ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை

சிறிய காட்டுப்பூனை
(ஐரோவாசிய சிவிங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

Teleostomi

ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை (ஆங்கிலப் பெயர்: Eurasian lynx, உயிரியல் பெயர்: Lynx lynx) என்பது மிதமான அளவுள்ள ஒரு காட்டுப் பூனை ஆகும். இது வடக்கு, நடு மற்றும் கிழக்கு ஐரோப்பா முதல் நடு ஆசியா, சைபீரியா, திபெத்திய பீடபூமி மற்றும் இமயமலைகள் வரை காணப்படுகிறது. இவை மித வெப்பமண்டல காடுகள் மற்றும் ஊசியிலைக் காடுகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5500 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. இவை பரவலாகக் காணப்படுவதால் 2008 ஆம் ஆண்டிலிருந்து செம்பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது. வாழிட அழிப்பு, வாழிட சுருங்கல் சட்டவிரோதமான வேட்டையாடல் மற்றும் உணவு விலங்குகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவற்றால் சிவிங்கி பூனைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஐரோவாசிய சிவிங்கி பூனையின் மொத்த எண்ணிக்கையானது அதிகபட்சமாக 10,000 என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இவற்றின் எண்ணிக்கை நிலையானதாக உள்ளது என கருதப்படுகிறது.[2] இது மிகவும் சக்திவாய்ந்த கொன்றுண்ணி ஆகும். குறைந்தது 150 கிலோ[3] எடையுள்ள மான்கள் கூட இச்சிவிங்கிப் பூனையால் கொல்லப்பட்டுள்ளன.

ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பூனைக் குடும்பம்
பேரினம்:
இனம்:
L. lynx[1]
இருசொற் பெயரீடு
Lynx lynx[1]
(Linnaeus, 1758)
ஐரோவாசியச் சிவிங்கிப் பூனையின் பரவல்
வேறு பெயர்கள்

Felis lynx லின்னேயஸ், 1758

பரவல் மற்றும் வாழ்விடம்

தொகு
 
ஐரோவாசிய சிவிங்கி பூனையின் அருகாமை புகைப்படம்

ஏராளமான பதுங்கிடங்கள் மற்றும் இரையை பின்தொடரக்கூடிய வாய்ப்பை வழங்கக்கூடிய கடினமான நாட்டுப்புறப் பகுதிகளை இந்த ஐரோவாசிய சிவிங்கிப் பூனை வசிப்பிடமாக கொண்டுள்ளது. வாழும் இடத்தை பொருத்து குன்றுகள் நிறைந்த புல்வெளிகள், கலவையான காடுகள் நிறைந்த புல்வெளிகள், ஊசியிலைக் காடுகள் மற்றும் மான்ட்டேன் காடுகள் சூழலியல் மண்டலங்களில் இவை வாழ்கின்றன. ஐரோவாசிய சிவிங்கி பூனைகள் அவை வாழும் மலைப்பாங்கான பகுதிகளில் குளிர்காலத்தில் மலையடிவாரங்களில் வசிக்கின்றன. அவற்றின் இரையை பின் தொடர்ந்து வருவதால் அவை மலையடிவாரங்களில் வசிக்கின்றன. மேலும் ஆழமான பனிபடர்ந்த இடங்களை தவிர்க்கின்றன. ஓநாய்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஐரோவாசிய சிவிங்கி பூனைகள் அதிகமாக வசிப்பதில்லை. சிவிங்கி பூனைகளை ஓநாய்கள் தாக்குவதும் அவைகளை உணவாக உட்கொண்ட நிகழ்வுகளும் கூட பதிவுகளில் உள்ளன.[4]

ஐரோப்பா

தொகு

ஐரோவாசிய சிவிங்கி பூனையானது ஒரு காலத்தில் பெரும்பாலான ஐரோப்பிய கண்டம் முழுவதும் பொதுவாக காணப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வேட்டையாடப்பட்டு அப்பகுதிகளில் அற்றுவிட்ட இனம் ஆனது. மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் ஸ்காண்டிநேவியா காடுகளில் மட்டுமே இவை தப்பிப் பிழைத்தன. 1950 களின் போது பெரும்பாலான மேற்கு மற்றும் நடு ஐரோப்பாவில் இந்த சிவிங்கி பூனைகள் அற்றுவிட்ட இனமாகிப் போயின. அப்பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிக்கப்பட்ட எண்ணிக்கைகளில் மட்டுமே இவை இப்போது வாழ்கின்றன.[5]

பண்புகள்

தொகு

ஐரோவாசிய சிவிங்கி பூனையானது ஒப்பீட்டளவில் சிறிய சிவப்பு அல்லது பழுப்பு ரோமத்தை கொண்டுள்ளது. இவை பரவிய இடங்களில் தெற்கு பகுதிகளில் வசிக்கும் பூனைகள் பிரகாசமான நிறத்துடன் காணப்படும். குளிர்காலத்தில் இந்த ரோமமானது அடர்த்தியான பட்டுப்போன்ற ரோமத்தால் மாற்றம் செய்யப்படுகின்றது. ரோமம் வெள்ளி-சாம்பல் முதல் சாம்பல் பழுப்பு நிறம் வரை வேறுபட்டு காணப்படும். இந்தப் பூனையின் கழுத்து, கன்னம் மற்றும் அடிப்பகுதி ஆண்டு முழுவதிலும் வெள்ளை நிறமாக காணப்படும். ரோமமானது கிட்டத்தட்ட எப்பொழுதுமே கறுப்புப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். எனினும் புள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் புள்ளிகள் இடப்பட்டிருக்கும் முறை ஆகியவை பெரிதும் வேறுபட்டுக் காணப்படும். சில பூனைகள் அடர் பழுப்பு கோடுகளை நெற்றி மற்றும் முதுகில் கொண்டுள்ளன. தெற்குப் பகுதிகளில் வசிக்கும் பூனைகள் பொதுவாக ஏராளமான புள்ளிகளைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் அதிக புள்ளிகளை உடைய ஒரு பூனையும் புள்ளிகளே இல்லாத ரோமத்தை உடைய பூனையும் அருகருகே கூட வசிக்கலாம். இந்தப் பூனை சக்தி வாய்ந்த, ஒப்பீட்டளவில் நீண்ட கால்களை கொண்டுள்ளது. இவற்றின் பாதங்கள் பெரிய ஜவ்வுகள் மற்றும் ரோமத்துடன் பனிக்காலணிகள் போல் செயல்படும். இப்பூனை குட்டையான நுனி முழுவதும் கருப்பாக இருக்கக்கூடிய ஒரு வாலை கொண்டுள்ளது. இது அதன் காதுகளுக்கு மேல் செங்குத்தாக நிற்க கூடிய கருப்பு நிறமுடைய நீண்ட முடிகளையும் கொண்டுள்ளது. மேலும் இது அதன் கழுத்தை சுற்றிலும் நீண்ட சாம்பல் மற்றும் வெள்ளை நிற முடிகளை கொண்டுள்ளது. உலகில் வாழும் 4 இன சிவிங்கி பூனைகளிலேயே இதுதான் மிகப் பெரியதாகும். இது 80 முதல் 130 சென்டி மீட்டர் நீளத்துடன் மற்றும் தோள் பட்டையை வைத்து அளவிடும்போது 60 முதல் 75 சென்டி மீட்டர் உயரத்துடனும் காணப்படும். இதன் வால் 11 முதல் 24.5 சென்டி மீட்டர் நீளம் இருக்கும்.[4] சராசரியாக ஆண் பூனைகள் 21 கிலோ கிராம் எடை இருக்கும். பெண் பூனைகள் 18 கிலோ கிராம் எடை இருக்கும்.[6] சைபீரியாவில் வசிக்கும் ஆண் பூனைகளே மிகப்பெரிய உடல் அளவை எட்டுகின்றன. அங்கு வசிக்கும் பூனைகள் 38 கிலோகிராம் எடை வரை வளரக்கூடியவை. மேலும் இவை 45 கிலோகிராம் எடையை எட்டியதாகவும் தகவல்கள் உள்ளன.[7] சில நேரங்களில் கர்பாதியன் மலைகளில் வசிக்கும் பூனைகள் சைபீரிய பூனைகளுக்கு போட்டி கொடுக்கக் கூடிய வகையில் உடல் அளவை எட்டுகின்றன.[5]

நடத்தை மற்றும் சூழலியல்

தொகு
 
ஐரோவாசிய சிவிங்கி பூனை

உணவு பற்றாக்குறையான நேரங்களில் சிவிங்கி பூனைகள் பகல் நேரத்தில் வேட்டையாடினாலும் இவை பொதுவாக இரவு, அல்லது அதிகாலை மற்றும் அந்தி மாலை நேரங்களிலேயே செயல்படும் விலங்காகும். பகல் நேரம் முழுவதும் அடர்ந்த புதர்கள் அல்லது மறைவான இடங்களில் தூங்கியே இவை நேரத்தை கழிக்கின்றன. வளர்ந்த சிவிங்கிப்பூனை தனக்கென்று ஒரு பரப்பளவை வகுத்துக் கொள்கிறது. இரை கிடைக்கும் தன்மையைப் பொருத்து ஐரோவாசிய சிவிங்கி பூனையின் வேட்டையாடும் பரப்பளவானது 20 முதல் 450 சதுர கிலோ மீட்டர் வரை இருக்கும். ஆண் சிவிங்கி பூனைகள் பெண் சிவிங்கி பூனைகளை விட பெரிய பரப்பளவுடைய வேட்டையாடும் பகுதியை கொண்டுள்ளன. ஆண் மற்றும் பெண் பூனைகள் வேட்டையாடும் பகுதியாக தனித்தனியான பகுதிகளைக் கொண்டுள்ளன. ஐரோவாசிய சிவிங்கி பூனைகள் ஓரிரவில் 20 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வல்லவை. எனினும் பொதுவாக 10 கிலோ மீட்டர் தூரத்தை இவை கடக்கின்றன. சிவிங்கி பூனைகள் தங்களது வேட்டையாடும் பகுதி முழுவதும் அடிக்கடி ரோந்து செல்லும். தங்களது இருப்பை காட்டுவதற்காக மண குறியீடுகளை பயன்படுத்தும். இவை மரப்பட்டைகளை கீறியும் தங்களது இருப்பை காட்டும்.[8] ஐரோவாசிய சிவிங்கி பூனைகள் பல்வேறு வகையான சத்தங்களை எழுப்பக் கூடியவை. ஐரோவாசிய சிவிங்கி பூனைகள் ரகசியமாக வாழக்கூடியவை. இவை எழுப்பக்கூடிய சத்தங்கள் மெல்லியதாகவும் சில நேரங்களில் கேட்க இயலாதவையாகவும் உள்ளன. இதன் காரணமாக ஒரு பகுதியில் வாழும் பூனை வருடக்கணக்கில் கவனிக்கப்படாமல் போகலாம்.[4]

உணவு பழக்கவழக்கம் மற்றும் வேட்டையாடுதல்

தொகு

ஐரோப்பாவில் வசிப்பவையின் உணவு பழக்கவழக்கம்

தொகு

ஐரோப்பாவில் வசிக்கும் ஐரோவாசிய சிவிங்கி பூனைகள் சிறியது முதல் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய அளவுடைய பாலூட்டிகள் மற்றும் பறவைகளை உண்கின்றன. இவை உணவாக முயல்கள், குழிமுயல்கள், மர்மோட்கள், அணில்கள், டோர் எலிகள், மற்ற கொறிணிகள், மார்டன்கள் போன்ற முஸ்டலிடே இன உயிரினங்கள், வாத்து, சிவப்பு நரிகள், காட்டுப்பன்றிகள், சமோயிஸ், இளம் மூஸ், ரோ மான், சிவப்பு மான், ரெயின்டீர் மற்றும் பிற குளம்பிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கின்றன. பெரிய இரையை தாக்குவது என்பது இப்பூனைக்கு ஆபத்தாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பலன் ஆபத்தை விட அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இவை பெரிய குளம்புடைய இரைகளை வேட்டையாடுகின்றன. குறிப்பாக சிறிய இரைகள் அதிகம் கிடைக்காத குளிர்காலம் போன்ற சமயங்களில் இவை அவ்வாறு வேட்டையாடுகின்றன. அதேநேரத்தில் ரோ மான் பொதுவாக காணப்படும் இடங்களில் சிவிங்கி பூனைகள் அவற்றை வேட்டையாடி உண்கின்றன.[9][10] ரோ மான் அபரிமிதமாக காணப்படாத இடங்களில் கூட அவற்றையே விரும்பி இவை வேட்டையாடி உண்கின்றன. கோடை காலங்களில் சிறிய இரைகள் மற்றும் சில சமயங்களில் வீட்டில் வளர்க்கும் செம்மறி ஆடுகளை இவை அடிக்கடி உண்கின்றன.[11] பின்லாந்தின் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளை-வால் மான்களை இவை அடிக்கடி உண்கின்றன. போலந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் சிவப்பு மான்களை இவை விரும்பி உண்கின்றன. சுவிட்சர்லாந்தில் சமோயிஸ் எனப்படும் ஆட்டு மறிமான்களை இவை விரும்பி உண்கின்றன.[10] கிடைக்கும்போது விலங்குகளின் சிதைந்த உடல்களையும் இவை உண்கின்றன. வளர்ந்த சிவிங்கி பூனைக்கு ஒருநாளைக்கு 1.1 முதல் 2 கிலோ வரையிலான மாமிசம் தேவைப்படுகிறது. இவை தாங்கள் வேட்டையாடிய சில பெரிய விலங்குகளை முழுவதுமாக உண்பதற்கு பல நாட்கள் கூட எடுத்துக்கொள்ளும்.[4]

கொன்றுண்ணிகள்

தொகு

உருசிய காடுகளில் ஐரோவாசிய சிவிங்கி பூனைகளின் மிக முக்கியமான கொன்றுண்ணிகளாக விளங்குவது சாம்பல் நிற ஓநாய்கள் ஆகும். மரங்களில் ஏறி தப்பிக்க தவறும் ஐரோவாசிய சிவிங்கி பூனைகள் ஓநாய்களால் கொல்லப்பட்டு உண்ணப்படுகின்றன. ஒருபகுதியில் ஓநாய்கள் தோன்றும் போது அங்குள்ள ஐரோவாசிய சிவிங்கி பூனைகளின் எண்ணிக்கையானது குறைகிறது. ஓநாய்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் சிவிங்கி பூனைகள் பொதுவாக சிறிய உருவ அளவுடைய இரையையே உண்கின்றன.

சிவிங்கி பூனைகள் கொல்லும் இரையை எடுத்துக் கொள்ள பெரும்பாலும் அவற்றுடன் போட்டியிடுபவை வால்வரின்கள் ஆகும். பொதுவாக வால்வரின்களுடன் ஏற்படும் சந்திப்பை தவிர்க்கவே சிவிங்கி பூனைகள் விரும்பும். ஆனால் தங்களது குட்டிகளை காப்பாற்றுவதற்காக சில நேரங்களில் அவை வால்வரின்களுடன் சண்டையிடலாம். சிவிங்கி பூனைகளை வால்வரின்கள் கொல்லும் நிகழ்வுகள் நிகழலாம். சில நேரங்களில் வளர்ந்த சிவிங்கி பூனைகளை கூட வால்வரின்கள் கொல்லலாம். ஆனால் சாம்பல் நிற ஓநாய்கள் சிவிங்கி பூனைகளை தாக்கும் நிகழ்வை போல இந்தத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழாமல் அரிதாகவே நிகழும். அதே நேரத்தில் வால்வரின்களை சிவிங்கி பூனைகள் கொன்று உண்டதாக எந்தவித நிகழ்வுகளும் அறியப்படவில்லை.

அனடோலியாவின் 2 சூழலியல் மண்டலங்களில் சிவிங்கி பூனைகள் மற்ற சிவிங்கி பூனைகளை கொன்று உண்பது என்பது பொதுவான நிகழ்வாக உள்ளது. ஒரு சிவிங்கி பூனையின் உணவில் 5% முதல் 8% மற்ற சிவிங்கி பூனைகள் ஒரு பகுதியாக உள்ளன. ஆய்வு செய்யப்பட்ட கால்கள் மற்றும் எலும்புகளானவை வயது மூப்பை அடையப்போகும் சிவிங்கி பூனைகளே வசந்த காலங்களின் போது இந்த தாக்குதலுக்கு உள்ளாவதாக நமக்கு காட்டுகின்றன.[12] அதே நேரத்தில் ஓநாய்களின் உணவில் ஒரு பகுதியாக சிவிங்கி பூனைகள் காணப்படவில்லை.[13] எனினும் தங்க ஜாகால், சிவப்பு நரி, மார்டன்கள், வீட்டுப் பூனை மற்றும் நாய் ஆகியவற்றின் கொன்றுண்ணியாக சிவிங்கி பூனைகள் விளங்குகின்றன.[12] சிலநேரங்களில் சைபீரிய புலிகள் சிவிங்கி பூனைகளை உண்கின்றன. புலிகளின் வயிற்றில் உள்ள உணவை ஆய்வு செய்தபோது இத்தகவல்கள் பெறப்பட்டன.[7][14] ஸ்வீடன் நாட்டில் ஒரு பகுதியில் வாழ்ந்த சிவிங்கிப்பூனைகளில் ஏற்பட்ட 33 இறப்புகளில் ஒருவேளை ஒரே ஒரு சிவிங்கி பூனை வால்வரினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[15][16] மேலே குறிப்பிட்ட கொன்றுண்ணிகளோடு உணவிற்காக சிவிங்கி பூனைகள் போட்டியிடுகின்றன. மேலும் சிவிங்கி பூனைகள் சிவப்பு நரி, கழுகு ஆந்தைகள், பொன்னாங்கழுகுகள், காட்டுப்பன்றி (இவை சிவிங்கி பூனைகள் கொன்ற உணவை எடுத்துக் கொள்கின்றன) ஆகியவற்றுடனும் உணவிற்காக போட்டியிடுகின்றன. தெற்குப் பகுதிகளில் வாழும் சிவிங்கி பூனைகள் பனிச்சிறுத்தை மற்றும் சிறுத்தைகளுடனும் உணவிற்காக போட்டியிடுகின்றன.[7] பழுப்பு கரடிகள் ஐரோவாசிய சிவிங்கி பூனைகளை கொன்றதாக இதுவரை பதிவுகள் கிடையாது. அதே நேரத்தில் சில இடங்களில் சிவிங்கி பூனைகள் கொன்ற குளம்பிகளை அவற்றால் உடனடியாக உண்ண முடியாத சமயத்தில் பழுப்பு கரடிகள் எடுத்துக்கொள்கின்றன.[10][17]

குட்டி ஈனுதல்

தொகு
 
ஐரோவாசிய சிவிங்கி பூனைக்குட்டி

பிறக்கும்போது ஐரோவாசிய சிவிங்கிப் பூனை குட்டிகள் 240 முதல் 430 கிராம் வரை எடை இருக்கும். 10 முதல் 12 நாட்களில் குட்டிகள் கண்களை திறக்கின்றன. ஆரம்பத்தில் சாதாரண சாம்பல் பழுப்பு ரோமத்தை குட்டிகள் கொண்டிருக்கும். 11 வாரங்களுக்குப் பிறகு வளர்ந்த பூனைகளை போன்ற நிறத்தை குட்டிகள் பெரும். குகையை விட்டு வெளியேறும்போது ஆறு முதல் ஏழு வாரங்கள் வயதான குட்டிகள் திட உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. எனினும் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் வரை சிறிதளவேனும் தாய்ப்பால் எடுத்துக்கொள்ளும். குட்டிகள் பிறந்து இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் குகையை விட்டு வெளிவருகின்றன. ஆனால் 10 மாத வயதை அடையும் வரை தாயுடன் தான் பொதுவாக இருக்கும். கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் ஐரோவாசிய சிவிங்கி பூனைகள் 21 வருடங்கள் வாழ்ந்துள்ளன.[4] பொதுவாக இவை இரண்டு குட்டிகளை ஈனும். மூன்று குட்டிகளுக்கு அதிகமாக ஈனுவது என்பது அரிதாகத்தான் நிகழும்.[18][19][20]

பாதுகாப்பு

தொகு
 
மாட்ரிட் மிருகக்காட்சி சாலையில் ஒரு ஐரோவாசிய சிவிங்கி பூனை.

எஸ்டோனியா, லாட்வியா, உருசியா, ஆர்மீனியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை தவிர்த்து இவை வாழும் பெரும்பாலான நாடுகளில் இவற்றை வேட்டையாடுவது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.[2]

கலாச்சாரம்

தொகு
 
ஐரோவாசிய சிவிங்கி பூனை படத்தை கொண்ட சோவியத் யூனியனின் 1988 ஆம் ஆண்டு தபால் தலை

உசாத்துணை

தொகு
  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). p. 541. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. 2.0 2.1 2.2 Breitenmoser, U.; Breitenmoser-Würsten, C.; Lanz, T.; von Arx, M.; Antonevich, A.; Bao, W.; Avgan, B. (2015). "Lynx lynx". The IUCN Red List of Threatened Species (IUCN) 2015: e.T12519A121707666. https://www.iucnredlist.org/species/12519/121707666. 
  3. Carnivores of the World by Dr. Luke Hunter. Princeton University Press (2011), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-15228-8
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Sunquist, M.; Sunquist, F. (2002). "Eurasian Lynx Lynx lynx (Linnaeus, 1758)". Wild cats of the World. Chicago: University of Chicago Press. pp. 164–176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-77999-7. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  5. 5.0 5.1 Breitenmoser, U.; Breitenmoser-Würsten, C.; Okarma, H.; Kaphegyi, T. (2000). Action plan for the conservation of the Eurasian lynx in Europe (Lynx lynx) (PDF). Nature and Environment. Vol. 112. Council of Europe.
  6. Nowell, K.; Jackson, P. (1996). "Eurasian lynx Lynx lynx (Linnaeus, 1758)". Wild cats: Status survey and Conservation Action Plan. Gland: IUCN Cat Specialist Group. pp. 101–106. {{cite book}}: |access-date= requires |url= (help); |archive-url= requires |url= (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  7. 7.0 7.1 7.2 Heptner, V. G.; Sludskij, A. A. (1992) [1972]. "Lynx". Mlekopitajuščie Sovetskogo Soiuza. Moskva: Vysšaia Škola [Mammals of the Soviet Union. Volume II, Part 2. Carnivora (Hyaenas and Cats)]. Washington DC: Smithsonian Institution and the National Science Foundation. pp. 524–636. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  8. Mengüllüoğlu, D.; Berger, A.; Förster, D. W.; Hofer, H. (2015). Faecal marking behaviour in Eurasian lynx, Lynx lynx. doi:10.13140/RG.2.1.4339.8163. http://rgdoi.net/10.13140/RG.2.1.4339.8163. 
  9. Molinari-Jobin, A.; Zimmermann, F.; Ryser, A.; Breitenmoser-Würsten, C.; Capt, S.; Breitenmoser, U.; Molinari, P.; Haller, H. et al. (2007). "Variation in diet, prey selectivity and home-range size of Eurasian lynx Lynx lynx in Switzerland". Wildlife Biology 13 (4): 393. doi:10.2981/0909-6396(2007)13[393:VIDPSA]2.0.CO;2. http://www.wildlifebiology.com/Downloads/Article/685/En/molinari-jobin%20et%20al.pdf. 
  10. 10.0 10.1 10.2 Krofel, M.; Huber, D.; Kos, I. (2011). "Diet of Eurasian lynx Lynx lynx in the northern Dinaric Mountains (Slovenia and Croatia)". Acta Theriologica 56 (4): 315–322. doi:10.1007/s13364-011-0032-2. 
  11. Odden, J.; Linnell, J. D. C.; Andersen, R. (2006). "Diet of Eurasian lynx, Lynx lynx, in the boreal forest of southeastern Norway: The relative importance of livestock and hares at low roe deer density". European Journal of Wildlife Research 52 (4): 237. doi:10.1007/s10344-006-0052-4. 
  12. 12.0 12.1 Mengüllüoğlu, D.; Ambarlı, H.; Berger, A.; Hofer, H. (2018). "Foraging ecology of Eurasian lynx populations in southwest Asia: Conservation implications for a diet specialist". Ecology and Evolution 8 (18): 9451–9463. doi:10.1002/ece3.4439. பப்மெட்:30377514. 
  13. Mengüllüoğlu, D.; İlaslan, E.; Emir, H.; Berger, A. (2019). "Diet and wild ungulate preferences of wolves in northwestern Anatolia during winter". PeerJ 7: e7446. doi:10.7717/peerj.7446. பப்மெட்:31497386. 
  14. Boitani, L. (2003). Wolves: Behavior, Ecology, and Conservation. University of Chicago Press. pp. 265–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-51696-7.
  15. Andrén, Henrik; Linnell, J. D. C.; Liberg, O.; Andersen, R.; Danell, A.; Karlsson, J.; Odden, J.; Moa, P. F. et al. (2006). "Survival rates and causes of mortality in Eurasian lynx (Lynx lynx) in multi-use landscapes". Biological Conservation 131 (1): 23–32. doi:10.1016/j.biocon.2006.01.025. https://archive.org/details/sim_biological-conservation_2006-07_131_1/page/23. 
  16. Andren, H.; Persson, J.; Mattisson, J.; Danell, A. C. (2011). "Modelling the combined effect of an obligate predator and a facultative predator on a common prey: lynx Lynx lynx and wolverine Gulo gulo predation on reindeer Rangifer tarandus". Wildlife Biology 17 (1): 33–43. doi:10.2981/10-065. 
  17. Krofel, M.; Kos, I.; Jerina, K. (2012). "The noble cats and the big bad scavengers: Effects of dominant scavengers on solitary predators". Behavioral Ecology and Sociobiology 66 (9): 1297. doi:10.1007/s00265-012-1384-6. 
  18. Henriksen, H. B.; Andersen, R.; Hewison, A. J. M.; Gaillard, J. M.; Bronndal, M.; Jonsson, S.; Linnell, J. D.; Odden, J. (2005). "Reproductive biology of captive female Eurasian lynx, Lynx lynx". European Journal of Wildlife Research 51 (3): 151–156. doi:10.1007/s10344-005-0104-1. https://www.researchgate.net/publication/227063770. 
  19. Breitenmoser‐Würsten, C.; Vandel, J. M.; Zimmermann, F.; Breitenmoser, U. (2007). [381:DOLLLI2.0.CO;2/Demography-of-lynx-span-classgenus-speciesLynx-lynx-span-in-the/10.2981/0909-6396(2007)13[381:DOLLLI]2.0.CO;2.pdf "Demography of lynx Lynx lynx in the Jura Mountains"]. Wildlife Biology 13 (4): 381–392. doi:10.2981/0909-6396(2007)13[381:DOLLLI]2.0.CO;2. https://bioone.org/journals/Wildlife-Biology/volume-13/issue-4/0909-6396(2007)13[381:DOLLLI]2.0.CO;2/Demography-of-lynx-span-classgenus-speciesLynx-lynx-span-in-the/10.2981/0909-6396(2007)13[381:DOLLLI]2.0.CO;2.pdf. 
  20. Gaillard, J. M.; Nilsen, E. B.; Odden, J.; Andrén, H.; Linnell, J. D. (2014). "One size fits all: Eurasian lynx females share a common optimal litter size". Journal of Animal Ecology 83 (1): 107–115. doi:10.1111/1365-2656.12110. பப்மெட்:23859302. https://archive.org/details/sim_journal-of-animal-ecology_2014-01_83_1/page/107. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lynx lynx
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: