முதலாம் சோமேசுவரன்
முதலாம் சோமேசுவரன்(Somesvara I வேறு பெயர்கள் ஆகவமல்லன், திரிலோகமல்லன் ஆட்சிக்காலம் 1042-1068 )என்பவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். இவனுடைய தந்தை ஜெயசிம்மனுக்குப்பின் அரியணை ஏறினான். இவன் பிற்கால சாளுக்கியரில் குறிப்பிடத்தக்க மன்னனாவான் (கல்யாணி சாளுக்கியர் என்றும் அழைக்கப்படுவர்). சோழர்களுடனான போர்களில் பல தோல்விகள் அடைந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் வேங்கியின் அரியணையில் யார் அமர்வது என்பதைத் தீர்மானித்தான். மத்திய இந்தியாவில் இவனது வெற்றிகள் இவனது பேரரசின் வல்லமையைப் பறைசாற்றின. இவனது ஆட்சியின் போது, சாளுக்கிய பேரரசின் வடக்கு எல்லை குஜராத்வரை பரவியிருந்தது. மலைநாடு (கர்நாடகம்) பகுதியை ஆண்டுவந்த ஹொய்சளர்கள் சாளுக்கியர்களுக்கு அடங்கி ஆண்டுவந்தனர். ஹொய்சள வினையாதித்தனின் மகள் அல்லது தங்கையான ஹோய்சலா தேவி என்பவள் சோமேசுவரனின் அரசிகளில் ஒருத்தியாவாள். மேற்கே முதலாம் சோமேசுவரன் கொங்கண் மண்டலத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தான். கிழக்கில் அனந்தபூர், கர்னூல்வரை இவனது கட்டுப்பாட்டில் இருந்தது.[1]
வரலாற்றாசிரியர் கங்கூலியின் கூற்றின் படி, சோழர்களால் "இவனுடைய அரசுக்கு எந்த பகுதியிலும் குந்தகம் ஏற்படுத்த முடியவில்லை" என்கிறார். இவன் தனது தலைநகரை மான்யக்டாவில் இருந்து கல்யாணிக்கு மாற்றினான் (தற்போதய பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணா ).[2][3]
சோழர்களுடனான போர்கள்
தொகுவரலாற்றாசிரியர் காமத்தின் கூற்றின்படி, தனது முடிசூட்டுக்குப் பிறகு, விரைவில் முதலாம் சோமேசுவரன் வேங்கி விவகாரங்களில் தலையிட்டு, அப்பகுதியின் மீது படையெடுத்தான். ஆனால் சோழருக்கு எதிரான இப்போரில் இராஜாதிராஜ சோழனிடம் அமராவதியில் தோல்வியடைந்தான். வரலாற்றாசிரியர் சாஸ்திரியின் கூற்றின்படி, இராஜாதிராஜ சோழன் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள தன்னடா ("தான்யகட்டா") போரில் முதலாம் சோமேசுவரனைத் தோற்கடித்தான். மேலைச் சாளுக்கிய படைகள் கிருஷ்ணா நதியைத் தாண்டி பின்வாங்கின. மேலும் கொல்லிப்பாக்கிக் கோட்டை (குல்பார்க்) தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து கம்பிலி மற்றும் புந்தர் ஆகியவை சோழர்களால் வெற்றிகொள்ளப்பட்டன. வரலாற்றாசிரியர்களின் சோப்ரா மற்றும் பலரின் கருத்துப்படி கம்பிலியை வெற்றிகொண்ட விவரங்கள் மணிமங்கலம் சாசனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழர்கள் தங்களது வெற்றித்தூணை யட்டகிரியில் (தற்கால யாத்கிர் மாவட்டம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள யத்திகர்) நிறுவினர். இறுதியாக சோழர்கள் கி.பி.1045 இல் சாளுக்கிய தலைநகரான கல்யாணியைச் சூறையாடினர். பிறகு வெற்றிகொள்ளப்பட்ட எதிரியின் தலைநகரான கல்யாணி நகரில் இராஜாதிராஜ சோழன் வீராபிசேகம் செய்துகொண்டான். மேலும் விஜயராஜேந்திரன் என்ற பட்டமும் சூடினான். எனினும், சாஸ்திரி மற்றும் சென் கூற்றின்படி, வியக்கும் வகையில் முதலாம் சோமேசுவரன் இழந்த தன் செல்வாக்கை மீட்டு, கி.பி.1050 காலகட்டத்தில் வேங்கியின் மீதான தனது ஆதிக்கத்தை கொண்டுவந்தது மட்டுமல்லாது, இவனது செல்வாக்கு கலிங்கம்வரை (இன்றைய ஒரிசா ) நீண்டது. மேலும் முதலாம் சோமேசுவரன் சோழப் பேரரசின் உள்பகுதியான காஞ்சிபுரத்திலேயே சோழர்கள்மீது எதிர் தாக்குதல் தொடுத்தான்.[2][4][5][6]
சில காலம் சோழர்களின் செல்வாக்கு வேங்கி, கலிங்கம் ஆகியவற்றின் மீது சற்று குறைந்திருந்தது. என்றாலும், கி.பி1054இல் சோழர்கள் படையெடுத்து சாளுக்கியருக்குப் பதிலளித்தனர். கொப்பள் (கொப்பம்) என்ற இடத்தில் நடந்த கொப்பம் போரில் சோழ மன்னன் இராஜாதிராஜ சோழன் கொல்லப்பட்டான். இப்போரில் முதலாம் சோமேசுவரன் தனது சகோதரன் ஜெயசிம்மனை இழக்க வேண்டியிருந்தது. சோழ இளவரசன் இரண்டாம் இராஜேந்திரன் (இராஜாதிராஜனின் தம்பி) மன்னனாக முடிசூடி மீண்டும் சாளுக்கிய படைகளை துரத்தியடித்தான். சாஸ்திரி அவர்கள் கூற்றின்படி சோழர்களின் தோல்வியை வெற்றியாக இரண்டாம் இராஜேந்திர சோழன் மாற்றினான். தனது வெற்றியின் சின்னமாக ஒரு வெற்றித் தூணை கொல்லாபுராவில் (தற்போதைய கோலாப்பூர் ) நிறுவி தனது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரம் திரும்பினான். சாளுக்கிய ராணிகள் சத்யாவதி, சங்கப்பாய் ஆகியோர் உட்பட சாளுக்கியரிடம் கைப்பற்றிய மிகுதியான செல்வங்களையும் கொண்டு வந்தான். கி.பி.1059லும் மோதல்கள் ஏற்பட்டன. இரண்டாம் ராஜேந்திர சோழனால் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் துங்கபத்ரா நதிக்கரையில் தோற்கடிக்கப்பட்டது. முதலாம் சோமேசுவன் இந்த வெற்றியைக் கொண்டாட அண்ணிகேரி (தற்போதைய தார்வாட் மாவட்டம்) என்ற இடத்தில் ஒரு கோயில் கட்டினான். எனினும், சென் கூற்றின்படி, கி.பி.1059இல் துங்கபத்ரை நதிக்கரையில் முடக்காறு போரில், முதலாம் சோமேசுவரன் மற்றொரு தோல்வியை சந்தித்தான்.[2][4][5][6]
வேங்கியில் கி.பி.1061இல் கீழைச் சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரன் இறந்ததையடுத்து மீண்டும் அரியணை போட்டி வெடித்தது. முதலாம் சோமேசுவரன் இப்போது இரண்டாம் விஜயாதித்தனின் மகன் சக்கதிவர்மனை சிம்மாசனத்தில் அமர்த்த முயன்றான். இது கீழைச்சாளுக்கிய மன்னனாக தங்கள் இரத்த உறவை நியமிக்க விரும்பிய சோழர்கள் விருப்பத்திற்கு எதிராக இருந்தது. சோழர்கள் இறந்துபோன அரசன் ராஜராஜ நரேந்திரன் மகன் இளவரசன் இராஜேந்திரனை மன்னனாக்க விரும்பினர். இதனால் புதிய சோழ மன்னர் இரண்டாம் ராஜேந்திர சோழன் மேலைச் சாளுக்கியர் மீது பல தாக்குதல்களை நடத்தினான். இதில் முதன்மையானது கி.பி.1062இல் கூடலசங்கமம் (தற்போய சிமோகா மாவட்டத்தின் கூடலி என்ற சிற்றூராக இருக்கலாம்) என்ற இடத்தில் நடத்திய பெரிய போராகும். இப்போரில் முதலாம் சோமேசுவரனை சோழர்கள் தோற்கடித்தனர். வரலாற்றாசிரியர்கள் சோப்ரா மற்றும் பலர், இந்த கூடலசங்கமம் கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரை ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இருப்பது என்று கூறுகின்றனர். இந்த நேரத்தில், முதலாம் சோமேசுவரன் இரண்டு படைகளைத் தனது மகன்கள் இளவரசர் ஆறாம் விக்ரமாதித்தன், ஜெயசிம்மன் ஆகியோர்கீழ் சோழர் ஆட்சியில் இருந்த கங்கப்பாடி மீதும் (மைசூரின் தெற்குப் பகுதி) தனது தளபதி சாமுண்டராயாவின் கீழ் மற்றொரு படையையும் அனுப்பினான். எனினும், இரண்டாம் இராஜேந்திரன் இந்த இரு படைகளையும் தோற்கடித்தான். இதன் பிறகு இரண்டாம் இராஜேந்திரன் இறந்த காரணத்தாலும் அவனது மகன் இராஜமகேந்திரன் அவனுக்கு முன்னே இறந்துவிட்டதினால். கி.பி.1063, இரண்டாம் இராஜேந்திரனின் தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.[2][4][5][6]
கூடலசங்கமம் இறுதிப் போர்
தொகுபோர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து, முதலாம் சோமேசுவரன் இராணுவரீதியாவும், இராஜதந்திரரீதியாகவும் தன்னை வலுவூட்டும் வேலையில் ஈடுபட்டான். கிழக்கில், அவர் நாகவம்சி ஆட்சியாளர் தரவர்சன் மற்றும் கீழைக் கங்கர் மரபின் கலிங்க மன்னர் இரண்டாம் வஜ்ரஹஸ்தன் ஆகியோரைத் தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டான். மேலும் விஜயவாடாவில் தங்கியிருந்த பரமரா வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் ஜன்னன்நாதன் ஆகியோர் உதவியுடன், மேற்கே விஜயாதித்தன் தலைமையின் கீழ் ஒரு பெரிய இராணுவத்தைத் திரட்டித் தாக்குதல் மேற்கொண்டான். இளவரசன் ஆறாம் விக்ரமாதித்தன் தலைமையில் வெற்றிகரமாக சாளுக்கியப் படைகள் சோழ நாட்டின் மீது தாக்குதல் நடத்தினான். இதன் பிறகு முதலாம் சோமேசுவரன் கூடலசங்கமத்தில் தன்னை எதிர்த்து போரில் ஈடுபட சோழர்களை அழைத்தான். அழைப்பை ஏற்ற வீரராஜேந்திர சோழன் படைகளுடன் கூடல சங்கமம் வந்தான். ஆனால் நோயால் பாதிக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் முதலாம் சோமேசுவரன் போருக்குத் தன் படைகளுடன் அங்கு வரவில்லை. ஒரு மாத கால காலம் சோழர்படைகள் அங்கு போருக்காகக் காத்திருந்தது. பொறுமை இழந்த வீரராஜேந்திரசோழன் அனைத்து முனைகளிலும் படையெடுத்து வேங்கி, விஜயவாடா, கலிங்கம், நாகவம்சி,சித்ரதுர்கா ஆகிய இடங்களில் வெற்றி பெற்று, ஒரு வெற்றித் தூணை துங்கபத்ரா நதிக்கரையில் அமைத்தான். இந்நிலையில் முதலாம் சோமேசுவரன் குருவட்டி (தற்போதைய பெல்லாரி மாவட்டம்) என்ற இடத்தில் மார்ச்29, 1068 அன்று துங்கபத்ரை ஆற்றில் தற்கொலை (பரமயோகா) செய்து கொண்டான்.[5][6][7][8]
மத்திய,கிழக்கு இந்தியப் போர்கள்
தொகுசோழர்களுடன் தொடர்ச்சியாக சண்டையிடும் இந்த நேரத்தில்,காமத் மற்றும் சாஸ்திரி கூற்றின்படி முதலாம் சோமேசுவரன் வட கொங்கனின் சில்லஹரர் , சியூனுவா (யாதவ) வம்சத்தின் மன்னன் மூன்றாம் பில்லம்மா, தாராவின் பரமரா வம்ச மன்னன் போஜ, குஜராத் மாநிலச் சாளுக்கியர், மத்திய இந்தியாவின் பிரதிஹாரா. முதலாம் சோமேசுவரன் போன்றோரைத் தோற்கடித்தான். மேலும் தார் , உஜ்ஜைன் மத்திய இந்தியாவின் மண்டபா, போன்ற பகுதிகளையும் வெற்றிகொண்டான். இதுபோல பல போர்களை வட இந்தியாவில் மேற்கொண்டு வெற்றிபெற்றான்.
குறிப்புகள்
தொகுமேற்கோள்
தொகு- Chopra, P.N.; Ravindran, T.K.; Subrahmanian, N (2003) [2003]. History of South India (Ancient, Medieval and Modern) Part 1. New Delhi: Chand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0153-7.
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.
- Narasimhacharya, R (1988) [1988]. History of Kannada Literature. New Delhi: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0303-6.
- Sastri, Nilakanta K.A. (2002) [1955]. A history of South India from prehistoric times to the fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8.
- Sen, Sailendra Nath (1999) [1999]. Ancient Indian History and Civilization. New Age Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-1198-3.
- Tripathi, Rama Shankar (1992) [1942]. History of Ancient India. New Delhi: Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0018-4.