சங்கரதாசு சுவாமிகள்

தமிழ் நாடக ஆசிரியர்

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (7 செப்டம்பர் 1867 - 13 நவம்பர் 1922) 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருபெற்றது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார்.[1] அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.

தவத்திரு சங்கரதாசு சுவாமிகள்
சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா மலர் (1967)
சங்கரதாஸ் சுவாமிகள்
நூற்றாண்டு விழா மலர் (1967)
பிறப்புசங்கரன்
7 செப்டம்பர் 1867
காட்டுநாயக்கன்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா (தற்போது
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு13 நவம்பர் 1922(1922-11-13) (அகவை 55)
பாண்டிச்சேரி,
பிரெஞ்சு இந்தியா
(தற்போது புதுச்சேரி, இந்தியா)
அடக்கத்தலம்கருவடிக்குப்பம் மயானம்,
புதுச்சேரி, இந்தியா
தொழில்நாடக நடிகர், நாடகாசிரியர்
குடியுரிமைஇந்தியர்
கல்விதமிழ் இலக்கியம், இசை. நாடகம்.

பிறப்பு

தொகு

சங்கரதாஸ் சுவாமிகள், தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட தாமோதரக் கணக்கப் பிள்ளை[2], பேச்சியம்மாள் இணையருக்கு மகனாக 1867 செப்டம்பர் 7-ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சங்கரன் எனப் பெயரிட்டனர்.[3]

கல்வி

தொகு

தொடக்கக் கல்வி தன் தந்தை தாமோதரனாரிடம் பெற்ற சங்கரதாசர், பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் பெற்றார்.[4] சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன போன்றவற்றைக் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார்.

கணக்கர்

தொகு

சங்கரதாசர் தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சிறிதுகாலம் கணக்கராகப் பணியாற்றினார். 1891-ஆம் ஆண்டில் தனது 24-ஆவது அகவையில் அப்பணியைத் துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார்.[5]

துறவு வாழ்க்கை

தொகு

சாமி நாயுடு குழுவில் பணியாற்றும்பொழுது வாழ்க்கையில் வெறுப்புற்ற சங்கரதாசர் தன் வழிபடு கடவுளாகிய முருகனின் அருள்வேண்டி அருட்செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்டார். அரையில் மட்டும் உடையுடுத்தி அருட்செலவில் ஈடுபட்ட சங்கரதாசரை பலரும் சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர்.[6] இதனால் அவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார்.

அருட்செலவின் இறுதியில் புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை என்பவருடன் சங்கர்தாசர் தங்கினார். அவர் சங்கரதாசரை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.[6]

நாடக சபை வாழ்க்கை

தொகு

ஐயர்கள் நாடக சபை

தொகு

ராமுடு ஐயர், கல்யாண ராமையர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகசபையில்[7] சேர்ந்து நாடங்களில் நடிக்கத் தொடங்கினார். சனீஸ்வரன், எமன், இராவணன், இரணியன் ஆகியன போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.[5]

சாமி நாயுடு நாடக சபை

தொகு

பின்னர் சாமி நாயுடு என்பவரின் நாடக சபையில் சங்கரதாசர் சிலகாலம் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாராகவும் நடித்தார்.[6]

நடிப்பதைக் கைவிடுதல்

தொகு

சங்கரதாசர் சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தபொழுது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்தது, நளதமயந்தி நாடகத்தில் சனீசுவரன் வேடமிட்டு சங்கரதாசர் அதிகாலையில் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்தது எனத் தொடர் துயரங்கள் விளைந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதைக் கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத்தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார்.[8]

மீண்டும் நாடகப் பணி

தொகு

மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரதாசர் மீண்டும் நாடகப்பணியில் ஈடுபட்டார். 'வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடகசபை ஆகியவற்றில் சிலகாலமும்[9] பி. எசு. வேலு நாயரின் ஷண்முகானந்த சபையில் நெடுங்காலமும் சங்கரதாசர் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[10]

பாலர் நாடக சபைகள்

தொகு

சமரச சன்மார்க்க நாடக சபை

தொகு

நாடகங்களில் நடித்த நடிகர்கள் சங்கரதாசரின் பாடல்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு தமது எண்ணத்திற்கேற்ப உரையாடத் தொடங்கினர். இவ்வுரையாடல்கள் தொடர்புடைய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் குத்திக்காட்டும் சிலேடைக் கூற்றுகளாகவும் மாறத் தொடங்கின. இதனால் நாடகக்கலை நலியத் தொடங்கவே, சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்ட பாலர் நாடக சபையை முதன்முதலாக 1910 ஆம் ஆண்டில் சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் பெயரில் சங்கரதாசர் தொடங்கினார்.[11]

பால மீன ரஞ்சனி சபை

தொகு

சிறிதுகாலத்தில் சமரச சன்மார்க்க நாடக சபையைக் கலைத்துவிட்டு, ஜெகந்நாத ஐயரின் பால மீன ரஞ்சனி சபையில் ஆசிரியராக சிலகாலம் இருந்தார்.[12]

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை

தொகு

பால மீன ரஞ்சனி சபையிலிருந்து 1918 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டால் விலகி மதுரைக்கு வந்தார். அங்கே தன் நண்பர்களான சின்னையாபிள்ளை, கருப்பையாபிள்ளை, பழனியாபிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகிய நால்வரையும் உரிமையாளராகக் கொண்ட தத்துவ மீனலோசனி சபையை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார்.[13]

நாடக ஆசிரியர்

தொகு

சங்கரதாசர் சுமார் 40 நாடகங்களை எழுதினார். அவற்றுள் தற்பொழுது 18 நாடகங்களின் பனுவல்களே கிடைத்திருக்கின்றன.

 
வரிசை எண் நாடகம் ஆண்டு பனுவல் கிடைத்தவை
01 அபிமன்யு சுந்தரி 1921 அபிமன்யு சுந்தரி
02 அரிச்சந்திரா அரிச்சந்திரா
03 அல்லி அர்ஜூனா அல்லி சரித்திரம்
04 இரணியன்
05 இலங்கா தகனம்
06 கர்வி பார்ஸ் கர்வி பார்ஸ்
07 குலேபகாவலி
08 கோவலன் சரித்திரம் 1912 கோவலன் சரித்திரம்
09 சதி அனுசுயா ஸதி ஆநுசூயா
10 சதிசுலோசனா
11 சத்தியவான் சாவித்திரி சத்தியவான் சவித்திரி
12 சாரங்கதரன் சாரங்கதரன்
13 சிறுத்தொண்டர்
14 சீமந்தனி சீமந்தினி நாடகம்
15 சுலோசனா சதி சுலோசனா ஸதி
16 ஞான சௌந்தரி சரித்திரம் ஞான சௌந்தரி சரித்திரம் [14]
17 நல்ல தங்காள் நல்லதங்காள்
18 பவளக்கொடி பவளக்கொடி சரித்திரம்
19 பாதுகாபட்டாபிசேகம்
20 பார்வதி கல்யாணம்
21 பிரகலாதன் பிரஹலாதன் சரித்திரம்
22 பிரபுலிங்கலீலை
23 மணிமேகலை
24 மிருச்சகடி
25 ரோமியோவும் ஜூலியத்தும்
26 வள்ளித் திருமணம் வள்ளித்திருமணம்
27 வீரஅபிமன்யு
28 லவகுசா லவகுச நாடகம்
29 லலிதாங்கி லலிதங்கி நாடகம்

இந்நாடகங்களில் வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை ஆகியன உள்ளிட்ட பலவகைப்பாடல்களும் சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்தவையாக இருக்கின்றன.[15]

இந்நாடகங்களை புராண நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், சமய நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், கற்பனை நாடகங்கள் எனப் வகைப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

மறைவு

தொகு

1921 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாசருக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கிவிட்டன. வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே 13 நவம்பர் 1922அன்று இரவு பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.[16] அவர் உடல், புதுச்சேரியின் கருவடிக்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[17]

பாராட்டுகள்

தொகு

சங்கரதாசு சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் அவரது முத்தமிழ்ப் புலமையை ஆராய அங்குள்ள புலவர்களால் வினாக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சங்கரதாசர் வழங்கிய விடைகளைப் போற்றிய அச்சங்கத்தினர் அவருக்கு வலம்புரிச் சங்கு ஒன்றைப் பரிசளித்தனர்.[18]

நினைவேந்தல்கள்

தொகு

சங்கரதாசர் நூற்றாண்டு நிறைவையொட்டி, 1967-ஆம் ஆண்டில் சென்னையில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றை வெளியிட்டும் 1968-ஆம் ஆண்டில் மதுரை தமுக்கம் திடலின் வாயில் அவருக்குச் சிலை எழுப்பியும் அவருக்குத் தி. க. சண்முகம் சிறப்புச் சேர்த்தார். மேலும் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கி ஆண்டுதோறும் சங்கரதாசர் பிறந்தநாளை தி. க. சண்முகம் கொண்டாடி வந்தார்.

மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்கிற்குத் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மதுரை ஒப்பனைக்காரத் தெருவில் இயங்கிவரும் நாடகக் கலைஞர்கள் சங்கத்திற்கும் சங்கரதாசரின் பெயர் இடப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைக்குத் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத் துறை எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

மாணாக்கர்கள்

தொகு

சங்கரதாசர் தனது 31 ஆண்டுகால நாடகப்பணி வாழ்க்கையில் எண்ணற்ற நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். அவர்களுள் பெரும்புகழ்பெற்று விளங்கிய சிலரின் பெயர்கள் பின்வருமாறு:

 • வேலு நாயர்
 • ஜி.எஸ். முனுசாமி நாயுடு
 • ஜெகந்நாத நாயுடு
 • சாமிநாத முதலியார்
 • சீனிவாச ஆழ்வார்
 • நடேச பத்தர்,
 • ராஜா வி. எம். கோவிந்தசாமிபிள்ளை,
 • எம். ஆர். கோவிந்தசாமிபிள்ளை.
 • சி. கன்னையா,
 • சி. எஸ். சாமண்ணா ஐயர்,
 • மகாதேவய்யர்,
 • சூரிய நாராயண பாகவதர்,
 • சுந்தரராவ்,
 • கே. எஸ். அனந்தநாராயண ஐயர்,
 • கே. எஸ். செல்லப்ப ஐயர்,
 • பைரவ சுந்தரம் பிள்ளை,
 • சீனிவாச பிள்ளை.
 • பு. உ. சின்னப்பா[19],
 • டி. எஸ். துரைராஜ்,
 • தி.ச. கண்ணுசாமிபிள்ளை,
 • தி.க. சங்கரன்,
 • தி.க.முத்துசாமி,
 • தி. க. சண்முகம்,
 • தி. க. பகவதி,
 • பாலாம்மாள்,
 • பாலாமணி அம்மையார்,
 • அரங்கநாயகி,
 • வி.பி.ஜானகி,
 • கோரங்கி மாணிக்கம்,
 • டி. டி. தாயம்மாள் [20]

நாடகத் திரட்டுகள்

தொகு

சங்கரதாசர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய நாடகப் பனுவல்களைத் திரட்டி அச்சேற்றும் முயற்சிகள் நடைபெற்றன. அவ்வகையில் அபிமன்யு சுந்தரி, சுலோசனா சதி ஆகிய இரு நாடகப் பனுவல்களும் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் ஆதரவோடு 1959 இல் வெளிவந்தன.[21]

தி. க. சண்முகத்தின் தனிமுயற்சியால் சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசுந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா, கோவலன் ஆகிய நாடகப்பனுவல்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றன.[22]

2009 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசு தற்பொழுது கிடைக்கக்கூடிய 18 பனுவல்களையும் தொகுத்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு - பதினெட்டுப் பனுவல்கள் என்ற பெயரில் புதுச்சேரியைச் சார்ந்த வல்லினம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.[23]

இவைதவிர, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் என்னும் நூலை சென்னை காவ்யா வெளியீடு வெளியிட்டு இருக்கிறது.17 நாடகங்களின் தொகுப்பு.பாடல்களுக்கு இராகம் குறிக்கப்பட்டுள்ள பதிப்பு. ஆசிரியர் முனைவர் அரிமளம் பத்மநாபன்.2008; மறு பதிப்பு 2016.

வாழ்க்கை வரலாறு

தொகு

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கைக் குறிப்பை 1955 ஆம் ஆண்டில் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்னும் பெயரில் தி. க. சண்முகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு

23 சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972,138 - 139

 1. சண்முகம் தி. க., நாடகக் கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, ப.33
 2. சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.2
 3. http://www.tamilvu.org/courses/degree/p102/p1023/html/p1023511.htm
 4. சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.2-3
 5. 5.0 5.1 சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.3
 6. 6.0 6.1 6.2 சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.4
 7. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்னும் தனது நூலில் (மு.ப.1955, பக்.3) ராமுடு ஐயரும் கல்யாண ராமையரும் இணைந்து நடத்திய நாடகசபை எனக் குறிப்பிடும் தி. க. சண்முகம், நாடகக்கலை என்னும் நூலில் (நா.பதி.1981, பக்.34) கும்பகோணம் திரு. நடேச தீட்சிதர் என்பவரால் துவக்கப்பட்ட திரு.கல்யாணராமய்யர் நாடகக்குழுவில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார் எனக் குறிப்பிடுகிறார்.
 8. சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.20-21
 9. "வண்ணை இந்து வினோத சபாவுக்காகவும் நாடகங்கள் எழுதினார்" என வளவ துரையன் 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' என்னும் கட்டுரையில் (தமிழ்மணி - தினமணி 11, நவம்பர் 2012) குறிப்பிடுகிறார். இது இவ்விரு சபைகளில் ஒன்றின் பெயராக இருக்கலாம்.
 10. சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.5
 11. சண்முகம் தி. க., நாடகக் கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, ப.37
 12. சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.7
 13. சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972
 14. இந்நாடகம் கே.ஜி.குப்புசாமி நாயுடு என்பவரால் எழுதப்பட்டது என்கிறார் தி.க.சண்முகம், எனது நாடக வாழ்க்கை என்னும் நூலில்
 15. சண்முகம் தி. க., நாடகக் கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, ப.34
 16. சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.9
 17. "மறக்கப்பட்ட நாடகத்தின் தலைமகன்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.
 18. சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.16
 19. சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972,138 - 139
 20. சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.6
 21. சண்முகம் தி. க., நாடக்கலை, அவ்வை பதிப்பகம் சென்னை, நா.பதி 1981, பக்.42
 22. தி. க. ச. கலைவாணன் எழுதிய முன்னுரை, தமிழ்நாடகத் தலைமை ஆசிரியர், பூவழகி பதிப்பகம் சென்னை, இ.பதி.2006, பக். 11
 23. http://www.viruba.com/final.aspx?id=VB0003018

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரதாசு_சுவாமிகள்&oldid=3766505" இலிருந்து மீள்விக்கப்பட்டது