சோளப்பொரி

சோளப்பொரி
Popcorn - Studio - 2011.jpg
சோளக்கதிர்கள்
Popcorn02.jpg
பொரித்த சோளப்பொரி
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் செடிகள்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலைச் செடிகள்
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Zea
இனம்: Z. mays
துணையினம்: Z. m. averta
மூவுறுப்புப் பெயர்
Zea mays averta

மக்காச்சோள (Popcorn) மணிகளைப் பொரிக்கையில் அவை விரிந்து, காற்றடைத்து உருவாவது சோளப்பொரி. கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றைப் போலவே மக்காச்சோளத்தின் மணிகளும் அடர்ந்த மாவுப்பொருளையும் உறுதியான புறப்பகுதியையும் கொண்டுள்ளதால் இவற்றைச் சுடும்போது உள்ளே அழுத்தம் வளர்ந்து பட்டென்ற ஒலியுடன் வெடிக்கின்றன. சோளப்பொரி செய்வதற்காகவே சிலவகை மக்காச்சோளங்களைப் பயிரிடுகின்றனர்.

பெரும்பாலும் உண்ணுவதற்காகவே செய்யப்படும் சோளப்பொரியைச் சில வேளைகளில் அணி செய்யவும் வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். சோளப்பொரியைச் சமைப்பதற்குப் பல விதமான வழிகள் உள்ளன. கடைகளில் பெரிய அளவில் இவற்றைப் பொரிக்கும் இயந்திரத்தை சார்லசு கிரிட்டோர்சு என்பவர் முதலில் உருவாக்கினார். இவற்றைச் சமைக்கும் முறையைப் பொருத்து இவற்றை உடல்நலத்துக்கேற்ற உணவுகள் என்றோ தவிர்க்கப்பட வேண்டியவை என்றோ கருதுகின்றனர்.

வரலாறுதொகு

சோளப்பொரியை ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்கப் பழங்குடியினர் கண்டு பிடித்துள்ளனர். பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்த ஆங்கிலேயர், பழங்குடியினரிடம் இருந்து இதைப்பற்றி அறிந்தனர். இரண்டாம் உலகப்போருக்குமுன் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியின்போது பிற உணவுகளைக் காட்டிலும் சோளப்பொரி மலிவாக இருந்ததால் வெகுவாகப் பரவியது. வேளாண் தொழிலாளர்களும் இதனால் பயனடைந்தனர். உலகப்போரின்போது அமெரிக்க ஒன்றியத்தில் சர்க்கரை விற்பனையின்மீது கட்டுப்பாடுகள் இருந்ததால் இனிப்பு மிட்டாய்கள் குறைவாகவே கிடைத்தன. அதனால் அமெரிக்க மக்கள் முன்பை விட மூன்று மடங்கு சோளப்பொரியை உண்ணத் தொடங்கினர்.[1]

செய்முறைதொகு

 
மக்காச்சோள மணியும் சோளப்பொரியும்

மக்காச்சோள மணிகளில் சிறிது ஈரமும் எண்ணெயும் இருக்கும். அடர்ந்த மாவுப்பொருளுக்கு வெளியில் நீர்புகா புறப்பொருள் இருக்கிறது.[2] நீரின் கொதிநிலைக்கு மேலான வெப்பத்துக்கு சுடும்போது உறுதியான புறப்பொருளுக்கு உள்ளேஉயர் அழுத்த நீராவி உருவாகிறது. கூடவே மாவுப்பொருளின் மூலக்கூறுகளும் உடைந்து நீரோடு வேதி இயக்கத்தில் இணைகின்றன. 180 செல்சியசு வெப்பம் வரையிலும் 930 கிலோ பாசுக்கல் அழுத்தம் வரையும் எட்டும்போது மக்காச்சோள மணி வெடிக்கிறது.[2] அப்போது உள்ளிருக்கும் மாவுப்பொருளும் புரதப்பொருளும் காற்று நிறைந்த நுரைக்கூழ்மமாகிறது. வெப்பம் குறைகையில் அது திடமாகி மொறுமொறுப்பான சோளப்பொரியாகின்றது.[2]

உடல்நலன்தொகு

 
சோளப்பொரி விற்பனை செய்யும் அடுப்புடன் கூடிய ஒரு தள்ளுவண்டி

அமெரிக்காவின் குழந்தைகள் நல மருத்துவர் அமைப்பு நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சோளப்பொரியை ஊட்ட வேண்டாம் என அறிவுறுத்துகிறது. சோளப்பொரியின் வெளித்தோல் எங்கேனும் குழந்தைகளின் தொண்டையில் அடைத்துக் கொண்டு மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் இவ்வாறு எச்சரிக்கின்றனர். இதற்கெனப் புறத்தோல் இல்லாத சோளப்பொரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

நுண்ணலை அடுப்பில் பொரிக்கும்போது வெண்ணெயையோ வேறு பொருட்களையோ சேர்க்கின்றனர். டையசிட்டைல் என்ற செயற்கை வெண்ணெயைச் சேர்ப்பதால் மூச்சுத் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும்.[3] சோளப்பொரியில் இயல்பாக சர்க்கரை இல்லாததால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை பரிந்துரைக்கப்பட்டாலும், இப்போது விற்கும் சோளப்பொரிகளை தேங்காய் எண்ணெய், கேராமல், சாக்லேட்டு போன்றவற்றைச் சேர்த்துச் செய்வதால் அவை பெரும் தீங்கு விளைவிக்கக் கூடும்.

பிற பயன்கள்தொகு

இவற்றில் உள்ள சில மூலக்கூறுகள் தரும் நறுமணம் பொதுவாக மக்களைக் கவர்கிறது. அதனால் பிற உணவுகளில் இவற்றைச் சேர்க்கின்றனர். பல இடங்களில் சோளப்பொரிகளைக் கோர்த்து வீட்டை அழகு செய்வதற்கான அணிகளாகவும் பயன்படுத்துகின்றனர்.[4][5] உடையக்கூடிய பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்த்தும்போது அவற்றைப் பாதுகாக்க பாலிசுட்டிரீன் என்ற பொருள் மிகுதியாகப் பயன்படுகிறது. இவற்றுக்கு மாற்றாக சோளப்பொரியைப் பயன்படுத்துவதால் இயற்கைச் சீரழிவு குறையும் என்று இவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.[6]

மேற்கோள்கள்தொகு

இவற்றைப் பற்றிய நூல்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சோளப்பொரி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளப்பொரி&oldid=2953100" இருந்து மீள்விக்கப்பட்டது