கணியர் (இனக் குழுமம்)

தென்னிந்திய ஜாதி

கணியர் (Kaniyar) எனப்படுவோர் தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் ஒரு சாதியினர் ஆவர். தமிழ்நாடு சாதிகள் பட்டியலில், பழங்குடியின சாதியினராக வகைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குரும்பூர், வடக்கன்குளம், பணகுடி, மூன்றடைப்பு, தென்காசி, கல்லிடைக்குறிச்சி உட்பட 27 ஊர்களில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கேரள மாநிலத்திலும் வாழுகின்றனர்.

சாதிக் கிளைகள்

தொகு

தமிழ்நாட்டில் வசிக்கும் கணியர் சாதியினரிடம் எட்டுக் கிளைப் பிரிவுகள் இருக்கின்றன. இப்பிரிவுகளை “அம்மா வழிக் கிளை”, “சம்பந்த வழிக் கிளை” எனும் இரு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அம்மா வழிக் கிளையில் வெதமக்குடி, குரந்தகுடி, மக்கட்குடி, பன்றிகுடி எனும் நான்கு பிரிவுகளும், சம்பந்த வழிக் கிளையில் கலமனகுடி, அதனிகுடி, புலியகுடி என்பது போன்ற நான்கு பிரிவுகளும் உள்ளன. இதில் அம்மா வழிக் கிளையிலிருக்கும் நான்கு பிரிவினரும் அவர்களுக்குள் சகோதர முறையினர். இது போல் சம்பந்த வழிக் கிளையிலிருக்கும் நான்கு பிரிவினரும் அவர்களுக்குள் சகோதர முறையினர். அம்மா வழிக் கிளையிலிருப்பவர்கள் சம்பந்த வழிக் கிளையிருப்பவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால், இந்நிலை தற்போது வழக்கத்தில் மாற்றமடைந்திருக்கிறது.

கேரளக் கணியர்கள்

தொகு

தமிழ்நாட்டிலிருக்கும் கணியர் சாதியினரைப் போன்று கேரளாவில் வசிக்கும் கணியர்களிடமும் எட்டு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுள் நான்கு பிரிவுகள் ‘கிரியம்கள்’ எனவும், மீதமுள்ள நான்கு பிரிவுகள் ‘இல்லங்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. முந்தைய “கிரியம்கள்” வகையில் அண்ணா விக்கன்னம், கரிவட்டம், குடப்பிள்ளா, நன்னா எனும் நான்கு பிரிவுகளும், பிந்தைய “இல்லங்கள்” எனும் வகையில் பம்பர, தச்சழகம், நெடுங்கணம், அய்யாக்கால எனும் நான்கு பிரிவுகளும் உள்ளன. இவை ஒரு காலத்தில் அகமணக் கட்டுப்பாடு உடைய பிரிவுகளாக இருந்து, தற்போது அத்தன்மையினை இழந்து விட்டன. [1]

சமயம்

தொகு

இந்து சமயத்தில் இருந்த கணியர் சாதியினர்களில் ஒரு பகுதியினர், பிற்காலத்தில் கிறித்தவ சமயத்திற்கும் மாற்றமடைந்தனர்.

தொழில்

தொகு

திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுடலை மாடன், இசக்கியம்மன் போன்ற பல சிறுதெய்வக் கோயில் வழிபாடுகளில் முக்கியச் சடங்காக நிகழ்த்தப் பெறும் கணியான் கூத்து எனும் நாட்டுப்புறக் கலைத்தொழிலைச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

கணியர் வழக்குச் சொற்கள்

தொகு

கணியர் தங்கள் பேச்சுக்களின் போது சில இயல்புச் சொற்களைத் தவிர்த்து, அதற்கு குறியீட்டுப் பெயர்கள் கொண்டு பயன்படுத்தி இருக்கின்றனர். இவைகளைக் கணியர் வழக்குச் சொற்கள் எனலாம்.

சில சாதியினருக்கான வழக்குச் சொற்கள்

தொகு

கணியர் சாதியினர் தங்களை அடிமைகளைப் போன்று நடத்திய சாதியினர்களை இழிவுபடுத்தவும், கீழ்நிலையிலிருந்த சாதியினருக்கு இரங்கியும் தங்களுக்குள்ளாக சில குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பட்டியல் கீழே இடம் பெற்றுள்ளது.[2]

வ.எண். இயல்புப் பெயர் குறியீட்டுப் பெயர் காரணம்
1 நாடார் பின்நவுட்டி குண்டியை நவுட்டி நவுட்டி பனை ஏறுதல்
2 ஆசாரியார் தாதுலன் தாதுக்களை ஊதி ஊதி வேலை செய்தல்
3 முக்குலத்தோர் ஆள்பணி அடியாளாகச் செயல்படல்
4 பிள்ளை விளும்பன் கணக்குகளை விரல் விளிம்பில் வைத்திருத்தல்
5 பிராமணர் காடி சாப்பிடும் போது கையை நக்குவதால்
6 பறையன் சங்கடன் எப்பொழுதும் துக்கத்துடன் வாழ்வதால்
7 சக்கிலியர் பொழிஊறு தென்னை ஈர்க்கினால் சுத்தம் செய்வதால்
8 கோனார் உரம்பர் உறைவிட்ட மோர் விற்பதால்
9 பள்ளர் தாளன் தாழ்ந்தவன்
10 ரெட்டியார் கச்சடன் எல்லாத் தொழிலும் செய்வதால்
11 நாவிதர் கூரும்பி கத்தியைத் தீட்டுவதால்
12 வண்ணார் மூலன் சுத்தம் செய்ய மூலமாக இருப்பதால்
13 குயவர் மம்பர் மண் தொழில் செய்பவர்

அன்றாடப் பொருட்களுக்கான வழக்குச் சொற்கள்

தொகு

கணியர் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களுக்குக் கூட தங்களுக்கென சில வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அவற்றில் சில பொருட்களுக்கான பட்டியல்.[3]

வ.எண். இயல்புப் பெயர் வழக்குச் சொல்
1 இட்லி பூதிலி
2 கோழி வாரணம்
3 தண்ணீர் தணுவர்
4 கள்ளு அனுசம்
5 மது சுக்கிராந்தி
6 தேங்காய் அந்தரட்டு
7 நாய் ஆதுவாய்
8 பால் உரம்பா
9 வீடு குழந்தை
10 குழந்தை குந்தினி
11 மீன் மிசங்கு
12 கூண்டு கரிம்பர்
13 கள்ளர் பணிராவ்

மேற்கோள்கள்

தொகு
  1. டாக்டர் சு. சண்முகசுந்தரம் எழுதிய “சுடலைமாடன் வழிபாடு” பக்கம்.125.
  2. நெல்லை சு. தாமரைப்பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும்” நூல் பக்கம்: 38 முதல் 39 வரை.
  3. நெல்லை சு. தாமரைப்பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும்” நூல் பக்கம்: 39.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணியர்_(இனக்_குழுமம்)&oldid=3888388" இலிருந்து மீள்விக்கப்பட்டது