தொல்லியல் அருங்காட்சியகம், காங்ரா
தொல்லியல் அருங்காட்சியகம், காங்ரா இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்ரா என்னும் இடத்திலுள்ள காங்ரா கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இது 2002 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. இது கோட்டைக்கு வடக்கே பான்கங்கா ஆற்றைப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள், கட்டிடக் கூறுகள், நாணயங்கள், ஓவியங்கள் என்பவற்றுடன் வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சிலவும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இங்குள்ள காட்சிப்பொருட்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கான காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன.[1]
முதல் பிரிவு, வரலாற்றுக்கு முந்தியகாலப் பிரிவு ஆகும். இங்கே கீழ் பழையகற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், கைக்கோடரிகள் போன்றவை உள்ளன. இங்கே பல்வேறு பண்பாட்டுக் கட்டங்களில் மனிதனின் வளர்ச்சியை விளக்கும் படங்களும் உள்ளன. இப் பிரிவில் உள்ள விளக்கப் படங்களில் பொதுவாக காங்ராப் பகுதியினதும், சிறப்பாக காங்ரா கோட்டையினதும் வரலாறுகள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பிரிவில் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் இந்துக் கடவுள்களான சிவன், திருமால், உமாமகேசுவரன், கணேசர், அனுமான் ஆகியோருடைய சிற்பங்களும், சமண மதத்தைச் சேர்ந்த காங்ரா மலைக் கோட்டையில்தீர்த்தங்கரர்களுடைய சிற்பங்களும் அடங்குகின்றன. சமணச் சிற்பங்களுள் முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதருடைய சிற்பம் குறிப்பிடத்தக்கது ஆகும். இவற்றுடன் பெரும்பாலும் இந்துக் கோயில்களுக்குரிய கட்டிடக்கலைக் கூறுகளும் இப்பிரிவில் உள்ளன. இவற்றுள் தூண்களின் அடிப்பகுதி, போதிகைகள், வாயில்களின் மேற்பகுதிக் கூறுகள் போன்றவை அடங்குகின்றன. பெரும்பலான இக் கூறுகள் 1905 ஆம் ஆண்டில் இப் பகுதியில் இடம்பெற்ற புவியதிர்வின் போது அழிந்துபோன கோயில்களுக்கு உரியவையாகும்.
மூன்றாம் பிரிவான நாணயவியல் பிரிவில், காங்ரா பகுதியின் பல்வேறு அரசர்களும், அரச மரபினரும் வெளியிட்ட செப்பு மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளன. இவற்றுள் இந்துக்களான சாகி, கட்டோச் மன்னர்களும், இசுலாமியர்களும் வெளியிட்ட நாணயங்களும், பிரித்தானியர் வெளியிட்ட நாணயங்களும் அடங்குகின்றன.
நான்காம் பிரிவு ஓவியங்களுக்கானது. இங்கே காங்ரா பாணியில் அமைந்த ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Archaeological Museum, Kangra". Archived from the original on 2017-09-28. பார்க்கப்பட்ட நாள் 2009-03-27.