ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.

வாழ்க்கைதொகு

ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.1959 ஆம் ஆண்டு இவரும் ஆனந்தா என்பவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனந்தா தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

அரசியல் ஈடுபாடுதொகு

இவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரி கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.

அதன் பிறகு மதுரைக்கு திரும்பி தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸிய கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார்.

படைப்புகள்தொகு

இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்

நாவல்கள்தொகு

 • நாளை மற்றும் ஒரு நாளே,
 • குறத்தி முடுக்கு.

சிறுகதைகள்தொகு

 • எங்கள் ஊர்
 • டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
 • யாரோ முட்டாள் சொன்ன கதை
 • தீராக் குறை
 • சம்பாத்தியம்
 • பூர்வாசிரமம்
 • அக்கினிப் பிரவேசம்
 • நான் புரிந்த நற்செயல்கள்
 • கிழவனின் வருகை
 • பூவும் சந்தனமும்
 • ஜீரம்
 • போலியும் அசலும்
 • துக்க விசாரனை
 • மனிதன்
 • இலட்சியம்
 • ஓடிய கால்கள்
 • நிமிஷக் கதைகள்

இறுதிதொகு

கம்யூனிசக் கொள்கைகளில் ஏமாற்றம் அடைந்த காலகட்டத்தில் இவருக்குப் போதைப் பழக்கம் ஏற்பட்டது. கடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._நாகராஜன்&oldid=3324809" இருந்து மீள்விக்கப்பட்டது