சம்சாமா

பெரிய போர் பீரங்கி

சம்சாமா (Zamzama) அல்லது "பாங்கியன்வாலா டோப்" என்றும் அழைக்கப்படும் இது ஓர் பெரிய போர் பீரங்கியாகும். இது சுமார் 1757இல் உருவாக்கப்பட்டது.[1] அந்த நேரத்தில், துராணிப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இலாகூரில் இருந்தது. தற்போது பாகிஸ்தானின் இலாகூர் அருங்காட்சியகத்தின் முன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

லாகூரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சம்சாமா பீரங்கி.

பீரங்கிதொகு

சம்சாமா பீரங்கி 14 அடி 4 + 1/2 அங்குலங்கள் (4.382 மீட்டர்) நீளம் கொண்டது. இதன் துளை 9 + 1⁄2 அங்குலங்கள் (24 சென்டிமீட்டர்) கொண்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் அதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய துப்பாக்கிகளில் ஒன்றான இது 1757ஆம் ஆண்டில் ஷா நஜீர் (முன்னாள் முகலாய ஆளுநர் முயின்-உல்-முல்கினின் உலோகக் கலைஞர்) என்பவரால் ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானியின் ஆட்சியில் பிரதமராக இருந்த ஷா வாலி கானின் மேற்பார்வையில் அதே அளவிலான மற்றொரு பீரங்கியுடன் இலாகூரில் உருவாக்கப்பட்டது.[2]

 
1903இல் பீரங்கி

வரலாறுதொகு

1761 இல் பானிப்பத் போரில் அகமது ஷா இந்த பீரங்கியைப் பயன்படுத்தினார். போருக்குப் பிறகு, காபூலுக்குத் திரும்பும் வழியில், பீரங்கியை எடுத்துச் செல்ல வேண்டிய வண்டி தயாராக இல்லாததால், அதை தனது ஆளுநர் கவாஜா உபேத்துடன் லாகூரிலேயே விட்டுவிட்டார். இதனுடன் செய்யப்பட்ட மற்ற பீரங்கியை அவர் தன்னுடன் எடுத்துச் சென்றார். அது செனாப் வழியாகச் சென்ற போது தொலைந்து போனது.

1762ஆம் ஆண்டில், தில்லான் ஜாட் ஆட்சியாளர் மகாராஜா ஹரி சிங் பாங்கி என்பவர், கவாஜா உபேத்துடன் போருக்குச் சென்றார். முகலாய ஆளுநர் கவாஜா உபேத் தனது ஆயுதங்களை வைத்திருந்த லாகூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்த கவாஜா சைத் கிராமத்தை ஹரி சிங் பாங்கி தாக்கினார். மேலும் அவரது பீரங்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினார். கைப்பற்றப்பட்ட பீரங்கிகளில் "சம்சாமா" பீரங்கியும் இருந்தது. பின்னர், அதனைக் கைப்பற்றிய சீக்கியரின்ப் பெயரால் "பாங்கி டோப்" என்ற பெயர் மாற்றப்பட்டது

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இது இலாகூர் கோட்டையில் இருந்தது. அதன்பிறகு, ராஜா இலெக்னா சிங்கும், மகாராஜா குஜ்ஜார் சிங் பாங்கியும் இதை கைப்பற்றினர். மேலும் அவர்கள் அதை சந்தாவலியா ஜாட் ஆட்சியாளர் சரத் சிங் சுகேர்காக்கியாவுக்குக் கொடுத்தனர். இந்த பீரங்கியை சரத் சிங் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது என்றும் அது தங்களிடமே இருக்கும் என்றும் பாங்கி சர்தார்கள் நினைத்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, சரத் சிங் இந்த பீரங்கியை குஜ்ரன்வாலாவிலுள்ள தனது கோட்டைக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றார்.

சரத் சிங்கிடமிருந்து இந்த பீரங்கியை சத்தாக்கள் பறித்தனர். அவர்கள் அதை அகமத்நகருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அகமத் கான் சத்தாவிற்கும், பிர் முகம்மது சத்தாக்களுக்கும் இடையிலான சர்ச்சையின் ஒரு பகுதியாக மாறியது. பின்னர் நடந்த சண்டையில், அகமத் கானின் இரண்டு மகன்களும், பிர் முகம்மதுவில் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில், குஜ்ஜார் சிங் பாங்கி பிர் முகம்மதுவுடன் இணைந்தார். வெற்றிக்குப் பின்னர், பீரங்கி குஜ்ஜார் சிங்கிடம் சென்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பீரங்கியை சரத் சிங் சுகர்காக்கியா கைப்பற்றினார். அவரிடமிருந்து இது மீண்டும் பஷ்தூன்களால் பறிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு, ராஜா ஜந்தா சிங் பாங்கி சத்தாவின் பஷ்தூன்களை தோற்கடித்து பீரங்கியை அமிருதசரசு கொண்டு வந்தார். 1802ஆம் ஆண்டில், ரஞ்சித் சிங், பாங்கிகளை தோற்கடித்த பிறகு, பீரங்கியை தனது வசமாக்கினார். தஸ்கா, கசூர், சுஜான்பூர், வசிராபாத், முல்தான் ஆகியப் போர்களில் அவர் இதைப் பயன்படுத்தினார். முல்தான் முற்றுகையில், பீரங்கி மோசமாக சேதமடைந்தது. [3]

சேதம்தொகு

மேற்கூறியப் போர்களில் பீரங்கி அதன் பயன்பாடு காரணமாக கடுமையாக சேதமடைந்தது. மேலும் எந்தவொரு பயன்பாட்டிற்கும் தகுதியற்றதாக் இருந்தது. இதனால் அதை லாகூருக்கு கொண்டு வர வேண்டியிருந்தது. இது லாகூரின் தில்லி வாயிலின் வெளியே வைக்கப்பட்டது. இது 1860 வரை அங்கேயே இருந்தது. 1864ஆம் ஆண்டில், மௌலவி நூர் அகமத் சிஷ்டி தஹிகாதி சிஷ்டியைத் தொகுத்தபோது, இது இலாகூர் அருங்காட்சியகத்தின் பின்னால் உள்ள வசீர் கான் தோட்டத்தின் கவனிப்பாரற்று இருப்பதைக் கண்டார்.

1870ஆம் ஆண்டில், இலாகூர் அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் இதற்கு ஒரு புதிய புகலிடம் கிடைத்தது. 1870 இல் எடின்பர்க் டியூக் லாகூருக்கு வருகை புரிந்த சந்தர்ப்பத்தில் இது தோலிண்டன் சந்தையில் வைக்கப்பட்டது. அருங்காட்சியகத்தின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டபோது அது மேலும் மேற்கு நோக்கி அகற்றப்பட்டு பல்கலைக்கழக மண்டபத்திற்கு எதிரே வைக்கப்பட்டது. 1977 இல் சரிபார்க்கப்பட்ட சம்சானா தற்போதுள்ள இடத்தில் (மால் தெரு) வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சாமா&oldid=3190770" இருந்து மீள்விக்கப்பட்டது