பயனர்:Sriveenkat/மணல்தொட்டி2
மருத்துவக் கல்லூரி மாணவியான சுனிதாவும், அவளது நண்பர்களும் மனித மூளை குறித்த ஒரு ஆய்வுத் திட்டத்தில் பணிபுரிவதில் இருந்து படம் துவங்குகிறது. ஆன்டெரோகிரேடு அம்னீசியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் நகரின் புகழ்பெற்ற (முன்னாள்) தொழிலதிபரான சஞ்சய் சிங்கானியாவின் வித்தியாசமான வழக்கை ஆராய்வதற்கு அப்பெண் விரும்புகிறாள். குற்றவியல் விசாரணையின் கீழ் இருப்பதால் சஞ்சயின் ஆவணங்களை காண அவளது பேராசிரியர் அனுமதி தர மறுத்து விடுகிறார். ஆனாலும் சுனிதா இந்த விடயத்தை தானாகவே ஆய்வு செய்ய தீர்மானிக்கிறாள்.
சஞ்சய் இன்னொருவனை கொடூரமாகக் கொலை செய்வதாக அறிமுகமாகிறான். அந்த மனிதனின் போலராய்டு படத்தை எடுக்கும் அவன், அதில் "முடிந்தது" என்று நேர முத்திரையிடுகிறான். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை நினைவு அழிந்து விடுகிறதான ஆன்டெரோகிரேடு அம்னீசியாவின் ஒரு வித்தியாசமான வகை சஞ்சய்க்கு இருப்பது தெரிய வருகிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் தனது நினைவைப் புதுப்பிக்க சஞ்சய் புகைப்படங்கள், குறிப்புகள், மற்றும் தனது உடலில் குத்திக் கொள்ளும் பச்சைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ஏற்பாட்டைப் பயன்படுத்துகிறான். ஒவ்வொரு நாள் காலையிலும் குளியலறைக்குள் சஞ்சய் செல்லும் போது, குழாய்க்கு அருகில் "சட்டையைக் கழற்று" என்னும் குறிப்பைக் காண்கிறான். தனது சட்டையைக் கழற்றும்போது, தனது மார்பில் ஏராளமான பச்சைகள் இருப்பதைக் காண்கிறான். "கல்பனாவை கொன்று விட்டார்கள்" என்கிற பச்சையை அவன் காணும் போது, சஞ்சய் கல்பனாவைக் கொன்றவர்களை பழிவாங்கத் தான் அலைகிறான் என்பதும், கல்பனாவின் கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவராக திட்டம்போட்டுக் கொல்கிறான் என்பதும் தெரியவருகிறது. பல்வேறு குறிப்புகள் மற்றும் பச்சைகளைக் கொண்டு பார்க்கும்போது, அவனது பிரதான இலக்கு "கஜினி" என்பது தெரிய வருகிறது. கஜினி நகரில் சமூகத்தில் பெயர்பெற்ற நபராக இருப்பது இறுதியில் தெரியவருகிறது.
மும்பை போலிஸ் இன்ஸ்பெக்டரான அர்ஜூன் யாதவ் தொடர்ச்சியான கொலைகளின் வழக்கை துப்பறிய வருகிறார். சஞ்சய் தங்கியிருக்கும் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு வரும் அவர் சஞ்சயைத் தாக்கி அவனை முடக்கியும் விடுகிறார். ஏராளமான புகைப்படங்களும் குறிப்புகளும் இருப்பதைக் கண்டு அர்ஜூன் யாதவ் அதிர்ச்சியடைகிறார். 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு சம்பவங்களை சஞ்சய் பட்டியலிட்டு வைத்திருக்கும் இரண்டு டயரிகளை அவர் பார்க்கிறார். யாதவ் 2005 டயரியைப் படிக்கும்போது, படம் 2005 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி செல்கிறது. சஞ்சய் சிங்கானியா ஏர் வாய்ஸ் கை பேசி நிறுவனத்துக்கு சொந்தக்காரராக இருக்கும் ஒரு புகழ்வாய்ந்த தொழிலதிபரின் வாரிசு. வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு குடும்ப தொழிலை கவனிப்பதற்காக இந்தியா திரும்புகிறான். தனது தொழில் விஷயமாக, ஜெயிக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நடிகையும் மாடலுமான கல்பனா குடியிருக்கும் வீட்டின் மேல் தனது நிறுவனத்தின் விளம்பரப் பலகை வைப்பதற்காக, கல்பனாவைப் பார்க்க தனது ஆட்களை அனுப்புகிறான் சஞ்சய். இதனை காதல் தூதாக தவறாகப் புரிந்து கொள்கிறார் கல்பனாவின் வடிவழகு/விளம்பர நிறுவன முதலாளி, இதனையடுத்து (பணம் கொழிக்கும் ஏர்வாய்ஸ் விளம்பர வாய்ப்பு மற்றும் மற்ற ஆதாயங்கள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில்)கல்பனாவை இந்த வாய்ப்புக்கு ஒப்புக்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறார். நிறுவனத்தின் முன்னணி மாடலாகவும் அவர் கல்பனாவை உயர்த்துகிறார். கல்பனா பொதுவாகவே அழகானவள், அன்பானவள். இதனை (இன்னும் நல்ல வடிவழகு வேலைகளை அவளுக்கு பெற்றுத் தரக் கூடிய) ஒரு வெகுளித்தனமான விளையாட்டாகக் கருதும் அவள் சஞ்சயின் நண்பியாக நடிக்கத் துவங்குகிறாள்.
கடைசியில் கல்பனாவை சந்திக்கிறான் சஞ்சய், ஆனால் அவளிடம் தனது பெயர் சச்சின் என்றும், ஒரு சிறிய நகரத்தில் இருந்து இந்த பெருநகரத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தேடி வந்திருக்கும் சாதாரண மனிதன் என்றும் கூறுகிறான். கல்பனா அவனுக்கு சின்ன சின்ன வடிவழகு வாய்ப்புகள் வாங்கித் தருகிறாள். கடைசியில் அவனது குணத்தால் அவள் கவரப்படுகிறாள், சச்சினும் அவளது அன்பிலும் பரந்த மனத்திலும் கிறங்கிப் போய் இருக்கிறான். (ஆதரவில்லாத ஏழை மற்றும் அனாதைகளுக்கு உதவ அவள் எப்போதும் தயாராக இருப்பதை அவன் எத்தனையோ முறைகள் கவனித்திருக்கிறான்.) அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள், கடைசியில் அவளை திருமணம் செய்ய விரும்புவதாக சஞ்சய் கூறுகிறான். தனக்கு கொஞ்சம் அவகாசம் தருமாறு கல்பனா கூறுகிறாள். அவள் ஒத்துக் கொண்ட பின், தன்னைப் பற்றிய உண்மைகளை அவளிடம் கூறலாம்; அவள் மறுத்து விட்டால், சத்தமில்லாமல் ஒதுங்கி விட வேண்டியது தான், எந்த பிரச்சினையும் செய்யக் கூடாது என்று சஞ்சய் தீர்மானிக்கிறான்.
படம் இன்றைய காலத்திற்குத் திரும்புகிறது, யாதவ் 2006 டயரியை படிக்கப் போகிறார். அப்போது அங்கு வரும் சஞ்சய் யாதவைத் தாக்கி அவரைக் கட்டிப் போடுகிறான். ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கஜினி கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு அவனைப் பின்தொடர்கிறான் சஞ்சய். கஜினியின் சில புகைப்படங்களை எடுக்கும் அவன் அவனைக் கொல்லத் தீர்மானிக்கிறான் (அது ஏனென்று தனக்கு தெரியாத போதிலும்). விழாவில் அவன் சுனிதாவைச் சந்திக்கிறான்; அவன் வைத்திருக்கும் கோப்புகளின் அட்டைகளில் இருந்து அவனை அடையாளம் கண்டு கொள்ளும் சுனிதா, அவனுடன் நட்பு பாராட்ட தீர்மானிக்கிறாள். அன்று மாலை, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கஜினியின் அடியாள் ஒருவனை சஞ்சய் அடித்துக் கொல்கிறான். கஜினிக்காக அவன் காத்திருக்கிறான், கடைசியில் இன்னொரு முறை கஜினி மீதான தாக்குதலை நடத்திக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறான். சாவதற்கு முன் அந்த அடியாள் இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், கல்பனா கொல்லப்பட்டதையும், சஞ்சய் ஒரு நோயாளியாக ஆனதையும் கஜினிக்கு ஞாபகமூட்டுகிறான். குழம்பிப் போகும் கஜினிக்கு சஞ்சயின் முகம் கூட சரியான நினைவுக்கு வரவில்லை.
இதற்கிடையில், சஞ்சயின் வீட்டிற்கு வரும் சுனிதா அங்கு யாதவ் அடிவாங்கி கட்டிப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். கஜினி தான் சஞ்சயின் இலக்கு என்பதையும் அவள் கண்டுபிடிக்கிறாள். சஞ்சய் தான் அந்த தொடர் கொலைகளுக்கு சொந்தக்காரன் என்பதை யாதவ் கூறுகிறார். அந்த இரண்டு டயரிக்களையும் கண்டுபிடிக்கும் சுனிதா யாதவை விடுவிக்கிறாள். திடீரென அங்கு வருகிறான் சஞ்சய்; அவனுக்கு அவர்கள் இருவருமே யார் எனத் தெரியாமல் அவர்களை அங்கிருந்து விரட்டி விடுகிறான். யாதவ் கடைசியில் ஒரு பஸ்ஸில் அடிபடுகிறான். சுனிதா வெறி பிடித்த சஞ்சயிடம் இருந்து மயிரிழையில் தப்பிக்கிறாள். கஜினி ஆபத்தில் இருப்பதாகக் கருதும் அவள், சஞ்சய் அவனைத் தேடி வருவதை அவனிடம் கூறுகிறாள். இவ்வாறு பெயர் தெரிந்த இலக்காகி விட்ட நிலையில், சஞ்சயை கொல்வதற்காக அவனது வீட்டிற்கு வருகிறான் கஜினி. அங்கு அனைத்து புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளையும் அழிக்கும் அவன், தனது ஆள் ஒருவன் மூலம் சஞ்சய் மனதை மாற்றி சஞ்சய் உடலில் இருக்கும் அத்தனை பச்சைகள் மேலும் வேறு பச்சைகளை குத்தி விடச் செய்கிறான் (இவ்வாறு பழையவற்றை அழிக்கிறான்). இனி தன்னை அவனால் அடையாளம் காண முடியாத வகையில் அத்தனை தடயங்களையும் அழித்து விட்ட திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு அகலுகிறான் கஜினி.
இதனிடையே, தனது அறையில், 2006 டயரியைப் படிக்கிறாள் சுனிதா. படம் 2006 க்கு பின்னோக்கி செல்கிறது. கல்பனா சஞ்சயின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டாள் என்பது தெரிகிறது. டயரி திடீரென முடிந்து போகிறது. இதனை மேலும் துருவிப் பார்க்கையில், 2006 ஆம் ஆண்டின் ஏதோ ஒரு சமயத்தில், கல்பனா ஒரு விபச்சார மோசடிக் கும்பலின் வஞ்சத்திற்குள் மாட்டியிருக்கிறாள் என்பதை சுனிதா கண்டுகொள்கிறாள். ஒரு வடிவழகு வேலைக்காக அவள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறாள், அப்போது 25 அப்பாவி இளம்பெண்கள் கோவாவுக்கு பாலியல் தொழிலுக்கு அனுப்பப்படுவதை அவள் கண்ணுறுகிறாள். அவள் அந்த பெண்களைக் காப்பாற்றுகிறாள். அந்த பெண்கள் மோசடிக் கும்பலின் தலைவன் கஜினி என்பவன் என்பது மட்டும் தான் தெரியும் என்கிறார்கள். அந்த பெண்களின் வாயை மூட தனக்குத் தெரிந்த வழிகளையும் வழிமுறைகளையும் (லஞ்சம் வாங்கும் போலிசார் மற்றும் அரசியல்வாதிகளின் மூலம்) பயன்படுத்தும் கஜினி, தானே கல்பனாவைத் தேடும் முயற்சியில் இறங்குகிறான். கஜினியும் அவனது ஆட்களும் கல்பனாவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் நுழைந்து அவளுக்காகக் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தற்சமயமாக கல்பனாவை சந்திக்க வருகிறான் சஞ்சய். அவனிடம் அவள் சொல்லும் கடைசி வார்த்தை "கஜினி". அடியாட்கள் கல்பனாவைத் தாக்குகிறார்கள். சஞ்சய் குறுக்கே புகுந்து தடுக்க யத்தனிக்கும்போது, கஜினி அவன் தலையில் ஓங்கி இரும்புக் கம்பியால் அடிக்கிறான். சரியும் சஞ்சயின் பார்வையில் கடைசியாகப் பதிவது கஜினி கல்பனாவை இரும்புக் கம்பி கொண்டு கொடூரமாகக் கொல்வது தான்.
இப்போது இந்த அதிர்ச்சிகரமான உண்மை குறித்து தெரிந்து கொண்ட சுனிதா, சஞ்சயைக் கண்டுபிடித்து அவனிடம் உண்மையைச் சொல்கிறாள். அடக்க முடியாத வெறியுடன் அவன் கஜினியைத் தேடி கிளம்புகிறான். மும்பை நகரில் கஜினியின் மறைவிடத்திற்கு சென்று சேரும் சஞ்சய், கஜினியின் அடியாட்கள் அனைவரையும் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்கிறான், பின் கஜினியைத் துரத்துகிறான். கஜினியை அவன் கொல்லப் போகும் போது ஞாபக இழப்பு சுழற்சி வந்து விடுகிறது. கஜினி இப்போது திருப்பிக் கொண்டு சஞ்சயை குத்தி விடுகிறான். கல்பனாவை அவன் எவ்வாறு கொலை செய்தான் என்னும் பயங்கர சம்பவத்தை சஞ்சயிடம் கொடூரம் கொப்பளிக்கக் கூறுகிறான், கடைசி நிமிட திடீர் வலிமையைத் திரட்டி கஜினியை வெல்கிறான் சஞ்சய். கஜினி கல்பனாவைக் கொன்ற அதே வழியில் சஞ்சய் கஜினியைக் கொல்கிறான்.
இப்போதும் ஞாபக மறதி நோய் தொடர, சஞ்சய், ஒரு அனாதை இல்லத்தில் சேவை செய்வதுடன் முடிகிறது படம். கல்பனா ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த போது கல்பனாவும் சஞ்சயும் ஒன்றாகக் கால்பதித்த சாந்துப்பூச்சு பாளத்தை, கல்பனாவுடனான அவனது நினைவுகளைப் புதுப்பிக்கும் வகையில், அவனுக்கு சிறு பரிசாகத் தருகிறாள் சுனிதா. சஞ்சய்க்கு ஞாபகங்கள் மீண்டதா இல்லையா என்பதை பார்வையாளனே தீர்மானித்துக் கொள்ளும்படி விடப்பட்டிருக்கிறது [ஆனாலும் கடைசிக் காட்சியில், அவனுக்கு கடந்த காலம் நிழலாடுவதைக் காண்பிப்பது, முன்பு சொன்னது நடந்திருப்பதாகக் காட்டுவதாகத் தான் தோன்றுகிறது].