கச்சு மாவட்டம்

குசராத்தில் உள்ள மாவட்டம்

கச்சு மாவட்டம் (Kutch District, அல்லது Kachchh, குசராத்தி: કચ્છ, சிந்தி மொழி: ڪڇ‎) மேற்கிந்தியாவில் குசராத்து மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் கச்சு வளைகுடாவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையிடம் புஜ் நகரம். கச்சு மாவட்டம் 45,652 சதுர கி. மீ பரப்பளவு கொண்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம் ஆகும்.[1] இம்மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள புஜ் நகரம், கச்சு மாவட்டத் தலைமையிடம்.[2] கச்சு மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற தொகுதியும் அமைந்துள்ளது.

கச்சு மாவட்டம்
કચ્છ જિલ્લો
கச்சுமாவட்டத்தின் இடஅமைவு குஜராத்
மாநிலம்குஜராத், இந்தியா
தலைமையகம்புஜ்
பரப்பு45,652 km2 (17,626 sq mi)
மக்கட்தொகை2,092,371 (2011)
மக்கள்தொகை அடர்த்தி33/km2 (85/sq mi)
பாலின விகிதம்951
வட்டங்கள்10
மக்களவைத்தொகுதிகள்கச்சு மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
முதன்மை நெடுஞ்சாலைகள்1
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கச்சு மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள், மழைக் காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் வறண்ட நிலமாக உள்ளதால் இப்பகுதி ’ராண் ஆப் கட்ச்’ என்று அழைக்கப்படுகிறது. ராண் என்னும் குஜராத்திச் சொல்லுக்கு, பாலை வனம் என அர்த்தம். குஜராத்தில் உள்ள 'ராண் ஆப் கச்' உலகின் பெரிய 'உப்புப் பாலைவனம்' என்னும் சிறப்பை பெற்றுள்ளது. ஆமதாபாத்தில் இருந்து 320 கி.மீ., தொலைவில் ராண் ஆப் கட்ச் உள்ளது. உப்பு கலந்த களிமண் நிலம், மழைக்காலத்தில் இரவு நேரத்தில் பால் போல் இருக்கும். பௌர்ணமி நிலவு ஒளியின் போது விதவிதமான ஒளி வெள்ளம் தெரியும். பார்ப்பதற்கு ஓவியம் போலவே தெரியும் இந்தக் காட்சியை, 'சாத்தான்களின் ஓவியம்' என்கின்றனர். கச்சு மாவட்டம், பன்னி எனப்படும் மேய்ச்சல் நிலப் புல்வெளிகள் கொண்டிருப்பதால் கால் நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ளது. கச்சு மாவட்டம் பெரிய ரான் ஆப் கட்ச் மற்றும் சிறு ரான் ஆப் கட்ச் பகுதிகளை கொண்டுள்ளது.

கச்சு வளைகுடாவில் அமைந்த கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு இந்திய-பாகிஸ்தானை பிரிக்கிறது.

மாவட்ட எல்லைகளும் மக்கள் தொகையும்

தொகு

கச்சு மாவட்டத்தின் எல்லைகளாக தெற்கிலும் மேற்கிலும் அரபுக் கடலும் கச்சு வளைகுடாவும், வடக்கிலும் தெற்கிலும் ரான் ஆப் கட்ச் பகுதிகளும் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கட்டொகை கணக்கீட்டின்படி கச்சு மாவட்டத்தின் மக்கட்தொகை 2,090,313. நகர்ப்புறத்தில் முப்பது விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர்.[3] ,[4]

புவியியல்

தொகு

கச்சு மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் புஜ், காந்திதாம், ராபார், நகாரத்தின, அன்ஜார், மாண்டவி, மாதாபர், முந்திரா மற்றும் பாச்சு ஆகும். இம்மாவட்டம் 969 கிராமங்களைக் கொண்டுள்ளது. வறண்ட வானிலை கொண்டது. 1458 மீட்டர் உயரமுடைய கள தொங்கர் (கறுப்பு மலை) மாவட்டத்தின் மிக உயரமான மலையாகும். கச்சு மாவட்டம் கடந்த 187 ஆண்டுகளில் 90 நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது.

கச்சு மாவட்டத்தில், 1956-ஆம் ஆண்டில் அன்ஜார் நகரப்பகுதியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட்து. 2001-ஆம் ஆண்டில் புஜ் பகுதியில் உண்டான தொடர் நிலநடுக்கங்களால் ஜவகர் நகர், கிர்சார நகர், தேவிசார், அமர்சார், பந்தி ஆகிய பகுதிகள் முற்றிலும் தரைமட்டம் ஆனது. ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம் ஆனது.[5]

கச்சு மாவட்டம் நில நடுக்கோட்டில் அமைந்துள்ளது.

ஆறுகளும் அணைகளும்

தொகு

இம்மாவட்டத்தில் 97 சிறு ஆறுகள் ஓடுகிறது. பல ஆறுகள் ரண் ஆப் கச் பகுதியை வளப்படுத்துகிறது. சில ஆறுகளே அரபுக் கடலில் கலக்கின்றன.[6] 22 பேரணைகளும்,[7] நூற்றுக்கணக்காண சிற்றணைகளும் உள்ளது.[8]

வருவாய் வட்டங்கள்

தொகு

கச்சு மாவட்டம் பத்து வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது[9]:

  1. புஜ் வட்டம்
  2. அப்தச வட்டம்
  3. அன்சார் வட்டம்
  4. ராபர் வட்டம்
  5. பச்சாவ் வட்டம்
  6. காந்திதாம் வட்டம்
  7. லக்பத் வட்டம்
  8. மாண்டவி வட்டம்
  9. முந்திரா வட்டம்
  10. நாகரத்தின வட்டம்

வனவிலங்கு சரணாலயங்களும் காப்புக்காடுகளும்

தொகு

கச்சு மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் சரணாலயங்கள், காப்புக்காடுகள்:

  1. இந்திய காட்டு கழுதை சரணாலயம்
  2. கட்ச் பாலைவன விலங்குகள் காப்பகம
  3. நாராயணன் ஏரி வனவிலங்குகள் காப்பகம்
  4. கச்சு பஸ்தர் வனவிலங்குகள் காப்பகம்
  5. பன்னி புல்வெளி காப்புக் காடுகள்
  6. சாரி-தந்து சதுப்புநில காப்புக் காடுகள்

பண்பாடும் நாகரிகமும்

தொகு

மொழி

தொகு

கச்சு மாவட்டத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் கச்சு மொழியில் சிந்தி மொழி, குஜராத்தி மற்றும் இந்தி மொழிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. கச்சு மொழிக்கென தனி எழுத்து முறைகள் இருப்பினும் குஜராத்தி மொழி அரசு மொழியாக இருப்பதால், குஜராத்தி எழுத்துமுறையே நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர் கட்ச் மாவட்ட மக்கள்.

மக்கள்

தொகு
 
வடக்கு புஜ் பகுதியின் ஹொட்கா கிராமத்திய மேக்வால் இனத்துப் பெண்

பலநூற்றாண்டுகளுக்கு பல்வேறு இனங்கள் பல்வேறு காரணங்களுக்காக சிந்து, ஆப்கானித்தான், மேற்கு இராஜஸ்தானின் மேவார் முதலிய பகுதிகளிலிருந்து கட்சு பகுதியில் குடியேறிய மக்களே இன்றைய கட்ச் மாவட்ட மக்கள். இன்றளவும் கட்சு மாவட்டத்தில் நாடோடி இன மக்களும், ஒரளவு நாடோடி வாழ்க்கை நடத்தும் கால்நடைத் தொழில் செய்யும் மக்களும், கைவினை கலைஞர்களும் வாழ்கின்றனர்[10].

பொருளாதாரம், தொழில் மற்றும் வணிகம்

தொகு

கட்ச் மாவட்டம் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் மாவட்டமாக உள்ளது. ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பாவையும் கடல்வழியாக இணைக்கும் கண்ட்லா மற்றும் முந்திரா துறைமுகமுகங்கள் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதின் மூலம், இம்மாவட்டத்தின் தொழில், வணிகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுவருகிறது.

இம்மாவட்டத்தில் 26-01-2001-ஆம் நாளில் புஜ் பகுதியில் உண்டான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் தொழில் முனைவர்களுக்கு 15 ஆண்டு காலம் வரிச் சலுகை அளித்தின் காரணமாகவும், சாலைப் போக்குவரத்து கட்டமைப்பு நல்ல முறையில் உள்ளதாலும், தடையற்ற 24 நேர மின்சாரம் வழங்கப்படுவதாலும் தொழில் வணிகம் பெருகியதால் கட்ச் மாவட்டப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மேலும் கட்ச் மாவட்டத்தின் ஐம்பது விழுக்காடு மக்கள் வளைகுடா நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதால், அந்நிய செலவணிப் பணம் இம்மாவட்டத்திற்கு வருகிறது.

இம்மாவட்டத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் தொழில் பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ளது. பழுப்பு நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் கட்ச் மாவட்டம் மின்மிகை மாவட்டமாக உள்ளது.[11] கட்சு மாவட்டத்தில் கிடைக்கும் ஏனைய இயற்கை வளங்கள் பாக்சைடு, ஜிப்சம், உப்பு மற்றும் பிற தாதுப் பொருட்கள். ஜிப்சம் மற்றும் பழுப்பு நிலக்கரி அதிகமாக இங்கு கிடைப்பதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.[12] கட்சு மாவட்டத்தில் உள்ள கண்டலா துறைமுகம், வட இந்தியாவின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது.

முந்த்ரா துறைமுகப் பகுதியில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள டாடா முந்த்ரா திட்டம் எனும் பெயரில் கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (Coastal Gujarath Power Limited) அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. அதானி நிறுவனத்தின் 10,000 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அஜந்தா கடிகார தொழிற்சாலை, ஜெ. பி., சிமெண்ட் தொழிற்சாலை, ஜிண்டால் இரும்பு மற்றும் காற்றாலை தொழிற்சாலைகள், ஆர்பட் மின்னியல் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், வெல்ஸ்பன் தொழில் நிறுவனம் மற்றும் உப்பு உற்பத்தி தொழில்கள் சிறந்து விளங்குகிறது.

இம்மாவட்டத்தில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

கட்ச் மாவட்டத்தில் அதிக சதுப்பு நிலக்காடுகள் இருப்பதால், மரத் தொழிற்சாலைகள் கண்ட்லா துறைமுகப் பகுதியில் அதிகமாக உள்ளது. கண்ட்லா மற்றும் காந்திதாம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட மரத்தொழிற்சாலைகள் உள்ளது.

ரான் ஆப் கட்ச் பகுதியில் உள்ள 107 கிராமங்களில் உப்பளங்களிலிருந்து உப்பு எடுக்கும் தொழில் 600 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த உப்பு உற்பத்தியான 180 இலட்சம் டன்னில், கட்சு மற்றும் இதர சௌராஷ்டிர பகுதிகளிலிருந்து மட்டுமே 75 விழுக்காடு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

சமயங்கள்

தொகு

இந்து சமயத்தினர் பெரும்பான்மையினராகவும், இதர சமயத்தினரான இசுலாமியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்களும் அதிக அளவில் உள்ளனர். சுவாமி நாராயணன் இயக்கத்தை பின்பற்றும் இந்துக்கள் அதிகமாக உள்ளனர்.

உணவு

தொகு

கட்ச் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் சைவ உணவையே விரும்பு உண்கின்றனர். சமணர்கள் பூமிக்கடியில் விளையும் வெங்காயம், பூண்டு வகைகள், கிழங்கு வகைகள்கூட உண்பதில்லை. இந்துக்கள் மாட்டு இறைச்சியை உண்பதில்லை. இப்பகுதியில் கிடைக்கும் வஜ்ரா எனும் சிறுதானியம், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டிகள் அதிக அளவில் உணவில் சேர்த்து உண்கின்றனர். தேநீர் இங்கு அதிக அளவில் மக்கள் விரும்பிக் குடிக்கின்றனர்.

நெசவுக் கலை

தொகு
 
கட்ச் பாணி சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த வண்ணத்துணிகள்

கட்ச் மாவட்டம் கைநெசவுக் கலைக்கு பெயர் பெற்றது. பெண்கள், சிறு வண்ண வண்ண கண்ணாடித் துண்டுகளை வண்ணத்துணிகளில் கோர்த்து அழகிய சித்திர வேலைபாடுகள் (Embroidery) கொண்ட சேலைகள், இரவிக்கைகள், பாவாடைகள் மற்றும் சட்டைகள் தயாரிக்கின்றனர்.

கட்ச் மாவட்டத்தில் வாழும் ஒவ்வொரு இனக்குழுக்களும் தங்களை மற்ற இனக்குழ மக்களிடமிருந்து வேறுபடுத்தி பார்ப்பதற்காக தங்களுக்கென தனித்தன்மையான கலை நுணுக்கம் கொண்ட சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த உடைகள் அணிகின்றனர்.

வரலாறு

தொகு
 
தோலாவிராவின் தொல்லியற் களம்

மிகப் பழமையான சிந்து வெளி நாகரீகத்தின் பல அடையாள சின்னங்கள் கட்சு மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு முந்தைய காலம்

தொகு
 
கட்சு மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீக கால எழுத்துக்கள்

கட்ச் மாவட்டத்தில் சிந்து வெளி நாகரீக காலத்தை சார்ந்த மிகப்பெரிய, புகழ்பெற்ற தோலாவிரா அல்லது ”கொட்ட டிம்பா” எனும் இடம் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[13] இந்த தொல்லியல் பகுதியான கொட்ட டிம்பா பகுதி, கட்சு மாவட்டத்தின் வடக்கு பகுதியில் காதிர் தீவில் உள்ளது.

மத்திய காலம் மற்றும் ஆங்கிலேய இந்திய காலம்

தொகு
 
கட்சு சமஸ்தானத்தின் அரச சின்னம்.

கட்ச் இராச்சியம் 1147–1948ஆம் ஆண்டு வரை ஜடேஜா, வகேலா, சோலாங்கி, ஜடேஜா இராசபுத்திர அரச குல மன்னர்கள் ஆண்டனர். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்சு பகுதியில் இராஜபுத்திர ஜடேஜா வம்ச சாம்மா இனத்து மன்னர் சுதந்திர நாட்டை நிறுவினார். ஜடேஜா மன்னர் குலத்தினர் கட்சு பகுதியை மட்டும் அல்லாது சௌராட்டிர நாட்டின் பல பகுதிகளை, ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெறும் வரையில் ஆண்டனர். 1815-ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவுக்குட்பட்டு, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்க்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டி, இப்பகுதியை ஆளும் சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர். புஜ் நகரம் கட்சு சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. கட்சு சமஸ்தானம் தனக்கென தனி ரூபாய் நோட்டுக்களையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்

தொகு

இந்திய விடுதலைக்குப் பின் கட்சு சுதேச சமஸ்தான மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 1947-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை இந்திய நடுவண் அரசின் ஆணையாளர், கட்சு சமஸ்தான பகுதிகளை நிர்வகித்து வந்தார். 1-11-1956-ஆம் ஆண்டு முதல் கட்சு பகுதி பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக சௌராஷ்டிர மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது கட்சு மாவட்டம், 1960-இல் குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

கண்ட்லா துறைமுகம், சர்வதேச கடல் போக்குவரத்திற்கு கராச்சி துறைமுகத்திற்கு இணையாக நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவும் பாக்கிஸ்தான் நாடு, கட்சு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.

இதனையும் காண்க

தொகு

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://kachchh.nic.in
  2. "Kutch" (PDF). Vibrantgujarat.com. Archived from the original (PDF) on 2012-10-21. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17.
  3. "Census GIS India". Censusindiamaps.net. Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  5. Karanth, R. V.; Gadhavi, M. S. (2007-11-10). "Structural intricacies: Emergent thrusts and blind thrusts of central kachchh, western india". Current Science 93 (9): 1271–1280. http://www.ias.ac.in/currsci/nov102007/1271.pdf 
  6. "Rivers of Kachchh Region". Archived from the original on 8 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  7. "Gujarat: Disaster Management Plan: Operation of gates and rule curve levels for Irrigation Projects" (PDF). Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department. p. 28.
  8. "2001 Kutch Earthquake Gujarat State, India: Investigation into Damage to Civil Engineering Structures: Dams" (PDF). The Japan Society of Civil Engineers (JSCE).
  9. "Kachchh District Panchayat: Taluka Panchayat". Kutch District. Archived from the original on 15 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  10. http://www.apnaorg.com/books/english/aboriginal-tribes/aboriginal-tribes.pdf
  11. The brown gold of Kutch - By tapping the huge mineral deposits of the Kutch region, Gujarat Mineral Development Corporation Ltd. plans to turn the backward area into a prosperous one. பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம்; SPECIAL FEATURE: GUJARAT; By V.K. CHAKRAVARTI; Volume 20 - Issue 06, March 15–28, 2003; Frontline Magazine; India's National Magazine from the publishers of THE HINDU
  12. "SIL to set up cement plant in Kutch" (cms). News article (Ahmedabad: Times of India). 2007-06-30. http://www1.timesofindia.indiatimes.com/articleshow/2162629.cms. பார்த்த நாள்: 2008-08-12. 
  13. McIntosh, Jane R. (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, Calif.: ABC-CLIO. pp. ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576079072.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சு_மாவட்டம்&oldid=3928450" இலிருந்து மீள்விக்கப்பட்டது