பயனர்:Sundar/தமிழ் விக்கிப்பீடியா - ஒரு புள்ளிகளுடன் கூடிய மீளாய்வு
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த பக்கம் AntanO (பேச்சு | பங்களிப்பு) ஆல் 7 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
பழைய கட்டுரையின் பிரிவுகள் கீழேயுள்ளன. இவற்றைத் தேவைக்கேற்ப மாற்றி எழுதவுள்ளேன். கருத்துக்களைப் பேச்சுப் பக்கத்தில் இடவும்.
சுருக்கம்
தொகுமுன்னுரை
தொகுவரலாறு
தொகுதமிழில் நெடிய இலக்கிய வரலாறு உண்டு. தொல்பழங்காலத்து இலக்கியங்களுக்குப்பிறகு அச்சிலும் தெற்காசிய அளவில் முன்னோடியாகவே திகழ்ந்தது. கலைக்களஞ்சிய மரபு தோன்றி இருபதாம் நூற்றாண்டுகளில் முத்துத்தம்பியார் எழுதி யாழ்ப்பாணத்திலிருந்து 1902-ஆம் ஆண்டு வெளிவந்த அபிதானகோசம்,[1] சிங்காரவேலனாரின் 42 ஆண்டுகால உழைப்பின் பயனாக 1910-ஆம் ஆண்டு 1050 பக்கங்களில் சென்னையிலிருந்து வெளிவந்த அபிதான சிந்தாமணி[2] போன்றவை முதல் கலைக்களஞ்சியங்கள். பின்னர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 17 நூல்களடங்கிய அறிவியல் தொகுப்பையும் 13 நூல்களடங்கிய மாந்தவியல் தொகுப்பையும் கொண்டு ஒரு மிகப்பெரிய கலைக்களஞ்சியத்தை வெளியிட்டது.[3] பல அறிஞர்கள் இணைந்து அரசின் உதவியுடனும் பிற புரவலர்களின் உதவியுடனும் 1954-ஆம் ஆண்டு முதல் 1968-ஆம் ஆண்டு வரை பத்து நூல்களாக ஒரு நிறைவான கலைக்களஞ்சியத்தை வெளியிட்டனர்.[4] மிக அண்மையில், 2007-ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் சுருக்கமான பதிப்பில் இருந்து 28,000 கட்டுரைகளை மொழிபெயர்த்து விகடன் குழுமத்தினர் ஒரு கலைக்களஞ்சியத்தை வெளியிட்டனர்.[5]
2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று பெயர் குறிப்பிடாத ஒருவர் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடங்கினார். முதற் பக்கத்தில் அவரது யாகூ குழுமத்துக்கான இணைப்பையிட்டு மனித மேம்பாடு என எழுதிச் சென்றார்.[6] அதன்பின் பெரிதாக எதுவும் நிகழவில்லை, தளத்தின் இடைமுகமும் முழுக்க ஆங்கிலத்திலேயே இருந்தது. ஒரு மடற்குழுவில் முகுந்து இட்டிருந்த வேண்டுகோளைப் படித்த மயூரநாதன் நவம்பர் 4-ஆம் நாளில் இருந்து 22-ஆம் நாள் வரை பணிபுரிந்து இடைமுகத்தின் பெரும்பகுதியை மொழிபெயர்த்தார். இடையிடையே பெயர் குறிப்பிடாமல் சில தொகுப்புக்களையும் செய்தார். நவம்பர் 12 அன்று அமலசிங்கு சிரின் எபாதியைப் பற்றிய குறுங்கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தலைப்பிட்டு எழுதினார்.[7] மயூரநாதன் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து பங்களித்து வந்துள்ளார். ஆயிரக்கணக்கான தொகுப்புக்களில் பல ஆக்கங்களிடையே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தானே தொடங்கியும் உள்ளார். தொடக்க நாட்களில் சில மாதங்கள் அவர் மட்டுமே தனியாகப் பங்களித்து வந்த நிலையும் இருந்தது. 2004-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதவாக்கில் நானும் அதைத் தொடர்ந்து ஐந்து முனைப்பான பங்களிப்பாளர்களும் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்தனர். அவ்வப்போது மட்டும் தொகுத்து வந்து சிலரும் தொடர் பங்களிப்பாளர்களாயினர். இந்தக் கட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா சற்று விரைவாக வளரத் தொடங்கியது. இடைமுகச் சிக்கல்கள் பல களையப்பட்டன, ஆங்கில விக்கிப்பீடியாவைத் தழுவியும் இல்லாமலும் கொள்கைகள் வகுக்கப்பட்டன. பங்களிப்பாளர்கள் குறுங்கட்டுரைகளை அடையாளப்படுத்துதல், வார்ப்புருக்களை உருவாக்குதல், உரை திருத்துதல், மொழிபெயர்ப்பு,[8] புதுக்கட்டுரைகளைத் தொடங்குதல் என அவரவர் விரும்பிய பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். இந்த அரும்புக் காலத்திலுங்கூட தமிழ் விக்கிப்பீடியாப் பயனர்கள் பல நாடுகளிலும் இருந்து வந்திருந்தது சிறப்பு.
முதலில் சிறிய எண்ணிக்கையில் தொடங்கி பல அளவைகளிலும் விரைவாக உயரும் நேர்க்கோட்டு வளர்ச்சியைக் கண்ட தமிழ் விக்கிப்பீடியா, ஏப்பிரல் 2007 வாக்கில், அதுவரை தொட்டிருந்த உயரத்திலிருந்து மேலும் வளரத் தொடங்கியது. அக்காலத்தில் கட்டுரை நீளம், உரையின் தரம், படங்களின் பயன்பாடு, மேற்கோள்களைச் சுட்டுதல் போன்ற பண்புகளில் விரைவான வளர்ச்சியைக் கண்டது. 2008-ஆம் ஆண்டு இறுதிதொட்டு 2009-ஆம் அண்டு முற்பகுதி வரை மிகுதியான பங்களிப்பை நல்கும் தொடர் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரே சீராக அமைந்திருந்ததும், அவர்களைத் தவிர்த்து அவ்வப்போது பங்களிக்கும் புதுப்பயனர்கள் தொடர்ந்து வந்து இணைந்ததும் வருங்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியா நல்ல வளர்ச்சியைக் கண்டு ஓங்கி நிற்கும் என்ற நம்பிக்கையைத் தந்தது.
வளர்ச்சி
தொகு2009-ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை அலசியபோது[9] மூன்று வளர்ச்சி நிலைகள் தென்பட்டன. இப்போது அதன்பின் அமைந்த தரவுகளையும் பார்க்கையில் ஐந்து நிலைகள் தெரிகிறது. அதிலும் கட்டுரை எண்ணிக்கையைப் பொருத்தவரை ஒரே சீரான வளர்ச்சி, பின் விரைவான அடுக்கேறும் வளர்ச்சி என மாறி மாறி வருகிறது. அதேவேளை வெவ்வேறு அளவு பங்களிப்பவர்களின் எண்ணிக்கையின் போக்குக்கும் புதுக்கட்டுரைகள் தொடங்குவதில் உள்ள போக்குக்கும் இறுக்கமான நேரடித்தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் சீர்வளர்ச்சிக் கட்டங்களில் கட்டுரைகளின் தர முன்னேற்றம், பழைய குறுங்கட்டுரைகளை வளர்த்தல், மேற்கோள் சேர்த்தல், படங்களைச் சேர்த்தல் போன்ற மற்ற பணிகளில் பங்களிப்பாளர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என ஊகிக்கலாம். இதை உறுதிப்படுத்த தொகுப்புகளின் போக்கையும், மொத்த பொதியளவையும் பார்க்க வேண்டும். மிகுதியான வாசகர்களைக் கொண்ட முதல் 50 விக்கிப்பீடியாக்களில் பலவற்றில் இதே போக்கு தென்படுகிறது. தவிர, அதிகமாகப் பங்களிப்பவர்கள் தம் வாழ்க்கைச் சூழல், ஆர்வம் ஆகியவற்றால் சில மாதங்களுக்கு மிக அதிகமாகப் பங்களித்துவிட்டுப் பின்னர் தங்கள் பங்களிப்புக்களைக் குறைத்துக்கொள்வதுண்டு. அந்நேரங்களில் தரவுகளில் தொய்வு தென்படலாம். இவ்வாறு பங்களிப்பவர்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை விக்கிக்கு வருகிறார்கள் என்பதை அறிய முற்படலாம்.
பங்களிப்பும் பங்களிப்பாளர்களும்
தொகுதொடக்கநாள்களிலிருந்தே தமிழ்விக்கிப்பீடியாவில் பல துறைகளையும், ஆர்வங்களையும், பின்னணியையும் கொண்ட பயனர்கள் பங்களித்துவந்துள்ளனர். கட்டுமானவியல், உயிர்நுட்பவியல், பொருளியல், சூழியல், மின்னணுவியல், கணிநுட்பம், கணிதம், இசை, சமூகநலன், இதழியல் போன்ற பல துறைகளில் தேர்ந்தவர்கள் இங்குண்டு. பொறியாளர், ஆய்வறிஞர், பேராசிரியர், மாணவர், மேலாளர், தொழில் முனைவோர் என பல்வேறு பணிகளில் ஈடுபடுபவர்கள் இங்கு பங்களித்துவருகின்றனர். அகவையில் 15[10] முதல் 85 ஆண்டுகள் வரையில் அதுவும் குறிப்பிட்ட வயதில் குவிந்திராமல் ஓரளவு பரவலாக அமைந்துள்ளது. கல்வித்தகுதி வருமானம் போன்ற வகையிலும் பன்வகைமையுள்ளது.
2008-ஆம் ஆண்டு ஒன்றிய நாடுகள் அமைப்பின் மெரிட்டு பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா வாசகர்களைப்பற்றியும் தொகுப்பாளர்களைப் பற்றியும் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்.[11] 2008-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 60,000 முறை தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள் பார்க்கப்பட்டன.
தனித்தன்மைகள்
தொகு- வழக்கமான பங்களிப்பாளர்களிடையே நிலவும் இணக்கமான உறவும் நன்னயம் கருதும் பண்பாடும்
- தொடக்கத்திலிருந்தே தரத்தின்மீதான குறி[12] (ஆங்கில விக்கிப்பீடியாவில் தானியங்கிகொண்டு பல்லாயிரம் கட்டுரைகளை உருவாக்கிய Rambot போன்று தமிழ் விக்கிப்பீடியாவில் இந்திய ஊர்ப்பெயர்களில் கட்டுரைகளைச் சேர்க்கும் Ganeshbot திட்டத்துக்கான முன்மொழிவின்போது பலரும் தமிழ் விக்கியின் கட்டுரை பன்வகைமை கெட்டுவிடுமோ என அச்சம் தெரிவித்தனர்.[13])
- மேற்கோள் சுட்ட வேண்டுமென்பதற்கு முதலிலிருந்தே இருந்த முகன்மை[14][15]
- ஒரு பங்களிப்பாளரே தான் தொடங்கும் கட்டுரையை முடிந்தமட்டும் நிறைவாக விரிவாக்கி எழுதி, மற்றவர்கள் அதன் உரையைத் திருத்தும் வழக்கம்
- ஒரு சிலரே பங்களித்தகாலத்திலும் அவரவர்க்கு இயலும் பணிகளை எடுத்துக்கொண்டு பங்களித்தமை
- ஒரு பயனரே 'செய்திகளில்...', 'இன்றைய நாளில்...' பத்திகளை சில ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் இடைவிடாது இற்றைசெய்த பணி[16]
- பல துறைகளிலும் தமிழில் வேறு எங்கும் எழுதாத பல தலைப்புகளில் விக்கிப்பீடியாவிலேயே கட்டுரைகள் எழுதப்பெற்றன. தமிழ் விக்கிப்பீடியர்கள் அறிவியல், நுட்பம், அரசியல் போன்ற துறைகளில் அண்மையில் நிகழ்ந்தவற்றைப் பதிவுசெய்வதில் ஆர்வம் காட்டினர். அத்தகைய கட்டுரைகளுக்குத்தேவையான கலைச்சொற்களை தமிழ் அடிச்சொற்களைக்கொண்டே ஆக்கும் மரபு தமிழ் விக்கிப்பீடியாவிலும் திகழ்கிறது.
- ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்களது முதலும் கிட்டத்தட்ட இறுதியுமான நோக்கம் அறிவைப் பதிந்து பரப்புவது. தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவைப் பதிவதும் பகிர்வதும் தமிழில் நிகழவேண்டும் என்பது அடிப்படை உந்துதலாக அமைந்துள்ளது. பல பங்களிப்பாளர்களுக்குத் தமிழின் அறிவிலக்கிய வளத்துக்கு உரமேற்றுவது மனநிறைவைத்தருகிறது.
சவால்கள்
தொகு- தமிழர் வாழும் பகுதிகளில் பெருமளவு இணையப்பரவல் குறைபாடு
- தமிழ் தட்டச்சுக்கான செயலிகள் பற்றிய பரவலான அறிமுகமின்மை
- தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய பரவலான் அறிமுகமின்மை
- இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பெண் பங்களிப்பாளர்கள் இருத்தல்
- தமிழில் பல்வேறு தலைப்புக்களில் திறம்பட எழுதக்கூடிய பலர் இணையத்தில் இல்லாமலிருத்தல்
- நுட்பக்கோளாறுகளைக் கண்டறிந்து விரைந்து சரிசெய்யும் பங்களிப்பாளர்கள் அவ்வளவாக இராமை
பரப்புதல்
தொகு2004-ஆம் ஆண்டு தமிழ் வலைப்பூக்களில் விக்கிப்பீடியா அடையாளச்சின்னத்துடன் கூடிய இணைப்பை இடுமாறு வலப்பதியும் நண்பர்கள் துணையுடன் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் ஒரேயொருமுறை ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டது. 2009-ஆம் ஆண்டில்தான் மூன்று பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டன.[17] அவற்றின்போது தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி அதன் மையக்கோட்பாடு, பயன் போற்றவற்றைவிளக்கியபின் கணினியில் தமிழில் தட்டி உள்ளிடுவதற்கும் விக்கிப்பீடியாவில் எளிய தொகுப்புக்களை மேற்கொள்வதற்கும் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிப்பட்டறைகளைத்தவிர ஒத்த உணர்வுடைய பிற குழுவினரின் கூட்டங்களின்போது ஆறுமுறை விக்கிப்பீடியா அறிமுகவுரைகள் நிகழ்த்தப்பட்டன. இந்திய அறிவியல் கழகம் உயர்கல்வி நிலையங்களிலும்[18] அலுவலகங்களிலும்[19] சிறப்பு ஆர்வங்களுக்கான மன்றங்களிலும் அவ்வாறு செய்யப்பட்டன. இவற்றின்வாயிலாக பல பின்னணிகளைக்கொண்ட ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களை ஈர்க்கமுடிந்தது.
இந்நிகழ்வுகளைப்பற்றிய கருத்துக்களின்வழியாக பின்வருவனவற்றை அறியமுடிந்தது:
- பயிற்றுனர்-பயில்பவர் விகிதம் 1:5 என்ற அளவில் இருத்தல் நன்று. பயிற்சியின் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு விக்கிப்பீடியார்கள் தருவது பயன்தந்தது.
- வகுப்பறை கிடைத்தால் நல்லது. கணினி ஆய்வகம் போன்ற அறை கிடைத்தால் இன்னும் வசதி.
- புதிதாய் பயிலுவதற்கு வந்திருக்கும் ஒருவரை அழைத்து நேரடியாகத் தொகுக்கச்செய்வது மிகநல்லது. இதன்மூலம் மற்றவர்களுக்குத் தாங்களும் எளிதில் தொகுக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. தவிர புதிய பங்களிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பழைய பங்களிப்பாளர்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.
- இவ்வாறு பயிற்சியின்போது புதுப்பயனர்கள் செய்யும் தொகுப்பைப்பாராட்டி அவரது பேச்சுப்பக்கத்தில் தொலைவிலிருக்கும் ஒரு பங்களிப்பாளர் கருத்து தெரிவித்தால் பயில்பவர் ஊக்கம் பெறுகிறார்.
- எடுத்துக்காட்டும் தலைப்புகள் பயிற்சிக்கு வந்திருப்போருக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கவேண்டும்.
- பயிற்சியின்போது வந்திருப்போரின் மின்வரிகளைப்பெற்றுக்கொண்டு மறுநாளே அவர்களுக்கு நன்றியும் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கான அழைப்பையும் அனுப்பினால் பலரும் இணைய வாய்ப்பு ஏற்படுகிறது.
- இந்திய மொழிச்சூழலில் முதல்வகுப்பு தட்டச்சு செய்வதைப்பற்றியே இருக்கவேண்டியிருக்கிறது.
ஒரு பட்டறை பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.:
- பயிற்சி நிகழும் நிறுவனத்திலிருந்து அழைத்தவரும், தொடர்பு ஏற்படுத்திய தமிழ் விக்கிப்பீடியரும் அறிமுகவுரை
- விக்கிப்பீடியா என்றால் என்ன, அதன் வரலாறு, கொள்கைகள், அது இயங்கும் மென்பொருள் போன்றவற்றைப்பற்றிய பரத்தீடு
- தமிழில் உள்ளிடுவதற்கான செயலிகளைப்பயன்படுத்துவதற்கான பயிற்சி
- தேநீர் இடைவேளை
- புதியவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் விரும்பும் தலைப்பில் தொகுக்க அழைத்தல்
- ஐயம் தீர்த்தல்
பிற விக்கித்திட்டங்கள்
தொகுவிக்சனரி, விக்கிசெய்திகள், விக்கிமூலம், விக்கிநூல்கள், விக்கிமைற்கோள் ஆகியவை தமிழ் விக்கிப்பீடியாவின் உறவுத்திட்டங்களாவன. அவற்றுள் தமிழ் விக்சனரி நன்கு வளர்ந்துள்ளது. முதற்கட்டமாக ஒரு தானியங்கி துணையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் அகராதிகளின் சொற்களைப் பதிவேற்றியதன் பயனாக 1,00,000 சொற்களுக்கும் மேல் வளர்ந்து[20] அனைத்துமொழி விக்சனரிகளுக்கான முகப்பில் இடம்பெற்றிறுந்தது. அதன்பிறகு பல நல்ல தொடர் பங்களிப்பாளர்களின் வருகையினால் அத்திட்டத்தின் தொடர்வளர்ச்சி உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழின் தொல்லிலக்கிய வளத்தின் காரணமாக காப்புரிமைக்கட்டுப்பாடில்லாத எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளன. அதனால் விக்கிமூலத்துக்கு நல்ல எதிர்காலமுள்ளது. பிற விக்கித்திட்டங்கள் முதல்நிலையில் இருந்தன. விக்கியினங்கள் திட்டமொன்றைத்தொடங்கும் எண்ணமும் சில பங்களிப்பாளர்களுக்கு இருந்தது.
எதிர்காலத் திட்டங்கள்
தொகுமுடிவுரை
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Abidhaanakosam in the Noolaham archive
- ↑ Author Jeyamohan on Abidhaana Chindhaamani
- ↑ http://www.tamiluniversity.ac.in/english/links/encyclopaedia.html
- ↑ ம. பொ. சி.. 1978 The history of Tamil Development after (Indian) independence. Chennai: Poongodi Publications.
- ↑ "Karunanidhi releases Encyclopaedia Brittanica in Tamil". The Hindu. 2007-04-29. http://www.hindu.com/2007/04/29/stories/2007042902840300.htm. பார்த்த நாள்: 2009-04-25.
- ↑ http://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&diff=prev&oldid=5
- ↑ The article titled in English was moved to the Tamil title, and the redirect page was subsequently deleted. It has been recently restored for the record.
- ↑ இடைமுக மொழிபெயர்ப்புக்கென உலகளாவிய விக்கிக்களுக்கான கூட்டு விக்கி தொடங்கப்பெற்று அதன் 9-ஆவது உறுப்பினராகச் சுந்தர் இருந்தமை தமிழ் விக்கிப் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த வீச்சைக் காட்டுகிறது.
- ↑ இல., பாலசுந்தரராமன் (2009), "Tamil Wikipedia: A Case Study", Wikimania, Buenos Aires: Wikimedia Argentina Chapter, பார்க்கப்பட்ட நாள் 2013-08-20
- ↑ Karthikeyan, a school student from Singapore, wrote several articles on herbs from this user account and anonymously prior to that.
- ↑ Möller, Erik (2008-10-24). "Multilingual Wikipedia Survey Launched". Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-04-16.
- ↑ Tamil Wikipedia quality monitor
- ↑ "Wikipedia discussion prior to bot approval". பார்க்கப்பட்ட நாள் 2009-04-16.
- ↑ Citation guidelines
- ↑ "Articles using "Cite journal" template". பார்க்கப்பட்ட நாள் 2009-04-16.
- ↑ Kanags maintains these two sections
- ↑ Homepage for workshops
- ↑ Details of the workshop held at the IISc
- ↑ "Wikipedia Academy in Bangalore". My Bangalore. 2009-02-05. http://mybangalore.com/article/wikipedia-academy-in-bangalore.html. பார்த்த நாள்: 2009-04-25.
- ↑ SundarBot project page