ஏ. எல். சீனிவாசன்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
(ஏ. எல். ஸ்ரீநிவாசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏ. எல். சீனிவாசன் (A. L. Srinivasan, 23 நவம்பர் 1923 – 30 சூலை 1977) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் பல இயக்குநர்களை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தினார்.[1] கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரரான இவர் ஏ.எல்.எஸ். தயாரிப்பகம் என்ற பெயரில் திரைப்படங்களைத் தயாரித்து வந்தார். ஏ. எல். எஸ். எனவும் அழைக்கப்படுகிறார்.

ஏ. எல். சீனிவாசன்
பிறப்பு23 நவம்பர் 1923
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம், இந்தியா
இறப்பு30 சூலை 1977(1977-07-30) (அகவை 53)
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
பெற்றோர்சாத்தப்பன் செட்டியார்,
விசாலாட்சி
வாழ்க்கைத்
துணை
அழகம்மை ஆச்சி,
எஸ். வரலட்சுமி
பிள்ளைகள்ஏ. எல். எஸ். கண்ணப்பன், விசாலாட்சி
உறவினர்கள்கண்ணதாசன் (இளைய சகோதரர்)

இளமைக் காலம் தொகு

ஏ.எல்.சீனிவாசன் அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) சிறுகூடல்பட்டியில் 1923 நவம்பர் 23-ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார் விசாலாட்சி ஆவர். இந்தத் தம்பதிகளுக்கு மொத்தம் 9 பிள்ளைகள். அவர்களில் 6-வதாகப் பிறந்தவர் ஏ.எல்.எஸ். இவருடைய தம்பி கவிஞர் கண்ணதாசன். சிறுகூடல்பட்டியில் உள்ள கலைமகள் வித்யாசாலையில் எட்டாம் வகுப்பு வரை ஏ.எல்.எஸ். படித்தார். சிறுவயதிலேயே, சினிமா மீது ஏ.எல்.எஸ்.சுக்கு மிகுந்த ஆர்வம். காரைக்குடியில் உள்ள சினிமா தியேட்டருக்கு (8 மைல் தூரம்) சைக்கிளில் சென்று, தொடர்ந்து மூன்று காட்சிகளையும் பார்த்து விட்டுத் திரும்புவார்.

பணி தொகு

1941-ல் சென்னையில் ஒரு கம்பெனியில் 40 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களே அங்கு வேலை பார்த்தார். பின்னர் கோவை சென்று, சினிமா விநியோகஸ்தரின் பிரதி நிதியாக பணியாற்றினார். அப்போது டி.ஆர்.மகாலிங்கம், என். எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 1942-ல் வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த திருமலைச்சாமி கவுண்டர், முத்துமாணிக்கம், துரைசாமி கவுண்டர் ஆகியோருடன் சேர்ந்து 'கோயமுத்தூர் பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார்.

திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்யும் கம்பெனி இது. அறிஞர் அண்ணா கதை- வசனம் எழுதிய 'வேலைக்காரி' படத்தின் விநியோக உரிமையை ஏ.எல்.எஸ். வாங்கினார். படம் மிக வெற்றிகரமாக ஓடவே, நல்ல லாபம் கிடைத்தது. 1951-ல் சென்னையில் 'மதராஸ் பிக்சர்ஸ்' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதல் படம் 'பணம்.' இதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ட் செய்தார். 'மதராஸ் பிக்சர்ஸ்' என்ற பெயர் பின்னர் 'ஏ.எல்.எஸ். புரொடக்சன்ஸ்' என்று மாறியது.

பி. மாதவன், பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணா போன்ற பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார். 1960-ம் ஆண்டில் பரணி ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து நடத்தினார். பிறகு 1961-ல் மெஜஸ்டிக் ஸ்டூடியோவை நீண்ட கால குத்தகைக்கு எடுத்து 'சாரதா ஸ்டூடியோ' என்ற பெயரில் நடத்தினார். விநியோக உரிமையில், 'தடுப்புரிமை' (negative rights, திரைப்படத்தை முழு விலை கொடுத்து வாங்கி, அதை விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுப்பது, அல்லது நேரடியாக வெளியிடுவது) என்ற முறையை அறிமுகப்படுத்தினார்.[சான்று தேவை]

தென்னிந்திய பிலிம் வர்த்தகசபை அகில இந்திய பட அதிபர்கள் கூட்டமைப்பு, ஸ்டூடியோ அதிபர்கள் சங்கம், மற்றும் பல திரைப்பட அமைப்புகளின் தலைவர் பதவிகளை வகித்தார். குறிப்பாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளின் பட அதிபர்கள் அங்கம் வகித்த தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக அவர் 13 ஆண்டுகள் பதவி வகித்தார். ஊட்டியில் பிரான்சு நாட்டு கூட்டுறவுடன் திரைப்படத் தொழிற்சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டபோது, ஒன்றிய அரசின் பிரதிநிதியாக பிரான்சு நாட்டுக்குச் சென்று பேச்சு நடத்தினார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்திய திரைப்பட விழா நடந்தபோது, இந்தியத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சீனிவாசனுக்கு மனைவி அழகம்மை ஆச்சி (இறப்பு: 21 மே 1981) வழியாக கண்ணப்பன், விசாலாட்சி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[2] இவர் நடிகை எஸ். வரலட்சுமியைத் (1950-2009) மணம் புரிந்தார்.[3] இவர்களுக்கு நளினி, முருகன் என இரண்டு பிள்ளைகள்.

மறைவு தொகு

சீனிவாசன் 1977 சூலை 30 இல் மாரடைப்பினால் காலமானார்.

தயாரித்த திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._சீனிவாசன்&oldid=3418452" இருந்து மீள்விக்கப்பட்டது