சுமந்த் மேத்தா
சுமந்த் மேத்தா (Sumant Mehta) (1877 சூலை 1 - 1968 திசம்பர் 15) இவர் 20 ஆம் நூற்றாண்டின் இந்தியாவில் இருந்து வந்த ஒரு மருத்துவரும், சுதந்திர ஆர்வலரும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இலண்டனில் கல்வி கற்ற இவர், 1921இல் பொது வாழ்க்கையில் நுழைவதற்கு முன்பு பரோடா மாநிலத்தின் கெய்க்வாட் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட மருத்துவராக பணியாற்றினார். இவரது மனைவி சாரதா மேத்தாவுடன், இவர் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
சுமந்த் மேத்தா | |
---|---|
பிறப்பு | சூரத் | 1 சூலை 1877
இறப்பு | 15 திசம்பர் 1968 | (அகவை 91)
கல்வி | மருத்துவம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மான்செஸ்டரின் விக்டோரியா பல்கலைக்கழகம் |
பணி | சமூக சேவகர், மருத்துவர், சுதந்திர ஆர்வலர் |
வாழ்க்கைத் துணை | சாரதா மேத்தா (தி. 1898–1968) |
பிள்ளைகள் | இரமேஷ் சும்ந்த் மேத்தா |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுமந்த் மேத்தா 1877 சூலை 1 ஆம் தேதி சூரத்தில் ஒரு வத்நகர நகர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை படுக்ராம் ஷோபராம் மேத்தா பரோடா மாநிலத்தைச் சேர்ந்த மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டின் தனிப்பட்ட மருத்துவராவார். இவரும் இங்கிலாந்தில் படித்தார். இவரது தாயார் தகிகௌரி சூரத்தைச் சேர்ந்தவர். மேத்தா சமூக சீர்திருத்தவாதி துர்க்காராம் மேத்தாவின் பேரனாவார். குசராத்தி புதின ஆசிரியர் நந்தசங்கர் மேத்தாவின் தாய்வழி பேரனுமாவார். [1]
இவர் தனது பள்ளிக் கல்வியை பரோடா மற்றும் மும்பையில் முடித்தார். பின்னர் மும்பையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்தார். 1898இல், இவர் சாரதா மேத்தாவை மணந்தார். இவர் அப்போது மருத்துவ மாணவராக இருந்தார். பின்னர், மேல் படிப்புகளுக்காக இங்கிலாந்தின் மான்செஸ்டருக்குச் சென்றார். [2] 1901இல் மான்செஸ்டரின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். [1]
தொழில்
தொகு1903 இல் தனது தந்தை இறந்தபோது, இவர் கெய்க்வாட்டின் தனிப்பட்ட மருத்துவராகவும். பரோடா மாநிலத்தின் சுகாதார ஆணையராகவும் பணியாற்றினார். [1] இவர் பரோடா மற்றும் நவ்சரியில் மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றினார். சாயாஜிராவ் கெய்க்வாட்டுடன், இவர் 1910–11ல் சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். இது இவரது முற்போக்கு என்ணங்களை விரிவுபடுத்தியது. இராமகிருஷ்ணர், விவேகானந்தர் மற்றும் ஓமர் கய்யாம் ஆகியோரின் மத நூல்கள் மற்றும் படைப்புகளால் இவர் ஈர்க்கப்பட்டார். பரோடா இரண்டாம் மகாராணி சிம்னாபாயினாலும் ஈர்க்கப்பட்டார். 1906இல் கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் கலந்து கொண்டார். கோபால கிருஷ்ண கோகலேவால் ஈர்க்கப்பட்ட பெற்ற இவர், இந்தியச் சேவகர்கள் சங்கத்தில் சேர்ந்தார். மேலும் தனது வாழ்நாள் முழுவதையும் 1915இல் பொது சேவையில் செலவிட முடிவு செய்தார். பின்னர், இவர் கெய்க்வாட் ஆட்சியாளர்களிடமிருந்து தனது பணிகளை விட்டுவிட்டு, 1921இல் தனது மனைவியுடன் பொது வாழ்க்கையில் நுழைந்தார்.
1923ஆம் ஆண்டில், சோஜித்ராவில் நடைபெற்ற குசராத் விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். [1] 1927இல் குசராத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கேற்றார். 1928 பர்தோலி சத்தியாக்கிரகத்தின் போது இவர் தனது மனைவியுடன் சர்போன் முகாமின் பொறுப்பாளராக இருந்தார். [3] இவர்1929 இல் ஒரு இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்தார். இவரது தலைமையின் கீழ், பரோடா மக்கள் சங்கம் 8 மற்றும் 13 வது மாநாடுகள் 1930 ஆம் ஆண்டில் நவ்சாரியிலும், மே 1936 இல் முறையே நவ்சாரிக்கு அருகிலுள்ள கதோர் கிராமத்திலும் நடைபெற்றது. இவர் 1936 இல்கலோலுக்கு அருகிலுள்ள செர்தா கிராமத்தில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார்
இவர் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பழங்குடி மக்களின் நலனுக்காக பணியாற்றினார். இந்துலால் யாக்னிக்குடன், 1938 இல் அரிபுராவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தில் விவசாயிகளின் பேரணியை ஏற்பாடு செய்தார். [4]
தனது ஐரோப்பா பயணத்தின்போது, இந்திய புரட்சியாளர்களான மேடம் பிகாஜி காமா, சியாம்ஜி கிருஷ்ண வர்மா, வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா ஆகியோரை சந்தித்தார். சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றதற்காக இவர் கைது செய்யப்பட்டு ஜலல்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதற்காக சபர்மதி, விசாபூர் மற்றும் நாசிக் சிறைகளில் ஐந்து ஆண்டுகள் கழித்தார். [4]
இவர் ஆத்மகதா என்ற சுயசரிதையை எழுதினார். இது 1971 இல் இவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது. இவரது மற்ற படைப்புகளில் சமாஜ்தர்பன் மற்றும் ஹலி: ஜமீன்னா குலாமோ ஆகியவை அடங்கும். [1] பிற்காலத்தில் பழங்குடியினரின் அடிமைத்தனத்தின் ஒரு வடிவமான ஹலியை இவர் விவரித்தார். இவர் தனது படைப்புகளில் பழங்குடி மக்களை ராணிபராஜ் ( 'வன மக்கள்') என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் 1968 திசம்பர் 15, அன்று இறந்தார். [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Vaghela, Arun (2018-07-01). "૨૦મા સૈકાના ગુજરાતનો અરીસો : ડો.સુમંત મહેતા (1877-1968)" [The Mirror 20th Century Gujarat: Dr. Sumant Mehta (1877-1968)]. Divya Bhaskar (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.
- ↑ Sujata, Menon (2013). Sarkar, Siddhartha. ed. "An Historical Analysis of the Economic Impact on the Political Empowerment of Women In British India". International Journal of Afro-Asian Studies (Universal-Publishers) 4 (1): 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61233-709-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-3537. https://books.google.com/books?id=DeaVBAAAQBAJ&pg=PA17.
- ↑ Chatterjee, Ramananda (1942). The Modern Review. 72. Prabasi Press Private Limited. p. 118. https://books.google.com/books?id=mvwEAAAAMAAJ.
- ↑ 4.0 4.1 Shukla, Jayeshkumar R. (January 2002). Thaker, Dhirubhai (ed.). ગુજરાતી વિશ્વકોશ (in குஜராத்தி). Vol. XV (1st ed.). Ahmedabad: Gujarat Vishvakosh Trust. pp. 539–540. இணையக் கணினி நூலக மைய எண் 248968453.