மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம்
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு வழித்தடம் (ஆங்கிலம்: North–South Expressway Southern Route (E2); மலாய்: (Lebuhraya Utara–Selatan Jajaran Selatan) (E2) என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்குப் பகுதி வழித்தடம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் தென்மேற்கு கடற்கரைக்கு இணையாகச் சரிசமமான நிலையில் செல்கிறது.
இந்த விரைவுச்சாலை மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway) அமைப்பின் தெற்குப் பகுதியை நிறைவு செய்கிறது. இந்த விரைவுச்சாலையின் நீளம் 312-கி.மீ. (193-மைல்). தீபகற்ப மலேசியாவின் தெற்கு மாநிலங்களான சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மாநிலங்களின் வழியாக இந்தச் சாலை செல்கிறது.
பொது
தொகுசிலாங்கூர் மாநிலத்திற்கும், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திற்கும் இடையே உள்ள மாநில/பிரதேச எல்லைக்கு அருகில்; ஸ்ரீ கெம்பாங்கான் (Seri Kembangan) நகர்ப் பகுதியில் தொடங்கி, ஜொகூர் மாநிலத்தின் தெப்ராவ் (Tebrau) நகரில் முடிவடைகிறது.
இந்த விரைவுச்சாலை, வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித்தடத்திற்கும் (North–South Expressway); மற்றும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலைக்கும் (East Coast Expressway), அடுத்த நிலையில் தீபகற்ப மலேசியாவின் மூன்றாவது மிக நீளமான விரைவுச்சாலை என அறியப்படுகிறது.
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0; ஜொகூர் பாரு கிழக்குப் பரவல் இணைப்பு விரைவுச்சாலையின் (Johor Bahru Eastern Dispersal Link Expressway) தெப்ராவ் வழித்தடச் சந்திப்பில் அமைந்துள்ளது.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை அமைப்பு
தொகுமலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை அமைப்பின் இரு வழிதடங்களின் நீளம் 772 கிமீ (480 மைல்கள்). வடக்கே கெடா, புக்கிட் காயூ ஈத்தாம் நகரில்; மலேசிய - தாய்லாந்து எல்லையில் தொடங்கும் இந்த விரைவு சாலை அமைப்பு, தெற்கே தெப்ராவ், ஜொகூர் பாருவில் முடிவுறுகிறது. பின்னர், அங்கு இருந்து வேறு சாலையில் சிங்கப்பூர் வரை தொடர்கிறது.
தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் இருக்கும் பல முக்கிய மாநகரங்களையும், நகரங்களையும் இணைக்கும் இந்த விரைவுச்சாலை அமைப்பு, தீபகற்ப மாநிலங்களின் முதுகெலும்பாக விளங்குகிறது.
இது "பிளஸ்" விரைவுச்சாலை (PLUS Expressway) எனவும் அழைக்கப் படுகிறது. Projek Lebuhraya Utara Selatan என்பதன் சுருக்கமே "பிளஸ்" என்பதாகும்.
ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு
தொகுமலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை அமைப்பு; தீபகற்ப மலேசியாவின் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களைக் கடந்து செல்கிறது.
ஏற்கனவே இருக்கும் பழைய கூட்டரசு சாலை க்கு (Federal Route 1) மாற்றுவழியாக இந்த விரைவுசாலை அமைகிறது. AH2 எனும் ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.