தேவார், மத்தியப் பிரதேசம்

இந்தியாவின் மத்திய மாகாணங்களிலுள்ள குடியேற்றப் பகுதி

தேவார் (Tewar) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். இது பழங்கால நகர அரசான திரிபுரியின் தளமாகும். மேலும் 8-13 ஆம் நூற்றாண்டுகளில் பிற்கால கலாச்சுரிகளின் தலைநகரமாகவும் இருந்துள்ளது.

தேவார்
திரிபுரி
கிராமம்
தேவார் is located in மத்தியப் பிரதேசம்
தேவார்
தேவார்
ஆள்கூறுகள்: 23°08′35″N 79°50′47″E / 23.1430°N 79.8465°E / 23.1430; 79.8465
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ஜபல்பூர்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்ஜபல்பூர்
ஏற்றம்
388 m (1,273 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
483053
ஐஎசுஓ 3166 குறியீடுஎம்பி-ஐஎன்

சொற்பிறப்பியல்

தொகு

தேவார் முதலில் "திரிபுரி" (அதாவது, "மூன்று நகரங்கள்") என்ற சமசுகிருதப் பெயரால் அறியப்பட்டது. இது பண்டைய இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் சில சமயங்களில் "திரிபுரா" என்ற மாறுபாட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. "திர்புரி", பெயரின் பிராகிருத வடிவம், கிமு 2 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய செப்பு நாணயங்களில் காணப்படுகிறது. 11 ஆம் நூற்றாண்டின் ஈரானிய அறிஞர் அல்-பிருனி இந்த நகரத்தை "தியோரி" என்று குறிப்பிடுகிறார். நகரத்தின் நவீன பெயர் "தியூரா" என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். இது "திரிபுரா" என்பதன் சிதைவு. [1]

புராணக் கதைகளின்படி, இந்த நகரத்தின் பெயர் மூன்று அரக்கர்களால் கட்டப்பட்ட மூன்று கோட்டைகளிலிருந்து பெறப்பட்டது, இது கூட்டாக திரிபுராசுரன் என்று அழைக்கப்படுகிறது. [2]

வரலாறு

தொகு

திரிபுரி நகரத்தில் செப்புக் காலத்தின் பிற்பகுதியிலிருந்து குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். [3] 1951-52 இன் போது, எம். ஜி. தீக்சித் தலைமையிலான சாகர் பல்கலைக்கழகக் குழு தேவாரில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தியது. மேலும் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்ட கலாச்சாரத்தின்எச்சங்கள் குறுனிக்கல் காலத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. 1966-67ஆம் ஆண்டில், எச். டி. சங்கலியா தலைமையில் சாகர் பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் , வதோதரா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட குழுவால் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அகழ்வாராய்ச்சிக்கு மத்தியப் பிரதேச அரசு நிதியுதவி அளித்தது. புனே மற்றும் பரோடா அணிகள் பின்னர் பின்வாங்கின, ஆனால் சாகர் பல்கலைக்கழகம் 1971 வரை கே. டி. வாச்பாய் தலைமையில் அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்தது. இந்த அகழ்வாராய்ச்சிகள் செப்புக் கால மட்பாண்டங்களின் ஓடுகளை வெளிப்படுத்தின. ஆயினும் அந்த இடத்தில் செப்புக் கால குடியேற்றத்தின் ஆதாரத்தை உறுதியாக உறுதிப்படுத்த முடியவில்லை. [4]

"திரிபுரி" என்ற பெயருடன் கூடிய பல நாணயங்கள் தேவாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [5] பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள இந்திய நாணயங்களின் பட்டியலின் ஆசிரியரான ஜான் ஆலன், இந்த நாணயங்களை கிமு 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது கிமு 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்றார். மற்ற அறிஞர்கள் இந்த நாணயங்களை கிமு 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேதியிட்டனர்.[2] இந்த நாணயங்கள் திரிபுரி நகர அரசால் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.[6] திரிபுரியின் மக்கள் திரிபுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் இந்த நகரம் பண்டைய சேதி இராச்சியத்தின் தலைநகராக செயல்பட்டது. [7]

தேவாரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் ஆட்சியாளர்களான பவதத்தன், அஜதத்தன், அபயதத்தன் ஆகியோரின் ஈய நாணயங்களும் கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது கிமு 1 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேதியிட்டவை. [6] கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 1 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில், இப்பகுதி தத்தன், மித்ரர் வம்சங்களால் ஆளப்பட்டதாகத் தெரிகிறது. [7] ஒரு மித்ர வம்ச நாணயமும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [6] அந்த இடத்தில் பல சாதவாகன மன்னர்களின் நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அவர்கள் தொடர்ந்து இப்பகுதியை ஆண்டதைக் குறிக்கிறது. [7] சாதவாகனர்களுக்குப் பிந்தைய காலத்திலிருந்து, அகழ்வாராய்ச்சிகள் போதி வம்சத்தின் சுடுகளிமண் முத்திரைகளையும் நாணயங்களையும் வெளிப்படுத்தியுள்ளன. அதன் ஆட்சி 2 - 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையது. [8] நாணயங்களும் முத்திரைகளும் மன்னர்களான சிவ போதி, வாசு போதி , சந்திர போதி ஆகியோரால் வெளியிடப்பட்டது. [9]

திரிபுரி 8 ஆம் நூற்றாண்டில் காலச்சூரிகளால் ஆளப்பட்ட தஹாலா-மண்டல இராச்சியத்தின் தலைநகராக மாறியது. [1] [7] 13ஆம் நூற்றாண்டில் வம்சத்தின் இறுதி வரை இது ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. [3] 13ஆம் நூற்றாண்டில், இப்பகுதி [[கோண்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. [7]

மக்கள்தொகை

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவார் கிராமத்தில் 724 குடும்பங்கள் உள்ளன. இதில் 3,468 மக்கள் வசிக்கின்றனர். [10]

சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு