கா. இந்திரபாலா

கா. இந்திரபாலா அல்லது கார்த்திகேசு இந்திரபாலா (Karthigesu Indrapala, பிறப்பு: 22 அக்டோபர் 1938) இலங்கையின் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் மற்றும் நெடுங்கால தொல்லியல் அனுபவம் உடையவரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார்.

கா. இந்திரபாலா
கார்த்திகேசு. இந்திரபாலா
பிறப்பு(1938-10-22)22 அக்டோபர் 1938
யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம்இலங்கையர், அவுசுதிரேலியர்
துறைவரலாற்றியல், மொழியியல், தொல்லியல்
அறியப்படுவதுமொழியியலாளர், வரலாற்றாய்வாளர், தொல்பொருள் ஆய்வாளர்

ஆரம்ப வாழ்வும் குடும்பமும்

தொகு

இந்திரபாலா 1938 அக்டோபர் 22 இல் இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கே. கார்த்திகேசு, கனகாம்பிகை அம்பாள் ஆகியோருக்குப் பிறந்தார்.[1] யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்து 1960இல் பண்டைய வரலாற்றில் முதல் வகுப்பில் தேறி இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]

இந்திரபாலா நவாலியைச் சேர்ந்த சி. சோமசுந்தரம் என்பவரின் மகள் பிரியதர்சினியைத் திருமணம் செய்தார்.[1] இவர்களுக்கு ஹரிணி, தாரிணி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.[1]

கல்வியும் பணியும்

தொகு

1960இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்ற இந்திரபாலா அதே பல்கலைக்கழகத்தில் 1975 வரை வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் இன்றைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதலாவது வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1977-78 இல் ஜப்பான் நாட்டில் டோக்கியோப் பல்கலைக்கழகத்தில் அதிதிப் பேராசிரியராகவும், ஜப்பான் நிறுவன உயர் புலமையாளராகவும் பணியாற்றியவராவர். பின்னர் 1984 இல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தென்கிழக்காசியவியல் பேராசிரியராக நியமனம் பெற்றார்.

தொல்லியல்

தொகு

"தனது வாழ்வில் நிகரற்ற இன்பத்தைக் கொடுக்கும் துறை தொல்லியல்" என குறிப்பிடும் இவர் 1957ஆம் ஆண்டு இலங்கையின் முதல் தலைநகரமான அநுராதபுரத்தில் தொல்லியல் அகழ்வாய்வில் பணியாற்றினார். இத்தாலியத் தொல்லியியலாளரும், இலங்கை அரசின் யுனெசுகோ அறிவுரையாளருமான முனைவர் பி. சி. செசுடியேரியுடன் பணியாற்றினார். 1970இல் அமெரிக்கப் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்துத் தொல்லியலாளர் முனைவர் விம்லா பெக்சியுடன் பொம்பரிப்பு, கந்தரோடை அகழ்வாய்வுகளில் பங்குகொண்டார். 1960 – 1970களில் இலங்கையில் பலவிடங்களிலும் தொல்லியல் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டவர் ஆவார்.

யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டை எனும் இடத்தில் 1980ஆம் ஆண்டு அகழ்வாய்வின் போது, கிறித்துவுக்கு முற்பட்ட உலோக முத்திரை கண்டெடுக்கப்பட்டதிலும் இவரது பங்குண்டு.

தமிழ்நாட்டில் அகழ்வாய்வுப் பணிகள்

தொகு

தமிழ்நாடு அரசு தொல்லியல் இயக்குனர் முனைவர் இ. நாகசுவாமியின் அழைப்பின் பேரில் தமிழ்நாட்டில் தொல்லியல் முக்கியம் வாய்ந்த இடங்களான கங்கை கொண்ட சோழபுரம், தராசுபுரம், மாமல்லபுரம் உட்பட பல தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகளிலும் பங்காற்றியவர் ஆவார்.

மகாவம்சம்

தொகு

இலங்கையின் வரலாறு தொடர்பாக மகாவம்சம் கூறும் சிங்கள பௌத்தம் சார்ந்த சார்பு நிலைகளின் போதும், இலங்கையின் தமிழரின் வரலாறு தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்து வந்தவராவர்.[2]

தற்போது

தொகு

இவர் தற்சமயம் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்ந்து வருகிறார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • ஆதி இலங்கையில் இந்துமதம்
  • இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை (1970)
  • யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  • The Evolution of an Ethnic Identity (2005)
  • இலங்கையில் தமிழர் (2006)

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 61.
  2. K. Indrapala, Evolution of an Ethnicity, 2005

வெளி இணைப்புகள்

தொகு
தளத்தில்
கா. இந்திரபாலா எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._இந்திரபாலா&oldid=4043573" இலிருந்து மீள்விக்கப்பட்டது