தமிழரசன்

தமிழரசன் (14 ஏப்ரல் 1945 – 1 செப்டம்பர் 1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

குடும்பம்தொகு

தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் மதகளிர் மாணிக்கம் என்ற சிற்றூரைச் சேர்ந்த துரைசாமி என்பவருக்கும் பதூசு அம்மையார் என்பவருக்கும் மகனாக தமிழரசன் பிறந்தார். இவருக்கு அன்பழகி என்ற சகோதரி உண்டு.[1]

நக்சல் இயக்கத்தில்தொகு

தமிழரசன் கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் என்று சாரு மசூம்தார் வேண்டுகோளை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.[2] சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தொழிப்பு செய்துவந்தார்.

கைதுதொகு

மிசா காலகட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த புலவர் கலியபெருமாள் போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர்.[3] மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார்

கருத்து வேறுபாடுகள்தொகு

தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக புது இயக்கம் கண்டனர்.

மரணம்தொகு

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாரண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[4] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்.[5]

எழுதிய நூல்கள்தொகு

  • சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் (1985)

மேற்கோள்கள்தொகு

  1. பதூசு அம்மையாருக்கு வீரவணக்கம், சிந்தனையாளன் (இதழ்), 2020 நவம்பர், பக்கம். 6
  2. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.71
  3. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.104
  4. "வீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்?". செய்திக்கட்டுரை. ஒன் இந்தியா. 23 ஆகத்து 2000. 20 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழரசன்&oldid=3661761" இருந்து மீள்விக்கப்பட்டது