்கப்படுகின்றது. வலது மேலிதயவறையின் மேற்பகுதியில் மேற்பெருநாளத்தின் அருகாமையில் சிரைப்பைச்சோணைக் கணு அமைந்துள்ளது.[12]

இதயத்துடிப்பு வீதம் தொகு

இதயத்துடிப்பு வீதம் என்பது நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன் அளவு. பொதுவாக, வளர்ந்தோரில் 60 தொடக்கம் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது. சிரைப்பைச்சோணைக் கணுவில் உள்ள உயிரணுக்கள் அவற்றின் மென்சவ்வில் மறை ஏற்றத்தைக் கொண்டுள்ளன. சோடியம் விரைவாக உயிரணுக்குள் உட்செல்லும்போது அவை நேர் ஏற்றத்தைப் பெறுகின்றது. இது முனைவுநீக்கம் எனப்படுகின்றது, இது தொடர்ச்சியாக சீராக நிகழ்ந்து கொண்டிருக்கும்.[4] உயிரணு போதிய ஏற்றம் பெற்றபின்னர் சோடியம் உள்ளே வருவதற்கு உதவிய வழி மூடப்பட்டுவிடும். இதன் பின்னர் பொட்டாசியம் வெளியேறும் கணத்தில் கால்சியம் உள்ளெடுக்கப்படும். துரப்போனின் C எனும் புரதத்துடன் சேர்ந்துகொண்ட கல்சியம் இதயத்தசையின் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றது. துரப்போனின் பிணைவு நீங்கும் போது இதயம் விரிவடைகின்றது.

பரிவு மற்றும் துணைப்பரிவு நரம்பு வழியாக மூளையில் உள்ள இதயக்குழலிய மையத்தால் இதயத்துடிப்பு கட்டுப்படுத்தப்படுகின்றது.[13] குருதிக் குழாய்களில் அழுத்த உணர்விகள் எனும் அமைப்பு காணப்படுகின்றது. குருதிக்குழாய் சுருங்கும் போது அல்லது விரிவடையும் போது இவை இழுவையடைந்து தூண்டப்படுகின்றன. இது இதயக்குழலிய மையத்துக்கு அறிவிக்கப்படுகின்றது. இதனால் குருதி அழுத்தம் சீரான நிலையில் பேணப்படுகின்றது. குருதி அழுத்தம் குறைகையில் அழுத்த உணர்விகள் இழுவையடைவது குறைகின்றது. அழுத்த உணர்விகள் மூளைக்கு தகவல் அனுப்பும் வீதம் குறைகின்றது, இதனால் இதயக்குழலிய மையம் பரிவு நரம்பின் செயற்பாட்டை அதிகரித்து துணைப்பரிவு நரம்பு செயற்பாட்டைக் குறைக்கின்றது. எடுத்துக்காட்டாக, காயமடைந்த நபர் ஒருவருக்கு ஏற்படும் குருதிப்பெருக்கால் குருதி அழுத்தம் குறைகின்றது. அழுத்த உணர்விகள் இதனை உணர்ந்து தூண்டப்பட்டு தகவலை இதயக்குழலிய மையத்துக்கு அறிவிக்கின்றன. மூளை பரிவு நரம்பின் செயற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் இதயத்தின் துடிப்பு கூடுகின்றது.[14]

உடற்பயிற்சி, வயது, உடல் வெப்பநிலை, அடிப்படை வளர்சிதைமாற்ற வீதம், மனோநிலை போன்றன இதயத் துடிப்பை மாற்றவல்ல காரணிகள் ஆகும். எபிநெப்ரின் (அதிரினலின்) , நார்எபிநெப்ரின், கேடயச் சுரப்பி இயக்குநீர்கள் ஆகியனவற்றின் மிகைப்பாடு இதயத்துடிப்பை அதிகரிக்கவல்லது. கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகியன இதயத்துடிப்பை சீராகப் பேணுவதில் முக்கியமான தனிமங்கள் ஆகும்.

இதய ஒலி தொகு

பொதுவாக ஆரோக்கியமான இதயத்தில் இருவகை இதய ஒலிகளைக் கேட்கலாம். இவற்றின் ஒலிகள் பொதுவாக "லப்-டப்" என்று விவரிக்கப்படுகின்றது. இவை முதலாம் (S1), இரண்டாம் (S2) இதய ஒலிப்புகள் என அழைக்கபப்டுகின்றன. லப் எனப்படும் முதலாம் இதய ஒலிப்பு இருகூர் அடைப்பிதழ் மற்றும் முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவை மூடும் போது ஏற்படும் ஒலியாகும். டப் என அழைக்கப்படும் இரண்டாவது இதய ஒலிப்பு பெருநாடி அடைப்பிதழ் மற்றும் நுரையீரல் அடைப்பிதழ் ஆகியனவற்றின் மூடுகையால் ஏற்படுகின்றது. இரண்டாம் இதய ஒலிப்பு இயல்பான நிலையில் உட்சுவாசத்தின் போது பிரிகையடையும். எனினும் இவற்றின் ஒலிப்பிரிகைக்கு இடையேயான இடைவெளி கூடுமாயின் அது நோய்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும்.

இவை தவிர மூன்றாம் (S3, லப்-டப்-டா), நான்காம் (S4, ட-லப்-டப்) இதய ஒலிப்புகள் உள்ளன. இவை பொதுவாக நாற்கால் பாயச்சலோட்டம் (gallop rhythm) என அழைக்கப்படுகின்றன. குதிரை ஒன்று ஓடும் போது ஏற்படக்கூடிய ட-ட-ட எனும் சந்தம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது.[15] மூன்றாம் இதய ஒலிப்பு இளவயதினர், விளையாட்டு வீரர், சிலவேளைகளில் கர்ப்பிணிகள் ஆகியோரில் இயல்பாகக் காணப்படலாம். ஆனால் பிந்தைய காலப் பகுதியில் மீண்டும் இவ்வொலிப்பு தோன்றினால் அது இதயச் செயலிழப்பின் காரணமாக இருக்கக்கூடும். உயர் குருதியழுத்தம், இதயத்தசை மிகை வளர்ச்சியில் முதலாம் இதய ஒலிப்பின் சற்று முன்னர் கேட்கக்கூடிய ஒலி நான்காம் இதய ஒலிப்பாகும்.

இதய நோய்கள் தொகு

பிறவியில் ஏற்படக்கூடிய கோளாறுகள், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள், இதயத் தசைகளில் ஏற்படும் நோய்கள் போன்ற காரணங்களால் மற்றும் இதயத்துடன் நேரடி இணைப்பைக் கொண்ட குருதிக் குழாய்களில் ஏற்படக்கூடிய நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம்.

இதய அடைப்பிதழ் நோய் தொகு

இதய அடைப்பிதழ் நோய் (Valvular heart disease) என்பது இதயத்தின் அடைப்பிதழ்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் நோயாகும். இதய அடைப்பிதழ்க் குறைபாடுகள் பிறவிக்குறைபாடாகவோ அல்லது பிறப்பின் பின்னர் பெற்றதாகவோ இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவோ அல்லது திருத்தல் அறுவைச்சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவைச்சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

குருதி ஊட்டக்குறை இதய நோய் தொகு

இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் குருதியூட்டக்குறை இதய நோய் அல்லது முடியுருநாடி இதய நோய் ஏற்படுகின்றது. குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் இந்நோயின் இடர்ப்பாடு அதிகரிக்கின்றது. குருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு, மாரடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.

மாரடைப்பு தொகு

இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு (Myocardial infarction) ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக்கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.

சமூகம் மற்றும் கலாச்சாரம் தொகு

காதலா்களின் சின்னம் உடலின் முக்கியமான உறுப்பு என்பதால் இதயம் உடலின் மத்தியில் அமைந்துள்ளது என்று நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. உயிரின் ஆதாரம், உள்ளத்தின் இருப்பிடம், உணர்வுகளின் மையம் என்று இதயம் கருதப்படுகின்றது.[16] இதனால் காதல் அல்லது அன்பு என்பதன் சின்னமும் இதயமாக உள்ளது. மதங்களிலும் இதயத்தின் சின்னம் உபயோகிக்கப்படுகின்றது. மனிதாபிமானம் அற்றவர்களை "இதயமே இல்லாதவர்" என்று விவரிப்பது சமூகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது.[17]

உணவு தொகு

கோழி, ஆடு, மாடு, பன்றி போன்றனவற்றின் இதயம் பரவலாக உணவாக உட்கொள்ளப்படுகின்றது. இவை தசை உறுப்பு என்பதால் புரதம் செறிந்த உணவாகும்.

வேறு விலங்குகளின் இதயம் தொகு

சுற்றோட்டத்தொகுதி உடைய முதுகெலும்பிலிகளில் (முள்ளந்தண்டிலிகள்) இருதயம் ஒரு குழாய் வடிவில் அல்லது சிறுபை வடிவில் காணப்படும், இது புரதம், வெல்லம், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய நீர்மத்தைச் செலுத்த உதவுகின்றது. பூச்சியினங்களில் வழமையாக "முதுகுக் குழாய்" என்று அழைக்கப்படுகின்றது, பூச்சிகளின் "குருதி" ஒட்சிசன் ஏற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது, ஏனெனில் அவை உடலின் மேற்பரப்பு மூலமாகவே சுவாசத்தை மேற்கொள்கின்றன, எனினும் சில கணுக்காலிகள் போன்ற பூச்சிகள் மற்றும் மெல்லுடலிகள் குருதிநிணநீரைக் (hemolymph) கொண்டுள்ளன, இவற்றுள் செம்பைத் தளமாக உடைய கீமோசையனின் (hemocyanin) ஒட்சிசனைக் காவுகின்றது, இது முதுகெலும்பிகளின் செவ்வணுக்களில் காணப்படும் இரும்பை தளமாக உடைய குருதிவளிக்காவியை ஒத்தது.

படத்தொகுப்பு தொகு

மேலும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Taber, Clarence Wilbur; Venes, Donald (2009). Taber's cyclopedic medical dictionary. F. A. Davis Co.. பக். 1018–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8036-1559-0. 
  2. Kumar, Abbas, Fausto: Robbins and Cotran Pathologic Basis of Disease, 7th Ed. p. 556
  3. Dorland's (2012). Dorland's Illustrated Medical Dictionary (32nd ). Elsevier. பக். 1461. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4160-6257-8. 
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 Betts, J. Gordon (2013). Anatomy & physiology. பக். 787–846. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-938168-13-5. http://cnx.org/content/m46676/latest/?collection=col11496/latest. பார்த்த நாள்: 11 August 2014. 
  5. Gray's Anatomy 2008, ப. 960–62.
  6. Gray's Anatomy 2008, ப. 964–67.
  7. 7.0 7.1 Gray's Anatomy 2008, ப. 966–67.
  8. University of Minnesota. "Papillary Muscles". Atlas of Human Cardiac Anatomy. பார்க்கப்பட்ட நாள் 7 March 2016.
  9. Ramin Assadi, MD; Chief Editor: Richard A Lange, MD, MBA (Jun 28, 2016). "Heart Nerve Anatomy". Medscape. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2017. {{cite web}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  10. Walter F. Boron, Emile L. Boulpaep (2016) Medical Physiology (3rd Edition) Elsevier ISBN 978-1-4557-4377-3
  11. Guyton, Arthur C.; John E. (John Edward) (2006). Textbook Of Medical Physiology (11th ). Philadelphia: Elsevier Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-0240-1. https://archive.org/details/textbookofmedica0000guyt. 
  12. Pocock, Gillian (2006). Human Physiology (Third ). Oxford University Press. பக். 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-856878-0. https://archive.org/details/humanphysiologyb0000poco_h3s4. 
  13. Hall, Arthur C. Guyton, John E. (2005). Textbook of medical physiology (11th ). Philadelphia: W.B. Saunders. பக். 116–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7216-0240-0. 
  14. Gupta RK, Fahim M. "Regulation of cardiovascular functions during acute blood loss". PMID 16170991. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2017.
  15. Tavel ME (November 1996). "The appearance of gallop rhythm after exercise stress testing". Clin Cardiol 19 (11): 887–91. doi:10.1002/clc.4960191109. பப்மெட்:8914783. 
  16. "Heart". The Watkins Dictionary of Symbols. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78028-357-9. 
  17. "heartless". பார்க்கப்பட்ட நாள் 26 மே 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயம்&oldid=3582355" இலிருந்து மீள்விக்கப்பட்டது