உள்ளிக்கோட்டை
உள்ளிக்கோட்டை (Ullikkottai) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மன்னார்குடி வட்டத்துக்கு உட்பட்ட மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இயற்கையெழில் சூழ்ந்த ஊர் ஆகும்.[4][5] இது மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியிலும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும் வருகிறது.
உள்ளிக்கோட்டை | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 10°36′02″N 79°25′53″E / 10.600545°N 79.431324°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வடசேரி வழியாக செல்லும் சாலையில் 9 கி.மீ.தொலைவில் உள்ளது. இந்த ஊரைச் சுற்றியுள்ள வடசேரி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, கீழதிருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை போன்ற ஊர்களுக்கு இது ஒரு மையப் பகுதியாக விளங்குகிறது. உள்ளிக்கோட்டையை மன்னார்குடி பட்டுக்கோட்டை வடசேரி வழிச்சாலை (மாநில நெடுஞ்சாலை 146) மேற்கிலும் ,மன்னார்குடி பட்டுக்கோட்டை மதுக்கூர் வழிச்சாலை கிழக்கிலும் தொட்டுச்செல்கின்றன. பெரும்பான்மையான மக்கள் வடசேரி வழிச்சாலையையே உபயோகின்றனர்.
பெயர்க் காரணம்
தொகுஉள்ளிக்கோட்டைக்கு அருகே மகாதேவப்பட்டினத்தில் பழமையான கோட்டை உள்ளது. முற்காலத்தில் வணிகர்கள் தங்கி செல்லும் இடமாக இருந்து உள்ளது. உள்ளே கோட்டை உள்ளது என்பதை அறிய இப்போது அழைக்கப்படும் உள்ளிக்கோட்டை வழியாக மகாதேவப்பட்டினத்துக்கு செல்லும் வழியில் 'உள்ளே கோட்டை' என்று பலகை இருந்ததாகவும், அதுவே காலபோக்கில் மறுவி உள்ளிக்கோட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி
தொகு1913 ஆம் ஆண்டு இங்கு துவக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது இங்கு அரசு மேனிலைப் பள்ளி ஒன்றும், ஆரம்பப் பள்ளி இரண்டும் மற்றும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியும் உள்ளன.
சுகாதாரம்
தொகுஉள்ளிக்கோட்டையில் 1960 களின் பிற்பகுதிகளில் அதாவது 1966,67,68 களில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த அமரர் சு.பக்கிரிசாமியின் பெரும் முயற்சியால் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று கொண்டுவரப்பட்டது. தற்போது அது பெரிதாக வளர்ந்து சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.உள்ளிக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையானது உள்ளிக்கோட்டை மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களுக்கான முக்கிய மருத்துவமனையாக உள்ளது.
தொழில்
தொகுஇங்கு உழவுத் தொழிலே முக்கியமானது.நெல், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து, எள் போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. காவிரியின் கிளை நதியான வடவாறு வாய்க்கால் இவ்வூரின் வழியே பாய்கிறது. ஆற்றுப்பாசனத்தை நம்பி இருந்த இம்மக்கள், காவிரி நீர் கானல் நீராகி விட்டதால், தற்போது விவசாயத்திற்கு முழுவதும் ஆழ்துளைக்கிணறுகளையே நம்ம்பி இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.நிலத்தடி நீர் மட்டம் 15 அடியிலிருந்து தற்போது 200 அடிக்கு கீழிறங்கி விட்டது. குடிநீரின் சுவை மாறி இருப்பதை உணர முடிகிறது. வேளாண்மை நடவடிக்கைகளுக்கு இடையே பெரும்பான்மையினர் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளில் பணி செய்து பொருளீட்டுகின்றனர் .
சிங்கப்பூர்
தொகுகுறிப்பாக இவ்வூரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததற்கு சிங்கப்பூர் ஓர் முக்கிய காரணமாகும். சுமார் மூன்று தலைமுறைகளாக உள்ளிக்கோட்டைமற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பெரும்பங் காற்றி உள்ளனர். பெரும்பாலும் வீட்டிற்கு ஒருவர் சிங்கப்பூரில் பணிசெய்கின்றனர் .இவர்களில் பெரும்பான்மையோர் ஒப்பந்தப் பணியிலோ,நிரந்தரவாசியாகவோ அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவராகவோ உள்ளனர். உள்ளிக்கோட்டையை சின்ன சிங்கப்பூர் என்றும் வேடிக்கையாகக் குறிப்பதுண்டு. சிங்கப்பூரின் சிற்பி, மூத்த அமைச்சர் திரு. லீ குவான் யூ அவர்களின் மறைவிற்கு, உள்ளிக்கோட்டை மக்கள் இரங்கல் பதாகைகள் வைத்தும், இரங்கல் கூட்டங்கள்/ஊர்வலங்கள் நடத்தியும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது[6].
அரசு அலுவலகங்கள்
தொகுமின்வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் அலுவலகம் ஒன்றும், கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகமும், பத்திரப் பதிவு அலுவலகமும் உள்ளன. ஊராட்சி மன்றத்திற்கு ஒரு அலுவலகமும் உள்ளது.மேலும் ஒரு நூலகமும்,அரசு தலைமைத்தபால் நிலையம், தொலைபேசி இயக்ககம் மற்றும் அரசு கால்நடை பராமரிப்பு மருத்துவமனை ஆகியவை உள்ளன.
வங்கிகள்
தொகுஉள்ளிக்கோட்டையில் உள்ள வங்கிகள்: சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, வேளாண் கூட்டுறவு வங்கி ஆகியவையாகும்.
திருமண அரங்கங்கள்
தொகுஉள்ளிக்கோட்டையில் மூன்று திருமண அரங்கங்கள் உள்ளன.
பி.எஸ்.ஜி திருமண அரங்கம் (திறப்பு:1995-ம் ஆண்டு சனவரி திங்கள் 22-ம் நாள்)
வீ.கே எஸ். திருமண அரங்கம் (திறப்பு:1995-ம் ஆண்டு சூன் திங்கள் 28-ம் நாள்)
என்.ஜி.வி தேவர் திருமண அரங்கம் (திறப்பு:1998-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 3-ம் நாள்)
திரையரங்கம்
தொகுஉள்ளிக்கோட்டையில் லெட்சுமி திரையரங்கம் உள்ளது. இத்திரையரங்கம் முதன் முதலில் உள்ளிக்கோட்டை தெற்குத்தெருவில் 1972-ம் ஆண்டு சனவரி திங்கள் 25-ம் நாள் (கீற்றுக்கொட்டகை) திறக்கப்பட்டது.பின்னர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு பேட்டைத்தெருவில் மன்னார்குடி - வடசேரி சாலையில் 1973-ம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ம் நாள் (கீற்றுக்கொட்டகை) திறக்கப்பட்டது. அப்போது "தேவரின் தெய்வம்" படம் திரையிடப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் தற்போதுள்ள புதிய கட்டிடம் கட்டப்பட்டு 1977-ம் ஆண்டு சனவரித்திங்கள் 14-ம் நாள் தைப்பொங்கல் திருநாளன்று திறக்கப்பட்டது. அப்போது "தேவரின் திருவருள்" படம் திரையிடப்பட்டது. மறுநாள் "உரிமைக்குரல்" திரையிடப்பட்டது. தற்போதைய அறிவியல் மாற்றத்தில் அனைவரது இல்லங்களிலும் தொலைக்காட்சிப்பெட்டி உள்ளது. கம்பிவட வசதியுடன் அனைத்து திரைப்படங்களையும் அவரவர் வீட்டிலேயே காணமுடிவதால், திரையரங்கத்திற்கு வரும் மக்கள் எண்ணிக்கை வெகுவாகக்குறைந்து விட்டது. எனவே 2012-ம் ஆண்டு முதல் இத்திரையரங்கம் மூடப்பட்டுள்ளது.
இங்குள்ள முக்கிய கோவில்கள்: சிந்தாமணி விநாயகர் கோவில், சிவன் கோவில் , அருள்மிகு குழந்ததாயி மாரியம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், சேத்து மாரியம்மன் கோவில்,காளியம்மன் கோவில் ஆகியவை. அருள்மிகு குழந்ததாயி மாரியம்மன் கோவில் வைகாசிப்பெருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சிறு தெய்வ வழிபாடாக அவரவர் குலதெய்வங்களுக்கு கோவில்களும் கட்டப்பட்டு வருடாந்திர பூஜைகளும் நடைபெறுகின்றன.
சமூகம்
தொகுஇந்த கிராமத்தில் சுமார் 10000 பேர் வசிக்கிறார்கள்.இங்கே வசிப்பவர்களில் அதிகம் பேர் முக்குலோத்தோரில் ஒரு பிரிவான அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்கள். முத்தரையர் அம்பலக்காரர், செட்டியார்,சைவ வெள்ளாளர்,வண்ணார், மருத்துவர், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களும் சேர்ந்து வாழும் ஊர். அனைத்து சாதி மக்களுக்கும் ஒரே சுடுகாடு. இசுலாமியர்கள் சிலர் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். சிலர் வியாபரம் செய்வதற்காக இங்கு வந்தவர்கள்.
அரசியல்
தொகுசுதந்திரப் போராட்டங்களிலும் இவ்வூரிலிருந்து பலர் கலந்து கொண்டுள்ளனர். தியாகி சோமசுந்தரம் காந்திய வழியில் போராட்டங்கள் செய்து பல நாட்கள் சிறையில் கழித்துள்ளார். வேலை தேடி சிங்கப்பூருக்கு சென்ற பலர், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுடன் இந்திய தேசிய ராணுவத்திலும் பங்கு பெற்றுள்ளனர். அரசியலில் தி.மு.க.வில் பலர் முன்னிலை வகித்துள்ளனர். மன்னார்குடியின் முதல் தி.மு.க. சட்டமன்ற வேட்பாளர் ந.அருணாசலம் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
- ↑ http://www.todayonline.com/singapore/singapore-story-small-tamil-nadu-village