என். டி. ராமராவ்
என்.டி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, நந்தமூரி தாரக ராமா ராவ் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 28, 1923 — ஜனவரி 18,1996) ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக நான்கு தடவை பொறுப்பு வகித்தார்.[1] தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
என்.டி. ராமராவ் | |
---|---|
என்.டி. ராமராவ் உருவப்படம் கொண்ட இந்திய தபால் தலை | |
பிறப்பு | நிம்மகுரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | மே 28, 1923
இறப்பு | சனவரி 18, 1996 ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | (அகவை 72)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
மற்ற பெயர்கள் | என்டிஆர், நந்தமுரி தாரக ராமா ராவ் |
அறியப்படுவது | திரைப்படம், அரசியல் |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
வாழ்க்கைத் துணை | பசவதாரகம், லக்ஷ்மி பார்வதி |
பிள்ளைகள் | ஜெயகிருஷ்ணா, சாயிகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மோகன்கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, ஜெயசங்கர்கிருஷ்ணா, லோகேஸ்வரி, புரந்தரேசுவரி, புவனேசுவரி, உமாமகேசுவரி |
திரை வாழ்வு
தொகுஎன்.டி.ஆர் 1949இல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரியாக நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952இல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்குத் திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.
'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார்.[2]
அரசியல் வாழ்வு
தொகு1980களில், என்.டி.ராமாராவ் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும்முயற்சி எடுத்தார். திரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே, அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என்.டி.ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது. 1982இல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாக்கிய என்.டி.ராமா ராவ், தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983 – 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார். சாதாரண மக்களிடையே, அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நம்பிய அவர், அவரது கட்சியான ‘தெலுங்கு தேச கட்சியை’ ஊக்குவிக்கும் விதமாக ஆந்திர மாநிலம் முழுவதும் விரிவான பயணங்கள் மேற்கொண்டார். ‘சைதன்யா ரதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு தனிப்பட்ட வேனில் அவர் பயணம் மேற்கொண்டார்.
சமூகத்தில் ஏழ்மைநிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடினார். 1986இல் இயற்றப்பட்ட, ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப்பட வேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார். என்.டி.ராமா ராவ், பிரபலமான அரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது. தேர்தலில் என்.டி.ராமாராவ், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984இல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்.டி.ராமா ராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது. தெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணினி மயமாக்கப்பட்டன. 1994இல், என்.டி.ராமா ராவ், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. என்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
1993 செப்டம்பர் 11ஆம் நாள் ஐதராபாத்தில் தனது வீட்டில் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரிப் பேராசிரியையை மறுமணம் செய்துகொண்டார். அப்போது என்.டி.ஆருக்கு 70 வயது லட்சுமி சிவபார்வதிக்கு 38 வயது.[3] அதன் பின் 1994ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995இல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார்.[4][5]
1982இல் தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய என்.டி.ஆர், ஆந்திராவை ஊழலில் இருந்தும், திறமையற்ற நிர்வாகத்திடமும் இருந்து மீட்கப் போவதாக முழங்கினார். 1983இல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிட்ட ராமாராவின் தெலுங்கு தேச கட்சி, 199 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் 10ஆவது முதல்வராகவும், ஆந்திராவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராகவும பதவியேற்றார் ராமாராவ்.[6][7]
இவற்றையும் காண்க
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ http://ipr.ap.nic.in/release/ap_cms.asp
- ↑ http://www.maalaimalar.com/2012/03/31174855/nd-ramarao-charge-andhra-chief.html பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் ஆந்திரப் பட உலகின் முடிசூடா மன்னன்
- ↑ தினத்தந்தி 2004 07 12 பக்.13
- ↑ http://cinema.maalaimalar.com/2009/12/09104812/mtr.html 70 வயதில் என்.டி.ராமராவ் மறுமணம்.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
- ↑ https://tamil.indianexpress.com/entertainment/special-article-about-nt-ramarao/
- ↑ https://patrikai.com/vice-president-venkaiah-naidu-launches-balakrishnas-ntr-biopic/