குசராத்திலுள்ள படிக்கட்டுக் கிணறுகளின் வரலாறு

கிணறுகளின் வரலாறு

குசராத்திலுள்ள படிக்கட்டுக் கிணறுகளின் வரலாறு (History of stepwells in Gujarat) படிக்கட்டுகள் மூலம் தண்ணீர் அடையும் கிணறுகள் படிக்கிணறுகள் எனப்படுகின்றன. அவை பொதுவாக மேற்கு இந்தியாவில் குறிப்பாக குசராத்தில் 120க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. படிக்கிணற்றின் தோற்றம் சிந்துவெளி நாகரிகத்தின் நகரங்களான தோலாவிரா, மொகெஞ்சதாரோவின் நீர்த்தேக்கங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கி.பி 600 வாக்கில் குசராத்தின் தென்மேற்குப் பகுதியில் படிக்கட்டுக் கிணறுகள் கட்டப்பட்டன. அங்கிருந்து வடக்கே ராஜஸ்தானுக்கும், பின்னர் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவுக்கும் பரவியது. 10 முதல் 13ஆம் நூற்றாண்டில் சோலாங்கியர்கள், வகேலாக்கள் காலத்தில் கட்டுமான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்த படிக்கட்டுக் கிணறுகளின் கட்டுமானம் 11 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை அதன் உச்சத்தை எட்டியது. 13 முதல் 16ஆம் நூற்றாண்டின் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த படிக்கட்டுகளில் நடைமுறையில் இருந்த கலாச்சாரத்தை சீர்குலைக்கவில்லை. மேலும், படிக்கட்டுகள் கட்டுவதை ஊக்கப்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டில் தண்ணீர் குழாய்களும், குழாய் அமைப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டதால் கிணறுகள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்தன.

பண்டையக் காலம்

தொகு
 
தோலாவிராவில் படிகளுடன் கூடிய நீர் தேக்கம்

வறட்சி காலங்களில் தண்ணீரை தேக்கிவைக்க படிக்கட்டுக் கிணறுகள் தோன்றியிருக்கலாம். வேத காலத்திலிருந்தே நீர் புனிதமாக கருதப்படுகிறது. மேலும், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டத்தை அடைவதற்கான படிகளை சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களான தோலாவிரா, மொகெஞ்சதாரோ போன்ற இடங்களில் காணலாம்.[1]

2-10 ஆம் நூற்றாண்டு

தொகு
 
நவ்கான் கிணறு
 
ஆதி காதி கிணறு

ஜூனாகத்தில் உள்ள ஜுனாகத் குடைவரைகளில், படிகளின் மூலம் குளியல் செய்வது போன்ற குளத்தின் ஆரம்ப உதாரணம் காணப்படுகிறது. இந்த குகைகள் 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நவ்கான் கிணறு, சுற்றிலும் படிக்கட்டுகள் கொண்ட ஒரு கிணறு இதற்கு மற்றொரு உதாரணம். இது மேற்கு சத்ரபதிகள் (கி.பி. 200-400) அல்லது மைத்திரகர்கள் (கி.பி. 600-700) காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். அருகிலுள்ள ஆதி காதி கிணறு 10ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் அல்லது 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. [2] [3]

ஆரம்பகால படிக்கட்டுக் கிணறுகள் குசராத்தின் ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள தங் என்ற இடத்தில் காணப்படுகின்றன. அவை சோலாங்கியர் காலத்திற்கு முந்தியவை. அலெச் மலையில் உள்ள போச்சாவடி நெஸ் அருகே உள்ள போச்சாவடி படிக்கட்டுக்கிணறு, தங்கில் உள்ள மற்ற இரண்டு படிக்கட்டுக் கிணறுகளை விட சற்று முன்னதாக உள்ளது. இவை கி.பி. 600ஆம் ஆண்டைச் சேர்ந்த ஜிலானி படிக்கட்டுக் கிணறு மற்றும் சௌராட்டிர பாணி கட்டிடக்கலை அடிப்படையில் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட மஞ்சுஸ்ரீ படிகிணறு ஆகும். [2]

10-12 ஆம் நூற்றாண்டு

தொகு
 
இராணியின் கிணறு
 
மாதா பவானியின் படிக்கிணறு, அகமதாபாது, 1866

கலைக் கட்டிடக்கலையின் ஒரு வடிவமாக படிக்கட்டுக் கிணறுகள் சோலாங்கியர் காலத்தில் தொடங்கப்பட்டது. மோதேராவிலுள்ள சூரியன் கோயிலுக்கு மேற்கே அமைந்துள்ள படிக்கட்டு கிணறு 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். அதே சமயம் தரையில் மேலே உள்ள மண்டபம் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பதானில் அமைந்துள்ள இராணியின் கிணறு கி.பி 1050இல் கட்டப்பட்டது. 1050-இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கி.மீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காக இச்சுரங்கப்பாதைக் கட்டப்பட்டிருக்கிறது. காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் காலப்போக்கில் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.[4]

1980 இல் இப்படிக் கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாய்வு செய்த போது நல்ல நிலையில் இருந்தது.

தாவத்தில் உள்ள அங்கோல் மாதா படிக்கட்டுக் கிணறு, அகமதாபாத்தில் உள்ள மாதா பவானியின் படிக்கிணறு ஆகியவை 11 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டைச் சேர்ந்தவை.[2]

சோலாங்கிய ஆட்சியாளர் செயசிம்ம சித்தராசனின் தாயார் மாயாநல்லதேவி பல படிக்கிணறுகளைக் கட்டியதாகக் கூறப்படுகின்றன. விராம்கத்தில் உள்ள ஏரியும், நாடியாத்திலுள்ள ஒரு படிக்கட்டுக் கிணறும் அவர் கட்டினார்.[2] மாயாநல்லாதேவி, விராம்கம், தோல்கா ஆகிய இடங்களில் ஏரிகளைக் கட்டிய பெருமைக்குரியவர். சபர்கந்தா மாவட்டத்லுள்ள பலேஜ் கிராமத்தில் பொ.ச.1095இல் கட்டப்பட்ட மினல் படிக்கட்டுக் கிணறு அவருக்குச் சொந்தமானது. ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள வீர்பூரில் உள்ள நாடியாத்தில் உள்ள ஒரு படிக்கட்டுக் கிணறும், மினல்தேவி கிணறும் அவருக்குச் சான்றளிக்கப்பட்டவை. மேலும் சோலாங்கி கட்டமைப்புக்குக் நவீனமான பிணைப்பைக் கொண்டிருக்கிறது. நன்கு செதுக்கப்பட்ட வாயில்களுக்கு எதிரிலுள்ள ஐந்து குளங்களும் அவர் காலத்தில் கட்டப்பட்டவை.[2] [3] அகமதாபாதின் ஆசாபுரி படிக்கட்டுக் கிணறும், ஜின்ஜுவாடாவின் படிக்கட்டுக் கிணறும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சுரேந்திரநகர் மாவட்டத்திலுள்ள சோபாரியின் சௌமுகி படிக்கட்டுக் கிணறு, அருகிலுள்ள கோயில்களைப் போன்ற மதப் பிரமுகர்களை சித்தரிக்கிறது.[3] தண்டல்பூரில் உள்ள படிக்கட்டுக் கிணறு செயசிம்ம சித்தராசன் கட்டியதாகத் தெரிகிறது. 12ஆம் நூற்றாண்டில் குமாரபாலன் ஆட்சியின் போது, பல படிக்கட்டுக் கிணறுகள் கட்டப்பட்டன. பதான் அருகே வாயாட்டில் உள்ள படிக்கட்டுக் கிணறு இந்தக் காலத்தில் கட்டப்பட்டது. வாத்வானில் உள்ள கங்கை படித்துறை கி.பி 1169 ஆண்டில் கட்டப்பட்டுள்ளது (சாம்வாட் 1225). [2]

சோலாங்கியர் காலத்தின் பிற்பகுதியில், அரசியல் அமைதியின்மை காரணமாக கட்டுமானப் பணிகள் மந்தமடைந்தன. பர்தா மலைகளுக்கு அருகில் உள்ள கும்லியில் உள்ள நவ்லாகா கோயிலுக்கு அருகில் உள்ள விக்கியா மற்றும் ஜெதா படிகிணறுகள் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பர்தா மலையில் உள்ள விசாவாடா கிராமத்திற்கு அருகில் உள்ள கியான் படிக்கட்டுக் கிணறு இரண்டாம் பீமனின் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. அருகிலுள்ள கேசவ் கிராமத்தின் பாழடைந்த படிக்கட்டுக் கிணறும் இதே காலத்தைச் சேர்ந்தது. [2]

12-13 ஆம் நூற்றாண்டு

தொகு

வந்தலி மற்றும் ஜூனாகத் இடையே உள்ள இரா கெங்கர் படிக்கட்டுக் கிணறு, வகேலா அரசவையில் மந்திரிகளாக பணிபுரிந்த வாஸ்துபாலன்-தேஜபாலன் என்ற இரட்டையர்களில் தேஜபாலனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஆரம்ப வகேலா காலத்தைச் சேர்ந்தது. வகேலா வம்சத்தைச் சேர்ந்த விசால்தேவ், தபோயில் வாயில்கள் மற்றும் கோயில்களுளுடன் படிக்கட்டுக் கிணற்றைக் கட்டினார். இது 1255இல் கட்டி முடிக்கப்பட்டது. தபோயில் உள்ள சாத்முகி படிக் கிணறு என்பது ஏழு கிணறுகளைக் கொண்ட ஒரு குளத்தின் மேல் கட்டப்பட்ட கோயிலாகும்.[2] [3]

வாத்வானில் உள்ள மாதா கிணறு கி.பி 1294 இல் (விக்ரம் நாட்காட்டி 1350) நாகர் பிராமணர் மாதா மற்றும் கேசவ் ஆகியோரால் கட்டப்பட்டது. இவர்கள் கடைசி வகேலா ஆட்சியாளர் கர்ணனின் அரசவையில் இருந்தனர். [3] கபட்வஞ்சில் உள்ள பாட்ரிச் கோதா படிக்கட்டுக் கிணறு, மாதா மற்றும் விக்கியா படிக்கட்டுக் கிணறுகளுடன் உள்ள ஒற்றுமையின் காரணமாக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.[2] [3]

14-15 ஆம் நூற்றாண்டு

தொகு
 
அடலாஜ் படிக்கிணறு
 
தாதா அரிர் படிக்கிணறு

14 ஆம் நூற்றாண்டில் ஏராளமான படிக்கட்டுக் கிணறுகள் கட்டப்பட்டன. மங்ரோலில் உள்ள சோதாலி படிக்கட்டுக் கிணறு கி.பி 1319 இல் (விக்ரம் நாட்காட்டி 1375) மோதா சாதியைச் சேர்ந்த வாலி சோதலா என்பவரால் கட்டப்பட்டது.[2] கேத்பிரம்மாவின் பிரம்மா கோவிலுக்கு அருகிலுள்ள பிரம்ம கிணறு 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அதன் பாணியால் தீர்மானிக்கப்பட்டது.[2]

குஜராத்தில் துக்ளக் ஆட்சியின் போது மஹுவாவில் உள்ள சுதா படிக்கட்டுக் கிணறு (கி.பி. 1381), தந்துசரில் உள்ள ஆனி படிக்கட்டுக் கிணறு (கி.பி. 1389/1333), டோல்காவில் உள்ள சித்தநாத் மகாதேவ் படிக்கட்டுக் கிணறு போன்றவைகள் கட்டப்பட்டன. அகமதாபாத் அருகே உள்ள சம்பாவின் படிக்கட்டு கி.பி 1328இல் கட்டப்பட்டது. [2] வாத்வானுக்கு அருகிலுள்ள ராம்புராவின் ராஜ்பா படிக்கட்டுக் கிணறு, கம்பாட்டில் உள்ள வாத்வானி படிக்கட்டுக் கிணறு ஆகியவை முறையே 1483 மற்றும் 1482 இல் வாத்வானின் முந்தைய மாதா படிக்கட்டுக் கிணற்றின் அடிப்படையில் கட்டப்பட்டன. [2] [3] தாதா அரிர் படிக்கட்டுக் கிணறு 1499இல் குசராத்தின் சுல்தானான மகமூத் பெகடாவின் அந்தப்புரப் பெண்ணால் கட்டப்பட்டது. [2] [3] லூனாவடாவிற்கு அருகில் உள்ள காலேஸ்வரி-நி நாலில் உள்ள இரண்டு படிக்கட்டுக் கிணறுகள் 14-15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் அதில் உள்ள உருவப்படம் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. [2]

இந்த காலகட்டத்தில், படிக்கிணறுகளின் மத அம்சம் அதன் முக்கியத்துவத்தை இழந்தது. மஹம்தாவத் அருகே உள்ள சோடாலி கிராமத்தின் படிக்கட்டுக் கிணறு மஹம்தாவத்தில் உள்ள படிக்கட்டுக் கிணறு, இவை இரண்டும் மகமூத் பெகடாவின் 15 ஆம் நூற்றாண்டின் ஆட்சியைச் சேர்ந்தவை. வடோதரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் இரண்டு படிக்கட்டுக் கிணறுகள் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; ஒன்று சேவாசி கிராமத்திற்கு அருகில் (விக்ரம் நாட்காட்டி 1537) மற்றொன்று இலட்சுமி விலாச அரண்மனையின் நவலகி படிகிணறு (கி.பி. 1405). [2]

அடாலஜ் படிக்கிணற்றை வகேலா வம்ச மன்னரான வீர் சிங் வகேலாவின் நினைவாக அவரது மனைவி ருத்தாபாய் 1499ல் கட்டினார். இக்கிணற்றின் தூண்கள், பக்கவாட்டுச் சுவர்கள் மற்றும் படிகளில் இலைகள், பறவைகள், மீன்கள் போன்ற அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் படிக்கிணறு இந்து - இஸ்லாமியக் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

குடிநீர் மற்றும் சமையலுக்கு பயன்படும் இப்படிக்கிணற்றின் கரையில் இந்துக்களின் திருவிழாக்களுக்களும், புனிதச் சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டது.[5][6][7][8] வணிகப் பாதையில் அமைந்த இப்படிகிணற்றின் அருகில் வணிகர்களின் குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் மற்றும் பணியாட்கள் தங்கி நீரைப் பருகி ஓய்வெடுத்துச் செல்வர்.[2] [3]

16-18 ஆம் நூற்றாண்டு

தொகு
 
அமிர்தவர்சினி படிக்கிணறு

தரங்கத்திராவில் உள்ள நாகபாவா படிக்கட்டுக் கிணறும் (கி.பி. 1525) மோர்பியில் உள்ள ஜீவா மேத்தா படிக்கட்டுக் கிணறும் ஒரே பாணியிலும் காலத்திலும் உள்ளன. ரோகோவின் படிக்கட்டுக் கிணறு (கி.பி. 1560) மன்னன் நானாஜியின் மனைவி சம்பா மற்றும் அவரது மகளால் கட்டப்பட்டது. பாலன்பூரிலும் ஜின்ஜுவாடாவிலும் மேலும் சில முக்கியமான படிக்கட்டுக் கிணறுகளும் உள்ளன. [2]

பல படிக்கட்டுக் கிணறுகள் எந்த அலங்காரமும் இல்லாமல் எளிமையான வடிவமைப்பில் உள்ளன. இது அவற்றின் காலத்தைக் கண்டறிவதை கடினமாக்குகிறது. ஆனால் அவை 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இத்தகைய படிக்கட்டுக் கிணறுகள் அம்பூர் மற்றும் இடாரிலும், அதே போல் கன்காவதியில் மாத்ரி படிக்கட்டுக் கிணறும் மொதெராவில் ஞானேஸ்வரி படிக்கட்டுக் கிணறும் உள்ளன. வடக்கு குசராத்தில் உள்ள மாண்ட்வாவின் படிக்கட்டுக் கிணறு மகேம்தாவத் போன்றது என்பதால் அந்தக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். பதானில் உள்ள சிந்துவாய் மாதா படிக்கிணற்றில் கி.பி 1633ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. மங்ரோலின் ரவ்லி படிக்கட்டுக் கிணறு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இடார் அருகே உள்ள லிம்போயில் உள்ள படிக்கட்டுக் கிணறு சோலாங்கிய பாணி அலங்காரத்தைக் கொண்டுள்ளது. மேலும், கி.பி 1629 தேதியிட்டது.[2] [3]

அகமதாபாத்தில் உள்ள அமிர்தவர்சினி படிக்கிணறு 1723இல் கட்டி முடிக்கப்பட்டது. இது ஆங்கில எல் (L) வடிவில் உள்ளது. [2] [3]

19-20 ஆம் நூற்றாண்டு

தொகு

பிரித்தானியர் ஆட்சியின் போது அதிகாரிகள் படிக்கட்டுக் கிணறுகளின் சுகாதாரம் விரும்பத்தக்கதை விட குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் அவற்றின் நோக்கத்தை மாற்றுவதற்காக குழாய் மற்றும் நீரேற்று அமைப்புகளை நிறுவினர். அகமதாபாத்தின் இசான்பூரில் உள்ள ஜெதாபாயின் படிக்கட்டுக் கிணறு பாசனத்திற்காக 1860களில் கட்டி முடிக்கப்பட்டது. வான்கனேர் அரண்மனையின் படிக்கட்டு கிணறு 1930களில் அரச குடும்பத்தின் குளிர்ச்சியான இடமாக முன்னாள் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. இது வெள்ளை மணற்கற்களால் கட்டப்பட்டது. மேலும் அந்த வகையான கடைசி நினைவுச்சின்னமாகும். [2]

நீரேற்று குழாய் அமைப்புகள் காரணமாக, படிக்கட்டுக் கிணறுகள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்தன. மேலும் பொருளாதார செலவு காரணமாக, அவை அதன் பிறகு கட்டப்படவில்லை. [2]

சான்றுகள்

தொகு
  1. Takezawa, Suichi. "Stepwells -Cosmology of Subterranean Architecture as seen in Adalaj" (pdf). பார்க்கப்பட்ட நாள் 2009-11-18.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 The Stepwells of Gujarat: In Art-historical Perspective 1981.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 Shukla, Rakesh (24 June 2014). "ક્યારેક લોકોની તરસ છિપાવતા હતા ગુજરાતના આ જળ મંદિરો". gujarati.oneindia.com (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
  4. மங்கையர்கரசி (11 அக்டோபர் 2017). "ராணியின் படிக்கிணறு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2017.
  5. Takezawa, Suichi. "Stepwells -Cosmology of Subterranean Architecture as seen in Adalaj" (pdf). The Diverse Architectural World of The Indian Sub-Continent. பார்க்கப்பட்ட நாள் 2009-11-18.
  6. "The Adlaj Stepwell". Gujarat Tourim. Archived from the original on 2010-01-03. பார்க்கப்பட்ட நாள் 2009-11-17.
  7. "Ancient Step-wells of India". பார்க்கப்பட்ட நாள் 2009-11-18.
  8. "Adlaj Vav - An Architectural Marvel". Archived from the original on 2011-05-20. பார்க்கப்பட்ட நாள் 2009-11-17.

உசாத்துணை

தொகு