மெழுகு அருங்காட்சியகம்
மெழுகு அருங்காட்சியகம் (wax museum) என்பது வரலாற்றிலும் சமகாலத்திலும் நன்கறியப்பட்ட நபர்களின் மெழுகுச் சிலைகளின் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட கூடமாகும். இச்சிற்பங்கள் உண்மையான ஆடை அணிந்தவாறு அந்நபர்களின் முழுவுருவச் சிலைகளாக இருக்கின்றன.
சில மெழுகு அருங்காட்சியகங்களில் பின்னணிக் குரல்களும் ஓசைகளும் சேர்க்கப்பட்டு கொடூரமான தோற்றங்கொண்ட சிலைகள் காட்சிப்படுத்தப்பட்ட சிறப்புக்கூடங்கள் உள்ளன. சில அருங்காட்சியங்களில் மருத்துவ வல்லுநர்களால் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட மருத்துவ மெழுகு மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மெழுகு அருங்காட்சியகங்கள் அல்லாத பல வரலாற்று வாழிடங்களிலும் கூட மெழுகு உருவங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து மெழுகு அருங்காட்சியங்கள் அமைக்கும் பழக்கம் தோன்றியிருக்கக்கூடும். அரச பரம்பரையினரின் கல்லறைகளில் மெழுகாலான அவர்களது இறுதி உருவபொம்மைகள் மற்றும் வேறுசில வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1800 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு
தொகுஐரோப்பிய அரசகும்பத்தினரது இறுதிச் சடங்குகளின்போது அவர்களின் உண்மையான ஆடையணிந்த முழுவடிவ உருவபொம்மைகள் வடிக்கும் வழக்கம் தோன்றியது. ஐரோப்பின் நடுக்காலத்தில் அரசகுடும்பத்தினரின் இறுதி ஊர்வலத்தில் அவர்களது இறந்த உடலையே சவப்பெட்டிகளின் மேல்வைத்து எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் அது பாதுகாப்பானதாக இல்லாத்தால் இறந்த உடலுக்குப் பதிலாக ஆடையணிந்த அவர்களது முழுவுருவ மெழுகு பொம்மைகளைச் சவப்பெட்டியின் மீது எடுத்துச் சென்று பின்னர் அதனை அவர்களது கல்லறையிலோ அல்லது தேவாலயத்தின் ஏதேனுமொரு பகுதியிலோ வைக்கப்பட்டது. இச்சடங்கினால் முழுமனிதவுருவ மெழுகுச்சிலைகள் செய்யும் தேவை ஏற்பட்டது.[1]
இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் மெழுகு அருங்காட்சியகத்தில் இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு (இறப்பு 1377) காலம் முதலான பிரித்தானிய அரசகுடும்பத்தினரின் மெழுகு உருவபொம்மைகளின் சேகரிப்பு உள்ளது. அவற்றுடன் ஹோரஷியோ நெல்சன், ரிச்மாண்டின் அரசி பிரான்சிசு சுடூவர்டு (அவரது கிளியின் உருவபொம்மையும்) போன்றோரின் உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1680 இல் இரண்டாம் சார்லசின் இறுதிச்சடங்கிலிருந்து அவர்களது உருவபொம்மைகள் சவப்பெட்டிகளின் மீது வைக்கப்படவில்லை. எனினும் பின்னர் காட்சிப்படுத்துவதற்காக மெழுகு உருவபொம்மைகள் செய்யப்பட்டன.[1] [2] இரண்டாம் சார்லசின் கல்லறையின் மீது திறந்த கண்களுடன் நிற்கும் கோலத்தில் அமைக்கப்பட்ட அவரது மெழுகுச்சிலை 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்திலிருந்த அனைத்து மெழுகு உருவங்களும் அகற்றப்படும்வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.[3][4]
பிரான்சு உட்பட்ட ஐரோப்பிய அரசவைகளில் மெழுகு உருவங்கள் வடிக்கும் வழக்கம் பரவியது. அன்டொய்னி பெனொய்ஸ்ட் (Antoine Benoist) (1632–1717) என்பவர் பிரான்சின் பதினான்காம் லூயி அரசரின் அரசவை ஓவியரும் மெழுகுசிற்பியுமாக இருந்தார். இவர் பிரெஞ்சு அரச குடும்பத்தினரின் 43 மெழுகு உருவச்சிலைகளைச் செய்து பாரிசில் காட்சிப்படுத்தினார். பின்னர் பதினான்காம் லூயி]] அரசர் அச்சிலைகளை பிரான்சு முழுவதும் காட்டப்படவேண்டுமெனப் பணித்தார். இச்சிற்பியின் திறமையைப் போற்றிய இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு அரசர் அவரை 1684 இல் இங்கிலாந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று இங்கிலாந்து சென்ற சிற்பி அங்கு அந்த அரசர் மற்றும் அவரது அவை உறுப்பினர்களின் மெழுகு உருவங்களை வடித்தார். 1740 இல் டென்மார்க்கின் அரசவை ஓவியரான ஜோகன் சாலமன் வால் (Johann Salomon Wahl) டென்மார்க அரசர் மற்றும் அரசியின் மெழுகு உருவங்களைச் உருவாக்கினார்.[5]
சில குறிப்பிடத்தக்க மெழுகு அருங்காட்சியகங்கள்
தொகு- மேடம் துசாட்ஸ், இலண்டன் (1835)
- மூவிலேன்டு மெழுகு அருங்காட்சியகம், பியூனா பார்க், கலிபோர்னியா (1962 -2005)
- ஹாலிவுட் மெழுகு அருங்காட்சியகம், ஹாலிவுட்
- பைபிள்வாக், கிறித்துவ மெழுகு அருங்காட்சியகம், மேன்சுபீல்டு, ஒகையோ.[6][7]
இந்தியாவில் மெழுகு அருங்காட்சியகங்கள்
தொகுஇந்தியாவில் முதன்முறையாக திசம்பர் 2005 இல் கன்னியாகுமரியில் மெழுகு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அந்த அருங்காட்சியகம் தற்போது 100 முக்கிய நபர்களின் மெழுகுச்சிலைகளுடன் லோனாவாலா ஸ்கொயர் மாலில் உள்ளது. 2014 இல் கொல்கத்தாவில் திறக்கப்பட்ட அன்னையின் மெழுகு அருங்காட்சியகம் இந்தியாவின் மிகப்பெரிய மெழுகு அருங்காட்சியமாகும்.[8] இதன் கிளையொன்று பழைய கோவாவின் வரலாற்றுக்களத்தில், ஜூலை 2008 இல் திறக்கப்பட்டது. இதில் சமயம் தொடர்பான மெழுகுச்சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2010 அக்டோபரில் இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்கருவிகளுக்கான "மெலடி உலகம்" என்ற மெழுகு அருங்காட்சியகம் மைசூரில் திறக்கப்பட்டது. 2016, திசம்பர் 18 இல் இராஜஸ்தானின் ஜெய்பூரில் ஒரு மெழுகு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. 2017 இல் இந்தியாவில் புது தில்லியில் மேடம் துசாட்சின் முதல் அருங்காட்சியம் தொடங்கப்பட்டது.
படத்தொகுப்பு
தொகு-
ஹாலிவுட் மெழுகு அருங்காட்சியகம், ஹாலிவுட்
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Royals".
- ↑ Westminster Abbey, "Horatio, Viscount Nelson".
- ↑ "The page you were looking for doesn't exist (404)". www.vam.ac.uk.
- ↑ Westminster Abbey, "Horatio, Viscount Nelson".
- ↑ Taylor, 37
- ↑ "About Us". BibleWalk. பார்க்கப்பட்ட நாள் May 22, 2018.
- ↑ "Biblewalk Wax Museum". யூடியூப். July 2, 2010. பார்க்கப்பட்ட நாள் May 22, 2018.
- ↑ "Amitabh Bachchan and Shah Rukh Khan's wax statues at Kolkata's wax museum - Times of India".
மேற்கோள்கள்
தொகு- Taylor, Lou, The Study of Dress History, 2002, Manchester University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0719040655, 9780719040658, google books