நில ஓநாய்

பாலூட்டி இனம்
நில ஓநாய்
புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் – அண்மைக்காலம்
நமீப்-நோர்டில் நில ஓநாய், நமீபியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: கையானிடே
பேரினம்: புரோடெலசு
இனம்: பு. கிறீசுடேடா
இருசொற் பெயரீடு
புரோடெலசு கிறீசுடேடா
இசுபேர்மான் 1783
நில ஓநாய் வாழும் பகுதி

நில ஓநாய் ( Aardwolf ) என்பது பூச்சியுண்ணி கழுதைப்புலி இனமாகும். இது கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதன் பொதுப் பெயரான அர்த்வுல்ப் என்பது ஆப்பிரிக்கானா மற்றும் இடச்சு மொழியில் "நில ஓநாய்" என்று பொருள்படும். [2] [3] இது மான்ஹார்-நரி [4] [5] (ஆப்ரிகானா " மான் -நரி"), கரையான் உண்ணி கழுதைப்புலி [6] இதன் குதச் சுரப்பியில் இருந்து திரவத்தை சுரக்கும் பண்பானது, ஆப்பிரிக்க சிவெட் உடன் ஒத்துள்ளது. இதனால் சிவெட் கழுதைப்புலி என்றும் அழைக்கப்படுகிறது. [7]

ஊனுண்ணி வரிசையில் உள்ள இதன் உறவினர்கள் பலரைப் போல, நில ஓநாய் பெரிய விலங்குளை வேட்டையாடுவதில்லை. இது பூச்சிகளையும், அவற்றின் குடம்பிகளையும், [8] முதன்மையாக கறையான்களை உண்கிறது; ஒரு நில ஓநாய் அதன் ஒட்டும் தன்மையுள்ள, நீண்ட நாக்கைப் பயன்படுத்தி ஒரே இரவில் 300,000 கரையான்களை உண்ணும். [9] நில ஓநாயின் நாக்கு கரையான்களின் கடுமையான கடியைத் தாங்கும் அளவுக்கு உறுதியானதாக மாறியுள்ளது. [10]

நில ஓநாய் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவின் வளர்ச்சி குன்றிய மரங்கள், புதர்கள் சூழ்ந்த திறந்த நிலங்கள் கொண்ட புதர்க்காடுகளில் வாழ்கிறது. இது ஒரு இரவாடி ஆகும். பகலில் வளைகளில் ஓய்வெடுக்கிறது. இரவில் வெளியே வந்து உணவைத் தேடுகிறது.

சொற்பிறப்பியல் தொகு

புரோட்டீல்ஸ் என்ற இதன் பேரினப் பெயர் கிரேக்கச் சொல்லான, ப்ரோட்டோஸ் மற்றும் டெலியோஸ் ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு உருவானது. இதன் பொருள் "முன்னால் முழுமையானது" என்பதாகும். அதாவது இவற்றின் முன் கால்களில் ஐந்து கால்விரல்களும், பின்புறத்தில் நான்கு விரல்களும் உள்ளன. இதன் அடிப்படையில் இப்பெயர் உருவானது. [7] இதன் சிற்றினப் பெயரான கிரிஸ்டேடஸ், என்பது இலத்தீன் மொழியிலிருந்து வந்தது. அவற்றின் உடலில் உள்ள பிடரி மயிருடன் தொடர்புடையதாக "சீப்புடன் வழங்கப்பட்டது" என்று பொருள் கொண்டது. [7]

விளக்கம் தொகு

மண்டை ஓட்டின் மேற்பகுதியும், அடிப்பகுதியும்
எலும்புக்கூடு
 
நாக்கை வெளியே நீட்டியுள்ள நில ஓநாய். அதில் உள்ள நாக்காம்புருக்களைக் கவனியுங்கள்

நில ஓநாய் வரிக் கழுதைப்புலியை ஒத்திருக்கிறது. ஆனால் இதற்கு மிகவும் ஒடுங்கிய முகவாய், மஞ்சள் நிற உரோமங்களின் மேல் கருப்பு செங்குத்து பட்டைகள் இருக்கும். மேலும் கழுத்தின் மேலும் முதுகு நெடுகவும், நீண்ட தனித்துவமான பிடரி மயிர் இருக்கும். [11] நில ஓநாய் அச்சுறுத்தல் நேரும்போதோ அல்லது மோதலுக்கு தயாராகும்போதோ தன் உடலைப் பெரிதாகக் காட்டும் வகையில் உடல் உரோமங்களை சிலிர்த்து மேனியை பெரியதாக காட்டுகிறது. [7] இதன் கீழ் கால் (முழங்காலுக்கு கீழே) முழுவதும் கருப்பாக இருகும். வால் மயிரடர்ந்ததாக கருப்பு முனை கொண்டதாக இருக்கும்.

நில ஓநாய் சுமார் 55 முதல் 80 செமீ (22 முதல் 31 அங்குலம்) நீளம் கொண்டது. இதன் மயிரடர்ந்த வால் தவிர்த்து, சுமார் 20–30 செமீ (7.9–11.8 அங்குலம்) நீளம் கொண்டது. [2] நிற்கும்போது தோள்கள் வரை சுமார் 40 முதல் 50 செமீ (16 முதல் 20 அங்குலம்) உயரம் வரை இருக்கும். [12] வயதுக்கு வந்த ஓரு நில ஓநாய் தோராயமாக 7-10 கிலோ எடையுள்ளதாக இருக்கும், சில சமயங்களில் 15 கிலோ வரையும் எட்டும். [7] கண்டத்தின் தெற்கில் உள்ள ஓநாய்கள் கிழக்குப் பகுதியில் உள்ளதை விட சிறியதாக இருக்கும். இதனால் ஹயனிடே குடும்பத்தில் தற்போதுள்ள மிகச்சிறிய உறுப்பினராக நில ஓநாய் உள்ளது. [11] கழுதைப் புலிகளைப் போலன்று நில ஓநாய்களின்ன் முன் கால்களில் ஐந்து விரல்களைக் கொண்டுள்ளது. [2] [13] இவற்றின் பற்களும், மண்டை ஓடுகளும் கழுதைப் புலிகளின் வடிவத்தை ஒத்தவை, இருப்பினும் இவை மிகவும் சிறியவை. [12] மேலும் இவற்றின் கடைவாய்ப்பற்கள் பூச்சிகளை உண்பதற்கு ஏற்றைவையாக உள்ளன. [2] இவை கோரைப்பற்களைக் கொண்டுள்ளன என்றாலும், மற்ற கழுதைப்புலிகளைப் போலல்லாமல், இந்த பற்கள் முதன்மையாக சண்டைக்கும், பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இதன் காதுகள், பெரியதாக, வரிக் குழுதைப் புலிகளைப் போலவே இருக்கும். [7]

நில ஓநாய்க்கு வயதாகும்போது, பொதுவாக அதன் பற்களில் சில உதிர்கிறன்றன. இருப்பினும் இது மென்மையான பூச்சிகளையே உணவாக கொள்வதால் இதன் உணவுப் பழக்கத்தில் பெரியதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. [8]

பரவலும், வாழ்விடமும் தொகு

நில ஓநாய்கள் மலைப்பகுதிகளைத் தவிர்த்து, திறந்த, வறண்ட சமவெளிகள் மற்றும் புதர்க் காடுகளில் வாழ்கின்றன. இவற்றின் குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தின் காரணமாக, ஹோடோடெர்மிடிடே குடும்பக் கரையான்கள் காணப்படும் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த கரையான்கள் இறந்த மற்றும் காய்ந்த புற்களை சார்ந்துள்ளன. மேலும் விவசாய நிலங்கள் உட்பட புல்வெளிகள் மற்றும் சவன்னாக்களில் அதிக அளவில் வாழ்கின்றன. [8]

நில ஓநாய்களில் இரண்டு வேறுபட்ட குழுக்கள் உள்ளன: ஒன்று தெற்கு ஆப்பிரிக்காவிலும், மற்றொன்று கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இடையில் உள்ள மியோம்போ காடுகளில் இந்த இனங்கள் இல்லை.

ஒரு வயது வந்த ஜோடி, அவர்களின் மிக அண்மை சந்ததிகளுடன் சேர்ந்து, 1–4 km2 (0.39–1.54 sq mi) நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன. [14]

நடத்தையும் சூழலியலும் தொகு

 
சான் அன்டோனியோ விலங்குக்காட்சிசாலையில் நில ஓநாய்

நில ஓநாய்கள் கூச்ச சுபாவம் கொண்டவையாகவும், இரவாடிகளாகவும், பகலில் வளைகளில் தூங்குபவையாகவும் உள்ளன. [2] இவை, சில சமயங்களில் குளிர்காலத்தில், பகலில் இரை தேடும். ஏனெனில் இவை இரவில் வளைகளிலேயே தங்கி உடல் வெப்பத்தை பாதுகாக்கின்றன. [15]

இவை பெரும்பாலும் தனித்து வாழும் விலங்குகள் என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. உண்மையில், இவை தங்கள் குட்டிகளுடன் ஒரு துணையுடன் குடும்பமாக வாழ்கின்றன. [16] [17] இவற்றின் எல்லைக்குள் ஊடுருவும் விலங்கை சுமார் 400 மீட்டர் (1,300 அடி) வரை அல்லது எல்லைவரை துரத்துகின்றன. [14] ஊடுருவும் விலங்கு அரிதாக அகப்பட்டால், [14] ஒரு சண்டை நடக்கும், அது மென்மையான கொக்கரிப்பு, [18] கரகரப்பான குரைப்பு மற்றும் ஒரு வகையான கர்ஜனை ஆகியவற்றுடன் எதிர்கொள்ளும். [19] பெரும்பாலான ஊடுருவல்கள் இனச்சேர்க்கை காலத்தில் நிகழ்கின்றன. அவை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நிகழலாம். [19] உணவு பற்றாக்குறையாக இருக்கும் போது, மோசமான பிராந்தியம் கைவிடப்படலாம். மேலும் மூன்று ஜோடிகள் ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிக்கலாம். [19]

இனப்பெருக்கம் தொகு

இனப்பெருக்க காலம் இவை வாழும் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். ஆனால் பொதுவாக இலையுதிர் அல்லது வசந்த காலத்தில் இனப்பெருக்கம் நடைபெறும். தென்னாப்பிரிக்காவில், சூலை தொடக்கத்தில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. [14] இனப்பெருக்க பருவத்தில், இணை இல்லாத ஆண் நில ஓநாய்கள் தங்கள் சொந்தப் பகுதியிலும், மற்ற பகுதிகளிலும், பெண் நில ஓநாயைத் தேடுகின்றன. ஆதிக்கம் செலுத்தும் ஆண் நில ஓநாய்கள் மேலாதிக்த்தில் வலிமை குறைந்த அண்டை நில ஓநாய்களின் இணைகளுடன் கலவி புரிகின்றன. [14] இந்த போட்டி ஆண் நில ஓநாய்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும். [7] ஆதிக்கம் செலுத்தும் ஆண் நில ஓநாய்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, இனப்பெருக்க காலம் நெருங்கும் போது, அவை பலவீனமான ஆண்களின் பிரதேசங்களில் அதிக அளவில் ஊடுருவுகின்றன. பெண் நில ஓநாய்கள் சினைப்பருவச் சுழற்சிக்குள் வரும்போது, அவை மற்ற பிராந்தியங்களுக்குள் வலை வீசுகின்றன, சில சமயங்களில் தங்கள் சொந்தப் பிரதேசங்களை விட போட்டியாளர்களின் பிரதேசங்களில் அதிகமாகச் இதைச் செய்கிறன. [14] பெண் நில ஓநாய்கள், வாய்ப்பு கிடைக்கும்போது, ஆதிக்க ஆண் நில ஓநாய்களுடன் இணைகின்றன. இது ஆதிக்க ஆண் தன் குட்டிகளையும் தன்னையும் காத்துக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கிறது. [14] கலவி ஒன்று முதல் 4.5 மணி நேரம் வரை நீடிக்கும். [16] [20]

சூல்காலம் 89 முதல் 92 நாட்கள் வரை நீடிக்கும். [7] [14] மழைக்காலத்தில் (நவம்பர்-திசம்பர்) இரண்டு முதல் ஐந்து குட்டிகளை (பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று) ஈனும். [12] அச்சமயம் கரையான்களின் பெருக்கம் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது. [2] குட்டிகள் பிறந்த சமயத்திலேயே கண்களைத் திறந்துள்ளன. [19] அவை சுமார் 200-350 கிராம் வரை எடையுள்ளவையாக இருக்கும். [7] முதல் ஆறு முதல் எட்டு வாரங்கள் அவை தங்கள் பெற்றோருடன் வளையில் பாதுகாப்பாக இருக்கின்றன. [18] தாய் உணவு தேடப் போகும்போது போது ஆண் இரவில் ஆறு மணி நேரம் வரை குட்டிகளைப் பாதுகாக்கும். [14] [19] மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவை பெற்றோரின் மேற்பார்வையில் உணவு தேடத் தொடங்கும். அடுத்த நான்கு மாதங்களுக்குள் அவை பொதுவாக சுதந்திரமாக திரியத் துவங்கும். இருப்பினும் அவை பெரும்பாலும் அடுத்த இனப்பெருக்க காலம் வரை தங்கள் தாயுடன் வளைக்குளேயே தங்கி இருக்கும். [18] அடுத்து குட்டிகள் பிறப்பதற்குள், வளர்ந்த குட்டிகள் வெளியேறிவிடும். [14] தரை ஓநாய்கள் பொதுவாக ஒன்றரை முதல் இரண்டு வயதுக்குள் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. [7]

பாதுகாப்பு தொகு

நில ஓநாய்களின் எண்ணிக்கை குறைவதாக கருதப்படவில்லை. கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் ஒப்பீட்டளவில் பரவலாக உள்ளன. இதனால், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் நில ஓநாய் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று வகைபடுத்தபட்டுள்ளது. சில பகுதிகளில், இவை கால்நடைகளை வேட்டையாடுகிறன என்ற தவறான நம்பிக்கையினால் துன்புறுத்தப்படுகிறன; இருப்பினும், இவை உண்மையில் விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை. ஏனெனில் இவை தீங்கு விளைவிக்கும் கரையான்களை சாப்பிடுகின்றன. [19] மற்ற பகுதிகளில், விவசாயிகள் இதன் நன்மையை புரிந்துள்ளனர். ஆனால் இவை சில சமயங்களில் அவற்றின் உரோமங்களுக்காக கொல்லப்படுகிறன. நாய்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை தரை ஓநாய்களுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கின்றன. [18]

வளர்ப்பில் தொகு

 
புரோட்டல்ஸ் கிரிஸ்டேடஸின் விளக்கம்

ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் விலங்குகக்காட்சிசாலையில் 18 ஆண்டு 11 மாத வயதான மிக வயதான நில ஓநாய் இருந்தது.


குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Proteles cristata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_ஓநாய்&oldid=3671838" இலிருந்து மீள்விக்கப்பட்டது