உவூட்சு எஃகு
உவூட்சு எஃகு (Wootz steel) என்பது பட்டை வடிவபாங்குகளைக் கொண்டிருக்கும் ஒரு உலை இரும்பு ஆகும். இந்த பட்டைகள், நிறை கரி (கார்பன்) எஃகில் உறுதியூட்டப்பட்ட மார்ட்டன்சைட் அல்லது பெர்லைட் அச்சுருவினுள் நுண்ணிய கரியகை (கார்பைடு) தாள்கள் இடம்பெறுவதாலும், குறை கரி (கார்பன்) எஃகில் ஃபெரைட் மற்றும் பெர்லைட் பட்டயமைப்புகளாலும் உருவாகின்றன. இது தென்னிந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு முன்னோடி எஃகு உலோகக் கலப்பு. உக்கு, இந்துவி எஃகு, ஹிந்துவானி எஃகு, தெலிங் எஃகு மற்றும் சேரிக் இரும்பு போன்ற பல்வேறு பெயர்களால் இது பண்டைய உலகில் அறியப்பட்டது.
வரலாறு
தொகுஉவூட்சு எஃகு தென்னிந்தியாவில் பெரும்பாலும் தற்கால கேரள மாநிலம் திகழும் பகுதியில் உருவானது.[1][2] நிறை கரி (கார்பன்) இந்திய எஃகு பற்றி பல பண்டைய தமிழ், கிரேக்க, சீன மற்றும் ரோமானிய இலக்கிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ்நாட்டில் கொடமணல், தெலுங்கானாவில் கோல்கொண்டா, கர்நாடகா மற்றும் இலங்கையின் உற்பத்தித் தளங்களில் இவ்வுருக்கு எஃகு உருவாக்கப்பட்டு உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. உலகின் மிகச் சிறந்த எஃகு என்று வழங்கப்பட்டு, ரோமர், எகிப்தியர்கள், சீனர்கள் மற்றும் அரேபியர்களால் சேரிக் இரும்பு என்று அறியப்பட்ட இவ்வெஃகினை சேர வம்சத்தின் தமிழர்கள் கி.மு. 500-ஆம் ஆண்டு வாக்கில் உற்பத்தி செய்து வந்தனர்.[3][4][5] இரும்புக் கம்பளங்களாக ஏற்றுமதி செய்யப்பட்ட எஃகு, "வூட்ஸ்" என்று காலப்போக்கில் அறியப்பட்டது.[6] இந்தியாவின் வூட்ஸ் எஃகு அதிக அளவில் கரிமம் கொண்டுள்ளது.
தமிழக முறைப்படி, கருப்பு மேக்னடைட் தாதின் கசடுகள் யாவையும் நீக்க, அதனை ஒரு கரியுலை உள்ளே அடைக்கப்பட்ட களிமண் உலையினுள் வைத்து, கரிம அணுக்கத்தில் சுடப்படும். மாறாக, தாதினை முதலில் தேனிரும்பாக உருக்கி, சுட்டு அடித்து, கசை சுத்தமாக அகற்றப்படும். மூங்கில் மற்றும் ஆவாரை இலை முதலியவற்றிலிருந்து கரிமம் பெறப்படும்.[6][7] கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் சேர தமிழ் மக்களிடமிருந்து உவூட்சு எஃகு உருவாக்கும் உற்பத்தி முறைகளை இலங்கை மற்றும் சீன மக்கள் ஏற்றுக்கொண்டனர்.[8][9] இலங்கையில், பருவ காற்றுகளால் உந்தப்பட்ட ஒரு தனித்தன்மையான காற்று உலை, எஃகு உருக்கப் பயன்படுத்தப்பட்டது. அனுராதபுரம் , திஸ்ஸமஹாராமா மற்றும் சாமணலவேவா போன்ற இடங்களில் பழங்காலத்திலிருந்தும் உற்பத்தி தளங்கள் இருந்து வருவது கண்டறியப்பட்டது, மேலும் கோடமானலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டைய இரும்பு மற்றும் எஃகு கலைப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இலங்கையின் தென் கிழக்கில் உள்ள திஸ்ஸமஹராமாவில், கி.மு. 200-ஐச் சேர்ந்த தமிழ் வர்த்தகக் கழகம் ஒன்று, அவர்களது பழமையான இரும்பு மற்றும் எஃகு கலைப்பொருட்களையும் பழங்கால உற்பத்தி செயல்முறைகளையும் தீவிற்கு கொண்டு வந்தது.[10][11][12]
அரேபியர்கள் தெற்காசிய / ஸ்ரீலங்கா உவூட்சு எஃகை டமாஸ்கசுக்கு அறிமுகப்படுத்த, அங்கு இவ்வெஃகு கொண்டு ஆயுதங்கள் தயாரிக்கும் தொழில் வளர நேர்ந்தது. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அராபிய பயணி இதுரிசி, "இந்துவனி" என்கிற இந்திய எஃகினை உலகின் தலைச் சிறந்ததெனக் குறிப்பிட்டுள்ளார் [1]. தெலுங்கானா பிராந்தியத்தை குறிக்கும் 'தெலிங்' எஃகின் புகழை அரேபிய குறிப்புகளில் பரவலாகக் காணலாம். இதனால் தெலுங்கானாவின் கோல்கொண்டா பகுதி, உவூட்சு எஃகின் மேற்கு ஆசிய ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக விளங்குகியது தெளிவாகிறது[1].
பாரசீக பேச்சு வழக்கில், "இந்திய பதில்" அளிப்பது என்பதன் பொருள் ஒரு "இந்தியப் வாளைக் கொண்டு வெட்டுவது" என்பதாகும். இது இவ்வெஃகின் புகழுக்கு மற்றொரு சான்று.[9] உவூட்சு எஃகு பரவலாக ஏற்றுமதி செய்யப்பட்டு பண்டைய ஐரோப்பா மற்றும் அரபு உலகில் வர்த்தகம் செய்யப்பட்டது, குறிப்பாக மத்திய கிழக்கில் அதிக பிரபலமானது.[9]
நவீன உலோகவியல் வளர்ச்சி
தொகு17 ஆம் நூற்றாண்டு முதல், பல ஐரோப்பிய பயணிகள் தென் இந்தியாவில், மைசூர் , மலபார் மற்றும் கோல்கொண்டாவில் எஃகு உற்பத்தியைக் கண்டனர். ஆங்கிலத்தில் "Wootz" என்பது wook என்பதன் பிழையான படியெடுத்தலாகத் தோன்றுகிறது. wook என்பது கன்னடத்தில் [13][14] மற்றும் தெலுங்கு மொழிகளில் எஃகைக் குறிக்கும் சொல்லான உக்கு(ukku) என்பதன் ஆங்கிலிய பதிப்பு. ஒரு கோட்பாட்டின் படி, உக்கு என்ற பதம் "உருக்குதல், கரைத்தல்" என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டது; இதே பொருள் தரும் ஒத்த ஒலி சொற்கள் மற்ற திராவிட மொழிகளிலும் உள்ளன. உலோகக் கலவைக்கான தமிழ் மொழி வேர் சொல் 'உருக்கு'.[15] இன்னொரு கோட்பாட்டின்படி, உவூட்ஸ் (Wootz) என்ற சொல் உச்ச அல்லது உச ("உயர்ந்த") என்ற சொல்லின் மருவலாகக் கருதப்படுகிறது. பெஞ்சமின் ஹெய்ன் இந்திய எஃகினை ஆய்வு செய்த போது,இணங்கியளித்த மாவட்டங்களிலும் பிற கன்னட மொழி பேசும் பகுதிகளிலும் அது உச்ச கபினை ("உயர்ந்த இரும்பு") எனவும், மைசோரில் உக்குத் துண்டு எனவும் வழங்கப்பட்டதாக அறிந்தார்.[16][17]
உவூட்சு எஃகு மற்றும் திமிஷ்கு வாள்களின் பழம்பெருமைகள் 17 முதல் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பிய அறிவியல் சமூகத்தின் ஆர்வத்தை தூண்டியது. ஐரோப்பாவில் உயர்-கார்பன் உலோகக் கலங்களின் பயன்பாடு இதற்கு முன்னர் அறியப்படவில்லை. இதன் மூலம் நவீன ஆங்கில, பிரெஞ்சு மற்றும் ரஷ்ய உலோகவியலின் வளர்ச்சிக்கு உவூட்சு எஃகு பற்றிய ஆய்வு ஒரு முக்கிய பங்காக அமைந்ததை அறியலாம்.[18]
பண்புகள்
தொகுஉவூட்சு எஃகு, Fe
3C துகள் கொத்துக்களின் பட்டையினால் ஏற்படும் வடிவத்தால் அறியப்படும். Fe
3C துகள் கொத்துக்கள் குறை கரியகை தனிமங்களின் நுண்பாகுபாட்டினால் உருவாக்கப்படுவன.[19] கடின இரும்பு நானோகம்பிகளும் கரிம நானோகுழாய்களும் உவூட்சு எஃகின் நுண்கட்டமைப்பில் (மைக்ரோஸ்ட்ரக்ச்சர்) இடம்பெறுவதை, TU டிரெஸ்டனைச் சேர்ந்த பீட்டர் பாஃப்லர் கண்டுபிடித்துள்ளார்.[20] எஃகு அச்சுருவிலிருந்து மிகுதியான அதிஉறுதியான உலோக கரியகை(கார்பைடு)கள் பல பட்டைகளாக வெளியேறும் வாய்ப்பு உள்ளது. உவூட்சு வாட்கள், குறிப்பாக டமாஸ்கஸ் கத்திகள், அவற்றின் கூர்மைக்கும் கடினத்திற்கும் பெயர் பெற்றவை.
கச்சில் உற்பத்தி செய்யப்பட்ட எஃகு, கிளாஸ்கோ மற்றும் ஷெபீல்டில் இருந்து உற்பத்தியாகும் எஃகு அளவிற்கு உலகளாவிய புகழ் பெற்றிருந்தது.[9]
மீட்டுருவாக்க ஆய்வுகள்
தொகுரஷிய உலோகவியலாளர் பாவெல் பெட்ரோவிச் அனசாவ் (பார்க்க புலாத் எஃகு ) பண்டைய உவூட்சு எஃகை ஒத்த, கிட்டத்தட்ட அதன் அனைத்து பண்புகள் பொருந்தப் பெற்ற, ஒரு எஃகை உருவாக்ககுவதில் வெற்றிகண்டார். மரபார்ந்த பட்டை வடிவங்களை வெளிப்படுத்தும் உவூட்சு எஃகை உற்பத்தி செய்யும் நான்கு வெவ்வேறு முறைகளை அவர் ஆவணப்படுத்தினார். அவர் தன் ஆய்வை முழுமையாக ஆவணப்படுத்தி வெளியிடும் முன்னரே காலமானார். ஓலெக் ஷெர்பி, ஜெஃப் வாட்ஸ்வொர்த் மற்றும் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம் உள்ளிட்டோர் ஆய்வுகள் செய்து, உவூட்சை ஒத்த பண்புகளைக் கொண்டிருக்கும் எஃகை உருவாக்க முயன்று வெற்றி பெறவில்லை. J.D வெரோவெனும், ஆல்ஃப்ரெட் பெண்ட்ரேவும் உற்பத்தி முறைகளை மீட்டுருவாக்கி, வடிவமைப்பு தோன்றுவதில் தாதுப்பொருட்களின் பங்கை உறுதி செய்தனர். மேலும் மீட்டுருவாக்கிய எஃகின் பட்டை வடிவமைப்புகள் கண்கூடாகவும் நுண்ணோக்கியிலும் பண்டைய கத்தி வடிவமைப்புகளை ஒத்ததாக இருந்தது. ரெய்பால்டு உள்ளிட்ட பலரின் பகுப்பாய்வுகளும், பட்டை வடிவமைப்புகளின் தோன்றலில், சுட்டு-ஆற்றி-அடிக்கும் சுழற்சிகளின் விளைவால், கடின இரும்பின் நானோகம்பிகளை கார்பன் நானோகுழாய்கள் வெண்ணாகம் , மாலிப்டினம் , குரோமியம் மாசுச் சுவடுகளுடன் சூழ்ந்திருப்பதன் பங்கு பற்றி கூறியுள்ளனர். விளைவாக கடினமான இணக்கமான உயர் கரிம எஃகு உருவாகிறது.[21]
மேலும் காண்க
தொகு- டமாஸ்கஸ் எஃகு
- தில்லி இரும்பு தூண்
- பேட்டர்ன் வெல்டிங்
- இரும்பு உலோகம்
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Srinivasan, Sharada (2004). India's Legendary Wootz Steel: An Advanced Material of the Ancient World. Bangalore: National Institute of Advanced Studies.
- ↑ Ward, Gerald W. R. (2008). The Grove Encyclopedia of Materials and Techniques in Art. Oxford: Oxford University Press. p. 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19531-391-8.
- ↑ Srinivasan, Sharada. Wootz crucible steel: a newly discovered production site in South India.
- ↑ Coghlan, Herbert Henery (1977). Notes on prehistoric and early iron in the Old World. பிட் ரிவர்ஸ் மியூசியம்.
- ↑ Sasisekharan, B. (1999). Technology of Iron and Steel in Kodumanal.
- ↑ 6.0 6.1 Davidson, Hilda Roderick Ellis. The Sword in Anglo-Saxon England: Its Archaeology and Literature. Boydell & Brewer Ltd. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85115-716-0.
- ↑ Burton, Sir Richard Francis (1884). The Book of the Sword. London: Chatto & Windus. p. 111.
- ↑ Needham, Joseph. Science and Civilisation in China: Volume 4, Physics and Physical Technology. Cambridge University Press. p. 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52107-060-7.
- ↑ 9.0 9.1 9.2 9.3 Manning, Charlotte Speir. Ancient and Medieval India. p. 365. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-543-92943-3.
- ↑ பொழுதுபோக்குகள் (ஏப்ரல் 1963) தொகுதி. 68, எண். 5, ப .45, சிகாகோ: லைட்னர் பப்ளிஷிங் கம்பெனி.
- ↑ Mahathevan, Iravatham. "An epigraphic perspective on the antiquity of Tamil". The Hindu Group.
- ↑ Ragupathy, P.. "Tissamaharama potsherd evidences ordinary early Tamils among population".
- ↑ Narasimha, Roddam; Srinivasan, J.; Biswas, S. K. (6 December 2003). The Dynamics of Technology: Creation and Diffusion of Skills and Knowledge. SAGE Publications. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-9670-5.
- ↑ Michael Faraday, as quoted by Day, Peter (1999-01-01). The Philosopher's Tree. Institute of Physics Publishing. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7503-0571-6.
- ↑ Pande, Girija; af Geijerstam, Jan. Tradition and innovation in the history of iron making: an Indo-European perspective. Pahar Parikarma. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86246-19-1.
- ↑ Balfour, Edward. The Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial Industrial, and Scientific: Products of the Mineral, Vegetable, and Animal Kingdoms, Useful Arts and Manufactures. Bernard Quaritch. p. 1092.
- ↑ Jeans, James Stephen. Steel: Its History, Manufacture, Properties and Uses. E. & F.N. Spon. p. 294.
- ↑ Smith, Cyril Stanley (1 September 2012). A History of Metallography: The Development of Ideas on the Structure of Metals Before 1890. Literary Licensing, LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-258-47336-5.
- ↑ Verhoeven, Pendray & Dauksch 1998
- ↑ Sanderson, Katharine (15 November 2006). "Sharpest cut from nanotube sword". Nature. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/news061113-11.
- ↑ Reibold, Marianne; Paufler, Peter; Levin, Aleksandr A.; Kochmann, Werner; Pätzke, Nora; Meyer, Dirk C. (2009). Discovery of Nanotubes in Ancient Damascus Steel. Springer Proceedings in Physics. Vol. 127. pp. 305–310. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-88201-5_35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-88200-8.
{{cite book}}
:|journal=
ignored (help)
மேலும் படிக்க
தொகு- Srinivasan, Sharada (1994). "Wootz crucible steel: a newly discovered production site in South India". Papers from the Institute of Archaeology (University College London) 5: 49–59. doi:10.5334/pia.60.
- Srinivasan, S.. "South Indian wootz: evidence for high-carbon steel from crucibles from a newly identified site and preliminary comparisons with related finds". Material Issues in Art and Archaeology (Materials Research Society Symposium Proceedings Series) 462.
- Hansson, Staffan (2002). Den skapande människan. Studentlitteratur AB.
- urukku - from the Tamil Lexicon, University of Madras பரணிடப்பட்டது 2012-12-15 at Archive.today [permanent dead link]
- "Special Issue: History and Characteristics of Wootz Steel in India and Abroad". Indian Journal of History of Science (Indian National Science Academy) 42.
- Srinivasan, Sharada (2004). India's Legendary Wootz Steel: an advanced material of the ancient world. National Institute of Advanced Studies and Indian Institute of Science.
- Verhoeven, J. D.. "The Mystery of Damascus Blades". சயன்டிஃபிக் அமெரிக்கன் 284: 74–79. doi:10.1038/scientificamerican0101-74.
வெளி இணைப்புகள்
தொகு- Verhoeven, J.D.; Pendray, A.H.; Dauksch, W.E. (1998). "The key role of impurities in ancient Damascus steel blades". JOM 50 (9): 58–64. doi:10.1007/s11837-998-0419-y. http://www.tms.org/pubs/journals/JOM/9809/Verhoeven-9809.html.
- Verhoeven, J.D.; Pendray, A.H.; Dauksch, W.E.. "The continuing study of damascus steel: Bars from the alwar armory". JOM 56 (9): 17–20. doi:10.1007/s11837-004-0193-4.
- Verhoeven, J.D. (2007). "Pattern Formation in Wootz Damascus Steel Swords and Blades". Indian Journal of History of Science 42: 559–574. http://insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol42_4_2_JVerhoeven.pdf.
- Wootz Militaria
- Provos, Niels (3 May 2013). Wootz Ep 4: Making Wootz Steel. YouTube.
- Loades, Mike; Pendray, Al (21 November 2017). The Secrets of Wootz Damascus Steel. YouTube.
- 5185044, "Method of making "Damascus" blades"