சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்

அறிஞர் அண்ணா எழுதிய நாடகம்

சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து இராஜ்யம் என்பது கா. ந. அண்ணாதுரை எழுதிய ஒரு நாடகம் ஆகும். வங்காள வரலாற்று ஆசிரியர் ஜாது நாத் சர்க்காரால் எழுதப்பட்ட சத்ரபதி சிவாஜி குறித்த வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகத்தை அண்ணாதுரை எழுதினார். இது 1945ஆம் ஆண்டு சென்னையில் அரங்கேறியது. அன்றுமுதல் இந்த நாடகமானது திராவிட இயக்க நிகழ்வுகளிலும், திமுக மாநாடுகளிலும் பலமுறை அரங்கேற்றபட்டது.

சிவாஜி கண்ட இந்து இராஜ்யம் நாடகத்தில் காகப்பட்டராக கா. ந. அண்ணாதுரையும், பேரரசர் சிவாஜியாக ஈ. வெ. கி. சம்பத்தும் நடிக்கும் காட்சி

அரங்கேற்றம்

தொகு

1945 திசம்பர் 15 அன்று சென்னை அரண்மனைக்காரத் தெருவில் செயிண்ட் மேரி மண்டபத்தில் பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சென்னை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் இந்த நாடகம் அரங்கேறியது. நூறு கூட்டங்களில் பேசவேண்டிய விசயங்களை இந்த நாடகம் ஒரே நிகழ்வில் பேசியிருகிறது என்று ஈ. வெ. இராமசாமி அவர்களால் பாராட்டப்பட்டது. முதலில் இந்த நாடகத்தில் சிவாஜியாக நடிக்க டி. வி. நாராயணசாமியிடம் ஒப்புக் கொண்டிருந்த ம. கோ. இராமச்சந்திரன் பின்னர் ஒத்திகைக்க அழைத்தபோது நடிக்க மறுத்துவிட்டார். அதனால் அதுவரை நாடகங்களில் பெண் பாத்திரங்களை ஏற்றுவந்த கணேசனை அழைத்துவந்து டி. வி. நாராயணசா சிவாஜி வேடத்தில் நடிக்கவைத்தார். நாடகத்தில் அண்ணா காகபட்டராகவும், டி. வி. நாராயணசாமி சந்திரமோகனாகவும் நடித்தார். நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்து பெரியாரின் பாராட்டுதலைப் பெற்ற கணேசன், அதன் பிறகு கணேசன் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டார்.[1] [2][3] என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளபட்ட ஒன்றாக உள்ளது. ஆனால் வேரொரு தரவில், அப்போது இந்த நாடகத்தில் ஈ. வெ. கி. சம்பத் பேரரசர் சிவாஜியாககவும், அண்ணாதுரை காகப்பட்டராகவும் நடித்தார் என்றும், ஈ.வே.கி சம்பத் படிப்பைக் கெடுத்துக் கொண்டு நாடகங்களில் நடிப்பதை ஈ.வே.ரா விரும்பவில்லை என்றும், பின்னர் திருச்சிராப்பள்ளியில் பெரியார் தலைமையில் நாடகம் நடத்துவதாக ஏற்பாடு ஆனது. இம்முறை அண்ணாதுரை சம்பத்தை மேடை ஏற்றாமல் அதே நாடத்தில் வேறு வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த வி. சி கணேசனை சத்ரபதி சிவாஜியாக நடிக்க வைத்தார். வி. சி. கணேசனின் நடிப்பை பாராட்டிய ஈவேரா அவருக்கு சிவாஜி என்ற பட்டத்தை அளித்தார்.[4]

கதைச் சுருக்கம்

தொகு

வேளாண் குடியைச் சேர்ந்தவரும், சிறந்த போர்வீரருமான சிவாஜி தனது வாளின் வலிமையால் பல்வேறு கோட்டைகளைக் கைப்பற்றி மராத்திய பேரரசை உருவாக்கினார். அவர் தன் வாளின் வலிமையால் பேரரசை உருவாக்கினாலும், கைப்பற்றிய பகுதிகளில் நிலையான ஆட்சியை உருவாக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. அப்போதுதான் அது நிலைத்து நிற்கும். அதற்கு அவர் அரியணை ஏறி சத்ரபதியாக மகுடம் சூடவேண்டியது அவசியம்.

அன்றைய மராத்திய சமூகத்தில் பிராமணர்களும், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த காயஸ்த்துகள் அல்லது பிரபுக்களான சத்திரிய சாதியினர் மட்டுமே படித்தவர்களாக இருந்தனர். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசாங்கத்தை நிர்வகிப்பது இயலாது என்ற நிலை இருந்தது. சத்திரியரல்லாத சிவாஜி மன்னராக முடிசூடுவதை பிராமணர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதனால் சிவாஜி வாரணாசியில் இருந்த வேத விற்பன்னரான காகப்பட்டர் என்பவரை தன்னை சத்திரியராக அறிவிக்கும்படி கோருகிறார். காகப்பட்டர் அவரை சத்திரியராக ஏற்க மறுக்கிறார். ஆனால் பின்னர் சிவாஜி மக்கள் செல்வாக்குக் கொண்டவர் அவர் எப்படியும் மன்னராக முடிசூடிக்கொள்வார். அவரைப் பகைத்துக் கொள்வதைவிட அவருக்கு முடிசூட்டி அதன் வழியாக தன் பிராமண சமூகத்திற்கு நன்மை தேடலாம் என்று முடிவு செய்து சிவாஜிக்ககு முடிசூட்ட இசைவு தெரிவிக்கிறார். அதற்காக காகப்பட்டருக்கும், பல்வேறு பிராமணர்களுக்கும் ஏராளமான பொன்னும் பொருளும் சிவாஜி தானமாகத் தருகிறார். பின்னர் பல சடங்குகளை செய்த பிறகே சிவாஜிக்கு சத்திரிய அந்தஸ்து காக பட்டரால் அளிக்கப்பட்டு சத்ரபதியாக முடி சூடப்படுகிறார். இந்த நிகழ்வில் நாட்டின் கருவூளத்தின் பெரும்பகுதி பிராமணர்களுக்கு கொடுக்கபட்ட தானத்தினால் செலவாகிறது. அவர்களின் ஆதிக்கத்தைக் கண்டு வெகுண்டெழும் படைவீரன் சந்திரமோகனிடம் மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தும்படி பணிக்கிறார் சிவாஜி.

இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து அண்ணாதுரை பிராமணர்களின் அதிகாரம் எத்தகையது என்ற கேள்வியை எழுப்புகிறார். சிவாஜியின் வீரத்தால், அவருடைய வாளின் பலத்தால்தான் பேரரசு உருவானது. ஆனால், அதை ஆள்வதற்கு பிராமண வர்க்கத்தின் தயவு தேவைப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை சந்திரமோகன் என்ற போர் வீரன் வாயிலாக சிந்திக்கத் தூண்டுகிறார் அண்ணாதுரை. மக்கள் அறியாமையிலும். பிராமணர்களின் மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு இருப்பதும் இருப்பதுமே இதற்கு காரணம் என்பதை தெளிவாக்குகிறார்.

பரவலர் பண்பாட்டில்

தொகு

ராமன் எத்தனை ராமனடி படத்தில் இந்த நாடகத்தின் ஒரு பகுதியை படத்தின் நாயகன் பாத்திரமான இராமன் (சிவாஜி கணேசன்) நடிப்பதாக காட்சி இடம்பெற்றுள்ளது.[5]

குறிப்புகள்

தொகு
  1. "நடிகமணி டி.வி.என்: திமுகவின் வேர்!". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2024.
  2. எஸ். எஸ். ராஜேந்திரன் நான் வந்த பாதை (எஸ். எஸ். ராஜேந்திரனின் தன்வரலாறு), அகநி வெளியீடு முதற் பதிப்பு செப்டம்பர் 2016 பக்கம் 63-65
  3. ": : ARINGNAR ANNA : :". www.arignaranna.net. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
  4. ஈ.வே.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், அத்தியாயம் 7, தினமணி, 2011 செப்டம்பர் 25
  5. Vamanan (25 December 2017). "மராட்டிய வீரர் சிவாஜியை நடிகர் சிவாஜி கணேசன் சந்தித்ததும் சந்திக்காமல் போனதும்!" (in ta). தினமலர் (Nellai) இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180819114959/http://www.dinamalarnellai.com/web/news/40994/%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF-%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E2%2580%2598%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25B2%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2-%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%259C%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E2%2580%2599-%25E2%2580%2593-108. 

வெளி இணைப்புகள்

தொகு