செய்குத்தம்பிப் பாவலர்

இந்தியத் தமிழ் புலவர்
(சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சதாவதானி செய்குதம்பிப் பாவலர்(ஜூலை 31, 1874 - பெப்ரவரி 13, 1950) தமிழ்ப் புலவர். சீறாப்புராணத்திற்குச் உரையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். ஒரே சமயத்தில் பல வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னு கலையில் சிறந்து விளங்கியவர்.

செய்குத்தம்பிப் பாவலர்
இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை
பிறப்பு(1874-07-31)சூலை 31, 1874
இடலாக்குடி
இறப்புபெப்ரவரி 13, 1950(1950-02-13) (அகவை 75)
பெற்றோர்பக்கீர் மீரான் சாகிபு-அமீனா

பிறப்பு

தொகு

நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும் மூன்றாவது மகனாக 1874 ஜூலை 31-இல் பிறந்தார்.

கல்வி

தொகு

அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன. எனவே செய்குதம்பி இம்மலையாளமொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தார். இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்் தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். அந்தாதி, சிலேடை, யமகம், திரிபு ஆகிய வடிவங்களில் கவிபுனையக் கற்றார்.

ஞானியார் அப்பாவின் மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு என்னும் நூலை சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடுவுக்குத் தனது 21 ஆம் வயதில் செய்குதம்பி உதவினார். அதனால் ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்தில் மாதம் ரூபாய் 60 ஊதியமும் பிற வசதிகளும் பெற்று பிழைதிருத்தும் புலவராகப் பணியாற்றினார்.

பதிப்பித்தவை

தொகு
  1. ஞானியார் அப்பாவின் மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு
  2. வேதாந்த விவகாரக் கிரிமினல் கேசு
  3. தேவலோகத்துக் கிரிமினல் கேசு

சீறாப்புராண உரை

இயற்றியவை

தொகு

கவிதை நூல்

தொகு
  1. நபிகள் நாயக மான்மிய மஞ்சரி
  2. திருக்கோப்பற்றுப் பதிஞ்சம்
  3. பத்தந்தாதி
  4. திருமதினந்தந்தாதி
  5. கோப்பந்துக் கலம்பகம்
  6. கோப்பந்துப் பிள்ளைத்தமிழ்
  7. கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை
  8. நீதிவெண்பா
  9. ஷம்சுத்தாசின் சேவை

உரைநடை நூல்கள்

தொகு
  1. தேவலோக பழிக்குள்ள வழக்கு
  2. வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு
  3. எல்லார்க்கும் பார்க்கத் தகுந்த எட்டுக்கிரிமினல் கேஸ்

சதாவதானி

தொகு

தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்றுச் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எனப் பட்டம் பெற்றவர்.

சொற்பொழிவாளர்

தொகு

செய்குதம்பி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.

விடுதலைப் போராட்டத்தில்

தொகு

ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்துச் சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920 நாஞ்சில் நாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையில் நடந்தன.

"1937-ஆம் ஆண்டில் பாவலர் நாகர்கோவில் நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார். நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார். அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்" என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர். வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.

பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர். நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும் இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலைப் போராட்டத்தின் காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர்.

இறப்பும் இரங்கலும்

தொகு

1950 பிப்ரவரி 13-இல் பாவலர் காலமானார். அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்குக் கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை தலைமை தாங்கினார். அவரது இரங்கல் பாட்டு:

"ஓருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனைச்-சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பிப் பாவலனை
எந்தநாள் காண்போம் இனி"

என்று வருந்திப் பாடினார்.

நினைவுச் சிறப்புகள்

தொகு

பாவலர் மற்றும் கவிமணி விழாக்களை அரசு ஆண்டுதோறும் நடத்துகிறது. பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு 'பாவலர் தெரு' என்று அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்குச் 'சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்குப் பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.[1]

நினைவு மண்டபம்

தொகு

தமிழ்நாடு அரசு செய்குத்தம்பிப் பாவலர் நினைவைப் போற்றும் வகையில் அவருக்குக் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இடலாக்குடியில் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு 900 சதுர அடி பரப்பளவில் 125 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நூல் நிலையமும், படிப்பகமும் செயல்பட்டு வருகின்றன.

சிறப்பு அஞ்சல் தலை

தொகு

இந்திய அரசால் 31 திசம்பர் 2008 அன்று இவரது நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.[2]

ஆதாரம்

தொகு
  1. தினமணி நாள்:சனிக்கிழமை/31-7-1999
  2. "India post-stamps 2008". Archived from the original on 2009-04-19. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.

சான்றாவணங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்குத்தம்பிப்_பாவலர்&oldid=4051428" இலிருந்து மீள்விக்கப்பட்டது