குதிரைலாட நண்டு
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
லிமுலிடே புதைப்படிவ காலம்: | |
---|---|
Tachypleus tridentatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | Chelicerata
|
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Limulidae |
பேரினம் | |
குதிரைலாட நண்டுகள் (Horseshoe Crabs அல்லது King Crabs) குறிப்பாக மென்மையான மணற்பாங்கான அல்லது சேற்று அடித்தளத்தைக் கொண்ட ஆழங் குறைந்த கடல் நீரில் வாழும் ஆர்த்திரப்போடா உயிரினம் ஆகும். இணைசேருங் காலங்களில் மட்டுமே இவை கடற்கரைக்கு வருகை தரும். மீன் பிடிப்பதற்கான தூண்டில் இரையாகவும், வளமாக்கிகளிலும் (fertilizers) இவை பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில் கரையோர வாழிடங்கள் அழிக்கப்படுகின்றமையாலும், வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரமாக இவை கட்டுப்பாடின்றி அதிகளவில் பிடிக்கப்படுகின்றமையாலும் அண்மைக்காலமாக இவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. தாய்லாந்துக் கடலிற் காணப்படும் குதிரைலாட நண்டு இனங்களின் சினைகளில் (Roe) ரெற்றோடோரொக்சின் (Tetrodotoxin / TTX) எனப்படும் கடுமையான நரம்புத் தொட்சின் (நரம்பைப் பாதிக்கும் நஞ்சு - Neurotoxin) காணப்படலாம்.[2] குதிரைலாட நண்டுகள் வாழும் உயிர்ச்சுவடுகளாகக் கருதப்படுகின்றன.[3]
பாகுபாடு
தொகுகுதிரைலாட நண்டுகள் உருவத்திற் கிறஸ்தேசியன்களை (நண்டு, இறால் போன்ற விலங்குகள் அடங்கும் ஆர்த்திரப்போடா உபகணம்) ஒத்திருந்தாலும், அவை கெலிசரேட்டா எனும் தனியான ஆர்த்திரப்போடா உபகணத்தைச் சேர்ந்தவை. இக் கெலிசரேட்டா உபகணத்தினுள்ளேயே சிலந்தி, தேள் போன்ற விலங்குகளைக் கொண்ட அரெக்னிடா எனும் வகுப்பு அடங்கியுள்ளது. எனவே குதிரைலாட நண்டுகள் சிலந்தி மற்றும் தேள் என்பவற்றுக்கு நெருங்கிய உறவினர்களாகும்.
மிகவும் பழைமையான குதிரைலாட நண்டு உயிர்ச்சுவடுகள், பின் ஓர்டோவீசியன் காலத்தைச் (Ordovician) சேர்ந்த அடையல் மண் அல்லது பாறைப் படைகளிலிருந்து கிடைத்துள்ளன. அவை அண்ணளவாக 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தற்போது காணப்படும் குதிரைலாட நண்டு இனங்களுக்கும், உயிர்ச்சுவடுகள் மூலம் அறியப்பட்ட பண்டைய குதிரைலாட நண்டு இனங்களுக்கும் இடையே பெரிதளவில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. அதாவது இவை புவியில் கடந்த 300 மில்லியன் வருடங்களாகச் சிறிதளவு மாற்றத்துடன் வாழ்ந்து வருகின்றன. இதற்குச் சான்றாகப் பின் பலியோசோயிக்கு யுகத்தைச் (Paleozoic Era) சேர்ந்த மரபழிந்துபோன Euproops எனும் கிஸிபோசூரிடா விலங்கின் உயிர்ச்சுவடுகளை ஆதாரமாகக் கொள்ள முடியும். எனவேதான் குதிரைலாட நண்டுகள் வாழும் உயிர்ச்சுவடுகளாகக் கருதப்படுகின்றன.
கிஸிபோசூரிடா வருணத்தில் அடங்கும் ஒரேயொரு சமீபத்திய குடும்பம் லிமுலிடே ஆகும். அவ் வருணத்தில் அடங்கும் ஏனைய குடும்பங்களைச் சேர்ந்த அங்கிகள் அனைத்தும் மரபழிந்துவிட்டன. தற்போது உயிர்வாழும் நான்கு குதிரைலாட நண்டு இனங்களும் லிமுலிடேக் குடும்பத்திலேயே அடங்கியுள்ளன.[1] அவையாவன,
- Carcinoscorpius rotundicauda, கண்டற் குதிரைலாட நண்டு (Mangrove Horseshoe Crab), தென்கிழக்காசியக் கடல்களில் காணப்படுகிறது
- Limulus polyphemus, அத்திலாந்திக் குதிரைலாட நண்டு (Atlantic Horseshoe Crab), வடமேற்கு அத்திலாந்திக் கடற்கரை ஓரமாகவும், மெக்சிக்கோ வளைகுடாவிலும் காணப்படுகிறது
- Tachypleus gigas, தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் காணப்படுகிறது
- Tachypleus tridentatus, கிழக்காசியக் கடற்கரையோரமாகக் காணப்படுகிறது
மேலும் மரபழிந்துபோன குதிரைலாட நண்டுச் சாதியான Mesolimulus உம் லிமுலிடேக் குடும்பத்திலேயே அடங்கியுள்ளது. உதாரணமாக Mesolimulus walchi எனும் மரபழிந்துபோன குதிரைலாட நண்டு இனத்தைக் குறிப்பிடலாம்.
உருவவியல்
தொகுகுதிரைலாட நண்டின் முழு உடலும் ஒரு வன்மையான ஓட்டினாற் பாதுகாக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய கூட்டுக் கண்களையும் (Compound Eyes), பல சிறிய எளிய கண்களையும் அவை தமது புற ஓட்டின் மேற் கொண்டுள்ளன. புற ஓட்டின் கீழான அவற்றின் உடல், பெரும்பாலும் ஒரு பெரிய சிலந்தியின் உடலைப் போற் தோற்றமளிக்கும். குதிரைலாட நண்டுகளுக்கு ஐந்து சோடிக் கால்கள் காணப்படுகின்றன. அவை நடப்பதற்கும், நீந்துவதற்கும், உணவை வாயினுட் தள்ளுவதற்கும் பயன்படுகின்றன. அவற்றின் நேரிய, நீண்ட, வன்மையான வால், அவை தலைகீழாகத் திருப்பப்படும் சந்தர்ப்பங்களில் மீண்டும் தம்மை மேற்புறமாகத் திருப்பிக்கொள்ள உதவுகின்றது. எனவே உடைந்த வாலினையுடைய ஒரு குதிரைலாட நண்டு எளிதில் இரைகௌவிகளால் வேட்டையாடப்படவும், வெப்பத்தில் நீரையிழந்து உலர்ந்துபோகவுங்கூடியது.
ஏட்டு நுரையீரல்கள்
தொகுஅவற்றின் கால்களுக்குக் கீழே அவை ஏட்டு நுரையீரல்களைக் (Book Gills) கொண்டுள்ளன. ஏட்டு நுரையீரல்கள் சுவாசத்திற்கு உதவுகின்றன. சிலவேளைகளில் அவை நீந்துவதற்குங் கூட உதவுகின்றன. அவற்றினாற் தலைகீழாக நீந்த முடியும். அவை கடலடித்தளங்களில் அவற்றின் முதன்மை உணவான புழுக்களையும், மொலஸ்கா (Molluscs) விலங்குகளையும் தேடிக்கொண்டிருப்பதைப் பொதுவாகக் காண முடியும். சிலவேளைகளில், அவை கிறஸ்தேசியன்களையும், சிறிய மீன்களையும் கூட உணவாக உட்கொள்ளும்
உறை கழற்றுதல்
தொகுஏனைய எல்லா ஆர்த்திரப்போடா அங்கிகளைப் போலவே குதிரைலாட நண்டுகளின் வளர்ச்சிக்கும் உறை கழற்றும் செயன்முறை (Ecdysis) அவசியமானது. இவற்றின் உடல் ஒரு புறவன்கூட்டினாற் (Exoskeleton) சூழப்பட்டுள்ளது. இது எல்லா ஆர்த்திரப்போடா விலங்குகளுக்கும் பொதுவான அம்சமாகும். எனவே வளர்ச்சியின்போது அவை இப் புறவன்கூட்டினைக் கழற்றிப், புதிய, சற்றே அளவிற் பெரிய புறவன்கூட்டினை உருவாக்கிக் கொள்ளும். இல்லாவிடின் இப் புறவன்கூட்டின் வன்மை காரணமாக வளர்ச்சி சாத்தியப்படாது. உறை கழற்றிய பின் ஆர்த்திரப்போடா அங்கிகளின் உடல் மென்மையானதாகவிருக்கும். இக் காலப்பகுதியில், இரைகௌவிகளால் அவற்றை இலகுவாக வேட்டையாட முடியும். அடுத்த சில மணி நேரத்திற்குள், புதிய புறவன்கூட்டினை அவை விருத்திசெய்து கொள்ளும். இச் செயன்முறையின்போது வளர்ச்சி சாத்தியப்படும்.
இளம் குதிரைலாட நண்டுகள் ஒவ்வொருமுறை உறை கழற்றும்போதும் ஏற்கனவே இருந்த அளவை விட 33% வரை அளவிற் பெரிதாகும். இவ் உறை கழற்றும் செயன்முறை அவை முதிர்ப்பருவத்தை (Adult) அடையும் வரை நிகழும்.[4]
பெண் குதிரைலாட நண்டுகள் ஆண் குதிரைலாட நண்டுகளை விடப் பெரியவை. கண்டற் குதிரைலாட நண்டு (Carcinoscorpius rotundicauda) ஒரு மனிதனின் கை அளவில் இருக்கும். அத்திலாந்திக் குதிரைலாட நண்டின் (Limulus polyphemus) உடல் (வால் உட்பட) 60 செ. மீ. வரை நீளமாக இருக்கும்.
இணைசேர்தல் மற்றும் இனப்பெருக்கம்
தொகுஇணைசேரும் காலங்களில் குதிரைலாட நண்டுகள் ஆழங்குறைந்த கடற்கரை நீர்ப்பரப்புகளுக்குக் குடிபெயரும். ஆண் குதிரைலாட நண்டு ஒரு பெண்ணைத் தெரிவுசெய்து, அதன் பின்புறத்திற் தன்னைப் பொருத்திக்கொள்ளும். பெண் குதிரைலாட நண்டு மணலினுள் ஒரு குழி தோண்டி அதனுட் தனது முட்டைகளை இடும். அதே சமயத்தில் ஆண் தனது விந்துக்களை அம் முட்டைகளுட் செலுத்தி அவற்றைக் கருக்கட்டச் செய்யும். ஒரு பெண் குதிரைலாட நண்டு, ஒரே தடவையிற் சில ஆயிரம் முட்டைகளைக் கொண்ட கூட்டங்களாக, 60,000 இலிருந்து 1,20,000 முட்டைகள் வரை இடும். பலவகையான கடற்கரைப் பறவைகளால் முட்டைகளின் பெரும்பகுதி அவை பொரிக்கும் முன்பே உண்ணப்பட்டுவிடும். முட்டைகள் பொரிப்பதற்கு இரண்டு வாரங்கள் வரை எடுக்கும். பொரித்தபின், அவற்றின் குடம்பிகள் தமது முதல் வருடத்தில் ஆறு தடவைகள் உறை கழற்றும்.
குதிரைலாட நண்டுகளைக் காப்பகத்தில் வளர்ப்பது மிகவும் கடினமானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவற்றின் முட்டைகள் முன்பு பொரித்த அதே மணல் அல்லது சேற்று நிலத்திலேயே அவை இனப்பெருக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது. இருந்தபோதும், மணலில் உள்ள எப் பதார்த்தத்தை உணர்வதன் மூலம் அவை அதை அறிந்துகொள்கின்றன என்பதோ, அப் பதார்த்தத்தை அவை எவ்வாறு உணர்ந்துகொள்கின்றன என்பதோ திட்டமாக அறியப்படவில்லை.[5]
குருதி
தொகுமுலையூட்டிகளைப் போல் குதிரைலாட நண்டுகள் தமது குருதியில் ஈமோகுளோபினைக் (Hemoglobin) குருதி நிறப்பொருளாகக் கொண்டிருப்பதில்லை. மாற்றாக, அவை ஒட்சிசனைக் காவுவதற்காக ஈமோசயனின் (Hemocyanin) எனும் செப்பினைக் (Copper) கொண்டுள்ள ஒரு புரதத்தைக் கொண்டுள்ளன. ஈமோசயனினில் செப்புக் காணப்படுவதால் குதிரைலாட நண்டுகளின் குருதியின் நிறம் நீலம் ஆகும். அவற்றின் குருதியில் அமீபாக்குழியங்கள் (Amebocytes) எனப்படும் ஒருவகைக் கலங்கள் காணப்படுகின்றன. இக் கலங்கள், முள்ளந்தண்டுளிகளின் உடலில் வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் புரியும் தொழிலுக்கு ஒப்பான தொழிலைப் புரிகின்றன. அதாவது இக் கலங்கள், குதிரைலாட நண்டுகளை நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளிலிருந்து பாதுகாக்கின்றன.
அத்திலாந்திக் குதிரைலாட நண்டின் (Limulus polyphemus) குருதியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அமீபாக்குழியங்களிலிருந்து லிமுலஸ் அமீபோசைற் லைசேற் (Limulus Amebocyte Lysate / LAL) எனப்படும் ஒரு இரசாயனப் பதார்த்தம் தயாரிக்கப்படுகின்றது. இது பற்றீரிய அகத்தொட்சின்களைக் (Bacterial Endotoxins) கண்டறியப் பயன்படுகிறது.
குதிரைலாட நண்டுகளின் குருதியைப் பிரித்தெடுக்கும் செயன்முறை பின்வருமாறு நடைபெறுகின்றது. முதலிற் குதிரைலாட நண்டுகள் சேகரிக்கப்படுகின்றன. பின் அவை குருதியை விடுவிப்பதற்காகக் கீறப்படுகின்றன. குறித்த கனவளவு குருதியைச் சேகரித்த பின் அவை மீண்டுங் கடலினுள் விடப்படுகின்றன. பெரும்பான்மையான குதிரைலாட நண்டுகள் இச் செயன்முறையில் உயிர்பிழைக்கின்றன. இச் செயன்முறையின்போது நிகழும் மரணம், ஒரு குதிரைலாட நண்டுத் தனியனிடமிருந்து (Individual) சேகரிக்கப்படும் குருதியின் அளவிலும் (ஒரு தனியனிடமிருந்து அதிக கனவளவு இரத்தம் சேகரிக்கப்படுமாயின், அது இறப்பதற்கான நிகழ்தகவு அதிகமாகும்), குருதி பிரித்தெடுப்பு மற்றும் கொண்டுசெல்லலின் போது அது உணரும் அழுத்தத்திலும் (stress) தங்கியுள்ளது.[6] குருதி பிரித்தெடுப்பின் பின் நிகழும் இறப்பு வீதத்தை மதிப்பிட்டபோது, அது 3% இலிருந்து 15% வரை வேறுபடுகின்றது.[7]
மீன்பிடி
தொகுவிலாங்கு மீன்கள் (பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவில்) மற்றும் கடல் நத்தைகளைப் பிடிப்பதற்கான தூண்டில் இரையாகக் குதிரைலாட நண்டுகள் பயன்படுகின்றன. இருந்தபோதும், நியூ ஜெர்சியில் குதிரைலாட நண்டுகளைப் பிடிப்பது தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. டெலவெயரில் ஆண் குதிரைலாட நண்டுகளைப் பிடிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென் கரோலைனாவில் இவற்றைப் பிடிப்பது நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.[8]
டெலவெயர் விரிகுடாவிற் குதிரைலாட நண்டுகளின் குடித்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி, சிவப்பு நொட் (Red Knot – Calidris canutus) பறவைகளின் எதிர்காலத்தை அபாயத்திற்குள்ளாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. சிவப்பு நொட்கள் நீண்டதூரம் வலசைபோகும் கடற்கரைப் பறவைகளாகும். அவை டெலவெயர் மற்றும் நியூ ஜெர்சி கடற்கரைகளில் தரிக்கும்போது, குதிரைலாட நண்டுகளின் புரதம் செறிந்த முட்டைகளை உணவாக உட்கொள்ளும்.[9] இவ் வலசைபோகும் பறவைகளைப் பாதுகாப்பதற்காக, டெலவெயர் விரிகுடாவில் குதிரைலாட நண்டுகள் பிடிக்கப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முகாமைத்துவத் திட்டத்தினை உருவாக்குவதற்கான ஒரு முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
படத் தொகுப்பு
தொகு-
கால்களையும், ஏட்டு நுரையீரல்களையும் காண்பிக்கும் ஒரு பெண் அத்திலாந்திக் குதிரைலாட நண்டின் (Limulus polyphemus) அடிப்பகுதி.
-
புணர்ச்சியின் போது பெண்ணைப் பற்றிப் பிடிப்பதற்காகத் திரிபுற்ற முதலாவது காலினைக் காட்டும் ஒரு ஆண் அத்திலாந்திக் குதிரைலாட நண்டின் (Limulus polyphemus அடிப்பகுதி.
-
உறை கழற்றும் ஒரு அத்திலாந்திக் குதிரைலாட நண்டு (Limulus polyphemus.)
-
குதிரைலாட நண்டுகளின் முட்டைகளை உண்ணும் சிவப்பு நொட் (Calidris canutus) பறவைகள். மிஸ்பிலியன் துறைமுகம், டெலவெயர்
-
சமைக்கப்பட்ட குதிரைலாட நண்டு. தாய்லாந்து
-
குதிரைலாட நண்டொன்றின் சிறிய கண்களை இப் படத்திற் காணலாம்.
-
குதிரைலாட நண்டொன்றின் கீழ்ப்புறம்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 Kōichi Sekiguchi (1988). Biology of Horseshoe Crabs. Science House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-915572-25-8.
- ↑ Attaya Kungsuwan, Yuji Nagashima & Tamao Noguchi (1987). "Tetrodoxin in the horseshoe crab Carcinoscorpius rotundicauda inhabiting Thailand" (PDF). Nippon Suisan Gakkaishi 53: 261–266. http://rms1.agsearch.agropedia.affrc.go.jp/contents/JASI/pdf/society/34-3054.pdf. பார்த்த நாள்: 2012-05-18.
- ↑ David Sadava, H. Craig Heller, David M. Hillis & May Berenbaum (2009). Life: the Science of Biology (9th ed.). W. H. Freeman. p. 683. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4292-1962-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Lesley Cartwright-Taylor, Julian Lee & Chia Chi Hsu (2009). "Population structure and breeding pattern of the mangrove horseshoe crab Carcinoscorpius rotundicauda in Singapore". Aquatic Biology 8: 61–69. doi:10.3354/ab00206. http://www.int-res.com/abstracts/ab/v8/n1/p61-69/.
- ↑ David Funkhouser (April 15, 2011). "Crab love nest". சயன்டிஃபிக் அமெரிக்கன் 304 (4): 29. doi:10.1038/scientificamerican0411-29. http://www.scientificamerican.com/article.cfm?id=crab-love-nest.
- ↑ Lenka Hurton (2003). Reducing post-bleeding mortality of horseshoe crabs (Limulus polyphemus) used in the biomedical industry (PDF) (M.Sc. thesis). வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம்.
- ↑ "Crash: A Tale of Two Species – The Benefits of Blue Blood", PBS
- ↑ "Horseshoe crab". SC DNR species gallery. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Red knots get to feast on horseshoe crab eggs". Environment News Service. March 26, 2008 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 24, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924012046/http://www.ens-newswire.com/ens/mar2008/2008-03-26-093.html. பார்த்த நாள்: January 19, 2011.