சங்க இலக்கியங்களில் தமிழிசைக் குறிப்புகள்

இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

பரிபாடல் தொகு

சங்க இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியன இசைப்பாடல்கள் என்பன அனைத்துமே இசைப்பாடல்களே என்று தெரிவிக்கின்றார் பரிமேலழகர். பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப்பெறுகின்றன. பரிபாடலுக்கு இசைவகுத்தோர் பதின்மர் ஆவர். பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர் என்போர் பரிபாடலில் காணப்படும் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளனர். பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, இசைபற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன.

இவற்றில், பாட்டுக்களை இயற்றிய ஆசிரியர்களே இசையமைத்த பாடல்களும் உண்டு; பாடிய கவிஞர் ஒருவராகவும் இசையமைத்த கலைஞர் வேறொருவராகவும் அமைந்த பாடல்களும் உண்டு. இவைகள் பண்சுமந்த பாடல்களே. இப்பரிபாடல்களில் பல நீண்ட நெடும் பாடல்கள்; 100 வரிகளுக்கும் மேல் அமைந்த பாடல்களும் உண்டு. இப்பாடல்களை அக்காலப் பாணர்கள் காந்தாரம், நோதிரம், செம்பாலையாகிய பண்களில் பாடியுள்ளனர். பரிபாடலின் யாப்பினைக் குறித்துத் தொல்காப்பியர் பரிபாடல் வெண்பா யாப்பினதே எனக் குறிப்பிட்டுள்ளார்.[1].

தொல்காப்பியம் செய்யுளியல் உரையாசிரியர்கள் தேவபாணி என்னும் கடவுளரைப் பாடும் பாட்டு வகைக்கு எடுத்துக் காட்டாக வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் அமைந்த பாடல்களைக் காட்டியுள்ளனர். இவையும் நெடும்பாட்டுக்களே. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு இசையமைத்ததாகக் குறிப்பேதும் கிடைக்கவில்லை. பரிபாடல், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆகிய இருவகைப் பாடல்களுக்கும் தரவு, கொச்சகம், அராகம்அல்லது இராகம், சுரிதகம் போன்ற ஒத்த உறுப்புக்கள் உண்டு.[2].இவையிரண்டும் கடவுள் வாழ்த்தினும் மலைவிளையாட்டினும் புனல்விளையாட்டினும் பிறவெல்லாவற்றிலும் காமப்பொருளாகியே வரும்.[3].

என்ற பாடலில் சில இசைக் கருவிகளின் பெயர்களைக் காணலாம். பரங்குன்றம் பற்றிய செவ்வேள் பாடல்களில் இசை தோன்றுவது பற்றியும், குழல், யாழ், முழவு முதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.

புற நானூறு தொகு

எட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண், விளரிப்பண் என்னும் பண்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக் கருவிகளைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

அகநானூறு தொகு

பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில் அறியத்தரப்பட்டுள்ளது.

பதிற்றுப்பத்து தொகு

மற்றொரு எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை),பெயர் என்பன குறித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆற்றுப்படை நூல்கள் தொகு

பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப்பற்றிச் சொல்லப்படுகிறது. பாணர், பாடினி, விறலியர், கூத்தர் முதலான இசைக் கலைஞர்களைப்பற்றிச் சொல்லப்படுகிறது.

மலைபடுகடாம் தொகு

மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. தொல்காப்பியம்,செய்யுளியல்:118
  2. தொல்காப்பியம்,செய்யுளியல்:121
  3. பேராசிரியர் உரை,தொல்காப்பியம்,செய்யுளியல்:121
  4. பரிபாடல்: 12, வரி 40-43
  5. பரிபாடல்: 17, வரி 9-21
  6. பரிபாடல்:17 வரி 33-38
  7. மலைபடுகடாம். 2-11