எப்பிடாம்னசின் போர் நிகழ்ச்சி
எப்பிடாம்னசின் போர் நிகழ்ச்சி என்றும் அழைக்கப்படும் எபிடாம்னியன் போர் நிகழ்ச்சி (Affair of Epidamnus)) என்பது பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியரான துசிடிடீஸ் பெலோபொன்னேசிய போருக்கு உடனடி காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடும் நிகழ்வு ஆகும். [2] எப்பிடாம்னஸ் நகர அரசின் (பின்னர் உரோமன் டைராச்சியம், தற்போது நவீன கால டுரேஸ் ) சனநாயகப் பிரிவினர் ஒரு சிறிய ஆட்சிக்கவிழ்ப்பாகத் தொடங்கினர். ஆனால் அது இறுதியில் ஏதென்ஸ் மற்றும் கோர்சிரா நகரங்களுக்கு இடையே பெரும் மோதலாகவும், மறுபுறம் கொரிந்து நகரத்திற்கும் இடையே பெரிய மோதலாகவும் அது மாறியது. இதனால் சைபோட்டா சமர் ஏற்பட்டது. இது பின்னர் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவுக்கும் இடையிலான பகை ஏற்படவும் பெலோபொன்னேசியப் போர் ஏற்படவும் முக்கியக் காரணமாகவும் ஆனது.
எப்பிடாம்னசின் போர் நிகழ்ச்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
எபிடாம்னிய ஒலிகார்ச்கள் இலிரியன் பழங்குடியினர் | எபிடாம்னிய ஜனநாயகவாதிகள் கொரிந்து (கிமு 435 இல் இணைந்தது) |
பின்னணி
தொகுஎப்பிடாம்னஸ் என்பது நவீன கால அல்பேனிய கடற்கரையில் ஓட்ரான்டோ நீரிணைக்கு வடக்கே ஏட்ரியாடிக் கடலை எதிர்கொள்ளுவதாக உள்ள ஒரு நகர அரசு ஆகும். அருகிலுள்ள நகரமான கோர்சிராவைச் சேர்ந்த குடியேற்றவாசிகளால் இந்த நகரம் நிறுவப்பட்டது. [3] மேலும் கோர்சிராவுக்கு அடங்கிய நகர அரசாகவும் இருந்தது வந்தது. பல கிரேக்க நகர அரசுகளைப் போலவே, எப்பிடாம்னஸ் சிலவர் ஆட்சி மற்றும் சனநாயக ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் மோதலால் பாதிக்கப்பட்டது. துசிடிடீசின் கூற்றுப்படி, அருகிலுள்ள காட்டுமிராண்டித்தனமான பழங்குடியினருடன் போர்கள் ஏற்பட்டன. அதனால் இறுதியில் ஆளும் சிலவர் ஆட்சி பலவீனமானது. அவர்களின் பலவீனமான நிலையில் சனநாயக ஆட்சி ஆதரவாளர்கள் அதிகாரத்தைக் கைப்பறினர். சிலவர் ஆட்சி ஆதரவாளர்களான பணக்காரர்களை நாடு கடத்தினர். நாடு கடத்தப்பட்ட பணக்காரர்கள் அக்கம் பக்கத்தருடன் சேர்ந்துகொண்டு எப்பிடாம்சுக்கு பலவகையில் தொல்லை தந்தனர். எனவே எப்பிடாம்சை ஆட்சி புரிந்த சனநாயக ஆட்சியினர் குறிப்பாக அவர்களின் தாய் குடியேற்றமான கோர்சிராவின் உதவியை நாடினர். தங்களுக்கும் பணக்காரப் பிரிவினருக்கும் சமரசம் செய்து வைக்குமாறு கோரினர். ஆனால் கோர்சிரா இதில் தலையிட மறுத்தது. [4] இது எபிடாம்னிய சனநாயகவாதிகள் மற்றும் சிலவர் ஆட்சி ஆதரவாளர்கள் தங்களுக்கு உதவுமாறு மற்ற நகர அரசுகளை நோக்கிச் செல்ல வைத்தது.
அதிகரிப்பு
தொகுகோர்சிரா இதில் தலையிட மறுத்தத்தால் கிமு 435 இல், எப்பிடாம்னசின் சனநாயகப் பிரிவானர் கொரிந்திடம் உதவிக்காக சென்றனர். கோர்சிரா ஒருகாலத்தில் கொரிந்தினால் நிறுவப்பட்ட ஒரு குடியேற்ற நாடாகும். ஆனால் மேற்கு பக்கத்தில் நடைபெற்றுவந்த வணிகத்தில் கொரிந்துக்கு போட்டியாக இருந்தது. இந்தப் போட்டியை ஒழிக்க கொரிந்து வெகுவாக முயன்று வந்தது. இந்நிலையில் எப்பிடாம்னசின் விவகாரத்தில் கொரிந்து மூக்கை நுழைப்பதை கோர்சிரா விரும்பவில்லை. ஆனால் கொரிந்துவோ கோர்சிராவின் சொந்த குடியேற்ற நகரத்தின் விவகாரத்தில் தான் ஈடுபட்டு கோர்சிராவின் கௌரவத்தை குறைப்பதற்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பாக இதைக் கருதியது. அதனால் கொரிந்து எபிடாம்னிய சனநாயகவாதிகளுக்கு உதவியாக, துருப்புக்கள் அனுப்பி பாதுகாப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்தது.[5] இந்த கட்டத்தில், தங்களின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான கொரிந்து தங்கள் சொந்த குடியேற்ற நகரத்தின் விவகாரங்களில் தலையிடுவதைக் கண்டு சும்மா இருக்க முடியாது என்று, கோர்சிரேயர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். அதன்படி எபிடாம்னிய சனநாயகவாதிகள் சிலவர் ஆட்சிக்குழுக்களுக்கு தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்து கொரிந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரினர். [6]
கொரிந்த்து நகர அரசானது எசிபார்த்தாவின் தலைமையிலான பெலோபொன்னேசியன் கூட்டணியில் உறுப்பினராக இருந்தது. இந்த கூட்டணியானது கிரேக்க பாரசீகப் போர்களுக்கு பிந்தைய கிரேக்கத்தின் இரண்டு பெரிய கூட்டணி வலைப்பின்னல்களில் ஒன்றாகும். மற்றொரு கூட்டணி ஏதென்சின் டெலியன் கூட்டணி ஆகும். இந்த மோதலில் தலையிட எசுபார்த்தா தயக்கம் காட்டினாலும், கொரிந்தியர்கள் மெகாரா மற்றும் தீப்ஸ் போன்ற மற்ற கூட்டணி உறுப்பினர்களின் தளபாட ஆதரவைப் பெற்றனர். [5] இதனால் அச்சமுற்ற, கோர்சிரேயன் ஆட்சித் தலைமையானது எசுபார்த்தன், பெலோபொன்னேசியன் அல்லது டெல்ஃபிக் மத்தியஸ்தம் மூலம் கொரிந்துடன் இணக்கம் காண முயன்றது, ஆனால் இந்த விசயத்தில் கொரிந்தின் பிடிவாதத்தால் தடுமாற்றம் ஏற்பட்டது. [6] கோர்சிரா ஏதெனியன் உதவியை நாடுவதாக அச்சுறுத்தியபோது, எசுபார்த்தன்கள் தங்கள் கொரிந்திய கூட்டாளிகளை உடன்படிக்கைக்கு வருமாறு அழுத்தம் கொடுத்தனர் [6] இருப்பினும், கொரிந்தியர்கள் ஒப்பந்தத்துக்கு வரவேண்டுமானால் மொத்த கோர்சிரேயன்களும் திரும்பிச் செல்லவேண்டும் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை விதித்தனர். கோர்சிரேயர்கள் அமைதித் தீர்வை நாடி, பரஸ்பர போர் நிறுத்தத்தை பரிந்துரைத்தனர். ஆனால் கொரிந்தியர்கள் போரை அறிவித்து எபிடாம்னஸ் மீது படையெடுப்புக்குத் தயாராயினர். [7] இந்த படையெடுப்பை எதிர்கொண்ட கோர்சிரேயன் படை லூசிம் போரில் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து எபிடாம்னசின் சனநாயகப் பிரிவினர் சரணடைந்தனர். கோர்சிரேயன்கள் எபிடாம்னசை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
இந்த நிகழ்வுகளை அடுத்து தங்கள் தோல்விக்கு பழிவாங்க கொரிந்தியா நினைத்தது. மற்றொரு தீர்க்கமான சமருக்கான தயாரிப்பாக தங்கள் கடற்படைகளை கட்டியெழுப்பியது. அதற்காக இரண்டு ஆண்டுகளாக தயாராகியது. [8] கொரிந்தியர்கள் தங்களுடைய பண வளங்களைத் திரட்டியதை, தொல்பொருள் சான்றுகளில் பெரிய அளவிலான நாணயங்களாக சான்றளிக்கின்றன. [9] தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க கிரேக்கத்தில் மூன்றாவது பெரிய கப்பற்படையை உருவாக்குவதற்கான முயற்சியில் கொரிந்து ஈடுபட்டது. வரலாற்றாசிரியர் ரொனால்ட் லெகன் தனது பகுப்பாய்வில் இதை "ஐந்தாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இராணுவ முன்னேற்றங்களில்" ஒன்று என்று குறிப்பிட்டார். [10] அதே பகுப்பாய்வில் லெகோன் குறிப்பிடும்போது, கொரிந்துக்கு ஏற்பட்ட, தோல்வியின் விளைவாக, அது தன் கடற்படைக்கு தேவைபட்ட மர மூலப் பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை புவியியல் ரீதியாக அணுக முடியாமல் துண்டிக்கப்பட்டது. அது தங்களின் மீட்சியை விரைவுப் படுத்த வேண்டிய பணிகளை மேற்கொள்ளவேண்டியதாக ஆக்கியது. அந்த நேரத்தில் இருந்த புவியியல் சூழ்நிலையில், கொரிந்தியர்கள் தங்கள் புதிய கடற்படையை ஏதெனிய வணிக சக்தியின் மறைமுக ஆதரவுடன் மட்டுமே கட்டியெழுப்ப முடியும் நிலை இருந்ததாக என்று அவர் முடிக்கிறார். [11] கொரிந்தியர்களின் போர்த் தயாரிப்புகளைக் கண்டு அஞ்சிய, கோர்சிரேயர்கள் இறுதியாக ஏதெனியர்களிடம் உதவியை நாடினர், அதே நேரத்தில் கொரிந்தியர்கள் அவர்களைத் தடுக்க தூதுவர்களை அனுப்பினார்கள். [4]
ஏதெனியர்கள் இணைதல்
தொகுதூது அனுப்பியுள்ள கோர்சிராடன் கூட்டணி வைப்பதா வேண்டாமா என்பதில் ஏதெனியர்கள் குழப்பமடைந்தனர். துசிடிடீஸ் தனது The Peloponnesian War இல் ஏதெனியர்கள் எதிர்கொள்ளும் காரணிகளை சுருக்கமாகக் கூறுகிறார். ஒருபுறம், கோர்சிராவுடன் வைக்கப்படும் கூட்டணி நடைமுறையில் ஏதெனியன் கடற்படை மேலாதிக்கத்திற்கு உத்தரவாதம் அளித்தது, ஏனெனில் இது கிரேக்க உலகில் இரண்டு பெரிய கடற்படைகளை ஒன்றிணைக்கும். [12] கோர்சிரேயன் தூதுவர்கள் ஏதென்சிடம் கூறியதாக துசிடிடிஸ் குறிப்பிடுவது என்னவென்றால், "ஹெல்லாசில் பெரியதாக உள்ள மூன்று கடற்படை சக்திகள் உள்ளன - ஏதென்ஸ், கோர்சிரா, கொரிந்து - இந்த மூன்றில் இரண்டை நீங்கள் ஒன்றாக அனுமதித்தால், கொரிந்திடமிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கோர்சிரா மற்றும் பெலோபொன்னீசின் ஒருங்கிணைந்த கடற்படைகளுக்கு எதிராக நீங்கள் கடலாதிக்கத்தைக் கைப்பற்றவேண்டும். இதற்காக நீங்கள் எங்களின் நட்பை ஏற்றுக்கொண்டால், போர்களில் உங்களை வலுப்படுத்த எங்கள் கப்பல்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்." [4] இதையடுத்து முதல் பெலோபொன்னேசியப் போருக்குப் பிறகு ஸ்பார்டாவிற்கும் ஏதென்சுக்கும் இடையேயே ஏற்பட்ட முப்பது ஆண்டு சமாதான ஒப்பந்ததுதுக்குப் பங்கம் ஏற்படாமல் கோர்சிராவுக்கு பாதுகாப்பு அளிக்க ஏதென்சு முடிவு செய்தது. ஏனெனில் கோர்சிரா அதுவரையிலும் இரு அணிகளில் எதிலும் சேர்ந்தவரல்ல ஒப்பந்தத்தை மீறியதாக ஏதென்சு கருதியது. [13] ஏதென்சு கோர்சிராவின் உதவிக்கு பத்து கப்பல்களைக் கொண்ட ஒரு சிறிய கடற்படையை மட்டுமே அனுப்பியது. இது கொரிந்தியர்களை ஆத்திரமூட்டுவதற்காக அல்லாமல் ஏதென்சின் புதிய கூட்டாளியின் பாதுகாப்புக்கு நிற்கும் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், கொரிந்தியர்கள் கோர்சிரேயன் பிரதேசங்கள் அல்லது நட்பு நாடுகளை ஆக்கிரமிக்க விரும்பும், எந்தவொரு போரிலும் சேரக்கூடாது என்ற கடுமையான உத்தரவுகளிடப்பட்டு இந்த கடற்படை அனுப்பபட்டது. இது தனக்கு எதிராக நடவடிக்கை என்றே கொரிந்து கருதியது.
சைபோட்டா சமர்
தொகுகொரிந்தியர்களை போர் புரிவதிலிருந்து தடுத்து, நெருக்கடியைத் தணிக்க முடியும் என்று ஏதெனியர்கள் முதலில் நம்பினர். அதையும் மீறி கொரிந்து போர்புரிய வந்தால், கோர்சிரேயன் கடற்படை கொரிந்தியர்களை தோற்கடிக்கும் என்று நம்பினர். [14] [4] கோர்சிராவின் மீது கொரிந்து படையெடுப்பைத் தொடங்கியது. [4] இம்முறை, பெலோபொன்னேசியக் கூட்டாளிகளால் வலுப்படுத்தப்பட்ட கொரிந்து படைகள், தங்கள் எதிரிகளை விட எண்ணிக்கையில் மிகுந்தவர்களாக இருந்தனர் மற்றும் போரன் துவக்கத்தில் கோர்சிரேயன் படைகளை முறியடிக்க முடிந்தது. இது கோர்சிராவைக் காக்கத் தயாராக இருந்த கூட்டாளிகள் போராட்டத்தில் சேர ஏதெனியர்களைத் தூண்டியது. [4] இருப்பினும் இந்தப் போர், இரு தரப்புக்கும் வெற்றுயும், திருப்தியளிக்காத முட்டுக்கட்டையான, சைபோட்டா போராக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறது.
பின்விளைவுகள்
தொகுஏதெனியன் மற்றும் கொரிந்தியன் கூட்டணிகளுக்கு இடையிலான பகைமை சைபோட்டா போருடன் முடிவடையவில்லை. பகுதியளவு தோல்வி ஏற்பட்டதால் உண்டான பாதுகாப்பின்மை உணர்வால் ஏதென்சு அதனிடம் கப்பம் செலுத்திவந்த நகர அரசான பொடிடேயாவைச் சுற்றியுள்ள மதில் சுவர்களை தகர்க்க ஆணையிட்டது. இது பொடிடியன் விவகாரம் என்று அழைக்கபட்டது. [15] இதன் விளைவாக பொடியேவில் ஏதென்சுக்கு எதிராக எழுச்சி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த போரினால் இரு தரப்பிலிருந்தும் முப்பது ஆண்டு அமைதி உடன்பாட்டை நேரடியாக மீறினர். [10] இதன் தொடர்ச்சியாக எசுபார்த்தன்கள் இறுதியில் தாங்களாகவே போரில் இணைந்தனர், அதிகாரப்பூர்வமாக பெலோபொன்னேசியப் போரைத் தொடங்கினர்.
குறிப்புகள்
தொகு- ↑ Thucydides, 1.26, 1.46.
- ↑ Thucydides, 1.
- ↑ Rhodes 2010, ப. 88.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Thucydides.
- ↑ 5.0 5.1 Thucydides, 1.26.
- ↑ 6.0 6.1 6.2 Kagan 2005.
- ↑ Thucydides, 1.28–9.
- ↑ Kagan 2005, ப. 29.
- ↑ Kraay 1979.
- ↑ 10.0 10.1 Legon 1973.
- ↑ Kagan 2005, ப. 33.
- ↑ Kagan 2005, ப. 30.
- ↑ Kagan 2005, ப. 31.
- ↑ Kagan 2005, ப. 33–34.
- ↑ Thucydides, 1.56.