போங்கோ மான்

பாலூட்டி இனம்

Euteleostomi

போங்கோ ( Tragelaphus eurycerus ) என்பது ஒரு தாவர உண்ணி விலங்கு ஆகும். இவை பெரும்பாலும் இரவாடிகளாக காடுகளில் வாழும் குளம்பி ஆகும். போங்கோக்கள் உடலில் சிவப்பு-பழுப்பு நிற உரோமங்களைக் கொண்டுள்ளன. உடலின் இரு பக்கமும் வெள்ளை நிறப்பட்டைகள் உள்ளன. கண்ணிற்கு கீழ் இரண்டு வெள்ளை நிறப்புள்ளிகள் உண்டு. முறுக்கிவிட்டது போன்ற நீண்ட கொம்புகள் போன்றவற்றால் இவை வகைப்படுத்தப்படுகின்றன. திரேஜெலாஃபிட்டில் பேரினத்தில் கொம்புகள் உள்ள ஒரே உயிரினம் இது ஆகும். இவை சிக்கலான சமூக தொடர்பு கொண்டவை. மேலும் இவை ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இவை உலகின் மூன்றாவது பெரிய இரலை ஆகும். [2]

போங்கோ
இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் உள்ள மார்வெல் உயிரியல் பூங்காவில் மேற்கு/தாழ்நில போங்கோ
ஜாக்சன்வில்லி விலங்குகாட்சிசாலையில் கிழக்கு/மலை போங்கோ, ஜாக்சன்வில், டுவல் கவுண்டி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. eurycerus
இருசொற் பெயரீடு
Tragelaphus eurycerus
(Ogilby, 1837)
Subspecies
  • T. e. eurycerus Ogilby, 1837)) (western or lowland bongo)
  • T. e. isaaci (Thomas, 1902)) (eastern or mountain bongo)
Lowland bongo range
Mountain bongo range

மேற்கு அல்லது தாழ்நில போங்கோ, T. e. eurycerus, மான்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியை எதிர்கொள்கிறது. மேலும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் மானியல் நிபுணர் குழு இது காப்பு நிலை அளவில் அச்சுறு நிலையை அண்மித்து இருப்பதாக கருதுகிறது.

கிழக்கு அல்லது மலை போங்கோ, T. e. isaaci நடுகென்யாவின் சில மலைப் பகுதிகளில் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த போங்கோ பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் மானியல் சிறப்புக் குழுவால் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விலங்கு காட்சியகங்களில் வளர்க்கப்படுவதை விட காடுகளில் குறைவான மான்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வளர்ப்பு சங்கம் (AZA) போங்கோ இனங்களை வாழவைக்கும் திட்டத்திட்டதின் பங்கேற்பாளராக இணைந்தது. மேலும் 2006 ஆம் ஆண்டில் கென்யா மலை திட்டத்தில் போங்கோ மறுசீரமைப்பை அதன் ஆண்டின் முதல் பத்து வனவிலங்கு பாதுகாப்பு வெற்றித் திட்டங்களின் பட்டியலில் சேர்த்தது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டில், மரம் வெட்டுதல் மற்றும் வேட்டையாடுதல் காரணமாக காடுகளில் 100 மலை போங்கோக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்ற அறிக்கைகளால் இந்த வெற்றி எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் போனது.

தோற்றம் தொகு

 
சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தின் கால்நடை உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் போங்கோவின் எலும்புக்கூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகளில் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாக போங்கோ இரலைகள் உள்ளன. இவற்றின் உடலில் செந்நிறத்தில் உரோமங்கள் வளர்ந்திருக்கும். இவற்றின் உருமறைப்புக்கு ஏற்ப இவற்றின் உடலின் இரு பக்கங்களில் பிரகாசமான வெள்ளை நிறப் பட்டைகள் உள்ளன.

இவற்றில் இரு பாலினத்தினதும் பெரிய மான்கள் ஒரே அளவில் இருக்கிறன. வயது வந்த மான்களின் உயரம் தோள் வரை 1.1 முதல் 1.3 மீ (3.6 முதல் 4.3 அடி) உயரமும், நீளம் 2.15 முதல் 3.15 மீ (7.1 முதல் 10.3 அடி). இதில் 45–65 செமீ (18–26 அங்குலம்) வாலும் சேர்ந்தது. பெண் மான்களின் எடை சுமார் 150–235 கிலோ, ஆண் மான்களின் எடை சுமார் 220–405 கிலோ இருக்கும். [3]

இவற்றில் இரு பாலின மான்களுக்கும் கனமான முறுக்கிய கொம்புகள் உள்ளன, என்றாலும் ஆண் மான்களுக்கு கொம்புகள் நீளமானவையாக இருக்கும். விலங்கு காட்சியகங்களில் உள்ள அனைத்து போங்கோக்களும் நடு கென்யாவின் தனிமைப்படுத்தப்பட்ட அபெர்டேர் மலைகளிலிருந்து வந்தவை.

உடல் தொகு

 
கிழக்குப் போங்கோவின் பக்கவாட்டு முகத் தோற்றம்

போங்கோ மான்களின் கழுத்து, மார்பு, கால்கள் போன்றவை பொதுவாக உடலின் மற்ற பகுதிகளை விட கருமையாக இருக்கும்.

இவற்றின் உரோமத்தில் உள்ள நிறமி கரையக்கூடியதாக உள்ளது. ஒரு போங்கோவின் மீது பொழிந்து செல்லும் மழை நீரானானது நிறமியுடன் சிவப்பு நிறத்தில் இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உடலின் பக்கங்களில் 10-15 வரையிலான செங்குத்து வெள்ளை-மஞ்சள் பட்டைகள் செல்கின்றன. இப்பட்டைகள் கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து பின்பக்கம் பிட்டம் வரை பரவுகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் பட்டைகளின் எண்ணிக்கை அரிதாகவே ஒரே மாதிரியாக இருக்கும். இது தோள்பட்டை முதல் பிட்டம் வரை முதுகு முடியானது குறுகிய, மிருதுவான, பழுப்பு நிற பிடறிமயிர் போல உள்ளது. வெள்ளை நிறப் பட்டைகள் இந்த பிடறிக்குள் செல்கின்றன.

கண்களுக்கு இடையில் ஒரு வெள்ளை பட்டை அழகாகத் தோன்றும், மேலும் இரண்டு பெரிய வெள்ளை புள்ளிகள் இரு கன்னங்களிலும் அழகாக இருக்கும். கழுத்து மார்புடன் சந்திக்கும் இடத்தில் மற்றொரு வெள்ளை பட்டை உள்ளது. இவற்றிற்கு உள்ள பெரிய காதுகள் செவித்திறனைக் கூர்மையாக்குவனவாக உள்ளன. இந்த மான்களுக்கு உள்ள தனித்துவமான வண்ணங்கள் போங்கோக்கள் தங்கள் இருண்ட வன வாழ்விடங்களில் ஒன்றையொன்று தனித்து அடையாளம் காண உதவுகின்றன. போங்கோக்களின் உடலில் விசேச வசனை சுரப்பிகள் இல்லை. எனவே மற்ற விலங்குகளைக் காட்டிலும் ஒன்றையொன்றை கண்டுபிடிப்பதற்கு வாசனையை சர்ந்திருக்கும் நிலை இல்லை. போங்கோவின் உதடுகள் வெண்மையானவையாகவும் மேல் முகவாய் கருப்பாகவும் இருக்கும்.

கொம்புகள் தொகு

 
ஒரு கிழக்கு போங்கோவின் கொம்புகள்

போங்கோக்களுக்கு இரு கனத்த, சற்று முறுக்கிய கொம்புகள் உள்ளன. மறிமான் வகைகளைப் போலவே, ஆண், பெண் என இரு போங்கோக்களும் கொம்புகள் உள்ளன. இந்த மான்கள் ஓடும்போது தாழ்ந்த கிளைகளில் கொம்புகள் சிக்கி ஓட்ட வேகத்தைத் தடைசெய்யாமலிருக்க தலையை பின்புறம் இழுத்துக் கொம்புகளை முதுகோடு சேர்த்து வைத்துக் கொள்ளும்.

ஆண்டுதோறும் உதிர்ந்துவிடும் மான் கொம்புகளைப் போலல்லாமல், போங்கோகளின் கூரான கொம்புகள் உதிராமல் வாழ்நாள் முழுவதும் இருக்கின்றன. ஆண் மான்களுக்கு பாரியதான பின்புறம் வளைந்த கொம்புகள் உள்ளன, அதே சமயம் பெண் மான்களுக்கு சிறிய, மெல்லிய கொம்புகள் உள்ளன. கொம்புகளின் அளவு 75 முதல் 99 செமீ (29.5 மற்றும் 39 அங்குலம்) வரை இருக்கும். கொம்புகள் ஒரு முறுக்கு முறுக்கியதாக இருக்கும்.

மாட்டுக் குடும்பத்தின் மற்ற விலங்குகளின் கொம்புகளைப் போலவே, போங்கோவின் கொம்பின் மையப்பகுதி வெற்றாகவும், வெளிப்புற அடுக்கு நகமியால் ஆனதாக உள்ளது. இது மனித கை, கால் நகங்கள், முடியை உருவாக்கும் அதே பொருளாகும். மனிதர்களால் போங்கோக்கள் அதன் கொம்புகளுக்காக வேட்டையாடப்படுகின்றன. [4]

சமூக அமைப்பு மற்றும் நடத்தை தொகு

 
மவுண்ட் கென்யா வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் உள்ள இந்த பெண் மானானது தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என தனது தோள்பட்டைக்கு மேல் பார்த்துக்கொள்கிறது.

மற்ற வன குளம்பிகளைப் போலவே, போங்கோக்களும் பெரிய குழுக்களாக அரிதாகவே காணப்படுகின்றன. ஆண் மான்கள் தனிமையில் இருக்கும். அதே சமயம் பெண் மான்கள் ஆறு முதல் எட்டு பேர் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. 20க்கும் மேற்பட்ட மான்களைக் கொண்ட மந்தைகளில் போங்கோக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இவற்றின் கர்ப்ப காலம் சுமார் 285  நாட்கள் (9.5 மாதங்கள்) ஆகும். ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியை ஈணும். ஆறு மாதங்கள் குட்டிக்கு பாலூட்டுகின்றன. 24-27 மாதங்களில் குட்டிகள் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இந்த இனத்தின் விருப்பமான வாழ்விடம் மிகவும் அடர்த்தியான மூங்கில் காடுகள் ஆகும். ஆண் குட்டிகள் வளர்ந்த பிறகு, தங்கள் தாய்வழி குழுக்களை விட்டு வெளியேறி பெரும்பாலும் தனித்து இருக்கின்றன. இருப்பினும் அவை வயதான ஆண மானுடன் அரிதாக இணைந்து காணப்படுகின்றன. ஒத்த அளவு/வயதுள்ள வளர்ந்த ஆண் மான்கள் ஒன்றையொன்றை தவிர்க்க முனைகிறன. எப்போதாவது, அவை சந்தித்தால் தங்கள் கொம்புகளைக் கொண்டு சண்டையிடுகிறன. என்றாலும் கடுமையான சண்டை என்பது அரிதாகவே நடைபெறும். இனச்சேர்க்கையின் போது அவை பெண் மான்களைத் தேடுகின்றன தேடுகின்றன. [5] ஆண் மான்கள் பெண் மான்களின் கூட்டத்துடன் இருக்கும்போது, வேறு சில விலங்குகளைப் போல அவற்றை வற்புறுத்தவோ அல்லது அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவோ முயற்சிப்பதில்லை.

போங்கோ மான்கள் மனிதரைக் கண்டால் மறைந்து கொள்ளும். அதிகாலையிலும், மாலைப் பொழுதிலும் இரைதேடும். இலைகளும், தாவரத் தண்டுகளுமே இவற்றின் உணவாகும். இவற்றின் உறுதியான கொம்புகளால் தரையைத் தோண்டு அடியில் புதைந்திருக்கும் வேர்களைத் தின்னும். இரவில் காட்டிற்கு வெளியே வந்து சமவெளியில் வளர்ந்திருக்கும் புற்களை மேயும்.

பெண் மான்கள் குறிப்பிட்ட பகுதிகளில் யாரும் வராதவாறு உள்ள பாரம்பரியமாக கன்று ஈன்ற இடங்களைப் பயன்படுத்த விரும்புகிறன. அதே சமயம் புதிதாகப் பிறந்த கன்றுகள் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் மறைந்திருக்கும். தாய் அவ்வப்போது அந்த மறைவிடத்திற்கு வந்து பாலூட்டும்.[6]

கன்றுகள் வேகமாக வளர்ந்து விரைவில் குட்டிகள் கொண்ட மந்தைகளில் தங்கள் தாய்மார்களுடன் செல்லும். குட்டிகளுக்கு கொம்புகள் வளர்ந்து 3.5 மாதங்களில் தோன்றத் தொடங்கும்.

குறிப்புகள் தொகு

  1. IUCN SSC Antelope Specialist Group. (2017). "Tragelaphus eurycerus". IUCN Red List of Threatened Species 2016: e.T22047A115164600. https://www.iucnredlist.org/species/22047/115164600. பார்த்த நாள்: 24 October 2020. 
  2. Estes, Richard. "Bongo". www.britannica.com. பார்க்கப்பட்ட நாள் 11 March 2021.
  3. Ralls, Katherine (1978). "Tragelaphus eurycerus". Mammalian Species (111): 1–4. doi:10.2307/3503808. http://www.science.smith.edu/msi/pdf/i0076-3519-111-01-0001.pdf. பார்த்த நாள்: 20 September 2011. 
  4. Walther, F. R. (1990) "Spiral-horned antelopes".
  5. Estes, Richard D. (1991) The Behavior Guide to African Mammals: Including Hoofed Mammals, Carnivores, Primates.
  6. Estes, Richard (1993) The Safari Companion. Vermont: Chelsea Green Publishing Co..
"https://ta.wikipedia.org/w/index.php?title=போங்கோ_மான்&oldid=3623855" இலிருந்து மீள்விக்கப்பட்டது