பிரமாதேஷ் பருவா
பிரமாதேஷ் சந்திர பாருவா (Pramathesh Chandra Barua) (24 அக்டோபர் 1903 - 29 நவம்பர் 1951) அசாம் மாநிலத்தில் கௌரிபூரில் பிறந்தார். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்திய திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தார்.[1]
பிரமாதேஷ் பருவா | |
---|---|
1936இல் வெளியான தேவதாஸ் என்றப் படத்தில் பிரமாதேஷ் பருவாவும் ,ஜமுனாவும் | |
பிறப்பு | பிரமதேஷ் சந்திர பருவா 24 அக்டோபர் 1903 கௌரிப்பூர், (துப்ரி), வட கிழக்குப் பகுதி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 29 நவம்பர் 1951 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 48)
வாழ்க்கைத் துணை | ஜமுனா பருவா மாதுரி லதா அமலாபாலா |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅசாமில் உள்ள கௌரிபூரைச் சேர்ந்த ஒரு ஜமீந்தாரின் மகனான பருவா, தனது குழந்தைப் பருவத்தை அங்கேயேக் கழித்தார்.[2] கொல்கத்தாவின் ஹரே பள்ளியில் படித்த பின்னர், 1924 இல், கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் படித்து பட்டதாரியானார்.[3] கல்லூரியில் படிக்கும் போதே, தனது 18 வயதில் இவர் திருமணம் செய்து கொண்டார். இது குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தவிர இவருக்கு மேலும் இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. திரைப்பட நடிகை ஜமுனா பருவா இவரது மூன்றாவது மனைவியாவார். இவரது மனைவிகளில் ஒருவரான மாதுரி லதா அல்லது அமலபாலாவும், பாடகி மீனா கபூரின் தாயாரும் சகோதரிகள் ஆவர்.[4] பட்டம் பெற்ற பிறகு, இவர் ஐரோப்பாவுக்குச் சென்றார், அங்கு இவர் திரைப்படங்களுக்கு முதல் அறிமுகத்தைப் பெற்றார். நாடு திரும்பிய பிறகு, இவர் சுயாட்சிக் கட்சியில் சேர்ந்து அசாம் சட்டமன்றத்தில் சிலகாலம் பணியாற்றினார். ஆனால் இறுதியில் கொல்கத்தாவுக்குச் சென்றார். பின்னர் திரைப்படங்களை ஒரு தொழிலாக மேற்கொள்ளத் தொடங்கினார்.
தொழில்
தொகுபிரமாதேஷ் பருவா பட உலகிற்கு அடியெடுத்து வைத்தது தற்செயலானது. சாந்திநிகேதனில் தங்கியிருந்தபோது இவர் திரேந்திரநாத் கங்குலிக்கு அறிமுகமானார். இவர்,1926 ஆம் ஆண்டில் "பிரிட்டிசு டொமினியன் பிலிம்ஸ்" நிறுவன உறுப்பினராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1929 ஆம் ஆண்டில், தெபாக்கி குமார் போஸ் இயக்கிய "பஞ்சாசர்" என்ற படத்தில் முதல் முறையாக தோன்றினார். திரேன் கங்குலி இயக்கிய மற்றொரு படமான "தாகே கி நா ஹே" என்ற படத்திலும் நடித்தார்.[5]
தயாரிப்புப் பயிற்சி
தொகுஎவ்வித உரையாடலும் இல்லாமல் படங்கள் எடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில், ஐரிஷ் காஸ்பர் (திரைப் பெயர்: சபிதா தேவி) என்ற நடிகை இவரிடம் சுயாதீனமாக சென்று தனது சொந்தத் திரைப்பட படப்பிடிப்பு அரங்கத்தை உருவாக்குமாறு வலியுறுத்தினார். இவர், ஐரோப்பாவுக்குச் சென்று திரைப்பட இயக்கம் பற்றிய நடைமுறை அறிவைப் பெற விரும்பினார். 1930ஆம் ஆண்டில், இவரது தந்தை இராஜ பிரபாத் சந்திரா பருவா இவருக்கு ஏற்பட்ட சிறுநீரக கல்லை அகற்ற இவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு, இரவீந்திரநாத் தாகூரிடமிருந்து அறிமுகக் கடிதத்துடன் பாரிஸ் சென்று எம் ரோஜர்ஸ் என்பவரைச் சந்தித்தார். அங்கு ஒளிப்பதிவில் முழுமையான பயிற்சி பெற்றார். 20ஆம் சென்சுரி பாக்ஸ் ஸ்டுடியோவில் ஒளியமைப்புப் பற்றி நிறைய கற்றுக்கொண்டார். இலண்டனில் எல்ஸ்ட்ரீ அரங்கத்தில் தயாரிப்பையும் இவர் கற்றுக்கொண்டார்.[6]
திரைப்படங்களில் புதிய தொழில்நுட்பம்
தொகுபின்னர், கொல்கத்தா திரும்பிய இவர் ஒருளிப்பதிவு கருவிகளை சொந்தமாக வாங்கி தனது சொந்த இல்லத்தில் "பருவா பிலிம் யூனிட்" என்பதையும், "பருவா ஸ்டுடியோ" என்பதை அமைத்தார். பின்னர், "ஆப்ரதி" என்ற தனது முதல் திரைப்படத்தைத் தயாரித்து, அதில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தெபாக்கி கே.ஆர். போஸ் இப்படத்தை இயக்கினார். இந்தியத் திரைப்பட வரலாற்றில் இப்படம் ஒரு மிக முக்கியமான படமாகும். இது செயற்கை விளக்குகளின் கீழ் படமாக்கப்பட்ட முதல் இந்திய படமாகும். அதற்கு முன்னர் இந்தியப் படங்கள் பிரதிபலித்த சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் படமாக்கப்பட்டு வந்தன. செயற்கை விளக்குகளைப் பயன்படுத்தும் போது, விளக்குகளுக்கு ஏற்றவாறு ஒப்பனை செயல்பாட்டிலும் தேவையான மாற்றங்களைச் செய்தார். இந்த சோதனையில் 50,000 அடி 'திரைச்சுருள்' வீணானது. மேலும் 1,000 அடி 'திரைச்சுருள்' கலைஞர்களின் அலங்காரப் பரிசோதனை மூலம் வீணடிக்கப்பட்டது. இவ்வாறு ஆபிரதி இந்திய சினிமாவில் இயக்குநர்களுக்கான தொழில்நுட்ப சூழலில் தீவிர மாற்றங்களை கொண்டு வந்தது.[7]
தயாரிப்பு
தொகு1932 ஆம் ஆண்டில், இவர் "நிஷர் தக்", "ஏக்தா" போன்ற படங்களைத் தயாரித்தார். ஏக்தாவின் கதையை இவர் எழுதினார். சுஷித் மசும்தர் என்பவர் இயக்கினார். காளி பிரசாத் கோஷ் என்பவர் இயக்கிய "பாக்யலட்சுமி" என்ற படத்தில் எதிர் நாயகனாக நடித்தார்.
1932 ஆம் ஆண்டில், உரையாடல்களுடன் படங்கள் வெளிவந்தபோது இவர் தனது முதல் பேசும் படத்தை "வங்காளம் -1983" என்ற பெயரில் தயாரித்தார். இப்படம் இரவீந்திரநாத் தாகூரால் வெளியிடப்பட்டது. இது அக்காலத்தில் இவர் மேற்கொண்ட துணிச்சலான முயற்சியாகும். இப்படம் எட்டு நாட்களில் படமாக்கப்பட்டது. இது இவரது உறுதியையும் ஒற்றை எண்ணத்தையும் காட்டியது. இந்த படம் பெரிய தோல்வியாக இருந்தது. பின்னர் வேறு வழியில்லாமல் தனது நிறுவனத்தை மூடிவிட முடிவெத்தார்.
நியூ தியேட்டர்
தொகு1933 ஆம் ஆண்டில், பி. என். சர்க்கார் என்பவர் இவரை தனது "நியூ தியேட்டர்" என்ற நிறுவனத்தில் பணியாற்ற அழைத்தார். இது ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இவரது வாழ்க்கையின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது. திரைப்படம் தயாரிக்கும் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களிலும் இவர் சிறந்து விளங்கினார் - இயக்கம், நடிப்பு, திரைக்கதை எழுதுதல், புகைப்பட அமைப்பு, படத்தொகுப்பு அல்லது வேறு அனைத்து தேவையான திறன்கள் போன்றவை. இவர் "நியூ தியேட்டர்" நிறுவனத்தின் முதல் பேசும் படமான "ரூப்லேகா" என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். இதில் உமாஷாஷி என்பவருக்கு இணையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 1934இல் இப்படம் வெளியிடப்பட்டது. "ரூப்லேகா" மற்றொரு புதிய நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியத் திரைப்படங்களில் முதல் முறையாக, கதை சொல்லும் உத்திக்கு "பிளாஷ்பேக்" முறை பயன்படுத்தப்பட்டது.
தேவதாஸ்
தொகுஇவர், சரத்சந்திர சட்டோபாத்யாயா எழுதிய வங்காள மொழிப் புதினமான "தேவதாஸ்" என்ற திரைபடத்தை இயக்கியிருந்தார்.[8] வங்காளத்தின் சோகமயமான நாயகப் பாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஆனால் இப்படத்தில் இவரது சித்தரிப்பு மிகவும் கலகலப்பாக இருந்தது. ஒரு சோகமான நாயகனை கலகலப்பாக மாற்றியது. இவர், பெங்காலி மற்றும் இந்தி பதிப்புகளை இயக்கியுள்ளார். மேலும், பெங்காலி பதிப்பில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவரது வாழ்க்கை முறை தேவதாஸின் பாத்திரத்தை அவ்வளவு உறுதியுடன் நடிக்கச் செய்தது என்று கூறப்படுகிறது. தேவதாஸ் 1935இல் வெளியிடப்பட்டது. இது ஒரு உடனடி வணிக வெற்றியானது. இது இந்தியாவின் முதல் வெற்றிகரமான சமூகப் படம் என்றும், இது இந்திய சமூக படங்களின் முழு கண்ணோட்டத்தையும் மாற்றியதாகவும் திரை அறிஞர்கள் கூறிகின்றனர். 'இண்டர்கட் டெலிபதி காட்சி' நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக உலக சினிமாவில் ஒரு முக்கிய அடையாளமாக தேவதாஸ் கருதப்படுகிறது.
நியூ தியேட்டர்களுடனான இவரது முன்னேற்றம் 1935 இல் தேவதாஸ் திரைப்படத்துடன் இருந்தது.[9] இந்த படம் முதன்முதலில் வங்காள மொழியில் தயாரிக்கப்பட்டது. பருவாவே தலைப்பு பாத்திரத்தில் நடித்தார்; பின்னர் 1963இல் இந்தியில் தேவதாஸ் என பெயரிட்டு வெளியிட்டார்.[10] இந்திப் பதிப்பு இந்தியா முழுவதும் ஒரு பெரிய ஆர்வமானது. இது பருவாவை ஒரு சிறந்த இயக்குனராகவும், கே.எல்.சைகலை இந்தித் திரைப்படத் துறையின் முதல் உச்ச நட்சத்திரமாகவும் ஆக்கியது. தேவதாஸ் ( அசாமி ) பருவாவின் கடைசி மூம்மொழி பதிப்பாக இருந்தது. தேவதாஸுக்குப் பிறகு இவர், 1936 இல் மன்சில், 1937 இல் முக்தி, 1938 இல் ஆதிகர், 1939 இல் இரஜத் ஜெயந்தி, 1940 இல் ஜிந்தகி (இதில் சைகலுடன் மீண்டும் இணைந்தார்) ஆகிய படங்களுடன் பின்தொடர்ந்தார். இயக்குநர் பானி மஜும்தார் பின்னர் ஒரு பிரபலமான திரைப்பட இயக்குநரானார். பின்னர் நியூ தியேட்டர் நிறுவனத்தில் பருவாவுடன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
பிற்காலத் திரைப்படங்கள்
தொகுபிரமாதேஷ் பருவா தயாரித்த மற்றொரு தைரியமான முயற்சி "முக்தி" என்ற படமாகும். முக்தி என்பது ஒரு மனிதனின் ஏக்கத்தை சித்தரிக்கும் தேவதாஸின் நவீன பதிப்பாகும். அசாமின் அழகின் பின்னணியில் இந்தப் படம் படமாக்கப்பட்டது. ரவீந்திர சங்கீதம் முதன்முதலில் படத்தில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. இரவீந்திரநாத் தாகூரின் 'தினர் ஷேஷே குமர் தேசே' கவிதைக்கு பங்கஜ் மாலிக் என்பவர் இசையமைத்தார். இந்த படத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், படத்தின் ஒரு முக்கிய பகுதிகள் வெளிப்புறத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்குப் பிறகு யதார்த்தமான திரைப்பட தயாரிப்பாளர்கள் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு அதிக ஆர்வம் காட்ட கிட்டத்தட்ட 2 தசாப்தங்கள் ஆனது.
இவரது முந்தைய பெரும்பாலான படங்களில், ஒரு சோகமான நாயகனே இடம் பெற்றிருப்பார். ஆனால், 1939இல், அவர் "இரஜத் ஜெயந்தி" என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை உருவாக்கினார். இது மக்களை சிரிப்பில் ஆழ்த்தியது. இந்த படம் முதல் இந்திய நகைச்சுவை பேசும் படமாகக் கருதப்படுகிறது. அதே ஆண்டில், அவர் இந்திய சினிமாவில் புதிய எண்ணங்களை உருவாக்கிய அதிகாரத்தை உருவாக்கினார். இவர், இந்திய பாரம்பரிய இசையை மேற்கத்திய ஒத்தின்னிய இசையுடன் கலக்க முயன்றதன் மூலம் துணிச்சலான முயற்சியை மேற்கொண்டார்.
1940 ஆம் ஆண்டில், இவர், "கிருஷ்ணா மூவிடோன்" நிறுவனத்துக்கு "ஷாபுமுக்தி" என்ற படத்தை இயக்கினார். மிகவும் சோகமான காட்சிகளுக்காக பார்வையாளர்களை இப்படம் பெரிதும் கவர்ந்தது. படம் 3 மரண காட்சிகளுடன் முடிந்தது. இது 'கட்-ஷாட்' நுட்பத்துடன் சித்தரிக்கப்பட்டது. பிரபல பிரெஞ்சு திரைப்பட விமர்சகர் ஜியோர்ஜ் சடோல் 'கட்-ஷாட்' நுட்பத்தை அற்புதமாகப் பயன்படுத்தியதற்காக இவரை மிகவும் பாராட்டினார். இது இந்தியத் திரைப்படங்களின் ஆரம்ப நாட்களில் ஒரு முன்னோடி முயற்சியாகவும் இருந்தது.
1941 இல் வெளியான இவரது "உத்திராயன்" என்ற திரைப்படமும் ஒரு புதிய முயற்சியாக இருந்தது. இந்த படத்திற்கு முன்பு, இந்திய படங்களின் கதைகள் வரவுகளுக்குப் பிறகு தொடங்கும்.
பருவாவின் பெரும்பாலாத் திரைப்படங்கள் பிமல் ராயால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவரும் ஒரு திறமையான இயக்குநராக மாறினார்.
இறுதி காலம்
தொகுபருவா 1939 இல் நியூ தியேட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு தனியாக படமெடுக்க்த் தொடங்கினார். இருப்பினும், அவரது நியூ தியேட்டர் நிறுவனத்துக்குப் பிந்தைய படங்களில், ஷேஷ் உத்தரால் ஜவாப் (1942) மட்டுமே தனித்து நின்றது. தி வே ஆஃப் ஆல் ஃபிளெஷின் இந்திய பதிப்பை வெளியிட இவர் திட்டமிட்டார். ஆனால் அது ஒருபோதும் செயல்படவில்லை. பின்னர், இவர் அதிக அளவில் மது குடிக்கத் தொடங்கினார்.[11] இதனால் இவரது உடல்நலம் குறையத் தொடங்கியது; இவர் 1951இல் இறந்தார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Calcuttaweb Cinema – Pramathesh Barua". www.calcuttaweb.com. Archived from the original on 24 September 2008. பார்க்கப்பட்ட நாள் 23 October 2008.
- ↑ Bhanja, Manujendra. "Indian Cinema : The Platinum Touch". www.bfjaawards.com. Archived from the original on 2 May 2008. பார்க்கப்பட்ட நாள் 23 October 2008.
- ↑ "Presidency University bicentenary celebrations: Independent thinking in varsities under threat, says Manmohan Singh". 2017-01-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
- ↑ "Remembering playback singer Meena Kapoor on her 1st death anniversary". 22 November 2018.
- ↑ Shoma A. Chatterji (1 January 2008). "The Maxing Of A Creative Artist". P.C. Barua. SCB Distributors. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8328-226-0. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.
- ↑ "Archived copy". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Past perfect and promising future". Millenniumpost.in. 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
- ↑ "The Island". Island.lk. Archived from the original on 2017-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
- ↑ "Barua: Bangla to gift India print of Barua's Bengali 'Devdas'". Timesofindia.indiatimes.com. 2016-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
- ↑ "Devdas Comes Home: India Acquires Bengali Version of PC Barua's 1935 Film". Movies.ndtv.com. 2015-08-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
- ↑ Shoma Chatterji. "Pramathesh Chandra Barua was the original Devdas, on and off the screen". Thereel.scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
- ↑ "The Assam Tribune Online". Assamtribune.com. Archived from the original on 2017-05-25. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
நூலியல்
தொகு- Chatterji, Shoma. P. C. Barua. Delhi: Wisdom Tree. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8328-104-1.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரமாதேஷ் பருவா
- P.C. Barua at AllMovie
- Pramathes Chandra Barua at italiano (it)
- Pramathesh Barua profile, (Bengali) பரணிடப்பட்டது 2016-03-07 at the வந்தவழி இயந்திரம்
- Chatterji, Shoma A. (15 October 2009). "Pramathesh Chandra Barua-The First Star in Bengali Cinema". Calcutta Tube
- P.C. Barua at cinema section of Calcuttaweb.com