தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு
கண்டத்தட்டு இயக்கவியல் (plate tectonics) என்பது புவியியல் கோட்பாடுகளில் ஒன்று. கண்டத்தட்டுகளின் பெயர்ச்சி நிகழ்வை விளக்குவதற்காக எழுந்த இந்தக் கோட்பாடு, இத்துறையிலுள்ள மிகப் பெரும்பான்மையான அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கண்டத்தட்டு இயக்கக் கோட்பாட்டின்படி புவியின் மேலோடு அடிக்கற்கோளம் (lithosphere), உள் மென்பாறைக்கோளம் (asthenosphere) எனும் இரண்டு அடுக்குகள் அல்லது படைகளால் ஆனது.
கற்கோளம் மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்து கொண்டு இருப்பதுடன், பத்து தட்டுகளாகப் பிரிந்தும் உள்ளது. இவை ஆப்பிரிக்கா, அண்டார்ட்டிக், ஆஸ்திரேலியா, யூரேசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், கோகோஸ், நாஸ்கா மற்றும் இந்தியத் தட்டுக்கள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. மேற்கூறிய தட்டுக்களும், மேலும் பல சிறிய தட்டுக்களும் ஒன்றுக்கொன்று, தட்டு எல்லைகளில், சார்பு இயக்கத்தில் அமைகின்றன. இத்தட்டு எல்லைகள் மூன்று வகையாக உள்ளன. அவை ஒருங்கும் தட்டு எல்லை (எல்லைகளில் தட்டுக்கள் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டு இருத்தல்), விலகும் தட்டு எல்லை (தட்டுக்கள் ஒன்றிலிருந்து விலகிச் செல்லுதல்), உருமாறும் தட்டு எல்லை (இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லுதல்) என்பனவாகும். நிலநடுக்கம், எரிமலை நிகழ்வுகள், மலைகள் உருவாக்கம், கடற் பள்ளங்கள் என்பன தட்டுக்களின் எல்லைகளை அண்டியே ஏற்படுகின்றன.கண்டத் தட்டுகள் இவ்வகையான சார்பு இயக்கம் மூலம் வருடத்திற்கு கிட்டத்தட்ட சுழியத்திலிருந்து 100 மி.மீ வரை நகர்கின்றன [4].
புவிப்பொறைத் தட்டுகளானது கடல் பாறை அடுக்கு மற்றும் கடினமான கண்டக் கற்கோளம் (continental Lithosphere) ஆகியவற்றால் அவற்றுக்கே உரித்தான மேலோட்டு பண்புகளால் ஆக்கப்பட்டுள்ளது.ஒருங்கும் தட்டு எல்லைகள் புறணிக் குமைதல் (subduction) மூலம் மூடகத்திற்குள் (mantle) எடுத்துச் செல்வதால் ஏற்படும் இழப்புகள் கடலடித் தட்டுப் பரப்பில் (oceanic plate) விலகும் எல்லைகள் உருவாக்கும் புதிய கடலடிப்பாறைத்தட்டு மூலம் சமன்செய்யப்படுகின்றன.இதன் மூலம் புவி மேலோட்டின் மொத்த பரப்பு தொடர்ந்து அப்படியே இருக்கும். தட்டு புவிப்பொறைக் கட்டமைப்பின் இவ்வகை நகர்வுகள் நகரும் படிக்கட்டு கொள்கை எனவும் கூறப்படுகிறது. புவி படிப்படியாக சுருங்குதல் (contraction) அல்லது படிப்படியான விரிவடைதல் என்ற முந்தைய உத்தேசக் கொள்கைகள் நிரூபிக்கப்படவில்லை [5].
புவியின் கற்கோளமனது அதன் கீழிருக்கும் மென்பாறைக் கோளத்தை விட அதிக இயங்கு வலிமையைப் பெற்றிருப்பதால் அவற்றால் நகர முடிகின்றது.பக்கவாட்டு அடர்த்தி மாறுதல்களால் மூடகத்தில் வெப்பச்சலனம் ஏற்படுகிறது.
முக்கியமான கொள்கைகள்
தொகுபுவியின் உட்பகுதியை கற்கோளம், மென்பாறைக்கோளம் என்ற கூறுகளாகப் பிரிப்பது, அவற்றின் இயங்குமுறை வேறுபாடுகளை ஒட்டியே ஆகும். கற்கோளம் ஒப்பீட்டளவில் குளிர்ந்ததும், உறுதியானதுமாகும். ஆனால் மென்பாறைக்கோளம் சூடானதாகவும், இயங்குவலிமை குறைந்ததாகவும் உள்ளது. கண்டத்தட்டு இயக்கவியலின்படி, கற்கோளத்தின் கண்டத்தட்டுகள் எல்லாம் நீர்மம் போன்ற மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டிருக்கின்றன. இடத்துக்கிடம் வேறுபட்ட நீர்மையுடன் இருக்கும் இந்த மென்பாறைக்கோளம், அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் கண்டத் தட்டுக்களை வெவ்வேறு திசைகளில் நகரச் செய்கிறது.
இரு தட்டுகள் ஒன்றையொன்று அவற்றின் பொதுத் தட்டு எல்லையில் சந்திக்கின்றன. இத் தட்டு எல்லைகள் பொதுவாக நிலவதிர்ச்சி, மலைகள் உருவாக்கம் போன்ற நில உருவவியல் (topography) சார்ந்த நிகழ்வுகளுடன் தொடர்புற்றுள்ளன. உலகிலுள்ள பெரும்பாலான உயிர்ப்புள்ள எரிமலைகள் தட்டு எல்லைகளிலேயே அமைந்துள்ளன. இவற்றுள் பசிபிக் தட்டின் தீ வளையம் மிக உயிர்ப்புள்ளதும், பெயர்பெற்றதுமாகும்.
புவியின் கண்டத் தட்டுகள் இரண்டுவகைக் கற்கோளங்களைக் கொண்டுள்ளன. அவை கண்டம் சார்ந்த மற்றும் கடல் சார்ந்த கற்கோளங்களாகும். எடுத்துகாட்டாக, ஆப்பிரிக்கத் தட்டு ஆபிரிக்காக் கண்டத்தையும், அத்திலாந்திக், இந்து மாகடல்களின் ஆகிய பகுதிகளின் தரைகளையும் உள்ளடக்குகின்றது. இந்த வேறுபாடு இப் பகுதிகளை உருவாக்கியுள்ள பொருட்களின் (material) அடர்த்திகளை அடிப்படையாகக் கொண்டது. கடல் சார்ந்த கற்கோளம், கண்டம் சார்ந்த கற்கோளத்திலும் அடர்த்தி கூடியதாகும். இதன் விளைவாகவே கடல் சார்ந்த கற்கோளங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்துக்குக் கீழேயே காணப்பட, கண்டம் சார்ந்த கற்கோளங்கள் கடல் மட்டத்துக்கு மேலே துருத்திக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தட்டு எல்லை வகைகள்
தொகுதட்டுக்கள் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று நகர்கின்ற வகையை அடிப்படையாகக் கொண்டு தட்டு எல்லைகள் மூன்று வகைகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. அவை வெவ்வேறு விதமான மேற்பரப்புத் தோற்றப்பாடுகளுடன் (surface phenomena) தொடர்புபட்டுள்ளன. அத்தட்டு எல்லை வகைகளாவன:
- 1. உருமாறும் எல்லைகள் (Transform Boundaries)
உருமாறும் எல்லைகளில் இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லும். கிடைமட்டமான இயக்கம் மட்டுமே நிகழ்கிறது.
- 2. விலகும் எல்லைகள் (Divergent Boundaries)
அடுத்தடுத்து அமைந்துள்ள இரு தட்டுக்கள் எதிர் எதிர் பக்கங்களில் நகரும் போது விலகும் எல்லைகள் உருவாகின்றன. இச் செயற்பாட்டின் போது வெளியிடப்படும் பாறைக்குழம்பினால் புதிய புவிமேலோடு உருவாக்கப்பட்டு கடற்தரை விரிவாக்கம் (seafloor spreading) நிகழ்கிறது. மத்திய அட்லாண்டிக் மலைமுகடு, கடலடியில் உள்ள விலகும் எல்லைகளுக்கான ஓர் காட்டாகும்.
- 3. ஒருங்கும் எல்லைகள் (Convergent Boundaries)
ஒருங்கும் எல்லைகளில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரு தட்டுக்கள் ஒன்றை ஒன்று நோக்கி நகர்கின்றன. மோதலின்போது அடர்த்தி கூடிய தட்டு மேலாகவும் அடர்த்தி குறைந்த தட்டு அதற்கு கீழாகவும் பயணிக்கின்றன. கீழாக செல்லும் தட்டு புவியின் உட்பகுதி வெப்பத்தாலே உருக்கப்பட்டு எரிமலைக் குழம்பாக வெளிவருகிறது. இந்த பகுதி subduction பகுதி எனப்படும். உலகில் அதிகமான எரிமலைகள் ஒருங்கும் எல்லைகளிலேயே அமைந்துள்ளன.
தட்டு நகர்வின் இயங்குமுறைகள்
தொகு- வெப்பச்சலனம் (convection)
பூமியின் மையத்திலுள்ள மக்மாவின் இயக்கத்தினால் வெப்பம் தட்டுக்களுக்கு செலுத்தப்படல்.
- வெப்பக்கடத்தம்(conduction)
இரண்டு தட்டுக்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளும் போது வெப்பம் கடத்தப்படல்.
- இழுக்கும் தள்ளும் தட்டு (push-pull slab)
புவியீர்ப்பினால் தட்டு கீழே தள்ளப்பட பாறைக்குழம்பு இயக்கத்தினால் மறுபடியும் மேலே உந்தித் தள்ளப்படுகிறது.
கண்டப் பெயர்ச்சி
தொகு1912 ஆம் ஆண்டு ஆல்பிரடு வேகனர் என்ற ஜேர்மானிய புவியியலாளர் முன்வைத்த கொள்கையின் படி சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமி ஒரு தனிக் கண்டமான பான்கையா (pangaea) வையும் அதனை சூழ்ந்த ஒரு தனி சமுத்திரமான பந்தலாஸ்சா (panthalassa)வையும் மாத்திரமே கொண்டிருந்தது. தற்போதைய கண்டங்கள் யாவும் பான்கையாவில் இருந்து உடைந்து வந்தவையாகும். கண்டங்களின் ஒன்றுக்கொண்டு சார்பான நகர்தல் பொறிமுறை(கண்டப்பெயர்ச்சி) "தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு" (plate tectonics) என்னும் நிலவியல் கோட்பாடாக பின்னர் வடிவமைக்கப்பட்டது.
இந்த பான்கையாவைச் சுற்றி ஒரே ஒரு கடல்தான் புவி முழுவதும் வியாபித்து இருந்தது. அதற்கு பாந்தாலசா (Panthalassa) என்று பெயர். அதற்கு முழுக்கடல் என்று பொருள். ஆக ஆரம்பத்தில் ஒரே ஒரு மாபெரும் கண்டமும், ஒரே ஒரு மாபெரும் கடலும் மட்டுமே இருந்திருக்கின்றன. பான்கையா விரிசல் கண்டு பல துண்டுகளாகி அந்தத் துண்டுகள் மெல்ல மெல்ல நகர்ந்து பல்வேறு திசைகளில் பிரிந்தன. பூமியின் நடுப்பகுதியிலுள்ள சூடான பாறைக் குழம்பில் மிதக்கிற கருங்கல் திட்டுகளை போல அவை பிரிந்து சென்றன என்று வேகனர் கூறினார். இது கண்டப்பெயர்ச்சி கொள்கை எனப்படுகிறது. 1950 களில் கடலடித் தரைகள் தீவிரமாக ஆராயப்பட்டு அட்லாண்டிக் கடலின் நடுவில் ஒரு பெரிய மலைத் தொடரும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அடலாண்டிக் கடலின் நடுவில் ஒரு மாபெரும் விரிசல் ஏற்பட்டு அது மெல்ல அகலமாகிக் கொண்டிருப்பது உணரப்பட்டது.
கண்டப் பெயர்ச்சிக்கான ஆதாரங்கள்
தொகு- ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடிய கரையோர அமைப்புகள்
- உதாரணமாக தெற்கு அமெரிக்காவின் கிழக்கு கரையோரமும் ஆபிரிக்காவின் மேற்கு கரையோரமும் ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடியது.
- வெவ்வேறு கண்டங்களில் காணப்படும் ஒரே வகையான மலைத்தொடர்கள்
- நோர்வே, கிரீன்லாந்து மற்றும் வட அமெரிக்காவின் மேற்குப் பகுதிகள் ஒரே கற்கட்டமைப்பு, வயது, உருவாக்கம் கொண்ட மலைத்தொடர்களை கொண்டுள்ளன.
- பனிப்பாறைப் படிவுகளின் பாய்ச்சல்
- இந்தியாவின் இமாலய பகுதி, சில தெற்கு ஆபிரிக்க பகுதிகள், தெற்கு அவுஸ்திரேலியா ஆகியன இன்றும் பனிப்பாறைப் படிவுகளை கொண்டுள்ளன. ஆதியிலே இவை யாவும் தென்துருவத்தோடு இணைக்கப்பட்டு இருந்திருக்கலாம்.
- உயிரினங்களின் பங்கீடு
- ஒரே உயிரினங்கள் வெவ்வேறு கண்டங்களில் காணப்படல். உதாரணமாக தெற்கு அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா கண்டங்களில் மீசோசர்ஸ் எனப்படும் ஊர்வன விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டப் பெயர்ச்சிக்கான எதிர்ப்புகள்
தொகு- கடல் அடித்தட்டிலிருந்து கண்டங்கள் பிரிந்து வர முடியாது.
- ஈர்ப்பு விசை ஒப்பீட்டளவில் மிக சிறியது எனவே கண்டங்களை நகர்க்க போதுமானதல்ல
- போதுமான ஆதாரங்கள் இல்லை
மிதக்கும் கண்டங்கள்
தொகுதற்போதைய கண்டத் தட்டுகள்
தொகுதற்போதைய கண்டத் தட்டுகள் இவை வரையறுக்கப்படும் விதத்தைக் கொண்டு ஏழு அல்லது எட்டு பிரிவுகளாகப் பிாிக்கப்படுகின்றன. அவை
- ஆப்பிரிக்க கண்டத் தட்டு
- அண்டார்டிக் கண்டத் தட்டு
- யுரேசிய கண்டத்தட்டு
- வட அமெரிக்கக் கண்டத்தட்டு
- தென் அமெரிக்கக் கண்டத்தட்டு
- பசுபிக் கண்டத்தட்டு மற்றும்
- இந்தோ- ஆஸ்திரேலியக் கண்டத்தட்டு
சில நேரங்களில் இந்தோ- ஆஸ்திரேலியக் கண்டத்தட்டுகள்
- இந்தியக் கண்டத்தட்டு
- ஆஸ்திரேலியக் கண்டத்தட்டு என இரண்டு பிரிவுகளாகவும் அழைக்கப்படுகிறது.
இது தவிர பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட சிறிய கண்டத்தட்டுகளும் உள்ளன.அவற்றுள் அரேபிய, கரீபியன், ஜூவான் டி ஃபூகா, கோகஸ் , நஸ்கா, பிலிப்பைன் கடல் மற்றும் ஸ்கோடியா ஆகியவை பெரிய கண்டத்தட்டுகளாகும்.தந்போதைய புவிப்பொறைத் தட்டுகளின் இயக்கங்கள் தொலையுணர்வு செயற்கைக்கோள் தரவுத் தொகுப்புகளால் கணக்கிடப்பப்பட்டு அவை தரைக்கட்டுப்பாட்டு மைய அளவீடுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.
உயிர்ப்புவியியல் பயன்பாடு
தொகுகண்ட நகர்வுக் கொள்கையானது உயிரிபுவியியலாளர்ளுக்கு பெரிதும் உதவுகிறது. இன்றைய உயினப் பரவல் முறையில் ஒரே மூதாதை உயிரினங்களின் படிமங்கள் வெவ்வேறு கண்டங்களில் கண்டெடுக்கப்பட்டது இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
இதன் படி 1968ஆம் ஆண்டில் அன்டார்டக்காவில் ஒரு புதை படிவ எலும்பு கண்டெடுக்கப்ட்டது. அது நீரிலும் நிலத்திலும் வாழ்கிற ஒரு விலங்காகவும் வெப்ப நாடுகளில் மட்டுமே வசிக்கக்கூடியதாகவும் இரந்தது. ஆனால் அது எவ்வாறு தென் துருவக் குளிர்ப்பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது. முன்னொரு காலத்தில் அன்டார்டிக்கா வெப்பமண்டலப் பிரதேசமாக இருந்திருகலாம் என வைத்துக் கொண்டால் கூட மற்ற கண்டங்களிலிருந்து கடலைத் தாண்டி அது அன்டார்டிக்காவுக்கு வந்திருக்க முடியாது என்று எண்ணப்பட்டது. 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அன்டார்டிக்காக் கண்டம் பூமியின் வெப்பப் பகுதியில் இருந்த போது அந்த விலங்கு அதில் வசித்திருக்கலாம் என்றும் பின்னர் அது இறந்து பூமியில் புதைந்திருக்கலாம் எனவும் அண்டார்டிக்கா பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்த போது அதன் எலும்பும் கூடவே வந்து விட்டதாகவும் கருதப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dhuime, B; Hawkesworth, CJ; Cawood, PA; Storey, CD (2012). "A change in the geodynamics of continental growth 3 billion years ago". Science 335 (6074): 1334–1336. doi:10.1126/science.1216066. பப்மெட்:22422979. Bibcode: 2012Sci...335.1334D.
- ↑ Harrison, TM (2009). "The Hadean crust: evidence from> 4 Ga zircons". Annual Review of Earth and Planetary Sciences 37 (1): 479–505. doi:10.1146/annurev.earth.031208.100151. Bibcode: 2009AREPS..37..479H.
- ↑ Windley, BF; Kusky, T; Polat, A (2021). "Onset of plate tectonics by the Eoarchean". Precambrian Research 352: 105980. doi:10.1016/j.precamres.2020.105980. Bibcode: 2021PreR..35205980W.
- ↑ Read & Watson 1975.
- ↑ Scalera & Lavecchia 2006.
வெளி இணைப்புகள்
தொகு- This Dynamic Earth: The Story of Plate Tectonics. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை.
- Understanding Plate Tectonics. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை.
- An explanation of tectonic forces. Example of calculations to show that Earth Rotation could be a driving force.
- Bird, P. (2003); An updated digital model of plate boundaries.
- Map of tectonic plates பரணிடப்பட்டது 2017-01-12 at the வந்தவழி இயந்திரம்.
- MORVEL plate velocity estimates and information. C. DeMets, D. Argus, & R. Gordon.
- Plate Tectonics - In Our Time பி.பி.சி.யில்.
- Plate Model of Bird 2003 in Google Maps
காணொளிகள்
- கான் அகாதமி Explanation of evidence
- 750 million years of global tectonic activity. Movie.
- Multiple videos of plate tectonic movements Quartz, December 31, 2015