ஒழிப்புவாதம் (விலங்குரிமை)

(ஒழிப்புவாதக் கோட்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒழிப்புவாதம் (ஆங்கில மொழி: abolitionism) அல்லது ஒழிப்புவாத நனிசைவம் (abolitionist veganism) என்பது மனிதர்களின் அனைத்து வகையான விலங்குப் பயன்பாட்டிற்கும் விலங்குரிமை அடிப்படையிலான எதிர்ப்பாகும். அனைத்து உணர்திற உயிரினங்களும்—அது மனிதனோ அல்லது மனிதரல்லா விலங்குகளோ—சொத்துகளாகவோ உடமைகளாகவோ பண்டங்களாகவோ கருதப்படாமல் இருப்பதற்கான அடிப்படை உரிமையை சமமாகக் கொண்டுள்ளன என்ற அளவில் அனைத்து வகையான விலங்குப் பயன்பாட்டையும் முற்றிலுமாக அகற்றுவதே ஒழிப்புவாதக் கோட்பாட்டின் நோக்கமாகும்.[1][2] விலங்குப் பொருட்களின் உற்பத்தி என்பதே விலங்குகளை உடமைகளாகவும், இயற்கை வளங்களாகவும், பண்டங்களாகவும் கருதும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்றும், நாகரிக சமுதாயத்தில் மனித நல்வாழ்வுக்கு விலங்குப் பொருட்கள் சற்றும் அவசியமில்லை என்றும் ஒழிப்புவாத அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.[3][4] மனிதர்களால் நனிசைவ வாழ்வு முறையை வாழ இயலும் என்பதால் மனிதர்கள் ஒவ்வொருவரும் நனிசைவ வாழ்வு முறையைத் தழுவ தார்மீகக் கடமைப்பட்டவர்கள் என்று ஒழிப்புவாதிகள் கருதுகின்றனர்.[3][4]

ஒழிப்புவாதம்
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் விலங்குரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள்.
விளக்கம்அனைத்து வகையான விலங்குப் பயன்பாடுகளும் விலங்குகளை உடமைகளாகக் கருதும் செயல்களும் சிந்தனைகளும் ஒழிக்கப்பட வேண்டியவை.
முன்னோடி அறிஞர்கள்கேரி பிரான்சியோனி
டாம் ரீகன்
பாடம்விலங்குரிமை, நெறியியல், சட்டம், மெய்யியல்

தங்கள் இலக்கை அடையப் பயன்படுத்த வேண்டிய மூலோபாயத்தில் ஒழிப்புவாதிகள் பெருவாரியான நேரங்களில் தங்களுக்குள் உடன்படுவதில்லை. சட்டப் பேராசிரியரான கேரி பிரான்சியோனி உள்ளிட்ட சில ஒழிப்புவாதிகள், வன்முறையற்ற ஆக்கப்பூர்வமான கல்வி மூலம் (உடல்நலம், சுற்றுச்சூழல் ஆகிய நன்மைகளையும் சுட்டிக்காட்டி) நனிசைவ வாழ்வுமுறை என்பது மனிதர்களின் தார்மீகக் கடமை என்பதை எடுத்துக்கூறி நனிசைவ வாழ்வியலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று வாதிடுகின்றனர்.[5] டாம் ரீகன் உள்ளிட்ட அறிஞர்களோ ஒழிப்புவாதிகள் சமூகத்தில் விலங்குச் சுரண்டல்களைக் களைய முற்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்கையில் சுற்றுச்சூழல், உடல்நலம் ஆகியவை சார்ந்த வாதங்களைப் பயன்படுத்தாமல் அச்சிந்தனையை அரசியல் தளத்திற்கு எடுத்துச் சென்று போராட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.[6] ஸ்டீவன் பெஸ்ட், டேவிட் நிபர்ட் உள்ளிட்ட ஒழிப்புவாதிகள் முறையே, கூட்டணி அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஒத்துழையாமை, வெகுஜன எதிர்ப்பு போன்ற மாற்றத்திற்கான போர்க்கால நேரடி நடவடிக்கையை மேற்கொள்ளுதல் ஆகியவற்றையும் முதலாளித்துவத்தை எதிர்க்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகியவையும் விலங்குச் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் என்று கருதுகின்றனர்.[7][8]

விலங்குகளின் பயன்பாட்டை கூடுதல் கவனத்துடனும் மனிதாபிமான வகையிலும் செய்ய முற்படும் செயற்பாடுகளையும் விலங்குப் பயன்பாட்டின் சில குறிப்பிட்ட வகைகளை மட்டும் ஒழிக்க முற்படும் இயக்கங்களையும் ஒழிப்புவாதிகள் பொதுவாக எதிர்க்கின்றனர். ஏனெனில் விலங்குப் பயன்பாட்டின் அனைத்து வகைகளையும் முற்றிலுமாக ஒழிக்கும் செயற்பாடுகளுக்கு இவ்வகை இயக்கங்களும் சிந்தனைகளும் தடையாக விளங்குகின்றன என்பது அவர்களது வாதம்.[1][2] தார்மீக அடிப்படையிலும் சட்ட ரீதியிலும் விலங்குகள் இனியும் வெறும் பயன்பாட்டுப் பொருட்களாகவும் பண்டங்களாகவும் உடமைகளாகவும் கருதப்படாமலிருக்கும் முன்னுதாரண மாற்றங்களைக் கொண்டு வருவதே ஒழிப்புவாத சித்தாந்தத்தின் நோக்கமாகும். "ஒழிப்புவாதிகள் வெற்றுக் கூண்டுகளையே விரும்புகிறார்கள், பெரிய கூண்டுகளை அல்ல" என்று அமெரிக்க மெய்யியலாளர் டாம் ரீகன் எழுதுகிறார்.[9] இச்சிந்தனையே விலங்குரிமைக் (animal rights) கோட்பாட்டை விலங்கு நலன் (animal welfare) எனப்படும் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. ஒழிப்புவாத விலங்குரிமைக் (abolitionist animal rights) கோட்பாட்டினைப் போலன்றி விலங்கு நலன் கோட்பாடானது விலங்குகளை மனிதப் பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக விடுவிக்காமல் மனித ஆதிக்கத்துக்கு ஆட்படுத்தப்பட்ட நிலையில் அவ்விலங்குகளின் நலனை வேண்டி புதிய சீர்திருத்தங்களை நாடுவதிலும் விலங்குப் பாதுகாப்புவாதம் (animal protectionism) எனப்படும் மனித கட்டுப்பாட்டு வளையத்திற்கும் விலங்குப் பாதுகாப்பை நாடுவதிலும் கவனம் செலுத்திப் படிப்படியாக அவற்றின் நலனை அதிகரிக்கும் அணுகுமுறையினைக் கொண்டதாகும். இவ்வகை நிலைபாடு சில ஒழிப்புவாதிகளால் நலவாதம் (welfarism) என்றும் "புதிய நலவாதம்" (new welfarism) என்றும் விமர்சிக்கப்படுகிறது.[10]

நடுவில் அசோகரின் தர்ம சக்கரத்துடன் கூடிய இந்திய தேசியக் கொடியை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புலால் மற்றும் விலங்கினவாத ஒழிப்புக் கொடி.

கருத்தாக்கம்

தொகு
 
குதிரைப் பந்தயம் என்பது ஒரு வகை விலங்குச் சுரண்டல் என்பதால் ஒழிப்புவாதிகள் அதை ஒழிக்கப் போராடுகின்றனர்.

விலங்குரிமையில் ஒழிப்புவாதம் என்ற சொல் "ஒழிப்புவாதம்" என்ற வரலாற்றுச் சொல்லுடன்—அஃதாவது, ஒரு மனிதனை இன்னொரு மனிதன் உடமையாகக் கருதும் அடிமைத்தனம் உள்ளிட்ட செயல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சமூக இயக்கத்துடன்—தொடர்புடையது.[11] நலன்புரி சீர்திருத்தங்களை திறனிடும் விதத்தின் அடிப்படையில் ஒழிப்புவாதிகள் தீவிரமானவர்கள் என்றும் நடைமுறை ரீதியானவர்கள் என்றும் இருவகைப்படுகிறார்கள். தீவிர ஒழிப்புவாதிகள் நலன்புரி சீர்திருத்தங்களை தார்மீக முன்னேற்றங்களாகக் கருதுவது சந்தேகத்திற்குரியது என்று கருதுகையில் நடைமுறை ஒழிப்புவாதிகள் நலன்புரி சீர்திருத்தங்களை, சில சந்தர்பங்களில் அவை நியாயமற்றதாக இருந்தாலும், தார்மீக முன்னேற்றங்களாகக் முழுமனதோடு ஏற்கின்றனர்.[12]

விலங்குரிமை என்ற பெயரில் விலங்கு நலன் அளவில் செயற்படும் பீட்டா போன்ற விலங்குரிமைக் குழுக்கள் தங்களது செயற்பாடுகளால் மனிதர்களின் சுரண்டல்களிலிருந்து விலங்குகளைக் காக்க விலங்கு நலன் என்ற நிலையே போதுமானது என்ற திருப்தியைத் பொதுமக்களுக்குத் தர வல்லவை. இது மக்களை விலங்குரிமை என்ற பாதையில் செல்ல விடாமல் விலங்கு நலன் என்ற அளவிலேயே அவர்களை நிறுத்திவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் மக்களிடையே 'விலங்குகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை' என்ற சிந்தனையை ஆழமாக வேரூன்ற வைத்துவிடுகிறது என்றும் ரட்கர்ஸ் சட்டப் பள்ளி–நேவார்க்கில் சட்ட மற்றும் மெய்யியல் பேராசிரியரான கேரி பிரான்சியோனி ஒழிப்புவாதக் கண்ணோட்டத்தில் வாதிடுகிறார். அத்தகைய விலங்குரிமை அமைப்புகளை அவர் "புதிய நலவாதிகள்" ("new welfarists") என்று அழைக்கிறார். அத்தகைய நலவாதிகளின் நோக்கம் விலங்குகளின் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதுதான் என்றாலும், அவர்கள் பின்பற்றும் சீர்திருத்தங்கள் விலங்குப் பயன்பாட்டினை ஒழிக்க எண்ணாது அவற்றை ஆதரிக்கும் பாரம்பரிய நல ஆர்வலர்களின் செயற்பாடுகளுக்கு ஒத்தே இருக்கின்றன என்பது அவரது குற்றச்சாட்டு. சீர்திருத்த பிரச்சாரங்கள் விலங்குகளின் பண்ட அந்தஸ்தினை மென்மேலும் உறுதியிட்டு நிலைநிறுத்துகின்றன என்றும் 'விலங்குகள் வெறுமனே நன்றாக நடத்தப்பட்டால் போதுமானது' என்ற அளவில் மட்டும் மக்களின் பார்வையை தரம் தாழ்த்தி விடுகிறது என்றும் அவர் வாதிடுகிறார். இதற்கு மாறாக 'விலங்குகளைப் பயன்படுத்துவதும் உண்பதும் தவறில்லை' என்ற மக்களின் தற்போதைய பொதுபுத்தி தவறென்று சுட்டப்பட்டு நிரந்தரமாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் எழுதுகிறார். இது தார்மீக நனிசைவ வாழ்வுமுறையை பற்றிய விழிப்புணர்வினால் மட்டுமே நிகழக்கூடியது என்பது அவரது நிலைப்பாடு.[13] சமூகத்தில் ஒரு பொது விவாதத்தை நடத்துவதன் மூலம் இதைச் செய்ய வேண்டும் என்று ஏனைய அறிஞர்கள் கருதுகிறார்கள்.[14]

எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக மெய்யியல் அறிஞரான ஸ்டீவன் பெஸ்ட் திறைமறைவு விலங்கு விடுதலை இயக்கம் மற்றும் விலங்கு விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்ட நேரடி நடவடிக்கைகளை கண்டித்ததற்காக பிரான்சியோனியை விமர்சிக்கிறார். பெஸ்ட் இவ்வியக்கங்கள் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்த "பத்தொன்பதாம் நூற்றாண்டு ஒழிப்பு இயக்கத்துடன்" ஒப்பிடுகிறார். மேலும் கார்ப்பரேட்டுகள், அரசு மற்றும் வெகுஜன ஊடகங்கள் போன்ற சக்தி வாய்ந்த நிறுவனங்களைக் காட்டிலும் தனிநபர் (நுகர்வோர்) மீது பொறுப்பை சுமத்தியதற்காகவும் பிரான்சியோனியை பெஸ்ட் கண்டிக்கிறார். தனிநபர்களுக்கு "வறுமை, வர்க்கம் உள்ளிட்ட சமூக அமைப்பு, மற்றும் சமூக வளர்ப்பு ஆகியனவற்றால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள்" தனிநபருக்கு உண்டு என்பதையும் பிரான்சியோனி கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் பெஸ்ட் கூறுகிறார். மேலும், பிரான்சியோனி "முதலாளித்துவத்தை மன்னித்துவிடுவதாகவும் அடக்குமுறையின் ஒரு கட்டமைப்புக் கோட்பாட்டை வறையரை செய்யத் தவறிவிட்டார்" என்றும் பெஸ்ட் கருதுகிறார். "உயரடுக்குக்கு ஒத்தார்போன்றதும் தெளிவற்றதுமான சமூக 'நனிசைவக் கல்வி' அணுகுமுறை என்றுமே நேரடி நடவடிக்கை, வெகுஜனப் போராட்டங்கள், ஒத்துழையாமை, கூட்டணி சார் அரசியல் மற்றும் தீவிர மாற்றத்திற்கான போராட்டம் ஆகியவற்றிற்கு ஈடாகாது" என்றும் பெஸ்ட் வாதிடுகிறார்.[7]

விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளரான டேவிட் நிபர்ட், உலக முதலாளித்துவத்தின் கீழ் ஒரு நனிசைவ உலகை உருவாக்க முயற்சிப்பது உண்மைக்கு மாறானதும் நடைமுறையில் சாத்தியமற்றதுமாகும் என்று வாதிடுகிறார். "இருபத்தியோராம் நூற்றாண்டின் செங்கிஸ்கானுக்கு நிகரான கார்ப்பரேட் உயரடுக்குகளுக்கு இலாபம் ஈட்டும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகின்றன" என்றும் "உண்மையான அர்த்தமுள்ள மாற்றம் என்பது முதலாளித்துவத்தை மீறுவதன் மூலம் மட்டுமே வரும்" என்றும நிபர்ட் கூறுகிறார்.[8] சமகால முதலாளித்துவத்தின் வேரூன்றிய தன்மையும், மனித வர்கத்தால் விலங்குகள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவதும், விலங்குத் தொழிற்கூட்டு என்று அழைக்கப்படும் விரிவாக்க அமைப்பின் வடிவில் இன்று தொடர்கிறது என்று கூறும் நிபர்ட், உயர் உற்பத்தி விலங்குப் பண்ணைகளும் (concentrated animal feeding operations) அதற்கான விலங்குகளின் எண்ணிக்கையும், அவற்றை உட்கொள்ளும் மனித நுகர்வோரது எண்ணிக்கையும் வியத்தகு முறையில் அதிகரித்து வருகின்றன என்று சுட்டுகிறார்.[15][16] ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் இடத்தில் புதிய நனிசைவ உலகிற்கான நுகர்வோர் தளத்தை எப்படி உருவாக்க முடியும் என்று நிபர்ட் வினவுகிறார். பிந்தைய முதலாளித்துவம் என்றுமே தானாக முன்வந்து விலங்குகளைச் சுரண்டுவதை நிறுத்திக் கொண்டு ஒரு நியாயமான உலகத்தைக் உருவாக்க முனையாது என்றாலும் அப்படியொரு மாற்றத்திற்கு முதலாளித்துவம் ஒரு "தேவையான முன்நிலையாக" அமையும் என்பதை நிபர்ட் ஏற்கிறார்.[8]

ஒழிப்புவாதத்திற்கும் "நலவாதத்திற்கும்" இடையே தர்க்கரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ முரண்பாடுகள் ஏதுமில்லை என்று புதிய நலவாதிகள் வாதிடுகின்றனர்.[17][18] படிப்படியான அணுகுமுறையில் விலங்கடிமை ஒழிப்பை நோக்கிச் செல்ல முடியும் என்று நலவாதிகள் நினைக்கிறார்கள். விலங்குகளின் துன்பத்தை குறைப்பதே மிகவும் அவசரமானது என்பதால் பெரும்பாலான மக்களை குறுகிய காலக் கண்ணோட்டத்திலும் நீண்ட காலக் கண்ணோட்டத்திலும் விலங்குகளின் துன்பத்தைப் போக்க யதார்த்தமான ரீதியில் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வைத்து அதற்கேற்ப செயல்படவைப்பது அவசியம் என்பது நலவாதிகளின் வாதம். எடுத்துக்காட்டாக, மக்கள் விலங்குகளை நடத்தும் விதங்களில் மேம்பாடுகளை ஊக்குவிக்கும் பீட்டா போன்ற அமைப்புகள் கூடுதலாக சைவ உணவு முறையையும் பரப்புரை செய்கின்றன. உணர்திறன் கொண்ட மனிதரல்லா விலங்குகளை உடமைகளாகவும் பண்டமாகவும் கருதி அவற்றை முறைதவறி நடத்துவதை சட்டப்பூர்வமாக மாற்றுவது விலங்குப் பயன்பாட்டுச் சுரண்டலை ஒழிக்கும் முதற் படி என்று சிலர் கருதினாலும்,[19][20] விலங்குகளை உணவுக்காகவும் பிற நுகர்வுக்காகவும் சுரண்டுவதை பொதுமக்கள் ஏற்கனவே குறைக்கவோ நிறுத்தவோ தொடங்கவில்லை என்றால் இது வெற்றியடையாது என்று சிலர் வாதிடுகிறார்கள்.

நபர்த்தன்மை

தொகு
 
டென்னிசி மாகாணத்தின் நாக்ஸ்வில் நகரில் வட்டரங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் விலங்குரிமை ஆர்வலர்கள்.

1992-ம் ஆண்டில், சுவிட்சர்லாந்து விலங்குகளை வெறும் பண்டங்களல்ல என்றும் அவை உணர்திற உயிரினங்கள் என்றும் அங்கீகரித்துத் தன் அரசியலமைப்பைத் திருத்தியது.[21] விலங்குகளின் கண்ணியமும் சுவிட்சர்லாந்தில் பாதுகாக்கப்படுகிறது.[22]

நியூசிலாந்து 1999-ல் ஐந்து பெரிய குரங்கினங்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கியது. இப்போது அக்குரங்கு இனங்களை ஆராய்ச்சிக்கோ பரிசோதனைகளுக்கோ கற்பித்தலுக்கோ பயன்படுத்தப்படுவது அந்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.[23]

வருங்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜெர்மனி தனது அரசியலமைப்பின் 2002-ஆண்டுத் திருத்தத்தில் விலங்கு நலனைச் சேர்த்தது. இதன் மூலம் அவ்வாறு செய்யும் முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்ற பெயரைப் அது பெற்றது.[21][24][25]

2007-ல், ஸ்பெயினின் தன்னாட்சி மாகாணமான பலேரிக் தீவுகளின் நாடாளுமன்றம் அனைத்து பெரிய குரங்கினங்களுக்கும் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கும் உலகின் முதல் சட்டத்தை நிறைவேற்றியது.[26]

2013-ல், டால்பின்களை மனிதரல்லாத நபர்கள் என்று இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அவற்றிற்கு நபர்த்தன்மையை சட்டபூர்வமாக அளித்தது.[27]

2014-ம் ஆண்டு விலங்குகளை வெறும் அசையும் சொத்துகள் என்ற நிலையிலிருந்து உணர்திற உயிரினங்கள் என்ற நிலைக்கு பிரான்ஸ் அங்கீகரித்து விலங்குகளின் சட்ட நிலையை திருத்தியது.[19]

2015-ம் ஆண்டு கனடாவில் உள்ள கியூபெக் மாகாணம் விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டம் விலங்குகளுக்கு "உயிரியல் தேவைகளைக் கொண்ட உணர்திற உயிரினங்கள்" என்ற சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குகிறது.[28][29][20]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு
  1. 1.0 1.1 The Six Principles of the Abolitionist Approach to Animal Rights
  2. 2.0 2.1 Francione, Gary. "Animal Rights: The Abolitionist Approach"
  3. 3.0 3.1 Gary Francione, Eat Like You Care
  4. 4.0 4.1 HowDoIGoVegan.com
  5. "Thought of the Day: Abolitionist Veganism and Arguments About Health". 23 December 2016. பார்க்கப்பட்ட நாள் 11 December 2020.
  6. "For the abolition of veganism, for the abolition of animal exploitation". 17 November 2012. பார்க்கப்பட்ட நாள் 11 December 2020.
  7. 7.0 7.1 Best, Steven (2014). "The New Abolitionism: Capitalism, Slavery, and Animal Liberation". The Politics of Total Liberation: Revolution for the 21st Century. Palgrave Macmillan. pp. 21–49. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/9781137440723_2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1137471116.
  8. 8.0 8.1 8.2 Nibert, David, ed. (2017). Animal Oppression and Capitalism. Praeger Publishing. p. 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1440850738.
  9. "The Torch of Reason, The Sword of Justice, animalsvoice.com". Archived from the original on July 22, 2011. பார்க்கப்பட்ட நாள் May 24, 2011.
  10. Francione, Gary L. and Garner, Robert. The Animal Rights Debate. Columbia University Press, 2010.
  11. "When Vegans Won't Compromise". New York Times. 16 August 2015. பார்க்கப்பட்ட நாள் 17 April 2016.
  12. Stepanenko, Walter Scott (2018). "Two Forms of Abolitionism and the Political Rights of Animals: A Case Study". Journal of Animal Ethics (University of Illinois Press) 8 (1): 26–38. doi:10.5406/janimalethics.8.1.0026. https://www.jstor.org/stable/10.5406/janimalethics.8.1.0026. பார்த்த நாள்: 21 August 2022. 
  13. Francione 1996, chapter. 5.
  14. "For the abolition of veganism, for the abolition of slavery. About the necessary paradigm shift needed in the animal rights movement". பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.
  15. Nibert, David (2011). "Origins and Consequences of the Animal Industrial Complex". In Steven Best; Richard Kahn; Anthony J. Nocella II; Peter McLaren (eds.). The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. pp. 208–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-3698-0.
  16. Nibert, David (2013). Animal Oppression and Human Violence: Domesecration, Capitalism, and Global Conflict. Columbia University Press. pp. 189, 233–240, 260–261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-15189-4. Archived from the original on 2022-11-04. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  17. "Farm-animal welfare, legislation, and trade". Law and contemporary problems 325-358. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  18. Smith, Allison; Reese, Jacy (24 March 2016). "An empirical perspective on animal advocacy". பார்க்கப்பட்ட நாள் 17 April 2016.
  19. 19.0 19.1 Duportail, Judith; de Villers, Vincent Tremolet. "Les animaux ne sont plus des "meubles"" [Animals are no longer "furniture"] (in பிரெஞ்சு). Le Figaro. Archived from the original on 16 April 2014. பார்க்கப்பட்ட நாள் 21 April 2024.
  20. 20.0 20.1 "New bill aimed at modifying the legal status of animals announced". Montreal SPCA. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  21. 21.0 21.1 "Germany guarantees animal rights in constitution". Associated Press. 2002-05-18. பார்க்கப்பட்ட நாள் 2008-06-26.
  22. "Swiss constitution". 1999-04-18. Archived from the original on 2019-04-21. பார்க்கப்பட்ட நாள் 2013-03-23.
  23. Thomas Rose (2007-08-02). "A Step at a time: New Zealand's progress toward hominid rights" (PDF). CBC News.
  24. Constitutional Protection for Germany's Animals. page 13
  25. "Germany guarantees animal rights". CNN. 2002-06-21. பார்க்கப்பட்ட நாள் 2008-06-26.
  26. Thomas Rose. "Going ape over human rights". CBC News. பார்க்கப்பட்ட நாள் 2008-06-26.
  27. "Dolphins gain unprecedented protection in India". பார்க்கப்பட்ட நாள் 2007-08-02.
  28. "Domestic animal legislation in Quebec"
  29. Animal Welfare and Safety Act

மேலும் படிக்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு