உயிரி கலைக்களஞ்சியம்
உயிரி கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா ஆப் லைப்)(EOL) என்பது ஒரு இலவச, இணையவழி கலைக்களஞ்சியம் ஆகும். இது இன்றைக்கு அறியப்பட்ட, வகைப்படுத்தப்பட்ட 1.9 மில்லியன் உயிரினங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்கம் கொண்டது. வல்லுநர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள உயிரியலில் நிபுணத்துவம் அல்லாதவர்களின் உதவியுடன் தற்போதுள்ள நம்பகமான தரவுத்தளங்களிலிருந்து இது தொகுக்கப்பட்டுள்ளது.[1][2] நிகழ்படம், ஒலி, படங்கள், வரைகலை மற்றும் உரை உட்பட ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு "எல்லையற்ற விரிவாக்கக்கூடிய" பக்கத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.[3] கூடுதலாக, இக்கலைக்களஞ்சியம் பல்லுயிர் பாரம்பரிய நூலகத்தின் உள்ளடக்கத்தை உள்ளடக்கியது. இது உலகின் முக்கிய இயற்கை வரலாற்று நூலகங்களிலிருந்து மில்லியன் கணக்கான அச்சிடப்பட்ட இலக்கியங்களை எண்ணிமப்படுத்துகிறது. இந்தத் திட்டமானது ஆரம்பத்தில் அமெரிக்க டாலர் 50 மில்லியன் நிதியுதவியுடன் ஆதரிக்கப்பட்டது. இது மெக் ஆரதர் அறக்கட்டளை மற்றும் சோலன் அறக்கட்டளை முன்னெடுப்பில் முறையே அமெரிக்க டாலர் 20 மில்லியன் மற்றும் 5 மில்லின் நிதியுதவியுடன் தொடங்கியது. கள் அருங்காட்சியகம், ஆர்வர்டு பல்கலைக்கழகம், கடல் உயிரியல் ஆய்வகம், மிசோரி தாவரவியல் பூங்கா மற்றும் சிமித்சோனிய நிறுவனம் ஆகிய ஐந்து கல்வி நிறுவனங்களிலிருந்து கூடுதலாக 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்தன. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஜிம் எட்வர்ட்சு[4] மற்றும் மேம்பாட்டுக் குழு டேவிட் பேட்டர்சன் ஆகியோரால் வழிநடத்தப்பட்டது. இன்று, பங்குபெறும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் நிதி பங்களிப்புகள் மூலம் செயல்படுகிறது.
வலைத்தள வகை | கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம், இடாய்ச்சு மொழி, எசுப்பானியம், பிரானிசிய மொழி, கலீசிய மொழி, செருபிய மொழி, மக்கதோனிய மொழி, அரபு மொழி, சீன மொழி, கொரிய மொழி உக்குரேனிய உள்ளிட்ட 19 மொழிகள் |
உருவாக்கியவர் | கள ஆய்வகம் ஆர்வர்டு பல்கலைக்கழகம் மெக் ஆர்தர் அறக்கட்டளை கடல் உயிரியல் ஆய்வகம் மிசெளரி தாவரவியல் தோட்டம் சோலன் அறக்கட்டளை சிமித்சோனிய நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பம் |
வெளியீடு | பெப்ரவரி 26, 2008 |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | eol |
கண்ணோட்டம்
தொகுஉயிரி கலைக்களஞ்சியம் 26 பிப்ரவரி 2008 அன்று 30,000 உள்ளீடுகளுடன் நேரலைக்கு வந்தது.[5] இந்த தளம் உடனடியாக மிகவும் பிரபலமானதாக நிரூபிக்கப்பட்டது. மேலும் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கோரப்பட்டபோது தற்காலிகமாக இரண்டு நாட்களுக்கு விளக்கக்காட்சி பக்கங்களுக்கு மாற்றியமைக்க வேண்டியிருந்தது.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இடைமுகம் மற்றும் கருவிகளுடன் 5 செப்டம்பர் 2011 அன்று தளம் மீண்டும் தொடங்கப்பட்டது. புதிய பதிப்பு - EOLv2 எனக் குறிப்பிடப்படுகிறது. பொது மக்கள், குடிமக்கள் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்முறை உயிரியலாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மிகவும் ஈடுபாட்டுடன், அணுகக்கூடிய மற்றும் தனிப்பட்ட தளமாக உருவாக்கப்பட்டது. EOLv2 பயன்பாட்டினை மேம்படுத்தவும், பயனர்களிடையே பங்களிப்புகள் மற்றும் தொடர்புகளை ஊக்குவிக்கவும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், இடாய்ச்சு மொழி, எசுப்பானியம், பிரானிசிய மொழி, கலீசிய மொழி, செருபிய மொழி, மக்கதோனிய மொழி, அரபு மொழி, சீன மொழி, கொரிய மொழி மற்றும் உக்குரேனிய மொழிகளுக்கான இடைமுகங்களுடன் இது பன்னாட்டு மயமாக்கப்பட்டுள்ளது. 16 சனவரி 2014 அன்று, உயிரி கலைக்களஞ்சியமானது திரையாட்பேங்கினை (TraitBank) அறிமுகப்படுத்தியது. இது உயிரினங்களின் பண்புகள், அளவீடுகள், தொடர்புகள் மற்றும் அனைத்து வகைப்பாடுத் தரநிலைக்கானத் தகவல்களை தேடக்கூடிய, திறந்த எண்ணிமக் களஞ்சியமாகும். [6]
இந்த முயற்சியின் நிர்வாகக் குழுவில் அட்லசு ஆப் லிவிங் ஆஸ்திரேலியா, பல்லுயிர் மரபு நூலகக் கூட்டமைப்பு, சீன அறிவியல் கழகம், கோனாபையா (CONABIO), கள அருங்காட்சியகம், அர்வர்டு பல்கலைக்கழகம், அலெக்சாந்திரியா நூலகம்(லைப்ரரி ஆப் அலெக்ஸாண்ட்ரியா), மேக்ஆர்ட்டூரின் ஆய்வகம், மேக்ஆர்ட்ஹூரைன் அறக்கட்டளை, மிசோரி தாவரவியல் பூங்கா, சோலன் அறக்கட்டளை மற்றும் சிமித்சோனிய நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் உள்ளனர்.[7]
நோக்கம்
தொகுபல உயிரினங்களைப் பற்றிய தகவல்கள் ஏற்கனவே பல்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைக்கின்றன, குறிப்பாக பெருவிலங்குகள். அனைத்து 1.9 மில்லியன் இனங்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க சுமார் 10 ஆண்டுகள் ஆகும்.[8] செப்டம்பர் 2011-ன் படி உயிரி கலைக்களஞ்சியம் 600,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் மில்லியன் கணக்கான பக்கங்கள் படியெடுக்கப்பட்ட ஆய்வுத் தரவுகளுடன் 700,000க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தது. தேசிய அறிவியல் அறக்கட்டளை, நீர்நில வாழ்வன வலை (AmphibiaWeb), காளான் ஆய்வுலாவர் (Mushroom Explorer), நுண்ணோக்கி போன்றவற்றுடன் Sp2000 மற்றும் ஐடிஐஎசு (ITIS) உயிரி பட்டியல், மீன்தரவு (Fishbase) மற்றும் உயிரி கிளை தொகுத்தல் திட்டம், உள்ளிட்ட பிற முயற்சிகளால் தொகுக்கப்பட்ட தகவல்களை இந்த முயற்சி நம்பியுள்ளது. ஆரம்ப கவனம் வாழும் இனங்கள் மீது இருந்தது ஆனால் பின்னர் அழிந்து வரும் இனங்களையும் அடக்கியுள்ளது. புதிய இனங்களின் கண்டுபிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் (தற்போது ஆண்டுக்கு சுமார் 20,000), கலைக்களஞ்சியம் தொடர்ந்து வளரும் வகையில் உள்ளது. வகைபாட்டியலில் மூலக்கூறு நுட்பங்களால் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைச் சேர்க்க புதிய வழிகளைக் கண்டறிவதால், குறிப்பாக (யூ)பாக்டீரியா, ஆர்க்கிபாக்டீரியா மற்றும் தீநுண்மிகளின் நுண்ணுயிர் பணிகளைப் பொறுத்தவரை, புதிய சேர்த்தல்களின் விகிதம் அதிகரிக்கும்.
உலகெங்கிலும் உள்ள பொது மக்கள், ஆர்வமுள்ள துறைஞர்கள், விழைஞர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முறை விஞ்ஞானிகள் எனப் பலருக்கும் ஆதாரமாகச் சேவை செய்வதே உயிரி கலைக்களஞ்சியத்தின் குறிக்கோளாக உள்ளது.[2]
வளங்கள் மற்றும் ஒத்துழைப்பு
தொகுஉயிரி கலைக்களஞ்சியம் இதன் நம்பகமான தரவுத்தளங்களிலிருந்து மேற்கோள்கள் மூலம் தகவலுக்கான முழு ஆதாரத்தையும் வழங்குகிறது. கல்விசார் ஆராய்ச்சியை வெளியிடும் தொழில்முறை ஆய்வாளர்கள் நேரடியாக அடிப்படைத் தரவை மேற்கோள் காட்ட வேண்டும்.[9] பயனர்கள் தற்போது உயிரி கலைக்களஞ்சிய உள்ளீடுகளை நேரடியாகத் திருத்த முடியாது. ஆனால் தொடர்புடைய தகவல், கேள்விகள், சாத்தியமான திருத்தங்கள், ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான புதுப்பிப்புகள், படங்கள் மற்றும் ஒலியைப் பங்களிக்க அல்லது தொழில்நுட்ப ஆதரவு சேவைகளுக்குத் தன்னார்வத் தொண்டு செய்ய, சிறப்பு நிபுணர் சமூகங்களில் சேர, தளத்தில் பதிவு செய்யலாம்.[10]
இதன் இடைமுகம் translatewiki.net-ல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Encyclopedia of Life - Smithsonian National Museum of Natural History". naturalhistory.si.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.
- ↑ 2.0 2.1 "EOL History". Eol.org. 2012-02-28. பார்க்கப்பட்ட நாள் 2012-03-23.
- ↑ Odling-Smee, Lucy (2007). "Encyclopedia of Life launched". Nature. doi:10.1038/news070508-7. http://www.nature.com/news/2007/070508/full/070508-7.html. பார்த்த நாள்: 2007-05-09.
- ↑ "James Edwards - Encyclopedia of Life". Eol.org. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
- ↑ Zimmer, Carl (2008-02-26). "The Encyclopedia of Life, No Bookshelf Required". The New York Times. https://www.nytimes.com/2008/02/26/science/26ency.html.
- ↑ "TraitBank: Practical semantics for organism attribute data". Semantic-web-journal.net. 2014-03-28. Archived from the original on 2020-12-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
- ↑ . http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6638017.stm.
- ↑ "Encyclopédie de la vie: Une arche de Noé virtuelle!". Radio-Canada. 9 May 2007. http://www.radio-canada.ca/nouvelles/Science-Sante/2007/05/09/001-encyclopedie-vie.shtml?ref=rss.
- ↑ "Encyclopedia of Life". eol.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.
- ↑ "Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.