சங்கு நாராயணன் கோயில்
சங்கு நாராயணன் கோயில் (Changu Narayanan Temple) Listen (உதவி·தகவல்), நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் அமைந்த பண்டைய இந்து சமயக் கோயிலாகும். காத்மாண்டு சமவெளியில் உள்ள காத்மாண்ட் நகரத்தின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவிலும், பக்தபூர் மாவட்டத் தலைமையிடமான பக்தபூர் நகரத்திற்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் சங்குநாராயாணன் கோயில் அமைந்துள்ளது.
சங்கு நாராயணன் கோயில் | |
---|---|
![]() சங்கு நாராயணன் கோயில் | |
ஆள்கூறுகள்: | 27°42′58.6″N 85°25′40.4″E / 27.716278°N 85.427889°Eஆள்கூறுகள்: 27°42′58.6″N 85°25′40.4″E / 27.716278°N 85.427889°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | கருட நாராயணன் கோயில் |
பெயர்: | चाँगुनारायण |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாவட்டம்: | பக்தபூர் மாவட்டம் |
அமைவு: | சங்கு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விஷ்ணு |
சிறப்பு திருவிழாக்கள்: | தீஜ் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பௌத்த கட்டிடக் கலை (அடுக்குத் தூபி) |
வரலாறு | |
அமைத்தவர்: | ஹரிதத்த பார்மா |
இக்கோயில் திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். நேபாளத்தில் இக்கோயில் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இக்கோயில் அருகே மனோகரா ஆறு பாய்கிறது. யுனேஸ்கோவால் அங்கீகரிப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சங்கு நாராயணன் கோயில் விளங்குகிறது.[1]
வரலாறுதொகு
இக்கோயில் நேபாள பௌத்த கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்து புராணங்களின்படி, இக்கோயில் கி மு 325ல் லிச்சாவி வம்ச மன்னர் ஹரி தத்தா வர்மனின் காலத்தில் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது. மன்னர் மனதேவனின் ஆட்சிக் காலமான கி பி 496 முதல் 524 முடிய, இங்குள்ள தரை தளத்தில் அமைந்த கல் தூண்களில், அவனது படையெடுப்புகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. 1585 முதல் 1614 ஆட்சி செய்த சிவ சிம்ம மல்ல அரசனின் பட்டத்தரசி கங்காராணி என்பவர் இக்கோயிலை புதுப்பித்து கட்டினார். இக்கோயிலின் கதவுகள், சன்னல்கள் மற்றும் கூரைகள் தங்கம் கலந்த செப்புத்தகடுகளால் 1708இல் மன்னர் பாஸ்கர மல்லர் வேய்ந்தான்.
கோயிலின் அமைவிடத்தின் சிறப்புகள்தொகு
மலை உச்சியில் அமைந்த சங்கு நாராயணன் கோயிலைச் சுற்றிலும் உள்ள காடுகளில் செண்பக மரங்கள் வளர்ந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் கல்லால் ஆன குடிநீர் குழாய், லிச்சாவியர்கள் காலத்திலிருந்தே இருப்பதாக கருதப்படுகிறது. நேவார் இன மக்கள் இக்கோயிலைச் சுற்றிலும் வாழ்கின்றனர். இக்கோயிலால் இப்பகுதியில் சுற்றுலாத் துறை வளர்ந்துள்ளது. உணவு விடுதிகள், தங்குமிடங்கள், பெட்டிக் கடைகள் சுற்றுலா பயணிகளுக்கு உதவுகிறது.
கலை மற்றும் கட்டிடக்கலைதொகு
நேபாள நாட்டில் சங்கு நாராயணன் கோயில் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இரண்டடுக்கள் கொண்ட கருங்கற்களாலான இக்கோயில் பௌத்தக் கட்டிடக் கலை அல்லது இந்து கட்டிடக் கலை வடிவில் அமையாது, பண்டைய நேபாள மரபுப்படி கட்டப்பட்டுள்ளது. .[2] இக்கோயிலைச் சுற்றிலும் திருமாலுக்குரிய சிற்பங்களுடன் அமைந்துள்ளது. முதன்மை கோயிலின் முற்றவெளியில் சிவன், சின்னமஸ்தா, கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ள இக்கோயிலின் நான்கு வாயில்களில் சிங்கங்கள், சரபங்கள், யாணைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவலுக்கு உள்ளன. திருமாலின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்கள் கோயிலின் கூரையை தாங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வாயிலின் எதிரில் உள்ள தூணில் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் தாமரை ஆகியவைகளை சிற்பங்களான வடிக்கப்பட்டுள்ளன. இத்தூண் கி மு 464ல் லிச்சாவி இன மன்னர் மனதேவன் காலத்தில் எழுப்பட்டதாக, இத்தூணில் குறித்த பண்டைய சமசுகிருத எழுத்துக்களின் மூலம் தெரியவருகிறது. கோயில் முற்றவெளியிலிருந்து, கோயிலின் கிழக்கு வாயிலில் நுழையும் போது, வலது புறத்தில் கீழ்கண்ட சின்னங்கள் தென்படுகிறது. அவைகள்;
- லிச்சாவி மன்னன் மனதேவன் கி மு 464ல் எழுப்பிய வரலாற்று சிறப்பு மிக்க தூண்.
- திருமாலின் வாகனம், கருடனின் சிற்பம்
- மல்ல வம்ச மன்னர் புபலேந்திர மல்லர் மற்றும் அவரது பட்டத்து இராணி புவனலெட்சுமியின் உருவச்சிலைகள்
- சந்திர நாராயணன் (கருட நாராயணன்):- கருட வாகனத்தில் பறக்கும் திருமாலின் ஏழாம் நூற்றாண்டுச் சிற்பம். (இச்சிற்பம் நேபாள நாட்டின் பத்து ரூபாய் பணத்தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளது).
- ஸ்ரீதர விஷ்ணு:- ஒன்பதாம் நூற்றாண்டின் கலைநயத்துடன் கூடிய விஷ்ணு, இலக்குமி மற்றும் கருடன் சிற்பங்கள்.
- வைகுந்த விஷ்ணு:- கருட வாகனத்தில், விஷ்ணுவின் தொடையில் அமர்ந்திருக்கும் இலக்குமியின் 16ஆம் நூற்றாண்டுச் சிற்பம்.
- சின்னமஸ்தா தேவி கோயில்:- சின்னமஸ்தா தன் தலையை தானே கொய்து, பசித்திருக்கும் டாகினி மற்றும் வார்னீக்கும் இரத்தம் வழங்குதல்
- விஸ்வரூபம்:- பகவத்கீதையில் அருச்சுனனுக்கு, கிருஷ்ணர் காட்டும் விராட் விஸ்வரூப காட்சியின் ஏழாம் நூற்றாண்டின் சிற்பம்.
- உலகளந்த பெருமாள்:- வாமனர் மற்றும் மகாபலி சக்கரவர்த்தி ஆகியவர்களின் ஏழாம் நூற்றாண்டுச் சிற்பங்கள்.
- நரசிம்மர் :- நரசிம்மர் உருக்கொண்டு இரணியகசிபை கொன்று பிரகலாதனை காத்த, ஏழாம் நூற்றாண்டின் சிற்பம்.
- கிலேஷ்வர்:- இரண்டடுக்கு சிவன் கோயில்.
மனித இன அமைப்பியல் அருங்காட்சியகம்தொகு
கோயிலில் உள்ள கட்டிடத்தில் மனித இன அமைப்பியல் குறித்தான அருங்காட்சியகத்தில் (ethnographic museum) ஜுடித் டேவிஸ் சேகரித்த பொருட்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணமாக இந்திய ரூபாய் 250 வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒரு சிறு புத்தகக் கடையும் உள்ளது.
திருவிழாக்களும், சிறப்பு பூஜைகளும்தொகு
இக்கோயிலில் தினசரி பூஜைகள் நடப்பதில்லை. ஏகாதசி, அஷ்டமி மற்றும் நவமியின் போது கோயில் சார்பாக பூஜை நடைபெறுகிறது. மற்ற சமயங்களில் குடும்பச் சடங்குகள் அல்லது பிறந்தநாள் விழா போன்ற சமயங்களில் மட்டும் கட்டணம் பெற்று பூஜைகள் செய்யப்படுகிறது. முக்கிய கோயில் திருவிழாக்கள்;
- சங்கு நாராயணன் யாத்திரைத் திருவிழா
- மகாஷானன் திருவிழா.
2015 நேபாள நிலநடுக்கம்தொகு
ஏப்ரல் 2015 நிலநடுக்கத்தில் பல நேபாள உலகப் பாரம்பரியக் களங்கள் பலத்த சேதமடைந்திருந்தாலும், சங்கு நாராயணன் கோயிலின் நான்கில் இரண்டு கோயில்கள் பலத்த சேதமடைந்துள்ளது. முக்கியக் கோயிலும், மற்றொரு கோயிலும் அதிக சேதமின்றி தப்பியது. [3][4][5]