ம. பொ. சிவஞானம்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
(ம.பொ.சிவஞானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் (Ma.Po.Sivagnanam, 26 சூன் 1906 – 3 அக்டோபர் 1995) 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர்.சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.

ம. பொ. சிவஞானம்
பிறப்புமயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்
(1906-06-26)26 சூன் 1906
சாலவான் குப்பம், சென்னை
இறப்புஅக்டோபர் 3, 1995(1995-10-03) (அகவை 89)
சென்னை, தமிழ்நாடு
பணிபத்திரிகையாளர், எழுத்தாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது.

தமிழரசுக் கழகம்

தொகு
 
தமிழரசுக் கழக மாநாடு

1945-ஆம் ஆண்டு ம.பொ.சி. தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார்.

சுதந்திர இந்தியாவில், சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகைய சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு எனத் தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் தமிழர் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆவார்.

'தமிழ்நாட்டைத் தாய்நாடாகவும், தமிழ் மொழியைத் தாய்மொழியாகவும் கொண்டு வாழும் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகள் அனைவரும் தமிழராகக் கொள்ளப்படுவர். தமிழர் எங்கெல்லாம் பெருவாரியாக வசிக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியான பிரதேசங்கள் தமிழ்நாடாகக் கொள்ளப்படும்' என்றும், தமிழர் தனித்தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்றும் கூறி 1946-ஆம் ஆண்டில், தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஆவார். 

மொழிவழியாக உருவாகும் தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட வேண்டிய பகுதிகளாக ஐயா ம.பொ.சி. வரையறை செய்த தமிழர் பகுதிகளாவன:

மலையாளிகளின் ஆதிக்க திருவிதாங்கூர் அரசில் இருந்த தமிழர் மிகுதியாக வாழ்ந்து வந்த தென்பகுதி வட்டங்கள்;

கன்னட ஆதிக்க மைசூர் அரசில் இருந்த கோலார் தங்கவயல் பகுதி;

பிரெஞ்சுப் பேரரசின் பிடியில் இருந்த பாண்டிச்சேரி - காரைக்கால்;

திருப்பதி மலைக்குத் தெற்கேயுள்ள சித்தூர் மாவட்டத் தமிழ்ப் பகுதிகள்;

புதுக்கோட்டை மன்னராட்சிப் பகுதி;

தமிழீழத்தின் யாழ்ப்பாணப் பகுதி

ஆகிய தமிழர் தாயக நிலங்களை உள்ளடக்கியதாகும். 

மேற்கண்ட தமிழர் தாயகத்தைப் படைக்க தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தை 1946-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் நாளில் தொடங்கினார். அது பற்றி ம.பொ.சி. தனது தமிழ்முரசு இதழில்

நவம்பர் மாதம் 21-ஆம்தேதி மாலை தமிழ்முரசு காரியாலயத்தில், தமிழரசுக் கோரிக்கையை ஆதரிப்போரின் கூட்டம் ஒன்று கூடியது. நகரின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 70 பேருக்கு மேல் வந்திருந்தனர். திரு. ம.பொ.சிவஞானம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தலைவர் முகவுரையில், தமிழகத்திற்கு வெளியே திருவிதாங்கூர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, இலங்கை முதலிய பிரதேசங்களில் தமிழர் படும் அல்லல்களையும், அவர்கள் விஷயத்தில் தமிழ் நாட்டவர் கொள்ளவேண்டிய அக்கறையையும் அவசியத்தையும் விவரித்துக் கூறினார்.

மேலும், பிரித்தானிய மந்திரி சபையின் திட்டத்தின்படி தமிழ்நாடு ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்துக்காட்டினார். நெடுநேர ஆலோசனைக்குப் பிறகு “தமிழரசுக்கழகம் “ என்ற பெயருடன் ஒரு கழகம் நிறுவப்பட்டது. “ [1] என்று செய்திக்குறிப்பு வெளியிட்டார்.

ஆகஸ்ட் 8, 1954-ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார்.14 செப்டம்பர் 2022 அன்று இந்த கட்சியின் அங்கீகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.

போராட்டங்கள்

தொகு

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றித் தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார்; அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்குக் கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்குக் கிடைக்கப் போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்குக் கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

நூல்கள்

தொகு

பாரதியார்

தொகு

பாரதியின் எழுத்துகள் மூலம் ம.பொ.சி. சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். ம.பொ.சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியைப் பற்றி ம.பொ.சி. பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்:

  • வள்ளலாரும் பாரதியும் [1965].
  • எங்கள் கவி பாரதி [1953].
  • பாரதியாரும் ஆங்கிலமும் [1961].
  • பாரதி கண்ட ஒருமைப்பாடு [1962].
  • உலக மகாகவி பாரதி [1966].
  • பாரதியார் பாதையிலே [1974].
  • பாரதியின் போர்க்குரல் [1979].
  • பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை [1983].
  • என்னை வளர்த்த பாரதி[2013] ம.பொ.சி. கூறி விக்கிரமன் (எழுத்தாளர்), நாகராஜன் தொகுத்தது

சிலப்பதிகாரம்

தொகு

சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. யைச் சாரும். இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்குக் கண்ணகி, மாதவி எனப் பெயர் சூட்டினார். ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். சிலப்பதிகாரம் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

  • சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
  • கண்ணகி வழிபாடு [1950]
  • இளங்கோவின் சிலம்பு [1953]
  • வீரக்கண்ணகி [1958]
  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
  • மாதவியின் மாண்பு [1968]
  • கோவலன் குற்றவாளியா? [1971]
  • சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
  • சிலப்பதிகார யாத்திரை [1977]
  • சிலப்பதிகார ஆய்வுரை [1979]
  • சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
  • சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
  • சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]

சிலப்பதிகார விழா

தொகு

1950-இல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சி. யின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாகச் சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க , டாக்டர். மு.வரதராசனார் தலைமை வகித்தார்.பெருந்தலைவர் காமராஜர் உட்பட அனைத்துக் கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர். ம.பொ.சி. எதிர்பார்த்ததைப் போலச் சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ்க் கலாச்சார விழாவாக மாறியது. அதற்கடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி. தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர்.

கப்பலோட்டிய தமிழன்

தொகு

வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறியச் செய்தவர் ம.பொ.சி. வ.உ.சி. யின் வரலாற்றைப் பற்றி, ம.பொ.சி. எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாகப் பின்னாளில் வ.உ.சி., 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலைத் தழுவிக் கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

  • கப்பலோட்டிய தமிழன் [1944]
  • தளபதி சிதம்பரனார் [1950]
  • கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]

வ.உ.சி. சிலை அமைத்தல்

தொகு

1939-ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்குச் சிலை வைக்க முயன்று அச்செலவிற்குப் பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும், டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும், சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[2]

வீரபாண்டிய கட்டபொம்மன்

தொகு

ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. இந்நூலைத் தழுவி பி.ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். கட்டபொம்மன் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

திருவள்ளுவர்

தொகு

திருவள்ளுவர் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்”

  • வள்ளுவர் வகுத்த வழி [1952]
  • திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]
  • திருக்குறளில் கலை பற்றிக் கூறாததேன்? [1974]

இராமலிங்க அடிகள்

தொகு

இராமலிங்க அடிகள் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963] எனும் நூலுக்காக 1966 ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்
  • வள்ளலாரும் பாரதியும் [1965]
  • வள்ளலார் வளர்த்த தமிழ் [1966]
  • வள்ளலார் வகுத்த வழி [1970]
  • வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]
  • வானொலியில் வள்ளலார் [1976]
  • வள்ளலாரும் காந்தியடிகளும் [1977]
  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]

ஆங்கில நூல்கள்

தொகு
  • The Great Patriot V.O. Chidambaram Pillai
  • The First Patriot Veera Pandia Katta Bomman
  • The Universal Vision of Saint Ramalinga

இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

சிறப்புகள்

தொகு
 
தமிழக அரசால் வைக்கப்பட்டுள்ள
ம. பொ. சி. அவர்களின் திருவுருவச் சிலை
இடம்: செவாலிய சிவாஜி கணேசன் சாலை பாண்டி‍ பஜார் சாலை சந்திப்பில்
  • சிலம்புச் செல்வர்' என்ற விருது, சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.
  • சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு 'டாக்டர்' பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன.
  • மதுரைப் பல்கலைக் கழகம், 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.
  • மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.
  • தமிழக மேலவையின் தலைவராகப் பணியாற்றினார்.
  • 'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.
  • தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார்.
  • சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.

ம. பொ. சிவஞானத்தைப் பற்றிய நூல்கள்

தொகு
  1. சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்..., மு. மாரியப்பன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.
  2. அறிஞர்கள் பார்வையில் ம. பொ. சி., ம.பொ.சி.மாதவி பாஸ்கரன், பத்மஶ்ரீ டாக்டர் ம.பொ.சி.அறக்கட்டளை, சென்னை 41.

மேற்கோள்கள்

தொகு
  1. நூல் : புதிய தமிழகம் படைத்த வரலாறு நூலாசிரியர்: சிலம்புச்செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பக்கம் 60-61, வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், சென்னை
  2. தினமணி கதிர்; 09.03.2014; பக்கம் 6,7; (கட்டுரைக்களஞ்சியம் நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._பொ._சிவஞானம்&oldid=3944019" இலிருந்து மீள்விக்கப்பட்டது